Wednesday, January 7, 2015

சிறுபிள்ளையாவோம் - ஜவ்வு மிட்டாய் !!

சிறு வயதில் வீட்டின் உள்ளே விளையாடி கொண்டு இருக்கும்போது ஜங் ஜங் என்று கொலுசு போன்ற ஒரு ஒலி கேட்க்கும், வெளியே ஓடி வந்து பார்த்தால் ஒரு நீண்ட கழியில் பிங்க் நிறமும், வெள்ளை நிறமும் கலந்த ஒரு கலவையை அந்த கழியில் வைத்து அதன் உச்சியில் ஒரு சிறிய பொம்மை ஒன்று கைதட்டும் போது அந்த ஓசை கேட்க்கும். இது வரை தின்பண்டங்களை சதுரம், ரவுண்டு, ஓவல் என்று பார்த்தே பழக்கப்பட்ட நமக்கு இது என்ன என்று தோன்றும்போது..... ஒரு சுவையான தின்பண்டம் நாம் விரும்பும் உருவத்தில் கிடைக்கும் எனும் போது வரும் ஆச்சர்யம் இன்றும் அகலவில்லை இல்லையா ?!
 
 
இதற்க்கு உண்மையான பெயர் என்பது என்ன என்று தெரியவில்லை, ஆனால் ஜவ்வு போல இழுத்து உருவங்களை செய்வதால் இதை ஜவ்வு மிட்டாய் என்றே குழந்தைகள் அழைப்பார்கள்.இந்த மிட்டாய்காரர் வீதியில் செல்ல பெரியவர்களும் அவர் செய்யும் உருவத்தை விரும்புவதால் சிறு குழந்தைகளே வேண்டாம் என்றாலும் வா வாங்கி தர்றேன் என்று வலுகட்டாயமாக வாங்கி தருவார்கள். மிட்டாய்காரரே இங்கே வாங்க என்று அழைக்க அவர் அந்த கழியை தூக்கி வந்து நமது முன்னே வைக்க நாம் அந்த பொம்மையை உற்று பார்க்கும்போது அது ஜெங் ஜெங் என்று கையை தட்டும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும், அது எப்படி கைகளை தட்டுகிறது என்று யோசித்து பார்த்து, அடுத்த முறை அவர் கால் பெருவிரலை கொண்டு அந்த கழியின் அடியில் ஒரு கயிறு வைத்து இருக்க, அதை இழுக்கும்போது அந்த பொம்மை கை தட்டுகிறது என்பது புரிய அந்த ஆச்சர்யம் இன்னும் விலகாமல் அதிகமாகும் இல்லையா ?! அடுத்த ஆச்சர்யம் என்பது என்ன மிட்டாய் வேண்டும் என்று கேட்பது........ எந்த கடைக்கு சென்றாலும் அந்த மிட்டாய் பேரை சொல்லி கேட்ப்போம், எவ்வளவு என்ற கேள்வி மட்டுமே கடைகாரர் கேட்ப்பார், ஆனால் இங்கு எந்த மிட்டாய் வேணும் என்று கேட்பதுவே அதிசயம்தானே !!
 
 
நாம் முழிக்கும்போது அவர் வாட்ச் வேண்டுமா என்று கேட்க, இதில் எப்படி வாட்ச் என்று யோசிப்போம் ! கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஜவ்வாக அந்த மிட்டாயை கொஞ்சம் இழுப்பார்...... அதை கவனித்து பார்த்து இருக்கின்றீர்களா, வெள்ளையும் பிங்க் நிறமும் சேர்ந்த அருமையான கலவை அது, வெள்ளை கோடு பிங்க் கோடு என்று என்று மாற்றி மாற்றி இருக்கும் ! அதை சங்கு சக்கரம் போல சுருட்டுவார், இங்கே நாமோ என்னடா பண்றார் இந்த ஆளு, கொஞ்சமா பியிச்சு உருட்டி உருண்டையாய் தரமாட்டாரா அதை ஏன் இப்படி செய்கிறார் என்று தோன்றும் இல்லையா..... ஆனால் அதில் அவர் ஒரு உருவத்தை கொண்டு வரும்போது கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக விரிய ஆரம்பிக்கும். வாட்ச், அதன் பட்டி, வாட்ச் மேலே முள், அதன் சைடில் திருகும் வகையான அமைப்பு என்று பர பரவென்று உருவம் கொண்டு வருவார் !! அதை நமது கையில் கட்டிவிட அவரை நாம் ஆச்சர்யமாய் பார்க்கும்போது சிறிது ஜவ்வு மிட்டாய் எடுத்து நமது கன்னத்தில் ஒட்டி விடுவார்..... அந்த மிட்டாயின் பிசுபிசுப்பு கன்னத்தில் இருக்க, அதை எடுத்து நாக்கில் வைக்க ஒரு அருவி பாயும் சத்தம் கேட்க்கும், அது வேறொன்றுமில்லை உங்களது எச்சில்தான் !!



 
ஜவ்வு மிட்டாயை தின்பது என்பதை ஆயக்கலை அறுபத்துனாங்கில் ஒன்றாக சேர்த்து இருக்க வேண்டும், ஆனால் நமது முன்னோர்கள் அதை செய்யவில்லை ! முதலில் அந்த வாட்ச் என்பதை எல்லோரிடமும் காண்பிக்க வேண்டும், ஒவ்வொரு நண்பனும் டேய் எனக்கு என்று கண்களில் ஏக்கம் வர கேட்க்க வேண்டும், அப்போது கொஞ்சமே கொஞ்சம் அவர் ஒட்டி விட்ட ஜவ்வு மிட்டாயை சுவைத்த அந்த நாக்கை நீட்ட அது பிங்க் நிறமாக மாறி இருக்கும், அதை வெவ்வ்வேவ்வே என்று பழிப்பு காட்ட வேண்டும், பின்னர் அவர்கள் அதை பார்த்து கோபம் கொள்ளும்போது சரி இந்தா என்று ஒரு சிறு துண்டை கொடுக்க வேண்டும், எல்லாம் அந்த சுவையில் மயங்கி இருக்க இப்போது எல்லோரது கண்களும் அந்த வாட்சை எப்படி சாப்பிடலாம் என்று திட்டம் தீட்டும்போது அதை புரிந்துகொண்டு அதை காப்பற்ற அம்மா என்று அலறி ஓட வேண்டும், துரத்தி துரத்தி கடைசியில் மூச்சிரைக்க ஒரு பங்கீடு முறையில் கொஞ்சம் கொஞ்சமாக அதை பியித்து தர எச்சிலும், அந்த ஜவ்வு மிட்டாயும் உருக உருக கைகளில் இருந்து அதை திங்க வேண்டும், பின்னர் எல்லாம் தீர்ந்தபின்னே யார் நாக்கில் அதிகம் கலர் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்று நாக்கை நீட்டி நீட்டி காண்பித்து மகிழ வேண்டும் !! இப்படி ஜவ்வு மிட்டாயை தின்றால்தான் அந்த மிட்டாய் செய்ததர்க்கே மரியாதை..... என்ன நான் சொல்றது !
 
 

 
எனது மகனுக்கு வாட்ச் செய்து வாங்கி கொண்டாலும், எனக்கு என்று கேட்க்க அவர் குழந்தையை வர சொல்லுங்க என்ன வேணும்னு கேட்ப்போம் என்றார்...... அந்த குழந்தையே நான்தான் என்று சொன்னபோது கொஞ்சம் ஆடித்தான் போனார் !! என்ன உருவம் வேண்டும் மயில் வேண்டும் என்று அவருக்கு டெஸ்ட் வைத்தேன், என்னை மேலும் கீழும் பார்த்தார்..... அப்போது அங்கு வந்த எனது மனைவி என்ன செய்கிறார் என்று பார்க்க, அவர் மயில் உருவாக்கியதையும் எனது மகனது கையில் ஏற்க்கனவே வாட்ச் வைத்துக்கொண்டு இருந்ததையும் பார்த்து, இந்த மயில் யாருக்கு என்று கேட்க்க அந்த ஜவ்வு மிட்டாய்காரர் என்னை கண்களாலேயே காட்டி கொடுக்க அவர் தலையில் அடித்துக்கொண்டே வீட்டினுள் சென்றார் ! கொஞ்சம் கொஞ்சமாக உருவான அந்த மயிலை ஆசை தீர வாங்கி..... எனக்கும் கொஞ்சம் கன்னத்தில் ஜவ்வு மிட்டாய் ஓட்டுங்க என்று கூறி அந்த கொசுறை வாங்கி கொண்டு,  இந்த மயில் இந்த சப்பானிக்குதான் என்று ஆட்டம் போட்டுக்கொண்டே நானும் எனது மகனும் வீட்டினுள் குதியாட்டம் போட்டுக்கொண்டே சென்றதை பார்த்த அந்த ஜவ்வு மிட்டாய்காரர் கொஞ்சம் ஜெர்க் ஆகி இருந்தார். சட்டென்று நான் திரும்பி என் பையனுக்கு மட்டும் பெரிய வாட்ச் பண்ணி கொடுத்து இருக்கீங்க, எனக்கு மட்டும் சின்ன மயிலா பண்ணி கொடுத்து இருக்கீங்க என்று கேட்க....... அவர் என்னை ஒரு பார்வை பார்த்து மயில் நான் எல்லோருக்கும் ஒரே சைசில்தான் செய்யறேன்,நீங்கதான்........ என்று சொல்லி நடக்க ஆரம்பித்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்து டமார் என்று சத்தம் கேட்க, என்ன அங்க சத்தம் என்று வெளியே இருந்தவர்கள் கேட்க்க நான் உள்ளே இருந்து..... வீட்டிலே சட்டையை துவைக்கறாங்க என்று கூறினேன்..... அந்த சட்டையை நான் அப்போது போட்டு இருந்தேன் என்பது இங்கே தேவை இல்லாத விஷயம் ! வாங்க பாஸ், நாம ஜவ்வு மிட்டாய் சாப்பிடலாம், இங்க பாருங்க நாக்கு சிவந்து இருக்கா ?!




 
Labels : Suresh, Kadalpayanangal, Javvu, Javu, Javvu mittai, mittai, sirupillaiyaavom, childhood, childhood memories, memorable, the man who makes

 

 
 

19 comments:

  1. நல்ல அனுபவம். நான் ஜவ்வு முட்டாயை இப்படி அனுபவித்துச் சாப்பிட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, எனது பதிவுகளை நீங்கள் விரும்பி படிப்பது கண்டு மகிழ்கிறேன் !

      Delete
  2. வணக்கம்

    சாப்பிட்டது போல ஒரு உணர்வு.. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன், உங்களது கவிதைகளை போலவே இந்த ஜவ்வு மிட்டாயும் வண்ணம் மற்றும் சுவை !

      Delete
  3. சூப்பர் ஜி ! ! அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் ! ! ஜவ்வுமிட்டாய்காரர் மிகவும் அரிதாகிப்போனார்.......

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி பொன்சந்தர் ! இந்த பதிவின் நோக்கமே இந்த அரிதான சுவையை பத்திரபடுதுவதுதானே !

      Delete
  4. Replies
    1. பதிவை மட்டும்தானே தனபாலன் சார் ! நன்றி !!

      Delete
  5. கடைசியாய் கண்டுபுடுசிடீங்க சூப்பர் ஜி சூப்பர் ஜி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம்குமார் !!

      Delete
  6. அட அருமையான் நினைவலைகள் அண்ணா..நான் சிறு வயதில் கொடைக்கானலில் இருந்தோம் ..விடுமுறைக்கு மதுரைக்கு வருவோம், அதில் செய்யவேண்டிய லிஸ்டில் ஜவ்வு மிட்டாய் சாப்பிடுவதும் இருக்கும் :)
    எனக்கு இப்போ வேணுமே..என்ன பண்றது...
    நீங்க போட்ருந்த சட்டைய ஏன் துவைச்சாங்க? ஏன் டமார்னு சத்தம் கேட்டுது? :))

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி, நீங்கள் வீட்டில் சட்டை துவைக்கும்போதும் இப்படிதானே சத்தம் வரும் ?!


      கண்டிப்பாக மதுரை வரும்போது நிறைய உணவுகளை ருசியுங்கள், எனது பதிவுகள் உங்களது வெறியையும், பசியையும் தூண்டுகிறதோ :-)

      Delete
  7. சிறு வயதில் எங்களுக்கு இது தான் 5 ஸ்டார், காட்பரீஸ் எல்லாமே. மிக்க நன்றி .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ரகுமான் !!

      Delete
  8. இன்னும் 10 -15 ஆண்டுகள் கழித்து ஜவ்வு மிட்டாயை பார்க்க முடியுமா ? தெரியவில்லை இப்போதே அரிதாகி விட்டார்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான், இந்த தலைமுறை வேறு வகையான உணவை நோக்கி செல்கிறது !

      Delete
  9. சண்டையில் கிழியாத சட்டை என்று எதுவும் இருக்கா இங்க ?!

    ReplyDelete
  10. நிறைய சாப்பிட்டிருக்கிறேன் சீனியர்... எச்சில் தொட்டு தருவாங்க, அதனால் ஹைஜீனிக் இல்லைன்னு இப்ப பயமுறுத்துறாங்க... நல்ல வேளை... நான் வாங்கி சாப்பிட்டப்ப இந்த ரூமர் எல்லாம் இல்லை...

    ReplyDelete