Wednesday, January 14, 2015

பொங்கலோ பொங்கல்..... இனிக்கும் கரும்புடன் !!

புது வருடம் பிறந்தவுடன் காலேண்டர் வாங்கி வந்து தீபாவளி எப்போது என்று பார்ப்போம், அதன் பின்னர் பொங்கல் பண்டிகை எந்த நாளில் வருகிறது என்றல்லாவா பார்ப்போம் ! ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு விதமாக கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது, நண்பர்களுடன், வயல் வெளியில், ஜல்லி கட்டு பார்க்க போய், வீட்டில் என்று இடம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது, அதுவும் ஒரு வகையில் நல்லதுதான், இதனால் பல மனிதர்களை சந்திக்க முடிகிறது அல்லவா !! இந்த வருடமும் பொங்கல் பண்டிகை கரும்புடன் இனிக்க போகும் தருணத்தில் ஒரு கரும்பு தோட்டம் சென்று வந்த அனுபவம் சுவைப்போமே !!கரும்பு..... பல் முளைத்த பின்னர் வீட்டில் கரும்பை வெட்டி வைத்திருக்கும் போது, பொங்கல் முடிந்தவுடன் வீட்டின் முன்னாலே எல்லோரும் ஒன்றை வைத்துக்கொண்டு உட்கார்ந்துக்கொள்வோம். முதலில் ஒரு கடி கடித்துவிட்டு அந்த கரும்பை வேக வேகமாக அரைத்து சக்கையாக துப்புவோம், யார் அதிகமாக சக்கையை துப்பி இருக்கிறார்கள் என்று போட்டி இருந்தது. கனுவை கடிக்கும்போது மட்டும் முடியாமல் பல் வலிக்கும், அல்லது ஆடுகின்ற பல் உடையும் தருணங்கள் பல ! எங்களோடு கூட உட்கார்ந்து கரும்பை கடிக்கின்ற பெரியவர்கள் மெதுவாக, மிக மெதுவாக கரும்பை கடிப்பதை பார்த்து அவர்களை கிண்டல் செய்து இருக்கிறேன்....... பல வருடங்களுக்கு பின்புதான் தெரிந்தது ஒவ்வொரு கடியிலும் அந்த சுவையை அனுபவிக்க வேண்டும் என்று !!


சிறிது பெரியவர்கள் ஆனவுடன் கரும்பை ஒரு கடி கடித்து, அதை ஒரு முறை கடித்து அந்த ஜூஸ் உள்ளே எச்சிலுடன் இறங்க அதை கண்களை மூடி அனுபவிக்க கற்றுக்கொண்டோம். சில நண்பர்கள் மேலே அந்த கருப்பு தோலை சீவி விட்டு குவார்டரில் முக்கி எடுத்து சாப்பிடுவதும் நடந்தது ! வீடுகளிலும், ஊரிலும் இருந்த வரை இந்த கரும்பிர்க்காக ஒவ்வொரு பொங்கலும் காத்திருத்தல் தொடர்ந்தது...... நகருக்கு வந்தது முதல் கரும்பு சாறு வண்டியில் அந்த சுவையை தேட ஆரம்பித்து ஒரு பொழுதில் கரும்பை கடித்து தின்பது என்பது சிரமமான காரியம் என்று ஆகிவிட்டது எனக்கு மட்டும்தானா ?!


யாராவது அந்த கரும்பின் இலையை தொட்டு பார்த்து இருக்கின்றீர்களா ? பொதுவாகவே கரும்பை அதன் நடு அல்லது வால் பகுதி கொண்டு மட்டுமே தொட்டு தூக்குவார்கள், முதன் முதலில் அந்த இலை பகுதியை தொட்டு அதில் இருந்த சிறு சிறு முட்கள் போன்ற ஒன்று கையில் குத்தி அம்மா பொறுமையாக எடுத்த கணங்கள் எவ்வளவு அறுபுதமானவை !! பொங்கல் நெருங்கும்போது மட்டும் கரும்பை எங்கெங்கும் கண்டு, அதை வீட்டில் வாங்கி வைத்து அதை வெட்டும்போது தெறித்த அந்த சாறின் ருசி எவ்வளவு சுவையானவை ! பொங்கல் முடிந்தபின்னும் அந்த கரும்பினை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து நண்பர்களுடன் கரும்பு சண்டை போட்டு மண்டை உடைந்த தருணங்கள் எவ்வளவு சுகமானவை ! நீயா நானா பார்த்துவிடுவோம் என்று வெறி கொண்டு நண்பர்களுடன் கரும்பை கடித்து சக்கையை துப்பிய அந்த பொங்கல் நாட்கள் எவ்வளவு இனிமையானவை ! இன்று யாவும் பொங்கல் சிறப்பு நிகழ்சிகள் என்பதில் அடங்கிவிட, பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பர்களிடம் சென்று சூடான சர்க்கரை பொங்கலை கொடுக்க யாருக்கு பர்த்டே என்று கேட்க என்ன சொல்வது என்றல்லவா முழிகின்றோம் !!இந்த பொங்கலில் எல்லா வளமும், மகிழ்ச்சியும் பெற்று நீங்களும் உங்களது குடும்பத்தினரும் சிறப்பாய் கொண்டாட வாழ்த்துக்கள் !! கரும்பை விட இனிய விஷயங்கள் பலவும் இந்த ஆண்டு தங்களது வாழ்வில் நிகழ ஆண்டவனை வேண்டுகிறேன் !!  

பொங்கலோ பொங்கல் !!

Labels : Suresh, Kadalpayanangal, Sugar cane, Karumbu, Pongal, 2015, Wishing, Karumbu thottam 

9 comments:

 1. முடிவிலும் யதார்த்தமான உண்மைகள்...

  இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. இனிய பொங்கல் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள் ! ! ! மதுரை மேலூர் பக்கம் அதிக கரும்பு வயல்கள் பார்த்ததாக ஞாபகம் ! !

  ReplyDelete
 3. நல்லதொரு பதிவு...!

  கரும்புத்தோட்டத்தில் புகுந்து கரும்பு தாள்களில் கிழிப்பட்ட அனுபவங்கள் எனக்கும் அதிகமுன்டு...

  ஆனால் எங்கள் பகுதியில் பொங்கல் கரும்புகள் பயிருடுவதில்லை ஆலை கரும்புகள்தான் அதிகம்.... அதன் சுவையும் அலாதிதான்....
  தோட்ட்த்தில் ஒடித்து சாப்பிட்ட அனுபவங்கள் போய் கடையில் வாங்கி சாப்பிடும் அனுபவத்தில் ஓடுகிறது தற்போதைய காலம்....

  பொங்கல் வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 4. Timely article!
  அதே சமயம், எங்கள் வயலில் வெல்லம் ஆட்டும் நினைவுகள்...
  கொப்பரையில் வெல்லலாம் எடுக்கும் போது , ஒரு தடவை பிழிந்த கரும்பை மறுபடியும் உபயோக்கிக்க மாட்டர்கள். அந்த ஒரு தடவை பிழியப்பட்ட கரும்பை நம்ம பீச்சில் கொடுத்தால் ஒரு பத்தான் கிளாஸ் ஜூஸ் எடுப்பார்கள்!

  ReplyDelete
 5. ஒரு பத்தான் கிளாஸ் ஜூஸ் எடுப்பார்கள்!------------ஒரு பத்து கிளாஸ் ஜூஸ் எடுப்பார்கள்!

  ReplyDelete
 6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. இனிய அனுபவம். சமீபத்தில் பஞ்சாப் சென்றிருந்த போது இப்படி கரும்பு எடுத்து வெல்லம் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். அங்கே கிடந்த கரும்புகளைச் சாப்பிட்டு வெல்லமும் சாப்பிட்டு அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கினேன்....

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete