Thursday, December 4, 2014

ஊரும் ருசியும் - மதுரை கிழங்கு பொட்டலம் !!

மதுரை..... இங்கு ஒரு வருடம் தங்கி இருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமாகத்தான் உண்ணுவேன் என்று இருந்தாலும், தினமும் அல்லது ஒவ்வொரு வேளையும் ஏதாவது வித்யாசமான உணவு வகைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும் ! சிறு வயதில், அதாவது சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அப்பா என்னை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்போது, தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு கடையில் கிழங்கு பொட்டலம் என்று கேட்டு வாங்குவார், ஒரு வாய் எடுத்து வைத்தவுடனேயே சிறு வயதில் தண்ணீர் தண்ணீர் என்று காரத்திற்கு தவிக்க, அந்த கடைகாரர் அல்வாவை ஒரு சிறு துண்டாக தருவார்..... இன்று அந்த கிழங்கு பொட்டலம் இருக்குமா என்று பாதை மறந்த வேளையிலும் ஒரு பயணம் மேற்கொண்டேன், அதிசயம் சில ருசியான உணவுகள் காலங்கள் கடந்தும் இருந்தது !! இருபது வருடம் கடந்தும் எனது நினைவில் இந்த சுவை இருக்கிறது என்றால்...... நினைத்து பாருங்களேன் எந்த அளவு சுவை என்று !

 
இந்த முறை எனது தேடலில் பங்கு கொண்டவர் திரு.செந்தில்குமார் (ஹாலிடே நியூஸ் மாத இதழின் இணை ஆசிரியர்), நான் எழுதும் பதிவுகளை ரசித்து படிப்பவர், மதுரையில் இருக்கும் அவருக்கு இந்த கிழங்கு பொட்டலம் பற்றி தெரியாது என்று சொல்ல, அவரையும் இணைத்துக்கொண்டு நான் சிறுவயதில் நடந்த அந்த பாதையில் குத்துமதிப்பாக நடந்துகொண்டு இருந்த என்னை, இவனை நம்பி பின்னாடி போகலாமா என்று சந்தேகத்துடன் பின்தொடர்ந்தார் !! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கீழ ஆவணி மூல வீதியில் "ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை" என்று இரண்டு கடைகள் இருந்தது, முதல் கடையில் கண்ணாடி பெட்டியின் மேலே சிறு சிறு பொட்டலங்களாக இருக்க "யுரேகா..... " என்று மனதில் கத்திக்கொண்டே அந்த இடத்தை நோக்கி சிறு பிள்ளையின் குஷியோடு ஓடினேன்.
 
 
கடையில் காலை 11 மணிக்கு அப்போதுதான் கிழங்கு சூடாக ஒரு பாத்திரத்தில் இருந்து எடுத்து இலைகளில் பொட்டலங்களாக மடிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஆதிகாலத்தில் மீனாக்ஷி அம்மன் கோவிலின் எல்லா வீதிகளிலும் வியாபாரம் கொடி கட்டி பறந்தது, இங்கு வரும் எல்லா பொருட்களும் தள்ளு வண்டிகளிலும், மூட்டை தூக்கிகளாலும் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும். அது மட்டும் அல்லாமல் இங்கு கடைகளில் வேலை செய்பவர்களும் அதிகம், இவர்கள் எல்லோருமே காலையில் வரும்போது வீட்டில் இருக்கும் பழைய சாததையோ அல்லது தொட்டு கொள்ள எதுவும் இல்லாமல் சாதம் கொண்டு வருவார்கள், இவர்கள் கொஞ்சம் கார சாரமாக உண்ண வேண்டும் என்றால் மிட்டாய் கடைகளில் கிடைக்கும் கார வகைகளைத்தான் வாங்க வேண்டும், அதற்க்கு அப்போது எல்லாம் வசதி இல்லை என்பதால் இந்த கிழங்கு பொட்டலங்கள் உருவாகின.... இதை வாங்கி கொண்டு சாதத்திற்கு தொட்டு கொள்ள அமிர்தம்தான் போங்கள் !!
 



முதலில் இந்த கிழங்கை பார்த்து விடுவோம்.... (நாக்கில் எச்சில் ஊருகிறது !), வெறும் உருளைகிழங்கை இன்று பிரெஞ்சு பிரை என்று சாப்பிட்டு பழக்கப்பட்ட இனம், இப்படி எல்லாம் சுவையாக சமைக்க முடியுமா என்று சாப்பிட்டு பார்க்க வேண்டிய ஒன்று !! உருளைகிழங்கை வேக வைத்து, அதனோடு இளம் பச்சை மிளகாயை கீறி போட்டு, கொஞ்சம் வெங்காயம், மஞ்சள், கொத்தமல்லி, மசாலா, கருவேப்பில்லை, கடலை பருப்பு, கடுகு எல்லாம் போட்டு வதக்க வதக்க ஒரு வாசனை வருமே கவனித்து இருக்கின்றீர்களா...... மெதுவாக உங்களது நாசியை தொடும் அந்த வாசனை, நாக்கில் எச்சிலை வரவழைக்கும், பின்னர் கால்களை நடக்க சொல்லி அங்கே இழுத்து செல்லும். அந்த பிரவுன் நிறத்தில் இருக்கும் உருளைக்கிழங்கும் மசாலாவும் பார்க்கும்போதே சுண்டி இழுக்கும், அதை ஒரு கரண்டியில் எடுத்து தாமரை இலையில் ஒரு பொட்டலம் போன்று மடித்து அதை நூல் கொண்டு கட்டி வைக்கின்றனர்........ அதை பார்க்கும்போது காம்ப்ளான் விளம்பரம்தான் நினைவுக்கு வருகிறது "நான் அப்படியே சாப்பிடுவேன்....!".
 


முதலில் அந்த பொட்டலத்தை பசி நேரத்தில், அதுவும் நாசியை தாக்கும் அந்த வாசனையை நுகர்ந்துக்கொண்டு  சரியாக பிரிப்பது என்பதே ஒரு சாதனைதான், அதை பிரித்தவுடன் உங்களது வீட்டு பீரோவை திறந்தவுடன் கண்ணில் முதலில் தகதகக்கும் தங்க நகையை போலவே அந்த பச்சை நிற இலையின் உள்ளே ஆரஞ்சு அல்லது பிரவுன் நிறத்தில் கண்ணில் படுகிறது அந்த கிழங்கு, அதை பார்த்துவிட்டு மெதுவாக அந்த கிழங்கு பொட்டலத்தை பிரிக்க பிரிக்க அசாதாரணமாய் விஸ்வரூபம் எடுக்கிறது அந்த வாசனை, கொஞ்சமே கொஞ்சம் மூன்று விரல்களை மட்டுமே கொண்டு விள்ளல் எடுத்து வாய்க்குள் வைப்பதற்கு முன் கவனித்து பார்த்தால் மட்டுமே தெரியும் உங்களது வாய் இவ்வளவு எச்சிலை உற்பத்தி செய்ய முடியுமென்பது........ வாயில் வைத்தவுடன் அந்த காரம் முதலில் கண்களில் தண்ணீரை வரவழைக்கிறது, பின்னர் அதையும் மீறி சுவை தெரிய ஆரம்பிக்கும்போது கண்களில் வருவது ஆனந்த கண்ணீராகும் அதிசயம் நடக்கும் ! அந்த மசாலாவின் கலவையோடு, வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கருவேப்பில்லை எல்லாவற்றிலும் ஒரு சுவை இருப்பதை காண்பீர்கள்.
 


ஒரு பொட்டலம் என்பது ஐந்து ரூபாய் மட்டுமே, சுவை நன்றாக இருப்பதால் இரண்டு பொட்டலங்களை வெளுத்து வாங்கினோம். காரத்தோடு இருக்கும்போது சிறு வயதில் அந்த அல்வாவின் சுவை யாபகத்திற்கு வர என்னின் சந்தோசத்தை கண்டு ஒரு சிறிய துண்டை கொடுத்தனர்...... மீண்டும் சிறுபிள்ளையானேன் ! சில சமயங்களில் சாதத்திற்கு தொட்டு கொள்ள என்று வாங்கும் சைடு டிஷ் பின்னர் சாதத்தை இதற்க்கு தொட்டு கொள்ள என்று நடக்குமே, அது இந்த கிழங்கு பொட்டலத்தில் சாத்தியம் எனலாம் !! சுமார் ஐம்பது வருட பாரம்பரியம் கொண்ட இந்த கிழங்கு பொட்டலம் வெகு சில கடைகளில் மட்டுமே இன்று கிடைக்கிறது, காலத்தை கடந்து நிற்கும் இது சுவையாக இருக்குமா என்று இன்னுமா உங்களுக்கு சந்தேகம் ?!



 
Labels : Suresh, Kadalpayanangal, Oorum rusiyum, district special food, district food, Madurai, Madurai food, Kilangu pottalam, East moola aavani street food, Potato fry, tasty
 

14 comments:

  1. அடுத்த முறை மதுரைக்கு வரும்பொழுது
    கிழங்குப் பொட்டலம் வாங்கி சாப்பிட்டே ஆக வேண்டும் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. சுவை மிக்க பகிர்வுகள்.

    ReplyDelete
  3. Hi Suresh, its high time to archive all your Food explorations all around the world especially TN. I have referred your website to many of my friends and so far received very very good feedback.

    Continue your explorations and we are eager to know what and all you are going to open up.........

    Are you still in chennai.........was expecting a call from you but left to B'lore this sunday for personal reasons...

    regards
    Siva

    ReplyDelete
  4. புதுசு புதுசா சொல்றீங்க! சுவையா இருக்கு! வாங்கி சாப்பிட ஆசையாவும் இருக்கு! அசத்துங்க நண்பரே!

    ReplyDelete
  5. நீங்கள் விவரித்த விதமே சுண்டி இழுக்கிறதே :)
    த ம 3

    ReplyDelete
  6. முன்பு நாகலக்ஷ்மி பவன் ஆதிகாலத்து ஒரிஜினல் நெய்மிட்டாய்க்கடை என்று பெயர் இருந்த நினைவும்.கிழங்கு ....சு....ள்

    ReplyDelete
  7. வர வர மெருகு ஏறிக்கிட்டே போகுது, உங்க எழுத்தில்!

    இனிய பாராட்டுகள். காரம் எனக்கு ஆகறதில்லை:( விட்டுட்டேன். இப்ப அதிகாரம் மட்டுமே:-)

    ReplyDelete
  8. நானும் விரும்பிச் செல்லும் கடை
    ருசித்து உண்ணத்தான் தெரியும்
    இப்படி படிப்பவர் எல்லாம்
    ரசித்துச் சுவைக்கும் வண்ணம்
    உங்களைப் போல் சொல்ல வராது
    படங்களுடன் பதிவு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தெரிந்து இருந்தால், மதுரை வலைப் பதிவர்கள் மாநாட்டிற்கு வந்து இருந்த போது இந்த கிழங்கு பொட்டலத்தை சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கும் சில வாங்கிக் கொண்டு சென்று இருப்பேன்.
    அடுத்த வலைப் பதிவர்கள் சந்திப்பு, மதுரையில் நடக்கும்போது, மதுரை கிழங்கு பொட்டலம் + மதுரை ஜிகர்தண்டா இரண்டும் வழங்கும்படி மதுரைக்காரர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  10. ஆஹா.... பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுதே! :)

    த.ம. +1

    ReplyDelete
  11. this post is informative as well as interesting to read ... well written !!!

    ReplyDelete