Tuesday, December 23, 2014

சாகச பயணம் - கயாக்கிங் (Kayaking) !!

ஒரு பயணம் என்பது சில நேரங்களில் மன நிம்மதி, சந்தோசம், சோகம், த்ரில், ஆன்மிகம், அறிவு, அறியாமை, வியாபாரம் என்று அமையும் ! ஒவ்வொரு பயணம் ஆரம்பிக்கும்போதும் அந்த திட்டமிடலில் இந்த பயணம் இந்த பீலிங் தரும் என்று யோசித்தே ஆரம்பிக்கிறோம், அது தொடங்கும் நேரத்தில் இருந்தே அந்த பீலிங் நமக்கு தொடங்கிவிடும் ! இந்த பகுதிகளில் நான் சென்று, அனுபவித்து வந்த சாகச பயணங்களை பகிர்ந்து வருகிறேன், இந்த முறை பகிர போவது என்பது கயாக்கிங் (Kayaking) !! நீச்சல் தெரிந்தவர்களுக்கு இந்த கயாக்கிங் (Kayaking) என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை, ஆனால் அரைகுறையாய் தெரிந்தவர்களுக்கு ?!
கடல்பயணங்கள்.... இப்போது ரெடி !
கேரளா செல்பவர்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை என்று தோன்றும்...... கேரளாவில் ஒரு கரையில் இருந்து இன்னொரு கரைக்கு செல்ல ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்து செல்ல முடியாது என்று வீடுகளுக்கு என்று நாம் கார், பைக் வாங்குவது போல ஒரு சிறு படகு வைத்து இருப்பார்கள். இந்த படகுகளில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே பயணிக்க முடியும், அது போலவே இந்த கயாக் (Kayak) என்பதும் ! 4000 வருடங்களுக்கு முன்பே அலாஸ்கா பகுதியில் இது போன்ற சிறிய வகை படகுகளை மக்கள் உபயோகித்து இருக்கின்றனர். இன்று கடலில் அல்லது ஆறுகளில் பயணம் செய்ய இதை பயன்படுத்துகின்றனர். இதை பற்றி எழுத வேண்டும் என்றால் நிறையவே எழுதலாம், அந்த அளவுக்கு விஷயம் இருக்கு. சாகச பயணம் விரும்புபவர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலம் !

அந்த படகின் உள்ளே.... ஒரு மாதிரி தோற்றமே !
பீமேஸ்வரி (Bheemeshwari) என்பது பெங்களூரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பொழுதுபோக்கு தளம். கம்பெனியில் இருந்து எல்லோரும் அவுட்டிங் சென்றபோது இதை முயன்று பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பீமேஸ்வரியில் தூரத்தில் இருந்து பார்க்கும்போது சிறிய படகு போன்று தெரிந்தாலும், நெருங்கி சென்று பார்க்கும்போது இரு ஆட்கள் மட்டுமே உட்கார முடியும் என்பது புரிந்தது. இரண்டு பேராக படகில் செல்லலாம் என்று முடிவு செய்தவுடன், என்னுடன் கூட வந்த தோழி "உங்களுக்கு நீச்சல் தெரியுமா ?" என்ற கேள்விக்கு தலையை எல்லா விதத்திலும் ஆட்டி அவரை குழப்பினேன், பின்னே அரை குறையாய் தெரியும் என்பதை வேறு எப்படித்தான் சொல்வதாம் ! லைப் ஜாக்கெட் ஒன்றை மாட்டி விட்டு ஒரு சிறிய துடுப்பையும் கைகளில் கொடுத்தனர். அடுத்து அதை எப்படி ஓட்ட வேண்டும் என்று சொல்லி கொடுத்தனர்....அங்கதானே இருக்கு விஷயமே !




டேய் முதலை இருக்காம், இதை முன்னாடியே சொன்னா என்ன !

துடுப்பு போடும்போது இருவருமே ஒரே சைடில் போட வேண்டும், அப்போதுதான் படகு முன்னோக்கி நகரும் என்றும், இடது புறம் திரும்ப வேண்டும் என்றால் இடது புறம் மட்டுமே துடுப்பு போட வேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்துவிட்டு தூரத்தில் எதாவது பாறை போல இருந்தால் திரும்பி வந்து விடுங்கள் என்று சொல்ல, நாங்கள் அந்த பாறையை தொட்டு விட்டு வருகிறோமே என்று சொல்ல, அது முதலையாக கூட இருக்கலாம் என்றபோது எங்களை ஏன் எனது நண்பர்கள் முதலில் செல்லுங்கள் என்றனர் என்பது இப்போது புரிந்தது...... ஏண்டா, எங்களை வச்சி இப்படி காமெடி பண்றீங்க ?! இப்போது கிளம்பலாம் என்று சொல்ல லெப்ட், ரைட் என்று சொல்லிக்கொண்டே செல்ல ஆரம்பித்தோம் !!

தொடங்கியாச்சு எங்கள் கயாக்கிங் பயணம் !


முதலில் சிரமமாக இருந்தாலும், நேரம் செல்ல செல்ல இதமான காற்றும் அந்த மூடிய மேகங்களும் என்று அந்த தண்ணீரில் மிதப்பது சுகமாக இருந்தது. துடுப்பு போடுவதை நிறுத்தியவுடன் படகு அந்த ஆற்றின் போக்கோடு செல்ல ஆரம்பிக்க காவிரி தண்ணீரில் கைகளை விட்டு விளையாட, இருவரும் ஒரு சைடில் இருந்து தண்ணீர் எடுக்க குனிய இப்போது படகு கவிழ ஆரம்பித்தது..... அந்த சில நொடிகளில் மனதில் ஏற்ப்பட்ட பதட்டத்திற்கு அளவே இல்லை, ஒரு வழியாக சமாளித்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினோம். மாலை நேரத்தில் அந்த அந்தி வானத்தை ரசித்துக்கொண்டு, இப்படி சில்லென்ற காற்றோடு ஆற்றில் பயணிப்பது ஒரு சுகானுபவம்...... ஒரு முறை முயன்று பாருங்கள், அந்த சாகசம் உங்களுக்கும் பிடிக்கும் !!

வெற்றி, வெற்றி..... இங்க காசியப்பன் பாத்திர கடை எங்க இருக்கு !!
 Labels : Suresh, Kadalpayanangal, Kayak, Kayakking, Bheemeshwari, near Bangalore, adventure sport, adventure, kaveri river kayak, Karnataka, fishing camp, saagasa payanam, saagasam, thrilling rides, memorable journey

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உங்களுடைய ப்ளாக்கை பற்றி தி ஹிந்துவில் படித்த பிறகு ஆர்வமாக இணையதளத்தில் தேடினேன். இந்த ப்ளாக் மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. இந்த இடத்திற்கான செல்லும் வழி, இங்கு தாங்கும் வசதிகள், கட்டணம் இந்த தகவல்களும் சொல்லி இருந்தான் மிகவும் உபயோகமாக இருக்கும், பகிதளுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. அருமை அருமை நண்பரே
    காசியப்பன் பாத்திரக் கடையை கண்டுபிடித்துவீட்டீர்களா

    ReplyDelete