Thursday, January 29, 2015

அறுசுவை - டவுசர் ஹோட்டல், சென்னை

சென்னையில் ஒரு நல்ல அசைவ ஹோட்டல் சொல்லுங்க அப்படின்னு யாரையாவது கேட்டால் உடனே அஞ்சப்பர், தலைப்பாகட்டு என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். அசைவம் சமைப்பதில் ஒரு பக்குவம் வேண்டும், என்னென்னவோ சாஸ் எல்லாம் ஊற்றி அசைவத்தை வைப்பதில் சுவை இருக்கும் என்று சொல்பவர்கள் மத்தியில், வீட்டு சாப்பாடு போன்று அசைவம் சாப்பிட ஒரே ஒரு இடம் மட்டுமே இருக்கிறது எனலாம், சைவ சாப்பாடு என்பது சென்னையில் எங்குமே கிடைக்கிறது ஆனால் அசைவ சாப்பாடு என்றால் டவுசர் ஹோட்டல் எனலாம் !!




சுமார் முப்பத்தைந்து வருடங்களாக இயங்கி கொண்டு இருக்கும் இந்த ஹோடேலின் ஆரம்ப பெயர் என்பது ஸ்ரீ அருணகிரி மெஸ் என்பதாகும், இன்று அந்த பெயரை சொல்லி யாரிடம் கேட்டாலும் முழிப்பார்கள்....... அப்பா மெஸ் அல்லது டவுசர் ஹோட்டல் என்று சொன்னால் எல்லோரிடமும் தெரியும் !! மந்தைவெளி பஸ் ஸ்டான்ட் சென்று அங்கு இருந்து RK மட் ரோடில் நடந்து சென்றால் வலது புறத்தில் மருந்தீஸ்வரர் மெடிக்கல் அருகில் ஒரு பெயர் இல்லாத கடை இது...... உங்களுக்கு சில நேரங்களில் அசைவ வாசனையே வழி காட்டுகிறது !! ஹோட்டல் நுழைவாயில் மிகவும் சிறிதாக இருக்கிறது, உள்ளே நுழையும் முன்பு சாப்பாடு ரெடி என்று ஒரு சிறிய போர்டு.கண்ணில் பட, உள்ளே ஒரு சில டேபிள் போடப்பட்டு ஆட்கள் ஒரு கட்டு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் !!

ஒரு மதிய வேளையில் பதிவர் நண்பர்கள் ஸ்கூல் பையன் மற்றும் கோவை ஆவி அவர்களுடன் இந்த ஹோட்டல் சென்றேன். உள்ளே நுழைந்து ஒரு இடம் பார்த்து உட்கார்ந்தவுடன் ஒரு பெரிய வாழை இலையை உங்களது முன் போடுகின்றனர், இதில் ஒரு பிறந்த குழந்தையையே படுக்க வைக்கலாம் அவ்வளவு பெரிசு. பொதுவாக ஹோடேலில் சிறிய இலையாக போட்டு இரண்டு மூன்று முறை சாப்பாடு கேட்டு சாப்பிடுவோம், அதற்க்கு மேல் கேட்பதற்கு கூச்சமாக இருக்கும், இங்கு பெரிய இலையாய் வைக்கும்போதே மனது நிறைந்து விடுகிறது. தண்ணீர் வைத்துவிட்டு என்ன வேண்டும் என்று கேட்க சாப்பாடு என்று சொல்லிவிட்டு அவர் முகத்தை பார்க்க தொட்டுக்க என்றார்.... என்னவெல்லாம் இருக்கு என்று எதிர் கேள்வி போட முட்டை, மட்டன், சிக்கன், மீன், இறால் இருக்கு என்றார், எல்லாவற்றிலும் ஒண்ணு என்று சொல்ல கோவை ஆவியும், ஸ்கூல் பையனும் அவர்களுக்கு தனியாக சொல்ல வேண்டுமோ என்று என்னை பார்க்க, ஷேர் செய்துக்கலாம் என்று சொன்னவுடன் வந்த அந்த புன்னகை....... ஆம்பளை KR விஜயா சிரிப்பது போலவே இருந்தது !!
பச்சை நிற தலை வாழை இலையில் தும்பை பூ போன்ற வெள்ளை நிற சாதத்தை அள்ளி அள்ளி வைக்கிறார்கள், கொஞ்சமே கொஞ்சம் பீட்ரூட் பொரியலும், கோஸ் பொரியலும் வைக்க..... உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று அந்த பொரியல்கள் இடத்தில ஒரு லுக் விட்டு, குழம்பு கொண்டு வாங்க என்றோம். சாம்பார், ரசம், மோர், மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, முட்டை குழம்பு, இறால் குழம்பு என்று வரிசையாக அடுக்க, எங்களது வைபவம் மட்டன் குழம்போடு இனிதே ஆரம்பமானது. மட்டன் குழம்பில் நல்ல மசாலா அரைத்துவிட்டு மணம் தூக்க அந்த சாதத்தில் ஊற்ற அதை பிசைந்து கொண்டு இருக்கும்போது மட்டன் பிரை வந்தது, அதனோடு பெரிய வெங்காயத்தையும் இறாலையும் நல்லெண்ணெய் கொண்டு பிரை செய்ததும், தோசைகல்லில் எண்ணை அதிகம் இல்லாமல் பொறிக்கப்பட்ட பொன்னிறமான வஞ்சிரம் வருவலும் வந்தது. மட்டன் குழம்போடு பிசைந்து அந்த பசி நேரத்தில் ஒவ்வொரு கவளதையும் ஒவ்வொரு சைடு டிஷ்ஷோடு இறக்கி கொண்டு இருக்க எங்களை யாரோ முறைப்பது போன்று ஒரு உணர்வு...... சத்தியமாக அது அந்த பீட்ரூட் பொரியலும், முட்டைகோசு பொரியலுமெதான், அவங்களைத்தான் நாங்க தொட்டுக்கூட பார்க்கலையே !!
பொதுவாக மெஸ் என்று சொல்லப்படும் கடைகளில், அதுவும் சென்னை போன்ற நகரங்களில் கடைபிடிக்கப்படும் சிறிய இலை, குழம்பு என்பது சிறிய கப்பில், சைடு டிஷ் என்பது ஒரு கைப்பிடி அளவு மட்டும், சாதம் கேட்டால் கொஞ்சமே கொஞ்சம் மட்டும் வைப்பது என்ற எந்த விதமான அட்ரோசிட்டி எதுவும் இல்லாமல் உண்மையாகவே திருப்தியோடு சாப்பிட்டு வரலாம் இந்த டவுசர் ஹோடேலில். இறால் தொக்கும், வஞ்சிரம் மீன் வருவலும் மட்டன் குழம்போடு பின்னி பிணைகிறது. இடம், சுத்தம் எல்லாம் அதிகம் பார்கவில்லை என்றால் கண்டிப்பாக சென்று வரலாம் !!




பஞ்ச் லைன் :

சுவை - சென்னையில் ஒரு அருமையான அசைவ மெஸ், எல்லா விதமான அசைவ வகைகளும் மனம் நிறையும் சுவையோடு !

அமைப்பு - மிக சிறிய இடம், மதிய நேரத்தில் இடம் கிடைப்பது சற்று கடினம்தான். இரு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவது இந்த ஏரியாவில் சிரமம்தான்.
பணம் - என்னை கேட்டால் இந்த சாப்பாடு இரண்டு மடங்கு விலை இருந்தாலும் கொடுத்து இருப்பேன், சாதாரண விலையில் அருமையான சாப்பாடு !
சர்வீஸ் - நல்ல சர்விஸ் ! மிகவும் பொறுமையாக சர்வீஸ் செய்கிறார்கள் ! 
அட்ரஸ் :  





இந்த கடையின் கீழ் அட்ரஸ் இருக்கிறது பாருங்கள்........ இதற்க்கு அடுத்ததுதான் ஹோட்டல் !
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Chennai, trouser hotel, appa hotel, best non veg mess in Chennai, Chennai hotel, non veg, asaivam, mandaiveli, tasty

16 comments:

  1. //ஆம்பளை KR விஜயா சிரிப்பது போலவே இருந்தது !!//

    ஹா ஹா...

    அடடா... எல்லாத்தையும் கண்ல காட்டிட்டீங்களே.... மறுபடியும் போயிருவேன் போலயே!!!

    ReplyDelete
  2. பின்னி பிணைத்து விட்டீர்கள்...!

    ReplyDelete
  3. மூணு பேரும் ஒரு கட்டு கட்டிட்டீங்க போல! :)

    ReplyDelete
  4. சாப்பாடு நேரத்தில் அல்லது பசிக்கும் நேரத்தில் இந்த பதிவை படித்தால் எந்த சாப்பாடாக இருந்தாலும் ருசிக்காது என நினைக்கிறேன்........ படிக்கும் போதே....மணக்குதே ! ! !

    ReplyDelete
  5. படிக்கும் போதே....மணக்குதே ! ! !

    ReplyDelete
  6. நன்றி நண்பரே... அங்கு போகும் போது மனசு இந்த ஓட்டலையே தேடும்..

    ReplyDelete
  7. முதலீடு இல்லாமல் Onlineல் தினமும் 100ரூபாய் உறுதியாக சம்பாரிக்க மூடியும்! மேலும் விவரங்களுக்கு - http://www.bestaffiliatejobs.blogspot.in/2015/01/paidverts-earning-opportunities-in-tamil.html

    ReplyDelete
  8. இதை படித்தவர்களுக்கு கண்டிப்பாக வாயில் எச்சில் ஊறி இருக்கும்.
    செம கட்டு கட்டிட்டீங்க. அருமையான பதிவு.

    ReplyDelete
  9. வணக்கம்
    திருப்திஅடைந்தது போல ஒரு உணர்வு.... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. சாப்பாட்டுராமன்னு பெயரை மாத்திங்க/////////////////////////////////

    ReplyDelete
  11. cable sankar intro pannappalerunthu adikkadi pora romba pidicha hotel......

    ReplyDelete
  12. நான் ஸ்ரீ லங்கா வில் பத்திரிக்கை ஆசிரியராக இருந்து தற்போது யு கே யில் வாழ்கின்றேன்.உங்களின் ஆர்வம்,தேடல், அயராத முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.உங்களின் தொடர்பை விரும்புகின்றேன்.இங்கிலாந்துக்கு வந்தால் இன்ஷா அல்லாஹ் நான் உங்களுக்கு உதவி செய்வேன்.தொடர்பில் இருங்கள். Badhi us saman 78,Rawlets road,Leicester.LE5 4UF

    ReplyDelete
  13. Planning to visit on 6Feb, friday.Yes, friday, thaan. so what.
    I live to eat.
    Next time in your chennai visit, pl eat at Thirunelveli hotel, arunachalam road,saligramam, (next to Surya hospitall). You will not regret. It is not a typical hotel, just three tables, but the food is awesome

    ReplyDelete
  14. அருமை.

    ReplyDelete