Thursday, October 29, 2015

ஊர் ஸ்பெஷல் - கல்லிடைகுறிச்சி அப்பளம் ! (பாகம் - 1)

சிறு வயதில் அம்மா ஏதேனும் நமக்கு பிடிக்காத உணவு ஏதேனும் செய்தால், நம்மை தாஜா செய்வதற்கு என்று தருவது அப்பளம். ஒரு கையில் அப்பளம், இன்னொரு கையில் சாப்பாடு என்று சாப்பிட்டது யாபகம் இருகிறதா ?! அதுவே பெரியவர்கள் ஆனதும், ஒரு கல்யாணத்தில் ஒருவர் பாயசத்தில் அப்பளத்தை உடைத்து போட்டு உண்டதை வைத்து அதனின் பயன்களையும், எத்தனை வகை இருக்கிறது என்று தேட சென்று ஆச்சர்யப்பட்டேன்.... அதே ஆச்சர்யத்தை சுவையான அப்பளத்தை தரும் கல்லிடைகுறிச்சிக்கு சென்றபோதும் அனுபவித்தேன் எனலாம். சிறு வயதில், அப்பாவின் நண்பரொருவர் கல்லிடைகுறிச்சிக்கு ஒரு கல்யாணத்திற்கு செல்வதாக சொன்னபோது அப்பா அவரிடம் கொஞ்சம் அப்பளம் வாங்கி வாருங்களேன் என்றார், அவர் திரும்பி வந்தபோது ஒரு பை நிறைய வித விதமான அப்பளங்கள் "அங்கு சென்றபோதுதான் தெரிந்தது, இத்தனை வகை இருப்பது, எது உங்களுக்கு பிடிக்கும் என்று தெரியாததால் எல்லாவற்றிலும் கொஞ்சம் வாங்கி வந்தேன்..." என்றார். கல்லிடைகுறிச்சி அப்பளம் என்பதை இன்றுவரை சொல்லி வருகிறோம், ஆனால் அதை பற்றி எவ்வளவு தெரியும் நமக்கு.... வாருங்களேன் ஒரு சுவையான, மொறு மொறுப்பான பயணம் செல்வோம் !
இந்த நேரத்தில், எனது ஆர்வத்தை கண்டு என்னை அப்பளம் தயாரிப்பு செய்யும் இடத்தை பார்பதற்கு அனுமதி தந்த கல்லிடைகுறிச்சியின் சிறந்த சங்கர் அப்பளம் தயாரிப்பு கம்பெனிக்கு எனது நன்றிகள் !அம்பாசமுத்திரம் - தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய சிறிய நகரம். தாமிரபரணி ஆறு ஓடும் இந்நகரம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் துணை நகரமான கல்லிடைகுறிச்சி தாமிரபரணி ஆற்றின் அக்கரையில் அமைந்துள்ளது. கல்லிடைகுறிச்சி என்பது திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பொதுவாக ஊர் பெயர்களில் குறிச்சி ,ஊர் ,குடி ,பாடி ,சேரி , கோடு,பட்டினம் ,பாக்கம் ,காவு ,காடு ,கா என்றெல்லாம் ஊர்களுக்குப் பொதுப் பெயர் இட்டு வழங்கினர் .நிலங்களுக்கு ஏற்ற வகையில் இப்பெயர்கள் அமைத்தனர். இவை இடுகுறிச் சிறப்புப் பெயர்களாக அமைந்தன,  .இதில் கல்லிடைகுறிச்சி என்பது கல் + இடை + குறிச்சி என்பதை குறிக்கும், இதன் அர்த்தம் மலைகளின் நடுவே அமைந்த ஊர் என்பதாகும். இந்த ஊரின் பின்னே இருக்கும் மலை தொடரே பாண்டிய, சேர மன்னர்களின் எல்லை கோடாக இருந்தது எனலாம்.

அப்பளம், பப்படம், பப்பட், அப்பளா என பல பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த மொறுமொறு அயிட்டம், இந்திய உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. திருவிழா மற்றும் விசேஷங்களில் காய்கறிகளும் உளுந்தில் செய்த பப்படமும் இடம்பெற்றிருந்ததாக சங்க இலக்கியங்களில் கூறப்படுகிறது. ‘அப்பளித்துருட்டுபவது’ என்பதே அப்பளமானது என்று தேவநேயபாவாணர் விளக்கம் அளிக்கிறார். அப்பளித்தல் என்றால் சமனாகத் தேய்த்தல் என்று பொருள். அப்பளமானது உளுந்து, அரிசி, மரவள்ளிக்கிழங்கு போன்ற மூலப்பொருட்களிலும் மிளகு, பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயம் போன்ற உப பொருட்களிலும் தயாராகிறது. வாயில் ஒட்டும் வட இந்திய அப்பளங்கள் உணவகங்களில் பல்வேறு விதமாக பரிமாறப்படுகின்றன. பொருட்காட்சிகளின் பிரமாண்ட பிகானீர்  டெல்லி அப்பளத்துக்கு மயங்காதவர் யார்? இப்படிப்பட்ட சுவைப் புகழ் கொண்ட ராஜ அப்பளங்களில் மிகச் சிறந்தவை தயாராவது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில்தான்! அப்பளம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உணவே. மழைக்காலத்தில் காய்கறிகள் கிடைக்காது என்பதால் ஏதேனும் சில உணவுகளை சேகரித்து வைக்கும் வழக்கில் வந்தவையே அப்பளம், வடாம், வற்றல் போன்றவை. அந்தக் காலத்தில் அப்பளம் இடுவது என்பது பெரிய கலையாகவே இருந்தது. 
இந்த ஊருக்கு சென்று அப்பளம் வாங்கணும் என்று சொல்லி வழி கேட்டோம், கோவிலுக்கு எதிரில் இருக்கும் தெருவில் இருக்கும் என்றனர். இங்குதான் புகழ்பெற்ற ஆதிவராக பெருமாள் கோவில் இருக்கிறது, தெருவும் அங்கு செல்லும் வழியும் மிகவும் குறுகல் என்பதால் நடந்து அந்த தெருவுக்குள் நுழையும்போதே அதை எங்கோ பார்த்தது போன்று இருந்தது.... நண்பர் பக்கத்தில் இருந்து இங்குதான் ஷங்கர் ஜென்டில்மேன் படம் எடுத்தார் என்றபோது புரிந்தது ! அந்த தெருவில்தான் கல்லிடைகுறிச்சியின் பிரபலமான அப்பள கம்பெனியும் இருக்கிறது எனலாம். நாங்கள் சுமார் ஐந்து தலைமுறைகளாக புகழ்பெற்ற ஷங்கர் அப்பளம் சென்று எனது ஆர்வத்தை தெரிவித்தேன். அப்போது அவர்களது நுழைவாயிலேயே இருந்த அப்பள வகைகளை கண்டு ஆச்சர்யப்பட்டோம்..... எங்க அம்மா வெறும் உளுந்து அப்பளத்தை மட்டுமே கொடுத்து எமாத்திடான்களே !!

அப்பளத்தில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா ?.... உளுந்து அப்பளம், அரிசி அப்பளம், இரட்டை அப்பளம், மிளகு அப்பளம், கிழங்கு அப்பளம், கார அப்பளம், ரிப்பன் வடகம், குச்சி வடகம், தேன்குழல் வடகம், ஓமபோடி வடகம், வெங்காய வடகம், இலை வடகம், அப்பள சிப்ஸ் என்று பல வகைகள் இருக்கிறது. இவ்வளவையும் எப்படி செய்கிறார்கள் என்று இங்கு சொல்ல முடியாது என்பதால், நாம் விரும்பி சாப்பிடும் உளுந்து அப்பளம் பற்றி மட்டுமே பார்க்கலாம் இங்கு.  அதற்க்கு முன்பு உழுந்தை பற்றி எவ்வளவு தெரியும் நமக்கு ? ஏன் உளுந்தை அப்பளம் செய்ய பயன்படுத்துகின்றனர் ?உளுந்து அல்லது உழுந்து (Urad bean, Vigna mungo) ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்புஉளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. உந்தூழ் என்பது உழுந்தைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும். “இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என வரும் திருக்குறளில் இச்சொல் அப்பொருள் தருவதை உணர்ந்துகொள்ளலாம். உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு “உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்” என விளக்குகிறது. உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல் அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும். உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது. எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன்
இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரலாம்.  அந்த காலத்தில் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதாலும், சுமைகளை தூக்குவதாலும் இடுப்பு எலும்பு பலம் இழப்பதால், அதை சரி செய்யும் விதமாக உளுந்தங்களி செய்து உண்டனர். அதன் பயனை பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்... உளுந்து.


உளுந்தை இங்கே மாவாகவே வைத்திருக்கின்றனர், அதை அவர்கள் கைகளினால் பிசைய போகிறார்கள் என்று நினைக்க, அவர்களோ அங்கே இருந்த பெரிய கிரைண்டர் போன்ற எந்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்ற, அது நன்கு பிசைத்து தருகிறது. அதை பெரிய பெரிய உருண்டைகளாக எடுத்து வைக்கின்றனர். ஒவ்வொரு உருண்டைகளும் ஒரு பெரிய பந்து வடிவத்தில் இருந்தது. அப்பள வகைகளை பொருத்து அதில் மிளகாய், ஜீரகம், பிரண்டை சாறு, மிளகு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை இதில் சேர்க்கின்றனர். இப்படி வந்த மாவை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும், இப்படி செய்யும்போது இதில் இருக்கும் தண்ணீர் ஆவியாகி அந்த மாவு ஒட்டாமல் அப்பளம் செய்வதற்கு வருமாம்.அட, அட, அட.... அந்த மாவை இப்போதே திங்கணும் போல இருக்கே. அது சரி, அந்த அப்பளம் எப்படி ரவுண்டு ஆக செய்கிறார்கள் ? அந்த அப்பளத்தை எப்படி பேக் செய்கின்றனர், இந்த அப்பளம் எங்கு எல்லாம் செல்கிறது ? அது எப்படி மொறு மொறுவென்று வருகிறது ? இதை எல்லாம் தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை பொறுங்களேன் !!

Labels : Suresh, Kadalpayanangal, appalam, kallidaiurichi, kal idai kurichi, famous for, kallidaikurichi is famous for, papad making, papad, oor special, district special, how appalam is made

Monday, October 19, 2015

JB சவுத்திரி பாதம் பால் - மதுரை

வெகு நாட்களாக பதிவுகள் எழுத முடியாத அளவுக்கு வேலை பளு அதிகம் இருந்தது, இப்போது சிறிது சிறிதாக எல்லாம் நன்கு செல்லும்படியால் மீண்டும் இந்த பயணத்தை ஆரம்பிக்கிறேன். என்ன ஆச்சு, ஏன் எழுதவில்லை  என்று கவலையோடு விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல !
*********************************************************************************
மதுரை என்றால் நினைவுக்கு வருவது ஜிகர்தண்டாவும், பரோட்டாவும் என்று இருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள், அது ஏகப்பட்ட சுவைகளை தன்னுள்ளே கொண்டு இருக்கிறது ! காரம் சாரமாக இரண்டு பரோட்டாவுடன் சால்னா போட்டு சாப்பிட்டுவிட்டு, அதற்க்கு தொட்டு கொள்ள என்று நாட்டு கோழி மிளகும் வெங்காயமும் போட்டு ஒன்றும் அதனோடு மதுரை ஸ்பெஷல் ஆன சுக்கா வருவலும் என்று சாப்பிட்டுவிட்டு பல்லின் இடுக்கில் இருக்கும் கறியை தோண்டிக்கொண்டே நடக்கும்போது, இப்போ சாப்பிட்டது கொஞ்சம் தண்ணியை தவிக்க விடுதே என்று யோசித்துக்கொண்டே நம்ம மக்கள் செல்வது இந்த மேற்கு மாசி வீதியில் இருக்கும் JB சவுத்திரி பாதாம் பால் கடையாக இருக்கும் !!


போத்திஸ், மதுரை முருகன் இட்லி கடை என்று இருக்கும் அந்த வீதியில் நடந்து கொண்டு இருந்தால், நேதாஜி சாலையை தாண்டி உங்களது இடது புறத்தில் எல்லா கடைகளும் நிலவில் இருந்து கடன் வாங்கியது போல ஒளி வெள்ளத்தில் இருக்கும்போது, திடீரென்று ஒரு கடையில் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் வெளிச்சம் இருக்க, ஆனால் மக்கள் கூட்டம் பிளாட்பாரத்தில் அள்ளி குவியும். அவர்களில் பலருக்கும் தலை முடி கருப்பாக இருந்தாலும் வெள்ளையாய் மீசை இருக்கும், இன்னும் சற்று உற்று கவனித்தால் அட பெண்களுக்கு கூட அதே வெள்ளை மீசை..... அப்போது ஒருவர் நம்ம டீ மாஸ்டர் டீயை ஆற்றுவதுபோல சர் சரென்று பித்தளை பாத்திரத்தில் ஆற்றி கொண்டு இருப்பார், திடீரென்று அப்படியே ஆற்றிக்கொண்டே தன்னையே சுற்றுவார், அப்போது பால் கொட்டிவிடுமோ என்று நமக்கு பதறும். இதை நீங்கள் பார்த்தால்...... நீங்கள் இருப்பது மதுரையின் மிக பிரபலமான பாதாம் பால் கடை.
அட, பாதாம் பாலுக்கா இவ்வளவு அலட்டல் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக ஒரு நல்ல பாதாம் பாலை இதுவரை சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். வெளியில் கிடைப்பது எல்லாம் தண்ணியான பாலில், இரண்டாம் தரமான பாதாம் பவுடரில், சக்கரையை கொட்டி இருக்கும் ஒன்று..... பாதாம் பாலுக்கு என்று ஒரு ரசனை உண்டு என்று உங்களுக்கு தெரியுமா ? சுண்ட காய்ச்சிய பசும் பாலை என்றாவது பருகி இருக்கின்றீர்களா, அதில் சக்கரை எல்லாம் போடாமலே ஒரு சுவை இருக்கும் கவனித்து இருக்கீர்களா ? அதில், நன்கு நயமான பாதாம் பருப்புகளை பொடி செய்து கொஞ்சம் கலக்கி கொதிக்க வைக்க வைக்க அதன் மேலே ஆடை படரும். இப்போது அந்த ஆடையை எடுத்து கொஞ்சம் சுவைத்து பாருங்கள், பாதாம் பாலின் சுவை தெரியும். சுட சுட அப்படி எடுத்த பாலை நன்கு நுரை வரும் படி ஆற்றி ஒரு கப்பினில் கொடுக்க, அதன் மேலே கொஞ்சம் நாட்டு சக்கரையை போடும்போது, டைடானிக் கப்பல் முழுகுவது போல கொஞ்சம் கொஞ்சமாக அது கரைந்துக்கொண்டே உள்ளே விழுகும், அப்போது நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் சாப்பிட்டால் உங்களுக்கு அந்த நுரை ஒரு வெள்ளை மீசையை வரைந்துவிடும்.... அது சொல்லாமல் சொல்வது என்பது நீங்கள் இந்த ஜன்மத்தின் அதி அற்புதமான சுவையை சுவைதுவிட்டீர்கள் என்பதே.

இது மட்டும் இல்லை, எனக்கு சூடாக சாப்பிட பிடிக்காது என்று முரண்டு பிடிபவர்களுக்கு லஸ்ஸி இருக்கிறது. நமது ஊரில் தயிர் என்று ஒரு டம்பளரில் எடுத்து லஸ்ஸி செய்யும் பாத்திரத்தில் ஊற்றுவார்கள், அதன் மேலே தண்ணியை ஊற்றி கொஞ்சம் ஓட்டி கொடுக்கும்போது நம்ம வீட்டில் நான் பால் சாப்பிட மாட்டேன் என்று அடம் செய்யும்போது அதை அவர்கள் வீட்டு பிரிட்ஜில் வைக்க, அடுத்த நாள் நாம் திருட்டுத்தனமாக அதே குளிர்ந்த பாலை குடித்துவிட்டு நீ உள்ள வைச்சு இருந்த லஸ்ஸியை குடிச்சிட்டேன் என்று சொல்லுவோம் இல்லையா அதை போலவேதான் கடையில் கொடுப்பார்கள்..... ஆனால் இங்கு லஸ்ஸி என்று கொடுக்கும்போது ஸ்ட்ரா கொடுங்க என்று கேட்க, அவர் முதலில் குடித்து பாருங்கள் என்றார். மதுரையில் மலையில் கிரானைட் கல் வெட்டி எடுக்க இங்குதான் பயிற்சி எடுத்து இருப்பார்கள் போல, லஸ்ஸியை முதன் முதலில் ஸ்பூன் கொண்டு வெட்டி எடுக்கும் படியாக அப்படி சுவையாகவும், திக் ஆகவும் இருந்தது. ஒரு வாய் போட்டவுடன், வாயில் எச்சில் ஊற இந்த லஸ்ஸி அப்படி சுவையோடு தொண்டையில் இறங்குகிறது.


அடுத்த முறை மதுரை சென்று நன்கு காரமாக சாப்பிட்ட பின், இங்கு சென்று பாதாம் பால் சாப்பிடுங்கள், சூடாக வேண்டாம் என்றால் லஸ்ஸி சாப்பிடுங்கள். ஜிகர்தண்டா மட்டுமே மதுரை பேரை சொல்கிறது என்ற எண்ணத்தை மாற்றி கொள்வீர்கள் !

பஞ்ச் லைன் :

சுவை - அருமையான, சுவையான பாதாம் பால் மற்றும் லஸ்ஸி !

அமைப்பு - ஒரு சிறிய இடம், பிளாட்போர்ம் வெளியே நின்றுகொண்டுதான் சாப்பிட வேண்டும். பார்கிங் என்பது இரு சக்கர வாகனங்களுக்கு இருக்கிறது, நான்கு சக்கர வாகனங்களுக்கு கண்டிப்பாக கஷ்டம்தான் !

பணம் - பாதாம் பால் முப்பது ரூபாய், லஸ்ஸி ஐஸ் இல்லாமல் முப்பத்தி ஐந்து ரூபாய் !

சர்வீஸ் - நல்ல சர்வீஸ் !

அட்ரஸ் : Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, madurai, JB Choudhary badam milk and lassi, best badham milk, amazing tasty lassi, west masi street, dessert

Tuesday, September 8, 2015

அறுசுவை(சமஸ்) - விருத்தாசலம் தவலை வடை !!

மீண்டும் வெகு நாட்களுக்கு பிறகு திரு.சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணம் படித்துவிட்டு அதை தேடி சுற்ற ஆரம்பித்தாகிவிட்டது ! அவர் எழுதிய ஒவ்வொரு கடைகளுமே, பல பல வருடங்கள் தங்களது சுவைக்கு பெயர் பெற்றது, இதனால் தேடி செல்லும்போது ஏமாற்றம் கொடுத்ததில்லை. கும்பகோணம் வரை சென்றவன், அதை அடுத்து விருத்தாசலம் செல்ல வேண்டும்  பிடிக்க, எல்லோருக்கும் அங்கு அப்படி என்ன இருக்கிறது என்று ஆவல்.... கொண்டு சென்று தவலை வடை வாங்கி கொடுத்தேன் ! ஒரு வடைக்கு இவ்வளவு நீண்ட பயணமா என்று யோசிக்காதீர்கள், வடை  மட்டும் இல்லை, ஒரு சரித்திரத்தையே தெரிந்து கொள்ளலாம் !!விருத்தாசலம் (ஆங்கிலம்:Vriddhachalam அல்லது Virudhachalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கடலூர் மாவட்டத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகராட்சி. "விருத்தம்"(=பழைய) மற்றும் "அசலம்"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே "விருத்தாசலம்" ஆகும். தமிழில் "திருமுதுகுன்றம்" எனவும் "பழமலை" என்றும் வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் இருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த இடம், சுமார் ஒன்றரை மணி நேர பயணம் எனலாம்.


ரெண்டு இட்லி என்று ஹோட்டல் சென்று நீங்கள் வாங்கினால் இலவசம் போல வருவது என்பது இந்த வடை, சட்டென்று அது வேண்டாம் என்று நீங்கள் சொல்ல முடியாதவாறு பிரவுன் நிறத்தில் உங்களை கொஞ்சம் ஆட்டம் காட்டும். நமது வீட்டில் இரண்டே இரண்டு வடை மட்டுமே பிரபலமாக இருக்கும்.... உளுந்து வடை, மசால் வடை ! அவ்வப்போது கீரை வடை, வாழைப்பூ வடை என்று கிடைக்கும். இதுவே ஹோட்டல் சென்றால் ரச வடை, தயிர் வடை (அதுவும் மேலே பூந்தி போட்டு) கிடைக்கும். அனால் உங்களுக்கு தெரியுமா, அந்த காலத்தில் எண்ணை என்பது எல்லாம் பணக்காரர்கள் மட்டுமே உபயோகிப்பார்கள் எனும்போது வடை என்பதை எப்படி சுட்டு இருப்பார்கள் என்று ?நீங்கள் வீட்டில் தண்ணி எடுத்து வரும் குடத்தை அந்த காலத்தில் தவலை என்பார்கள். அந்த காலத்தில் செப்பு தவலைகலையெ அதிகம் பயன்படுத்தினர், (செப்பு அல்லது செம்பு பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும் : செம்பு ), இதில் கவனிக்க வேண்டியது தவலை என்ற சொல்லை, எங்கு தேடியும் இதன் அர்த்தத்தை கண்டு பிடிக்க முடியவில்லை, ஆனாலும் தமிழர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும் : பானை . எண்ணை கொண்டு பொறித்து சாபிடுவது என்பது ஆரோக்கியமற்றது என்பதாலும், எண்ணை வாங்குவது எல்லோருக்கும் முடியவில்லை என்பதாலும் இந்த வடை என்பதை அவர்கள் செய்ய கையாண்ட விதம் வித்யாசமானது ! 


அந்த காலத்தில் இருந்த அடுப்பில் நெருப்பை மூட்டி, அதன் மேலே இந்த தவலையை கவிழ்த்து போடுவார்கள். பின்னர் இந்த மசால் வடை போன்ற மாவை தட்டி தட்டி, கவிழ்ந்து இருக்கும் அந்த தவலையின் மீது போடுவார்கள். செம்பு குறுகிய நேரத்தில் வெப்பத்தை கடத்தும் என்பதால், வடை வெகு விரைவாக வேகும். வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மெதுவாகவும் இருக்கும் இதற்க்கு ரசிகர்கள் அதிகம். அன்றைய அந்த சுவையில், சிறிது மாறி கிடைக்கிறது இந்த விருதாச்சலத்தின் தவலை அடை. இங்கு புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் முன், சிறிது தூரத்தில் இருக்கிறது இந்த ருசி உணவகம். உள்ளே நுழையும்போதே இந்த தவலை வடை வைத்திருப்பதை பார்க்கலாம், இதன் மூலம் எத்தனை பேருக்கு இது பிடிக்கும் என்று தெரிகிறது.
கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று எல்லா பருப்புக்களும் கலந்து, அதை மாவை விட கொஞ்சம் குறைவாக அரைத்து, அதை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கும்போது கிடைக்கும் இந்த தவலை வடை காண்பதற்கே ருசிக்கிறது. ஒரு இடத்தில் மஞ்சளாக கடலை பருப்பு, இன்னொரு இடத்தில வெள்ளையாக உளுந்தம் பருப்பு, உள்ளும் வெளியுமாக துவரம் பருப்பு, கருவேப்பில்லை என்று உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது. ஒரு கடி கடிக்கும்போதே வெளியே இருக்கும் மொருமொருப்பும், உள்ளே இருக்கும் மெதுவும் என்று அந்த விருதகிரீஷ்வரரை பார்காமலையே சொர்க்கத்தில் மிதக்கிறோம். இதுவரை மசால் வடையை மட்டும் காட்டி எமாதிடீங்கலேடா என்று மனதிற்குள் கத்துகையில், பருப்பு விற்கிற விலைக்கு தவலை  வடையா என்று தலையில் நாமே தட்டி கொள்ள வேடியதாகி இருக்கிறது. ஒரு கர கர மொறு மொறு சுவைக்கு இந்த தவலை வடையே சரி !!அடுத்த முறை விருத்தாசலம் செல்லும்போது இந்த தவலை வடையை சாப்பிட்டு பாருங்கள், உங்களுக்கே வித்யாசம் தெரியும். உளுந்த வடையையும், கடலை வடையையும் சேர்ந்து செய்த கலவையாய் உங்களுக்கு சுவையூட்டும்.

எப்படி செய்வது என்று படிக்க : தவலை வடை


Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, samas, thavalai vadai, a different vada, viruthachalam, virudachalam, virudasalam, rusi sweets, viruthagireeshwarar, writer samas

Monday, September 7, 2015

அறுசுவை - ஹோட்டல் உஷாராணி, சேலம்

பெங்களுருவில் இருந்து மதுரை செல்லும்போதெல்லாம், சேலம் தாண்டும்போதுதான் உணவு இடைவேளை வரும். அப்போதெல்லாம், சேலத்தில் எங்கு உணவு நன்றாக இருக்கும் என்று தேடுவது வழக்கமாக இருந்து கொண்டு இருந்தது. அப்போதெல்லாம் சேலத்தில் இருக்கும் எனது ப்ளாக் விரும்பியான திருமதி.அர்ச்சனா ராஜேஷ் அவர்களது நினைவு வரும். சேலத்தில் இருக்கும் சுவையான உணவுகளை அவ்வப்போது எனக்கு அறிமுகம் செய்வதும், எங்கு சென்றாலும் கடல்பயணங்கள் தளத்தை அந்த உணவகத்தில் அறிமுகபடுதுவதிலும் என்று இருக்கும் இவரை இதுவரை சந்திக்க முடிந்ததில்லை. ஒரு முறை சேலம் சென்று கொண்டு இருக்கிறேன் என்று முகபுத்தகத்தில் போட்டபோது, உடனடியாக போன் செய்து அவரது சகோதரர் டாக்டர் சரவணன் அவர்கள் என்னை சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்தார். சேலம் விநாயகா மிஷன் காலேஜில் பணிபுரியும் இன்றைய எனது நண்பருமான இவரை அன்று சந்தித்தபோது ரொம்ப நாள் பழகியவர் போல பழகினார், எங்களை ஒரு நல்ல உணவகத்திற்கு கூட்டி சென்றார் அதுதான் ஹோட்டல் உஷாராணி !!சேலம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில், கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் காக்காபாளையம் முன்னர் ஒரு U டர்ன் செய்தால் இளம்பிள்ளை ஊருக்கு செல்லும் ரோட்டில் சென்றால் வரும் ஒரு ஊர் என்பது இந்த வேம்படிதாளம். சேலத்தில் கிடைக்காத நல்ல உணவகமா, இவ்வளவு  தூரம் செல்ல வேண்டுமா என்று நீங்கள் கேட்க முடியாத அளவுக்கு இங்கு உணவின் சுவை இருக்கிறது. ஊருக்குள், மெயின் ரோட்டிலேயே கடை இருப்பதால் இரண்டு பக்கமும் மதிய நேரத்தில் கார் பார்க் செய்யப்பட்டு இருக்கும், அப்போதே தெரிந்துவிடும் இந்த ஹோட்டல் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை !


உள்ளே உட்கார்ந்து சாப்பிட இடம் கிடைப்பது குதிரை கொம்பு என்பதால், நிறைய பேர் பார்சல் செய்துக்கொண்டு சென்று காரிலோ அல்லது பக்கத்தில் இருக்கும் தோப்பிலோ உட்கார்ந்து சாப்பிடுவதை பார்க்கலாம். உள்ளே இடம் கிடைத்து உட்கார்ந்தவுடன் ஒரு பெரிய வாழை இலையை உங்களது முன் போடும்போது, ஒரு 10% பசி பறந்துவிடும். வெளியே இருக்கும்போதே பலரும் பிரியாணியை பார்சல் செய்து வாங்கி போவதும், பலர் போன் செய்து எனக்கு பிரியாணி எடுத்து வைத்துவிடுங்கள் என்று சொல்வதும், வெளியே பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்வதும் என்று இருப்பதை பார்க்கும்போதே இன்று பிரியாணிதான் என்று மனதில் முடிவாவதை தடுக்க முடியாது. சிக்கன் பிரியாணி என்று சொன்னவுடன் சூடாக  எண்ணை பளபளப்புடன் வைக்கவும், கொஞ்சம் ரைத்தா வையுங்கள் என்று கேட்கும்போதே மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா என்று வைத்துவிட்டு காடை, புறா வேண்டுமா என்று கேட்க.... நாங்கள் இதையே எப்படி சாபிடுவது என்று யோசித்து கொண்டு இருந்தோம் !

நண்பர் டாக்டர் சரவணன் அவர்களுக்கு எனது இனிய நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழகத்தில் இப்படி தெரியாமல் இருக்கும் ஹோட்டல் நிறைய இருக்கிறது, இப்படி நண்பர்கள் அறிமுகபடுதுவதாலேயே இது இன்னும் பலருக்கும் சென்று சேருகிறது. இனிமையான சந்திப்பு, உணவு என்று அந்த சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை செல்வோம் நண்பரே ! நன்றி !!
ஒரு வேளை நாம் நமது நண்பர் டாக்டர் சரவணன் உடன் சென்றதால் அப்படி ஒரு கவனிப்பு என்று இருக்குமோ என்று அடுத்தவர்களை பார்த்தால், அங்கும் அவர் அப்படித்தான் கவனித்து கொண்டு இருந்தார். பொதுவாக நமது வீட்டிற்க்கு உறவினர்கள் வந்தால் சாப்பாட்டை போதும் போதும் என்று சொன்ன பின்னரும், மெலிஞ்சிடீங்க நீங்க நல்லா சாப்பிடுங்க என்று அடுத்த முறை அவர் வருவதற்கு யோசிக்கும் அளவுக்கு கவனிப்போமே... இங்கும் இவர் அப்படிதான் கவனித்தார், கொஞ்சம் அசந்தால் நெப்போலியன் அவரது தம்பிக்கு ஊட்டுவார் இல்லையா, அது போல ஊட்டி விடுவாரோ என்று யோசிக்கும் அளவுக்கு ரொம்பவே பாசமாக கவனித்தார். பிரியாணியில் பெப்பர் கொஞ்சம் கூடவே இருக்க, அதனோடு நாட்டு கோழியும், மூளையும் என்று அருமையான காம்பினேசன். பசியோடு சென்றால் திருப்தியோடு வரலாம்.

பஞ்ச் லைன் :

சுவை - அருமையான, சுவையான பிரியாணியும், மட்டன், சிக்கன் அயிட்டங்களும் என்று ஒரு ஹோமிலி சுவை.

அமைப்பு - ஒரு சிறிய உணவகம்தான், பொதுவாக உள்ளே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றால் கொஞ்சம் நேரம் ஆகும். 

பணம் - விலை ஒருவருக்கு சுமார் 250 ரூபாய் ஆனது !!

சர்வீஸ் - அருமையான, வீட்டில் விருந்தினர்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு.

அட்ரஸ் : 
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, salem, tasty biriyani, off Salem - Coimbatore road, vembadithalam, homely mess, not to miss

Monday, August 24, 2015

அறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை !

மதுரை....... இந்த ஊரையும், அவர்களின் சுவையையும் சொல்லிக்கொண்டே சென்றால் நிறைய பதிவுகள் வரும் !  ஒரு இடத்தில் புட்டு செய்கிறார்கள் என்றால், இன்னொரு இடத்தில் சூடான இட்லி, பரோட்டா, பருத்தி பால், பிரேம விலாஸ் அல்வா, வெங்காய குடல் என்று வகை வகையாக இருக்கும், இந்த முறை மதுரை சென்று இருந்த போது பரோட்டாவும் சால்னாவும் எங்கு இருக்கும் என்று தேடியதில் எல்லோரும் சொன்னது தமுக்கம் மைதானம் பக்கம் இருந்த ஆறுமுகம் பரோட்டா கடை. இன்டர்நெட்டில் தேடி பார்த்தாலும் இந்த கடையை பற்றி பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் நாங்கள் பெரிய அளவில் பிரம்மாண்டமாக இருக்கும் என்று சென்றால் வெட்ட வெளியில் பரோட்டா  இருந்தனர், காத்திருந்து சாப்பிட்டனர் எல்லோரும்...... உண்மையான மதுரை பரோட்டாவின் சுவை !!சந்திரன் மெஸ்ஸின் இடது புறத்தில், ஒரு டீ கடை இருக்கிறது, காலையில் பார்த்தால் அது டீ கடை, மாலையில் சுவையான மதுரை பரோட்டா கிடைக்குமிடம் ! மாலை ஆகும்போது நமது உயரத்திற்கு பரோட்டா போடும் கல்லை எடுத்து வருகின்றனர், அதில் மூன்று பக்கத்தில் இருந்து தோசையோ, பரோட்டாவோ போடலாம். அதை துடைத்து, கழுவி எடுத்து வைத்து மேஜையை போட ஆரம்பிக்கும்போதே ஆட்கள் அங்கு காத்திருக்க ஆரம்பிக்கின்றனர். மைதா மாவினை பிசைந்து வைத்துவிட்டு, என்ன ஒரு லாவகத்தோடு அங்கு பரோட்டா செய்கின்றனர் என்று பார்த்தால் அசத்தலாக இருக்கிறது. அதை கல்லில் போட்டுவிட்டு, எண்ணையை எந்த கஞ்சத்தனமும் இல்லாமல் ஊற்ற, அந்த வெள்ளை கொஞ்சம் கொஞ்சமாக பொன்னிறமாக ஆகிறது !!


இரண்டு பரோட்டாவை சூடாக இலையில் எடுத்துபோட்டு, சால்னாவை ஊற்றும்போது புகை நமது மூஞ்சியை தாக்குகிறது, வாசனையோ அதிவேக விசையோடு நமது மூக்கினுள் நுழைந்து எச்சிலை வரவழைத்து விடுகிறது. அதற்க்கு தொட்டு கொள்ள மதுரை மண்ணின் ஸ்பெஷல் ஆன மட்டன் சுக்காவும், சிக்கன் பிரையும் வந்தது. இந்த மதுரை மட்டன் சுக்கவை பற்றி சொல்லியே ஆக வேண்டும், மட்டன் துண்டுகளை சிறியதாக எடுத்து போட்டு, அதனோடு கொஞ்சம் குழம்பும் ஊற்றி, வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் போட்டு தோசை கல்லில் வதக்கும்போது அந்த வண்ணமும், வாசனையும் இப்படிதான் பிணைந்து இருக்க வேண்டும் என்று மனது ஆனந்த கூப்பாடு போடும். ஒரே ஒரு துண்டை எடுத்து வாயில் போட, அந்த பரோட்டாவும் சால்னாவும் நான் முந்தி, நீ முந்தி என்று வாயினுள் வருவதற்கு செல்வதற்கு தயாராகும்.சிறிய கடைதான் என்றாலும், நீங்கள் அங்கு இருக்கும்போது கொத்து பரோட்டா, சுக்கா, இட்லி, குடல் என்று காதில் கேட்டுக்கொண்டே இருக்கும், அந்த அளவுக்கு வியாபாரம் ! வெளியே சிறிய பெஞ்ச் போட்டு இருப்பார்கள், இதன் பக்கத்திலேயே ஒரு கோவில் இருப்பதால் பார்கிங் செய்வது மிகவும் எளிது. நிறுத்தி, நிதானமாக, ருசித்து சாப்பிட்டு விட்டு செல்லலாம். பரோட்டாவும், மட்டன் சுக்காவும் ஆளை மயக்குகிறது, அதுவும் அந்த குழம்பில் ஊற போட்டு அடிப்பது என்பது மதுரைகாரர்களின் பரம்பரை பழக்கம்.

பஞ்ச் லைன் :

சுவை - மதுரையில் சுவையான பரோட்டாவும், மட்டன் சுக்காவும் சாப்பிட அருமையான இடம்.

அமைப்பு - மிக சிறிய இடம், பக்கத்தில் பார்கிங் இடம் இருக்கிறது. கொஞ்சம் வெளியே காற்றாட பிளாட்பாரத்தில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும்.

பணம் - சுவைக்கு விலை குறைவுதான்.

சர்வீஸ் - நல்ல சர்விஸ் ! மிகவும் பொறுமையாக சர்வீஸ் செய்கிறார்கள் ! 

அட்ரஸ் : 
Next to Chandran mess
Alagar kovil road, Tallakulam, Madurai, Tamil Nadu 625002

Near to Madurai tamukkam maidanam
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Madurai, Arumugam parotta stall,  best non veg mess in Madurai, Madurai hotel, non veg, asaivam, near to chandran mess, famous parotta, mutton sukka