Friday, January 9, 2015

ஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 1)!!

ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் அந்த ஆண்டில் பதிவுகள் எழுதுவதில் என்ன புதுமை, என்ன விசயங்கள் பற்றி எழுத போகிறேன் என்று முடிவெடுத்து கொள்வேன், பின்னர் அந்த ஆண்டு அதை தேடிய பயணங்களாக இருக்கும். இந்த விசயம் மனதை அலைபாயாமல் தடுப்பதுடன், ஒரு குறிக்கோளை அடையும் சந்தோசத்தை தருகிறது. அப்படி எடுத்த முடிவுகளில் ஒன்றுதான் இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு இந்த வருடத்தில் இதுவரை ஏட்டளவில் மட்டுமே இருந்து வந்த, இது இன்னமும் இருக்கிறதா என்று சந்தேகப்படும் விஷயங்களை தேடி செல்வது...... அதில் ஒன்றுதான் இந்த உறையூர் சுருட்டு !! இரண்டாம் உலக போர் சமயத்தின்போது சர்ச்சில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த உறையூர் என்னும் இடத்தில உருவான சுருட்டைதான் விரும்பி புகைத்தார்...... இந்த கதையை நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம், இணையத்தில் தேடினால் அப்படி எல்லாம் இன்று இருக்கிறதா என்று ஒரு குறிப்பும் இல்லை. உறையூரில் சென்று ஒரு சில முறை கேட்டதற்கு அதெல்லாம் அந்த காலம் தம்பி, இன்னைக்கு அது அழிஞ்சு போச்சு, பெயர் மட்டும்தான் மிச்சம் இருக்கு என்றார்கள். இருந்தும் நம்பிக்கை மட்டும் மிச்சம் இருக்க கடினமான தேடலில் ஒரு அட்ரஸ் கிடைத்தது....... தேடி செல்ல உலக புகழ் பெற்ற உறையூர் சுருட்டு !! இந்த பதிவை படித்து முடிக்கும்போது உங்களுக்கு நிறைய விஷயமும், ஆச்சர்யமும் வரும் என்பது உறுதி !
 
ஸ்பெஷல் நன்றி : எனது தேடலை எளிமைபடுத்தி, இந்த கம்பெனி சென்று பார்க்க உதவிய எனது நண்பன் முகமது ஆரிப்புக்கு மனமார்ந்த நன்றி !

திரு. வாசுதேவன்... இன்றும் உறையூர் சுருட்டை பெருமையுடன் தயாரிப்பவர் ! 

சர்ச்சில் அவர்கள் குடித்த உறையூர் சுருட்டு டப்பாவுடன் !!
 
உறையூர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி(திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி முக்கிய இரயில் நிலையச் சந்திப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. உறையூர் முற்காலச் சோழர்களின் தலைநகரமாகும். உறந்தை எனவும், கோழியூர் எனவும் இதனை வழங்குவர். அந்நாள்களில் இந்நகர் கோழியூர் என்றும் கூட அழைக்கப்பட்டது. இத்தளத்தில் ஒரு சேவல் யானையுடன் போரிட்டதாகக் கூட ஒரு மரபு உள்ளது. ஒரு காலத்தில் சோழர்களுடைய தலைநகராக விளங்கிய உறையூரில், திருச்சிராப்பள்ளி ஒரு பகுதி. இன்று மாநகரமாக விளங்கும் திருச்சியில், உறையூர் ஒரு சிறிய பகுதி !!புகையிலை ஒரு வேளாண்மை உற்பத்திப் பொருள். இது ஆங்கிலத்தில் டொபாக்கோ (Tobacco) என்று அழைக்கபடுகிறது, இது நிகோடின் என்ற பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. இந்த ஆங்கில சொல் ஸ்பானிஷ் மொழியில் இருந்து வந்துள்ளது, தமிழில் இது புகையை அதிகம் தருவதால் புகை + இலை = புகையிலை என்று வழங்கபடுகிறது. மிகப் பழங்காலம் தொட்டே இது அமெரிக்காக் கண்டத்தில் பயன்பட்டு வந்துள்ளது. ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்கு வந்ததிலிருந்து இது ஒரு வணிகப் பண்டம் ஆனதுடன், பொழுதுபோக்குத் தேவைகளுக்கான ஒரு பொருளாகவும் பிரபலமானது. இதனால் இது, ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. இப்பகுதிகளில் பருத்தி அறிமுகப்படுத்தப்படும் வரை காசுப் பயிராக/பணப்பயிராக இதன் முதன்மை நீடித்தது. இதுவரை உலகில் 70 வகையான புகையிலை பயிர் உள்ளதாக அறியப்படுகிறது !! புகையிலை என்பது ஒன்றாக இருந்தாலும், அது பல வகைகளில் சுவைக்கவும், சுவாசிக்கவும் படுகிறது தெரியுமா ? நமக்கு தெரிந்தது பீடி, சிகரெட், சுருட்டு மட்டுமே, ஆனால் இந்த உலகில் அதையும் தாண்டி நிறைய விஷயம் இருக்கிறது தெரியுமா.......... பீடி, சிகரெட், சுருட்டு, ஏலேக்ட்ரோனிக் சிகரெட், ஹுக்கா, கிரீட்டெக்குகள், உடன்பாட்டு புகைபிடித்தல், குழாய் புகைபிடித்தல், ரோல்-யுவர்-வோன், ஆவியாக்கி, மூக்குப்பொடி  என்று பலவகைகளில் இந்த உலகம் புகையிலையை உபயோகித்து வருகிறது !

 
 
சுருட்டு என்ற இந்த பெயர் செரூட் (Cheroute ) என்னும் பிரெஞ்சு மொழியில் இருந்து வந்ததாகும். சிகார் (Cigar) என்றும் இதை ஆங்கிலத்தில் அழைப்பார்கள், இது ஸ்பானிஷ் வார்த்தையான cigarro என்பதில் இருந்து வந்ததாகும், சிலர் மாயன் காலத்தில் sicar என்ற வார்த்தைக்கு புகையிலை பிடித்தல் என்ற அர்த்தம் இருந்ததாகவும் சொல்கின்றனர். தமிழில் புகையிலையை சுருட்டுவதால் இதற்க்கு சுருட்டு என்று பெயர் வந்தது. அமெரிக்காவில் இந்த பயிர் பயிரிடப்பட்டு, வியாபாரமாகவும் இருந்து வந்தது. கொலம்பஸ் 1492ம் ஆண்டு ஐரோப்பாவிற்கு முதன் முதலில் இதை அறிமுகபடுத்தினார். இது அங்கு பொடியக்கப்பட்டும், நெருப்பில் போட்டும் உபயோகபடுத்தப்பட்டபோது கியூபாவில் அதை அந்த புகையிலையை கொண்டே சுருட்டப்பட்டு புகைக்கப்படுவதை பார்த்து உருவானதுதான் இந்த சுருட்டு. புகையிலை பயிருக்கு உப்பு தண்ணீர், நல்ல மண்வளம், காலநிலை என்பது தேவை, அது அதிகம் அந்த நாடுகளில் இல்லாதபோது 1592ம் ஆண்டு galleon San Clemente என்பவர் இந்த தாவரத்தின் விதையை பிலிப்பின்ஸ் நாட்டிற்கு அறிமுகபடுத்த, அதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஆசியா பகுதியில் அறிமுகபடுத்தியது, இங்கு நிலவி வந்த சரியான வெப்பநிலை இந்த புகையிலை பயிருக்கு உகந்ததாக இருந்தது....... காலம் உருண்டோட பல வித நாவல்களிலும், வெளிநாட்டினரும், படங்களிலும் சுருட்டு பிடிப்பது மேல்தட்டு மக்களுக்கு மட்டும் என்று மாயை ஏற்ப்படுதப்பட்டு இன்றுவரை அதற்கென்று ஒரு மார்க்கெட் உருவாக்கி வைத்து இருக்கின்றனர் !!
 


 
உறையூர் பற்றியும், புகையிலை பற்றியும், சுருட்டு என்பது பற்றியும் பார்த்தாகிவிட்டது, அடுத்து உறையூர் எப்படி இந்த அளவுக்கு பேமஸ் ஆனது, இன்றும் அந்த சுருட்டு கம்பெனிகள் இருக்கின்றதா, அதன் விலை என்ன, சுருட்டு என்பதின் சிறப்பம்சம் என்ன என்று கேள்விகளை அடுக்குகின்றீர்களா... பொறுங்கள் வந்தாகிவிட்டது ! உறையூர் சுருட்டு என்று தேடி பார்த்தால் இன்று இணையத்தில் மிக மிக சில விஷயங்களே வருகின்றன, அதில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் உறையூர் வண்டிகார தெருவில் சுமார் இருபதுக்கும் மேற்ப்பட்ட சுருட்டு கம்பெனி இருக்கிறது என்று தகவல் இருந்தது, அதை தொடர்ப்பு கொள்ளவே முடியவில்லை. எனது நண்பன் ஆரிப் பென் அண்ட் தோம்சன் கம்பெனி பற்றி கூறி அங்கு சென்று பார்க்க அனுமதி வாங்கி தந்தான். அந்த இடத்திற்கு சென்று ஒரு மிக பெரிய கம்பெனி ஒன்றை எதிர்பார்த்தால்...... ஒரு சிறிய வீடு, அதுவே இன்றும் புகழ் பெற்ற இந்த உறையூர் சுருட்டு தயார் செய்கிறது..... ஆம், இன்றும் !!
 
பென் அண்ட் தோம்சன்.... புகழ் பெற்ற உறையூர் சுருட்டு தயாரிக்கும் கம்பெனி !!
என்னை வரவேற்ற திரு.வாசுதேவன் அவர்கள் எனது ஊர் ஸ்பெஷல் பகுதியை பற்றி விளக்கியவுடன் மிகவும் ஆச்சர்யப்பட்டார், எந்த வித வணிக நோக்கமும் இன்றி அதை நான் செய்கிறேன் என்றபோது அதிசயித்தார் !! அந்த கம்பெனியில் சுருட்டு தயாராவதை பார்க்கும் முன் சில விஷயங்களை பார்ப்போமே ! உறையூர் சுருட்டு பற்றி சொல்லும்போது தவறாமல் சொல்லும் ஒரு செய்தி என்பது பிரிட்டிஷ் பிரதமர் திரு.வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் விரும்பி புகைத்த சுருட்டு என்பது.... அது எப்படி நடந்தது தெரியுமா ? இரண்டாம் உலக போரின்போது அவர் விரும்பி புகைத்த கியூபா, ஹவாய் சுருட்டுகள் கடல் வழியே கொண்டு வரப்பட முடியவில்லை, அவர் சுருட்டு பிரியர் ஆதலால் அதே போன்ற புகையிலை எங்கு கிடைக்கிறது என்று ஆராய அது தாய்லாந்து, ஆசிய நாடுகளில் கிடைத்தது. அதை உறையூர் அன்று தயாரித்து வந்ததாகவும் அதனால் அவருக்காக அது அனுப்பப்பட சர்ச்சில் குடித்து பாராட்டியதால் பிரிட்டிஷ் மக்கள் அதை விரும்ப ஆரம்பித்தனர் என்கின்றனர். இன்றளவும் சர்ச்சில் பாராட்டிய சுருட்டு என்பதே இதன் பெருமையும் அடையாளமும் !!


சரி, சுருட்டு எப்படி தயாராகிறது, அதன் உள்ளே என்ன இருக்கிறது, அப்படி என்னதான் இருக்கிறது சுருட்டில், இன்று உறையூர் சுருட்டின் விலையும் நிலவரமும் தெரிய...... சற்று அடுத்த வாரம் வரை காத்திருங்களேன் !!

Labels : Suresh, Kadalpayanangal, Woraiyur, Churchill, Suruttu, Cheroot, Cheroute, Cigar, World famous cigar, Indian cigar, Fen & Thomson, Woraiyur Cigar, Oor special, district special, famous for
 

13 comments:

 1. அடுக்கடுக்கான தேடல்கள் வியக்க வைக்கிறது....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார், என்றுமே பதிவர்களை உற்சாகபடுத்தும் வார்த்தைகள், அதுவே இது போன்று எழுத தூண்டுகிறது !

   Delete
 2. தம் புடிச்சு எழுதி இருக்கீங்க . மலைப்பாக இருக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரேம்குமார், எழுதுவதில் மட்டுமே நான் தம் கட்டுவேன் :-)

   Delete
 3. ஊர் ஸ்பெஷல் பகுதி அயிட்டங்களை எல்லாம் ரசிச்சு ருசிச்சு எழுதுவிங்களே , ஆனால் இந்த பதிவில் சுருட்டின் சுவை பற்றி எதுவுமே இல்லையே!!! ஏன்? :) :)

  ReplyDelete
  Replies
  1. நல்ல கேள்வி ஜெகதீஷ், உங்கள் கேள்வி சரிதான்..... புத்தாநத்தம் என்ற ஊரில் சுடிதார் தயாரிப்பது பேமஸ், அதற்காக போட்டு ஒரு போட்டோ கேட்பீர்கள் போலும் ?!

   Delete
 4. சுவாரஸ்ய தகவல்கள் பல..நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்கிறேன்.... நன்றி கருண் !

   Delete
 5. தேடிப்பிடித்து வித்தியாசமான தகவல்களை தருவதில் உங்களுக்கு நிகர் இல்லை! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ், உற்சாகம் கொடுக்கும் உங்களது வார்த்தைகள்தான் என்னை இப்படி தேட சொல்கிறது !

   Delete
 6. Good Writing Skill Keep it up my boy
  நல்லா அனுபவிச்சு எழுதறீங்க

  ReplyDelete
 7. 8072535679 call me

  ReplyDelete