Friday, January 30, 2015

அறுசுவை (சமஸ்) - கும்பகோணம் பூரி - பாஸந்தி !!

திரு.சமஸ் அவர்கள் எழுதிய சாப்பாட்டு புராணம் படித்துவிட்டு, அவர் சொன்ன இடங்களுக்கு சென்று சாப்பிட்டு அதை பகிர்வதே இந்த தலைப்பின் நோக்கம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்..... அதில் இந்த முறை சென்றது கும்பகோணம் !! இந்த ஊரில் எங்கு திரும்பினாலும் கோவில்கள்தான், அதிகாலையில் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று வந்து ஒரு டிகிரி காபி சாப்பிட்டுவிட்டு, சூடான ரெண்டு இட்லியை சாப்பிட்டு வேலையே தொடங்கினால் அந்த நாள் அவ்வளவு இனிதாக இருப்பது போன்று தோன்றும். இந்த ஊரில், அந்த காலத்தில் கச்சேரிகள் நடக்கும்போது வித்வான்கள் நிறைய பேர் வந்து சப்பு கொட்டி சாப்பிடுவார்கள் என்று கேள்வி.... அப்படி அவர்கள் ருசித்து சாப்பிட்டதுதான் பூரி - பாசந்தி !!
திரு.சமஸ் அவர்கள் எழுதிய கும்பகோணம் பூரி பாஸந்தி பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்...... முராரி ஸ்வீட்ஸ் பூரி-பாஸந்தி !!





கும்பகோணத்தின் பெரிய கடை வீதியில் நடந்து சென்றால் பிடரி குளம் அருகே உங்களின் கண்களில் இருந்து தப்பவே முடியாதபடி இருக்கிறது இந்த முராரி ஸ்வீட்ஸ் ! உத்தர் பிரதேஷில் இருந்து வந்த திரு.முராரி லால் சேட் ஆரம்பித்த இந்த கடை இன்று 100 ஆண்டுகளை தொட இருக்கிறது, அதுவும் பெரிய கடை வீதியில் எனும்போதே உங்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த கடையின் சிறப்பம்சம்.... கும்பகோணம் மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத சுவையான அம்சமாக மாறி இருக்கிறது இந்த முராரி ஸ்வீட்ஸ் !! கடையின் உள்ளே நுழைந்து பூரி இருக்கா என்று கேட்க, இல்லை என்றனர். ஒரு வேளை சாயங்காலம் போடுவார்களோ என்று எண்ணி எத்தனை மணிக்கு பூரி கிடைக்கும் என்று கேட்க, அவரோ....... எப்போவுமே இங்கே பூரி கிடையாது என்றார் !!



மிகுந்த குழப்பத்தில் இருந்தேன் எனலாம், ஒரு வேளை நான் தேடி வந்த முராரி ஸ்வீட்ஸ் இதுவல்லவோ, திரு.சமஸ் அவர்கள் தெளிவாக எழுதி இருந்தாரே கோதுமை பூரி, பாஸந்தி தொட்டு சாப்பிட வேண்டும் என்று மோட்டுவளையை பார்த்து யோசனையில் இருக்க, எங்களை பார்த்த கடைகாரர் விசாரித்துவிட்டு, ஆம் பூரி போட்டது உண்மைதான் ஆனால் இன்று அதை எல்லாம் நிறுத்திவிட்டு ஸ்வீட்ஸ் மட்டும் என்று வியாபாரம் நடக்கிறது என்றார், திரும்பி பார்க்க ஒரு பழைய போர்டில் பூரி என்று எழுதி இருந்தது !! கும்பகோணம் வரை வந்துவிட்டு இந்த பூரி - பாஸந்தி சாப்பிடாமல் போக கூடாது என்று இருந்ததால் அங்கு எழுதி இருந்த மசாலா பூரி, பேல் பூரி இருந்தால் கொடுங்களேன், சைஸ் சின்னதாக இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்றதை கேட்டு அவர் எங்களை முறைக்க ஆரம்பித்தார் !!



அடுத்து என்ன செய்வது என்று யோசித்து பூரி இல்லையென்றாலும், பாஸந்தி சாப்பிட்டே தீருவது என்று இருக்கா என்று கேட்க அவர் சந்தோசமாக தலையை ஆட்டினார். ஒரு ஓரத்தில் இருந்த பிரிட்ஜில் இருந்து ஒரு சிறு கிண்ணத்தை எடுத்துக்கொடுக்க அந்த சில்லென்று இருந்த கிண்ணத்தின் மேலே மிதந்தது கொண்டு இருந்தது பாதாம் பருப்பு, அதன் கீழே சிறிது மஞ்சள் பொன்னிறத்தில் ஏடாக படிந்து இருந்தது அந்த பாஸந்தி ! முதல் பார்வையிலேயே அந்த பாஸந்தி மேல் காதல் வரும் (பக்கத்தில் மனைவி இருந்தால், இப்படி என்னைய ஒரு முறை கூட ஆசையா பார்த்ததில்லையே, வீட்டுக்கு வா இருக்கு என்பார் ), சின்ன ஸ்பூன் கொண்டு அந்த ஏடை குத்தும்போது பொலக் என்று அது உள்ளே போகும், அந்த ஸ்பூனை இப்போது வெளியே எடுத்து சிறுபிள்ளை போல நாக்கினால் நக்கி பாருங்கள்........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்  பாஸந்தி !!


பொதுவாகவே பாலினால் செய்த எந்த இனிப்பை எடுத்துக்கொண்டாலும் அது சிறிது சாப்பிட்டாலே திகட்ட ஆரம்பிக்கும், ஆனால் இந்த பாலினால் செய்த பாஸந்தி என்னும் இனிப்பு இன்னும் வேண்டும் என்று கேட்க்க தூண்டுகிறது எனலாம். பாலை சுண்ட காய்ச்சி சீனி போட்டு தந்தால் போதும் போதும் எனும் நாம் இந்த சுண்ட காய்ச்சிய பாலில் செய்யப்பட்ட பாசந்தியை ஒரு கை பார்க்கிறோம் என்பது விந்தைதான் !! அதுவும் பாஸந்தி சாப்பிடும்போது மேலே தூவப்பட்டு இருக்கும் அந்த பாதாம், ஏலக்காய் துகள்கள் பற்களின் இடையில் மாட்டிக்கொள்ள அந்த பாஸந்தி கரைந்தபின்னும் ஊரும் எச்சிலில் அந்த ஏலக்காய் சுவை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்க அந்த உணர்வே போதும் !! இந்த முராரி ஸ்வீட்ஸ் மற்ற இனிப்புகளுக்கும் புகழ் பெற்றது, கீழே பாருங்கள்..... அடுத்த முறை கும்பகோணம் செல்லும்போது மறக்காமல் பாஸந்தி சாப்பிட்டு வாருங்கள். பூரி - பாஸந்தி என்பதில் இங்கு பூரி அழிந்து போனாலும்...... பாஸந்தி காலங்களை கடந்து நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் !





இவ்வளவு சொல்லிய பின் கும்பகோணம் பாஸந்தியின் செய்முறை பற்றி சொல்லாமல் செல்வேனா.... வீட்டிலேயே தயார் செய்யலாம் !



  • பால் - 3 கப்

  • சீனீ - 3 கப்

  • நீளமாக நறுக்கவும்:

  • முந்திரி - 1/4 கப்

  • பாதாம் - 15

  • பிஸ்தா - 1/4கப்

  • குங்குமப்பூ - 1 ஸ்பூன்

  • செய்முறை
    1. அடிக்கனமான அகன்ற பாத்திரத்தை எடுத்த்துக் கொள்ளவும்.
    2. பாத்திரத்தை அடுப்பில் வைத்த்து, அதில் பாலை விட்டு மிதமான சூட்டில் பாலை காய்ச்சவும்.
    3. பாலின் மேல் படியும் ஏடுகளை ஒரு சிறு கரண்டியால் எடுத்து தனியே வைக்கவும்.
    4. பால் ஊற்றிய அளவில் இருந்து பாதியாகும் வரை காய்ச்சி பால் ஏடுகளை சேகரித்துக் கொள்ளவும்.
    5. பாலுடன் சர்க்கரை சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை கிளறவும்.
    6. இதனுடன் சேகரித்து வைத்துள்ள பால் ஏடுகளை சேர்த்து, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.
    7. இப்போது சுவையான பாஸந்தி தயார்.

    Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, samas, sappaattu puraanam, kumbakonam, murari sweets, muraari, basanthi, poori pasanthi, poori basanthi, best food, tasty

    Thursday, January 29, 2015

    அறுசுவை - டவுசர் ஹோட்டல், சென்னை

    சென்னையில் ஒரு நல்ல அசைவ ஹோட்டல் சொல்லுங்க அப்படின்னு யாரையாவது கேட்டால் உடனே அஞ்சப்பர், தலைப்பாகட்டு என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். அசைவம் சமைப்பதில் ஒரு பக்குவம் வேண்டும், என்னென்னவோ சாஸ் எல்லாம் ஊற்றி அசைவத்தை வைப்பதில் சுவை இருக்கும் என்று சொல்பவர்கள் மத்தியில், வீட்டு சாப்பாடு போன்று அசைவம் சாப்பிட ஒரே ஒரு இடம் மட்டுமே இருக்கிறது எனலாம், சைவ சாப்பாடு என்பது சென்னையில் எங்குமே கிடைக்கிறது ஆனால் அசைவ சாப்பாடு என்றால் டவுசர் ஹோட்டல் எனலாம் !!




    சுமார் முப்பத்தைந்து வருடங்களாக இயங்கி கொண்டு இருக்கும் இந்த ஹோடேலின் ஆரம்ப பெயர் என்பது ஸ்ரீ அருணகிரி மெஸ் என்பதாகும், இன்று அந்த பெயரை சொல்லி யாரிடம் கேட்டாலும் முழிப்பார்கள்....... அப்பா மெஸ் அல்லது டவுசர் ஹோட்டல் என்று சொன்னால் எல்லோரிடமும் தெரியும் !! மந்தைவெளி பஸ் ஸ்டான்ட் சென்று அங்கு இருந்து RK மட் ரோடில் நடந்து சென்றால் வலது புறத்தில் மருந்தீஸ்வரர் மெடிக்கல் அருகில் ஒரு பெயர் இல்லாத கடை இது...... உங்களுக்கு சில நேரங்களில் அசைவ வாசனையே வழி காட்டுகிறது !! ஹோட்டல் நுழைவாயில் மிகவும் சிறிதாக இருக்கிறது, உள்ளே நுழையும் முன்பு சாப்பாடு ரெடி என்று ஒரு சிறிய போர்டு.கண்ணில் பட, உள்ளே ஒரு சில டேபிள் போடப்பட்டு ஆட்கள் ஒரு கட்டு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் !!

    ஒரு மதிய வேளையில் பதிவர் நண்பர்கள் ஸ்கூல் பையன் மற்றும் கோவை ஆவி அவர்களுடன் இந்த ஹோட்டல் சென்றேன். உள்ளே நுழைந்து ஒரு இடம் பார்த்து உட்கார்ந்தவுடன் ஒரு பெரிய வாழை இலையை உங்களது முன் போடுகின்றனர், இதில் ஒரு பிறந்த குழந்தையையே படுக்க வைக்கலாம் அவ்வளவு பெரிசு. பொதுவாக ஹோடேலில் சிறிய இலையாக போட்டு இரண்டு மூன்று முறை சாப்பாடு கேட்டு சாப்பிடுவோம், அதற்க்கு மேல் கேட்பதற்கு கூச்சமாக இருக்கும், இங்கு பெரிய இலையாய் வைக்கும்போதே மனது நிறைந்து விடுகிறது. தண்ணீர் வைத்துவிட்டு என்ன வேண்டும் என்று கேட்க சாப்பாடு என்று சொல்லிவிட்டு அவர் முகத்தை பார்க்க தொட்டுக்க என்றார்.... என்னவெல்லாம் இருக்கு என்று எதிர் கேள்வி போட முட்டை, மட்டன், சிக்கன், மீன், இறால் இருக்கு என்றார், எல்லாவற்றிலும் ஒண்ணு என்று சொல்ல கோவை ஆவியும், ஸ்கூல் பையனும் அவர்களுக்கு தனியாக சொல்ல வேண்டுமோ என்று என்னை பார்க்க, ஷேர் செய்துக்கலாம் என்று சொன்னவுடன் வந்த அந்த புன்னகை....... ஆம்பளை KR விஜயா சிரிப்பது போலவே இருந்தது !!
    பச்சை நிற தலை வாழை இலையில் தும்பை பூ போன்ற வெள்ளை நிற சாதத்தை அள்ளி அள்ளி வைக்கிறார்கள், கொஞ்சமே கொஞ்சம் பீட்ரூட் பொரியலும், கோஸ் பொரியலும் வைக்க..... உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று அந்த பொரியல்கள் இடத்தில ஒரு லுக் விட்டு, குழம்பு கொண்டு வாங்க என்றோம். சாம்பார், ரசம், மோர், மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, முட்டை குழம்பு, இறால் குழம்பு என்று வரிசையாக அடுக்க, எங்களது வைபவம் மட்டன் குழம்போடு இனிதே ஆரம்பமானது. மட்டன் குழம்பில் நல்ல மசாலா அரைத்துவிட்டு மணம் தூக்க அந்த சாதத்தில் ஊற்ற அதை பிசைந்து கொண்டு இருக்கும்போது மட்டன் பிரை வந்தது, அதனோடு பெரிய வெங்காயத்தையும் இறாலையும் நல்லெண்ணெய் கொண்டு பிரை செய்ததும், தோசைகல்லில் எண்ணை அதிகம் இல்லாமல் பொறிக்கப்பட்ட பொன்னிறமான வஞ்சிரம் வருவலும் வந்தது. மட்டன் குழம்போடு பிசைந்து அந்த பசி நேரத்தில் ஒவ்வொரு கவளதையும் ஒவ்வொரு சைடு டிஷ்ஷோடு இறக்கி கொண்டு இருக்க எங்களை யாரோ முறைப்பது போன்று ஒரு உணர்வு...... சத்தியமாக அது அந்த பீட்ரூட் பொரியலும், முட்டைகோசு பொரியலுமெதான், அவங்களைத்தான் நாங்க தொட்டுக்கூட பார்க்கலையே !!
    பொதுவாக மெஸ் என்று சொல்லப்படும் கடைகளில், அதுவும் சென்னை போன்ற நகரங்களில் கடைபிடிக்கப்படும் சிறிய இலை, குழம்பு என்பது சிறிய கப்பில், சைடு டிஷ் என்பது ஒரு கைப்பிடி அளவு மட்டும், சாதம் கேட்டால் கொஞ்சமே கொஞ்சம் மட்டும் வைப்பது என்ற எந்த விதமான அட்ரோசிட்டி எதுவும் இல்லாமல் உண்மையாகவே திருப்தியோடு சாப்பிட்டு வரலாம் இந்த டவுசர் ஹோடேலில். இறால் தொக்கும், வஞ்சிரம் மீன் வருவலும் மட்டன் குழம்போடு பின்னி பிணைகிறது. இடம், சுத்தம் எல்லாம் அதிகம் பார்கவில்லை என்றால் கண்டிப்பாக சென்று வரலாம் !!




    பஞ்ச் லைன் :

    சுவை - சென்னையில் ஒரு அருமையான அசைவ மெஸ், எல்லா விதமான அசைவ வகைகளும் மனம் நிறையும் சுவையோடு !

    அமைப்பு - மிக சிறிய இடம், மதிய நேரத்தில் இடம் கிடைப்பது சற்று கடினம்தான். இரு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவது இந்த ஏரியாவில் சிரமம்தான்.
    பணம் - என்னை கேட்டால் இந்த சாப்பாடு இரண்டு மடங்கு விலை இருந்தாலும் கொடுத்து இருப்பேன், சாதாரண விலையில் அருமையான சாப்பாடு !
    சர்வீஸ் - நல்ல சர்விஸ் ! மிகவும் பொறுமையாக சர்வீஸ் செய்கிறார்கள் ! 
    அட்ரஸ் :  





    இந்த கடையின் கீழ் அட்ரஸ் இருக்கிறது பாருங்கள்........ இதற்க்கு அடுத்ததுதான் ஹோட்டல் !
    Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Chennai, trouser hotel, appa hotel, best non veg mess in Chennai, Chennai hotel, non veg, asaivam, mandaiveli, tasty

    Wednesday, January 21, 2015

    ஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 2) !!

    சென்ற வாரத்தின் உறையூர் சுருட்டு (பகுதி - 1) படித்துவிட்டு, இன்னும் இது இருக்கிறதா என்று ஆச்சர்யபட்டவர்கள் பல பேர், எப்படி இப்படி செய்தி சேகரிக்க முடிகிறது என்றும் ஆச்சர்யப்பட்டனர் ! உறையூர் பற்றியும், புகையிலை பற்றியும், சுருட்டு என்பதை பற்றியும் விரிவாக பார்த்தோம், இந்த வாரம் இன்னும் விரிவாக அலசுவோமே !! பென் தோம்சன் கம்பெனி என்பது ஒரு வீடு போன்ற அமைப்பே, அங்கு மாடியில் ஒரு சிறிய இடத்தில் இந்த உலக புகழ் பெற்ற சுருட்டுக்கள் தயாராகின்றன. திரு. வாசுதேவன் அவர்களை சந்தித்து அவரது கம்பெனி சுமார் 114 வருட பாரம்பரியம் கொண்டது என்றதை தெரிந்து கொண்டேன், அந்த காலத்தில் வண்டிகார தெருவில் இப்படி நிறைய சுருட்டு கம்பெனி இருந்தது எனவும், இன்றும் வெள்ளைகாரர்கள் இப்படி தேடி வந்து புகைப்படம் எடுத்து கொண்டதையும் காண்பித்து மகிழ்ந்தார் !!






    சுருட்டில் எத்தனை வகை இருக்கிறது என்று தெரியுமா ? என்ன முழிக்கின்றீர்கள்.... சுருட்டில் நிறைய வகை இருக்கிறது. உங்களை போலவே எனக்கும் இங்கு செல்லும் வரை சுருட்டு என்பது ஒரே வகை, பெரியதாக இருக்கும், பிரவுன் கலரில் இருக்கும் என்று மட்டுமே தெரியும். ஆனால், சுருட்டு என்பதில் பல வகை இருக்கிறது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான சுவை, ஒவ்வொரு விதமான ஆடம்பரத்தை குறிக்கும்.... அதிகம் சொல்ல வேண்டுமென்றால் இந்த பக்கம் போதாது ! பொதுவாக சொல்வதென்றால் சுருட்டிர்க்கு தலை பாகம், நடு பாகம், உடம்பு பகுதி, கீழ் பகுதி மற்றும் சுருட்டின் தலை என்று பகுதிகள் உண்டு. சுருட்டினை பிரித்து பார்த்தால் உள்ளே புகையிலை பகுதி, புகையிலையை சேர்க்கும் பைண்டர் பகுதி, வெளி ரேப்பர் பகுதி என்று பிரிப்பார்கள். ஒவ்வொரு சுருட்டும் ஒவ்வொரு நீளம், ஒவ்வொரு வகை, நிறைய கலர், தடிமன் என்று நிறைய வித்யாசம் உண்டு...... இப்போ சொல்லுங்க, சுருட்டு ஒன்றும் சின்ன விஷயம் இல்லை, அப்படிதானே !!

     

     


    புகையிலைச் செடியின் தழைகள் மட்டுமின்றி, அவற்றின் தண்டு உள்பட செடியின் அனைத்து பாகங்களும் பல்வேறு புகையிலைப் பொருள்கள் தயார் செய்யப் பயன்படுகின்றன. புகையிலைச் செடி தண்டைப் பொடியாக்கி, அவற்றில் இருந்து மூக்குப் பொடி தயாரிக்கப்படுகிறது. உறையூர் சுருட்டிர்க்கு புகையிலை தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இருந்து வருகிறது. இதை பல விதங்களில் ஊற போட்டு, வாசனை ஏற்றி மிக சிறிய துண்டுகளாக வெட்டி சுருட்டு செய்யப்படுகிறது. பதிவின் நீளம் வெகு விரிவான செய்முறைகளை இங்கு தவிர்த்து புகை படங்கள் மூலமாக விளக்க முனைகிறேன்....... வயலில் இருந்து பறிக்கப்பட்ட புகையிலை உங்களை எப்படி வந்து அடைகிறது என்பதனை கீழே காணலாம் !








    சுருட்டு செய்பவர்களுக்கு இந்த புகையிலை இப்படிதான் வருகிறது !
     இப்படி சிறிய புகையிலையை இரண்டாக பிரிக்க வேண்டும், ஒன்று உள்ளே வைப்பது, இன்னொன்று வெளியே சுத்தப்படும் இலை. சுருட்டை கவனித்து பார்த்தால் வெளியே சுற்றப்படும் இலை என்பது பல விதமான கலரில் இருக்கும்...... அது பிரத்யேகமாக பாலீஷ் செய்யப்பட்டு உங்களுக்கு வருகிறது. இலையை மிக லாவகமாக வைத்து அதன் மேலே ஒரு இலையை சுருட்டி, மீண்டும் அதை இன்னொரு இலையை வைத்து சுருட்டி என்று ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக செய்யப்படுகிறது. சுருட்டு செய்யும் கம்பெனி எனும்போது மிக பெரிதாக இருக்கும் என்று நினைத்தால், அது மிக சிறிய ஒரு இடம் !!

    எத்தனை வகை புகையிலை நிறங்கள்.... யாவும் போதை தரும் !

    ஒவ்வொரு சுருட்டின் உள்ளும் புகையிலை அளவு மாறுபடும் !

    சர்ச்சில் பிடித்த உறையூர் சுருட்டு தயாராகும் இடம் இதுதான்.... ஆச்சர்யம் !!



     இப்போது சுருட்டு தயார், நீங்கள் விற்கப்படும் ஒவ்வொரு சுருட்டையும் கவனித்து பார்த்தால் ஒவ்வொன்றிலும் வித்தியாசமான லேபில் இருக்கும், இந்த லேபில் சேகரிப்பாளர்கள் உலகம் முழுவதும் உண்டு. உங்களுக்காக சில லேபில் வகைகள்...... 




    இப்போது சுருட்டு ரெடி, அதை குடிப்பது என்பது ஒரு கலை ! முதலில் சுருட்டை அந்த பெட்டியில் இருந்து பெரு விரல் மற்றும் சுட்டு விரலை மட்டுமே கொண்டு எடுக்க வேண்டும், பின்னர் அதை மூக்கின் அருகில் எடுத்து அந்த வாசனையை அனுபவிக்க வேண்டும், பின்னர் அதை உங்களது ஸ்டைல் பிரதிபலிக்கும் சிகார் கட்டர் கொண்டு சிகாரின் முனை பகுதியை சரியாக கட் செய்ய வேண்டும் (கீழே படம் கொடுக்கப்பட்டுள்ளது), பின்னர் சுருட்டை வாயில் பற்களுக்கு இடையில் (கவனிக்க, உதட்டில் அல்ல) வைத்து ஒரு தீக்குச்சியில் மெதுவாக பற்ற வைக்க, கொஞ்சம் கொஞ்சமாக புகையை உள்ளே இழுத்து இழுத்து அது முழுதாக பற்ற வைக்க வேண்டும்....... இனி, ஒரு சூரிய உதயத்தை பார்த்துக்கொண்டே அந்த புகையிலையின் ஆனந்தத்தை அனுபவியுங்கள் !!



    சர்ச்சில் பிடித்த உறையூர் சுருட்டு உடன்....... கடல் பயணங்கள் !!

    இன்றும் இந்த சர்ச்சில் பிடித்த சுருட்டு என்ற புகழை காப்பாற்றி கொண்டு இருக்கும் சுருட்டை வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம். சுருட்டு விற்பது ஒரு டப்பாவாகதான் வரும், ஒரு டப்பாவினில் எட்டு, இருபது, இருபத்தி ஐந்து என்று சுருட்டு வகையின்படி வரும். ஒரு சாதாரண ஒற்றை சுருட்டு என்பது 150 ரூபாயில் இருந்து ஆயிரக்கணக்கில் கிடைக்கிறது...... விலை ஏற ஏற அந்த புகையிலையின் ஆனந்தமும் ஏறும் !! சுருட்டு வேண்டும் என்று கேட்க்கும் முன்பு..... முதலில் இருந்து இந்த பதிவை படித்து எந்த மாதிரியான சுருட்டு வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்...... வெறும் சுருட்டு என்பது ஒரு பெயர்தானே தவிர, அதற்குள்ளும் ஜாதிகள் உண்டு !!
      
     Labels : Suresh, Kadalpayanangal, Woraiyur, Suruttu, Churchill, Suruttu, Cheroot, Cheroute, Cigar, World famous cigar, Indian cigar, Fen & Thomson, Woraiyur Cigar, Oor special, district special, famous for, part 2

    Monday, January 19, 2015

    ஊரும் ருசியும் - நாகர்கோவில் ரசவடை !!

    ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு பிரபலமாக இருக்கும், உதாரணமாக ஆம்பூர் பிரியாணி, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன் என்று..... அதை தேடி பிடித்து எழுதுவதே இந்த பகுதியின் நோக்கம் ! நிறைய பேர் என்னிடம் எங்க ஊரில் இந்த ஹோடேலில் இது பிரபலம், நன்றாக இருக்கும் எழுதுங்கள் என்கிறார்கள், அவர்களது ஆர்வத்திற்கு நன்றி சொன்னாலும் ஒரு ஊரின் ருசியை புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது கடினமாக இருக்கிறது ! இந்த முறை ஒரு உணவிற்காக மட்டுமே பெங்களுருவில் இருந்து கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் கடைசிக்கு செல்ல வேண்டி இருந்தது, அந்த பயணத்தில் நிறைய இடத்தில சாப்பிட்டு கடைசியில் இதுதான் அந்த சுவை என்று பூரித்தேன்....... அதுதான் நாகர்கோவில் ரசவடை !


    நாகர்கோவில் (Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இந்நகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோயில் என அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்ல சுமார் அரை மணி நேரம் ஆகிறது, குண்டும் குழியுமான ரோட்டில் ஓட்டி சென்றால் அந்த நகரத்தின் காற்று உங்களை தழுவும். திருநெல்வேலியில் இருந்து நெடுஞ்சாலை கன்னியாகுமரி வரை இருக்கிறது, அதில் இடது பக்கத்தில் ஆரம்பிக்கும் சாலை நாகர்கோவில் செல்கிறது.



    ரசம்..... தமிழர்களுக்கு தலை வாழை விருந்து வைத்தால், கண்டிப்பாக ரசம் இருந்தாக வேண்டும். மிளகும், வாசனையும் நிறைந்த அதை குடித்தால்தான் ஜீரணம் நன்றாக இருக்கும் என்று இரண்டு கரண்டியை கையில் வாங்கி சர்ரென்று உறிஞ்சினால்தான் அந்த உணவிற்கே மரியாதை ! வீட்டில் மதியம் சாப்பிட வாங்க என்று குரல் வரும்போது, எழுந்து சென்று எல்லா பாத்திரத்தையும் பார்த்தால் பருப்பு, கூட்டு, தயிர், வத்தல் குழம்பு, பொரியல் என்று எல்லாமே சிறிது திட வடிவத்தில் இருக்கும்போது, இந்த ரசம் மட்டும் ஓரமாக தண்ணீராக இருக்கும், அதை கரண்டியில் எடுத்து ஆற்றி விளையாடுவோம், பல நேரங்களில் சாம்பார் முடிந்து மோர் சென்று விடுவோம்.... ரசம் என்பதை பலர் தவிர்த்துவிடுகின்றனர் ! இந்த ரசத்தை சூடாக ஆவி பறக்க இறக்கி வைக்கும்போது அதன் மேலே மிதக்கும் கொத்தமல்லி, கருவேப்பிலை, பூண்டு ஒரு விதமான சுவையை கொடுக்கும், ஒரு டம்ப்ளரில் வாங்கி கொஞ்சம் உறிஞ்சினால் காரமும், சுவையும், மணமும் மீண்டும் சுவைக்க தூண்டும், அப்படிப்பட்ட ரசம் நாகர்கோவிலில் கிடைக்கிறது !!



    நம் மனிதர்களுக்கு வடை என்பது வாழ்வின் ஒரு பகுதி எனலாம் ! டீ கடையில் பொன்னிறமாக போடப்பட்டு இருக்கும் மெது வடையும், பிரவுன் நிறத்தில் மின்னும் பருப்பு வடையும் கடித்துக்கொண்டே டீ சாப்பிடுவது என்பது நமது கலாசாரம். அந்த வடைகளையே சாம்பார் வடை, தயிர் வடை என்று சாப்பிடுவது கலாசாரத்தின் வளர்ச்சி, பெரும்பாலும் இந்த சாம்பார் மற்றும் தயிர் வடைகளை எல்லா கடைகளிலும் சாப்பிடலாம், எங்கும் கிடைக்கும்.... ஆனால் இந்த ரசவடையை மட்டும் வெகு சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். ரசத்தையும், வடையையும் விரும்பும் ஒருவருக்கு அது கிடைத்தால் எப்படி இருக்கும் ?!


    நாகர்கோவிலில் கிட்டத்தட்ட பத்து ஹோட்டல் சென்று அங்கு ரச வடை மட்டுமே உண்டுவிட்டு வந்தேன், அதில் மிக சிறந்தது என்று ஹோட்டல் கௌரி சங்கர் ரசவடையை சொல்லலாம் !! வடசேரியில் இருக்கும் கௌரி சங்கர் ஹோட்டல் செல்ல யாரை கேட்டாலும் வழி சொல்வார்கள், நாகர்கோவிலில் நான்கு கிளைகள் இருக்கின்றன. ரச வடை என்று ஆர்டர் செய்தோம், ஒரு பெரிய வட்டிலில் சூடாக இருக்கும் ரசத்தில் இரண்டு மெது போண்டாக்களை மிதக்க விட்டு, சுற்றிலும் கடுகு மற்றும் கொத்தமல்லி மிதக்க கொண்டு வந்து வைக்கிறார்கள். ஒரு சிறிய கரண்டியில் கொஞ்சம் ரசத்தை எடுத்து குடிக்கும்போதே தெரிந்துவிடுகிறது இன்னொன்று சொல்ல வேண்டும் என்று, மிதக்கும் போண்டாவை அந்த கரண்டி மூலம் கொஞ்சம் பியித்து எடுத்து அதில் ரசத்தை மேலே ஊற்றி குளிக்க வைத்து ஒரு வாய் எடுத்து வைக்க, அந்த வடையின் சிறிய மொறு மொறுப்பும், ரசத்தின் வாசனையும் காரமும் என்று ஒரு அருமையான ருசியை கொடுக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக போண்டாவை விட ரசம் அதிகம் காலி ஆகிறது, இப்போது சர்வரை பார்க்க அவர் புரிந்துக்கொண்டு கொஞ்சம் ரசத்தை போண்டாவின் மீது ஊற்ற அவரை நன்றியுடன் பார்த்து டிப்ஸ் எக்ஸ்ட்ரா என்பதை பார்வையில் உருதிபடுதுகின்றோம். அந்த போண்டா ஊற ஊற முடிவில் ரசகுல்லாவை போல் நொதிந்து அதை சாப்பிடும்போது..... யார் சொன்னா ஸ்வீட் மட்டுமே இப்படி ரசித்து சாப்பிட முடியும் என்று ?!



    மெதுவடை பிரியர்களுக்கு கௌரி சங்கர் ஹோட்டல் ரசவடை என்றால், பருப்பு வடை பிரியர்களுக்கு நாகர்கோவிலில் எங்கு திரும்பினாலும் பருப்பு ரசவடை கிடைக்கிறது. சில ஹோடேல்களில் ஒரு சிறிய வட்டிலில் கிடைத்தாலும், பெரும்பாலும் ரசத்தில் இருந்து இலையில் எடுத்து வைக்கிறார்கள் !! இப்படி அல்லவா கவனிக்க வேண்டும் வடை பிரியர்களை !!

    தக தகவென மின்னுகிறதா இந்த பருப்பு வடை...... ரசவடை சூப்பர் !

    ரசத்தில் பருப்பு வடை பிடிக்கலாம் வரீங்களா ?!
    நாகர்கோவில் செல்பவர்கள் மறக்காமல் சாப்பிடவேண்டிய சுவையான உணவு இது, எந்த ஹோட்டல் சென்றாலும் இந்த ரசவடை கிடைக்கும், ஆகவே மிஸ் செய்யாதீர்கள் !!

    Labels : Suresh, Kadalpayanangal, Oorum Rusiyum, District food, Tamilnadu, Nagerkovil, Rasavadai, Rasam, Best food of Nagerkovil, Nagercoil rasavadai, tasty food