Monday, January 12, 2015

அறுசுவை - காளத்தி கடை ரோஸ் மில்க், சென்னை !!

அந்த ஊருல இது நல்லா இருக்கு, இந்த ஊருல அது நல்லா இருக்கு அப்படின்னு நான் சொல்வதை நிறைய பேர் முயன்று பார்த்து, பிரமாதம் அப்படின்னு அவங்க அந்த இடத்தில சாப்பிட்டு விட்டு போன் செய்யும்போது வரும் ஆனந்தமே தனி, அப்போதுதான் எழுதியதற்கு ஒரு அர்த்தம் கிடைக்குது !! பொதுவா இந்த அறுசுவை பகுதியில் ஒரு இடத்தில கிடைக்கும் சுவையான எந்த ஒரு விஷயத்தையும் அறிமுகபடுதறேன், அது பெரியதா சிறியதா என்பதல்ல இங்கே கேள்வி, ஆனால் சுவையா இருக்கா என்பது மட்டுமே பார்க்கிறேன். சென்ற முறை சென்னை சென்று இருந்தபோது மயிலாப்பூரில் கற்பகாம்பாள் மெஸ்ஸில் நன்கு சாப்பிட்டுவிட்டு வெயிலுக்கு கொஞ்சம் கூல் ஆக எதாவது சாப்பிடலாம் என்று நினைத்தபோது இந்த ஏரியாவில் கிடைக்கும் ரோஸ் மில்க் மிகவும் சுவையாக இருக்கும் என்று நண்பர் கூறி இருந்தது நினைவுக்கு வந்தது, தேடி பிடித்து சாப்பிட்டதில் அடுத்த முறை சென்னை வந்தால் கண்டிப்பாக ரோஸ் மில்க் சாப்பிட இங்கே வரவேண்டும் என்று முடிவே செய்துவிட்டேன் !!

சென்னையில் மெரினா பீச் செல்பவர்கள் அங்கு இருந்து காலையில் கொஞ்சம் லைட் ஹவுஸ் தாண்டி நடையை போட்டால் ஒரு சர்ச் வரும், அதன் எதிரே இருக்கும் ரோட்டில் சென்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் எங்கு இருக்கிறது என்று கேட்டால் கன்னத்தில் (அவர்களது கன்னத்தில்தான் !) போட்டுக்கொண்டு வழியை சொல்வார்கள். அந்த கோவிலிலுக்கு சென்று விட்டு மயிலை கற்பகாம்பாள் மெஸ் தோசை ஒன்று சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து இடது பக்கம் நடையை போட்டால் வீதியின் முடிவில் "காளத்தி பேப்பர் ஸ்டால்" என்று வருகிறது. மேலோட்டமாக பார்த்தால் அது ஒரு பேப்பர், சிகரட், இத்யாதி விற்கும் ஒரு சிறிய பெட்டி கடை போன்றது, ஆனால் அங்கு இருப்பவர்கள் ஒரு கிளாஸ்சில் பிங்க் வண்ணத்தில் ஒன்றை சாப்பிட்டுக்கொண்டே ஆனந்த நிலையில் இருப்பதை பார்த்தால் ஏதோ இங்கே ஸ்பெஷல் என்று தோன்றும், அது........ ரோஸ் மில்க் !!


ரெண்டரை பால் வாங்கிடீன்களா, நாலரை பால் வாங்கிடீங்களா என்றெல்லாம் சொல்லி நம்மை பால் வாங்க சொல்லி அதில் காபி, டீ, கற்கண்டு பால், மிளகு பால், மஞ்சள் பால், பாதாம் பால் என்று பல வகைகளில் குடிக்க வைக்கின்றனர். பால் என்றாலே வெண்மை நிறமே யாபகம் வரும், அதுவும் பால் என்பதை கொஞ்சம் பிரவுன் நிறத்தில் கொடுத்தால் அது காபி அல்லது டீ என்று மட்டுமே இருந்த சிறு பிராயத்தில் திடீரென்று ஐஸ் எல்லாம் போட்டு, கண்ணை கவரும் பிங்க் நிறத்தில் ஒரு கண்ணாடி டம்ப்ளரில் கொடுக்கும்போது கண்கள் விரியும், அதை ஒரு வாய் வைத்தவுடன் அந்த ருசியும், கலரும், சில்லிப்பும் மூளை வரை செல்லும், சப்பு கொட்டி குடித்தவுடன்,  அதுவரை ஒரு டம்பளர் பாலை அமுதமே கொண்டு கரைத்து  கொடுத்தாலும் பாதி மட்டும் குடித்துவிட்டு எனக்கு வயிறு ரொம்பிருச்சு என்று சொல்லும் நாம் அன்று பெற்றோரிடம் இன்னும் ஒரு கிளாஸ் கொடுங்களேன் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவோம்..... அதுதான் இந்த ரோஸ் மில்க் என்பதின் வெற்றி !!


பொதுவாக ரோஸ் மில்க் என்பது அரிதாகத்தான் கிடைக்கிறது, அதுவும் ஆறு ஏழு வகை ஜூஸ் கிடைக்கும் என்று போட்டு இருக்கும் எஸ்சென்ஸ் ஜூஸ் கடைகளில் கிடைக்கும், ஒரு வாய் வைத்தவுடன், ரோஸ் மில்க் என்று ஆண்டவனே வந்து நம்மை நம்ப சொன்னாலும் முடியாது என்போம். ரோஸ் மில்க் என்பதில் பால் என்பது மிகவும் முக்கியம், அப்போதுதான் கறந்த பாலை நுரையோடு எடுத்து வந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும், கொஞ்சமே கொஞ்சம் மட்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும், அது தள புள என்று கொதித்து வந்த பின்னர் நன்கு ஆற வைக்க வேண்டும், அது நன்கு ஆறியவுடன் மெதுவாக அதன் மேலே இருக்கும் ஆடையை கொஞ்சம் கொஞ்சமாக முழுவதுமாக எடுத்து விட வேண்டும் (ரோஸ் மில்க் சாப்பிடும்போது பால் ஆடை சிக்கினால் அது பால் வாசத்தை கொடுக்கும்). பின்னர் அதில் சரியான அளவு சக்கரை சேர்த்துவிட்டு அதில் சொட்டு சொட்டாக ரோஸ் எஸ்சென்ஸ் கலக்க வேண்டும்..... மிகவும் முக்கியம் என்பது அதில் வரும் ரோஜா நிறம், பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் !!


என்னதான் ரோஸ் மில்க் செய்தாலும், நிறைய இடத்தில் இந்த பால் வாடை வரும், இதனால் பல நேரங்களில் பால் குடிக்கின்றோம் என்பது மூளைக்கு தெரிந்து அந்த பாலின் சுவையை கொடுக்கும். இந்த காளத்தி கடையின் சிறப்பம்சம் என்பது பன்னீர் கலந்த அந்த ரோஸ் எஸ்சென்ஸ்..... பன்னீர் என்பதில் வரும் அந்த அருமையான மணத்தில் ரோஸ் எஸ்சென்ஸ், அதை பாலில் கலக்கும்போது பால் வாடை இல்லாமல் இருக்கிறது. இரண்டு ஐஸ் கட்டிகளை அந்த கண்ணாடி தம்ப்ளரில் போடும்போது கேட்க்கும் அந்த சத்தமே இங்கே சங்கீதம்தான், அதன் பின்னர் அந்த ரோஸ் மில்கை கையை மேலே தூக்கி தம்ப்ளரில் விடும்போது ஒரு பிங்க் நிறத்தில் அருவி விழுவது போல் தோன்றும், அது நிறைந்த பின்னர் அவர் என்னிடம் எடுத்து நீட்ட அது தளும்பி நமது கண்களுக்கு ஒரு சந்தோசத்தை தருகிறது ! அதை வாய் அருகில் எடுத்து செல்லும்போதே மூக்குக்கு பன்னீர் வாடை வர, பின்னர் ஒரு வாய் சுவைக்கும்போதே அந்த சில்லிப்பும், சுவையும், அந்த கலரும் என்று பின்னி எடுக்கிறது. ஐம்புலனும் ஆனந்தம் கொள்கிறது, எப்படி என்கிறீர்களா..... ஒவ்வொரு முறையும் அந்த ஐஸ் கட்டி கண்ணாடி தம்ப்ளரில் மோதும்போது சொல்லும் ஓசை காதுக்கும், பிங்க் நிறம் கண்ணுக்கும், பன்னீர் வாசம் மூக்கிற்கும், அந்த சுவை நாக்கிற்கும், அந்த சில்லிப்பு கைகளில் படுவது உணர்விற்கும் என்று ரோஸ் மில்க் ஒரு ஆனந்தமே இல்லையா ?!

பஞ்ச் லைன் :

சுவை - எல்லா இடத்திலும் கிடைக்கும் ரோஸ் மில்க் தானே என்று நினைக்காதீர்கள், அந்த திக் பால், பன்னீர் கலந்த அந்த சுவை என்று அருமை !

அமைப்பு - சிறிய பேப்பர் கடை, பைக் பார்க் செய்யலாம், கார் என்றால் மயிலை கபாலீஸ்வரர் கோவில் பார்கிங் அல்லது சந்து பொந்துதான் !
பணம் - ஒரு கிளாஸ் பதினைந்து ரூபாய் கொடுத்ததாக யாபகம் !
சர்வீஸ் - நல்ல சர்விஸ் !

நேரம் - காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை.
அட்ரஸ் : 

காளத்தி செய்தித்தாள் கடை,
27, கிழக்கு மாட வீதி,
மயிலாப்பூர், சென்னை

மயிலை கபாலீஸ்வரர் கோவில் வீதியின் முனையில் இருக்கிறது இந்த கடை !


Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Chennai, Kalathi, Kaalathi paper stall, paper stall, rose milk, paneer, panneer rose milk, amazing tasty, super, cool, rose

14 comments:

 1. சத்தமே சங்கீதம்... ஆகா...! என்னவொரு ரசனை...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார்.... சத்தம் மட்டும் இல்லை, சுவையும் பிரமாதம் !

   Delete
 2. நேரம் - மாலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை. அட்ரஸ் : காளத்தி செய்தித்தாள் கடை, 27, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவில் வீதியின் முனையில் இருக்கிறது இந்த கடை !

  தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமா விற்கிறார்கள் முழு நேரமும் விற்கலாமெ ( காலை முதல் என்று நினைக்கிறேன். ) ஏதும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எதுவும் தவறாக கூறவில்லை வடிவேலன்..... உரிமையோடு சொல்வதில் தயக்கம் ஏன் !? தவறை உடனே திருத்திவிட்டேன்.


   தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி வடிவேலன் !

   Delete
 3. என்னுடைய ஃபேவரிட் ட்ரிங் குழந்தைக்காலம் முதல் இப்பவரை ரோஸ் மில்க்தான்.

  இங்கே இண்டியன் ரெஸ்ட்டாரண்ட்களில் கிடைப்பதில்லை. அதுக்காக சும்மா இருக்க முடியுதா?
  sharbat Rooh Afza Hamdard Lab, Ghaziabad, U P தயாரிப்பு இண்டியன் க்ரோஸரி கடைகளில் கிடைக்கும் ஸ்ரப் பாட்டிலை வாங்கி வச்சுக்கிட்டு ஃப்ரிஜ்லே இருந்து எடுத்த ஐஸ்பாலை ஒரு கண்ணாடி க்ளாஸில் ஊற்றி ரெண்டரை இல்லை மூணு ஸ்பூன் ஸிரப் சேர்த்தால் ஜோரான ரோஸ்மில்க் ரெடி. அட்டகாசமா இருக்கு!

  நீங்க இங்கே வரும்போது குடிச்சுட்டுச் சொல்லுங்க. துளஸிவிலாஸ் ரோஸ்மில்க் எப்படி இருந்துச்சுன்னு:-)))))


  ReplyDelete
  Replies
  1. நான் வருவதற்கு ரெடி, ஆனால் ரோஸ்மில்க் குடிக்க என்று வரும் செலவை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது !!


   நீங்கள் அடுத்த முறை சென்னை வரும்போது கண்டிப்பாக முயலவும் !

   Delete
 4. ரோஸ் மிலக்- ஐ இங்கே தென்காசியில் குடிச்சப்புறம்தான் தாகம் தீரும். ஏக்கத்தை உண்டு பண்ணிவிட்டீர்கள் ஐயா !!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பொன்சந்தர் ! உங்க பக்கம் ஒரு கடைபோடலாமா ?!

   Delete
 5. Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கருண் !

   Delete
 6. பலமுறை இந்த கடையை கடந்து சென்றதுண்டு! இந்த முறை ரோஸ்மில்க் குடிக்க அங்கே தான் போகனும்! இனிக்க இனிக்க ஓர் பகிர்வு! அருமை!

  ReplyDelete
  Replies
  1. சென்று சுவைத்துவிட்டு ஒன்று இங்கே அனுப்பி வைக்கவும் :-)


   தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சுரேஷ் !

   Delete
 7. ரோஸ் மில்க் - ஆஹா சுவையோ சுவை தான்.

  துளசி டீச்சர் சொல்ற மாதிரி Rooh Afza பாலில் விட்டால் இப்படி ரோஸ் மில்க் சுவை தான். என் மகள் குழந்தையாக இருந்தபோது பால் அருந்த தகறாறு செய்வாள். வெள்ளை நிறத்தில் இருக்கும் எல்லாமே தயிர் என்று அவளுக்கு எண்ணம்! பாலில் கொஞ்சம் Rooh Afza கலந்து கொடுத்தால் மொத்த பாலும் நொடியில் காலி! :)

  ReplyDelete
  Replies
  1. எல்லோருமே இந்த ரோஸ் மில்க் பார்த்துவிட்டால் குழந்தைகள்தானே சார் !!


   தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !

   Delete