Friday, January 30, 2015

அறுசுவை (சமஸ்) - கும்பகோணம் பூரி - பாஸந்தி !!

திரு.சமஸ் அவர்கள் எழுதிய சாப்பாட்டு புராணம் படித்துவிட்டு, அவர் சொன்ன இடங்களுக்கு சென்று சாப்பிட்டு அதை பகிர்வதே இந்த தலைப்பின் நோக்கம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்..... அதில் இந்த முறை சென்றது கும்பகோணம் !! இந்த ஊரில் எங்கு திரும்பினாலும் கோவில்கள்தான், அதிகாலையில் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று வந்து ஒரு டிகிரி காபி சாப்பிட்டுவிட்டு, சூடான ரெண்டு இட்லியை சாப்பிட்டு வேலையே தொடங்கினால் அந்த நாள் அவ்வளவு இனிதாக இருப்பது போன்று தோன்றும். இந்த ஊரில், அந்த காலத்தில் கச்சேரிகள் நடக்கும்போது வித்வான்கள் நிறைய பேர் வந்து சப்பு கொட்டி சாப்பிடுவார்கள் என்று கேள்வி.... அப்படி அவர்கள் ருசித்து சாப்பிட்டதுதான் பூரி - பாசந்தி !!
திரு.சமஸ் அவர்கள் எழுதிய கும்பகோணம் பூரி பாஸந்தி பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்...... முராரி ஸ்வீட்ஸ் பூரி-பாஸந்தி !!

கும்பகோணத்தின் பெரிய கடை வீதியில் நடந்து சென்றால் பிடரி குளம் அருகே உங்களின் கண்களில் இருந்து தப்பவே முடியாதபடி இருக்கிறது இந்த முராரி ஸ்வீட்ஸ் ! உத்தர் பிரதேஷில் இருந்து வந்த திரு.முராரி லால் சேட் ஆரம்பித்த இந்த கடை இன்று 100 ஆண்டுகளை தொட இருக்கிறது, அதுவும் பெரிய கடை வீதியில் எனும்போதே உங்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த கடையின் சிறப்பம்சம்.... கும்பகோணம் மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத சுவையான அம்சமாக மாறி இருக்கிறது இந்த முராரி ஸ்வீட்ஸ் !! கடையின் உள்ளே நுழைந்து பூரி இருக்கா என்று கேட்க, இல்லை என்றனர். ஒரு வேளை சாயங்காலம் போடுவார்களோ என்று எண்ணி எத்தனை மணிக்கு பூரி கிடைக்கும் என்று கேட்க, அவரோ....... எப்போவுமே இங்கே பூரி கிடையாது என்றார் !!மிகுந்த குழப்பத்தில் இருந்தேன் எனலாம், ஒரு வேளை நான் தேடி வந்த முராரி ஸ்வீட்ஸ் இதுவல்லவோ, திரு.சமஸ் அவர்கள் தெளிவாக எழுதி இருந்தாரே கோதுமை பூரி, பாஸந்தி தொட்டு சாப்பிட வேண்டும் என்று மோட்டுவளையை பார்த்து யோசனையில் இருக்க, எங்களை பார்த்த கடைகாரர் விசாரித்துவிட்டு, ஆம் பூரி போட்டது உண்மைதான் ஆனால் இன்று அதை எல்லாம் நிறுத்திவிட்டு ஸ்வீட்ஸ் மட்டும் என்று வியாபாரம் நடக்கிறது என்றார், திரும்பி பார்க்க ஒரு பழைய போர்டில் பூரி என்று எழுதி இருந்தது !! கும்பகோணம் வரை வந்துவிட்டு இந்த பூரி - பாஸந்தி சாப்பிடாமல் போக கூடாது என்று இருந்ததால் அங்கு எழுதி இருந்த மசாலா பூரி, பேல் பூரி இருந்தால் கொடுங்களேன், சைஸ் சின்னதாக இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்றதை கேட்டு அவர் எங்களை முறைக்க ஆரம்பித்தார் !!அடுத்து என்ன செய்வது என்று யோசித்து பூரி இல்லையென்றாலும், பாஸந்தி சாப்பிட்டே தீருவது என்று இருக்கா என்று கேட்க அவர் சந்தோசமாக தலையை ஆட்டினார். ஒரு ஓரத்தில் இருந்த பிரிட்ஜில் இருந்து ஒரு சிறு கிண்ணத்தை எடுத்துக்கொடுக்க அந்த சில்லென்று இருந்த கிண்ணத்தின் மேலே மிதந்தது கொண்டு இருந்தது பாதாம் பருப்பு, அதன் கீழே சிறிது மஞ்சள் பொன்னிறத்தில் ஏடாக படிந்து இருந்தது அந்த பாஸந்தி ! முதல் பார்வையிலேயே அந்த பாஸந்தி மேல் காதல் வரும் (பக்கத்தில் மனைவி இருந்தால், இப்படி என்னைய ஒரு முறை கூட ஆசையா பார்த்ததில்லையே, வீட்டுக்கு வா இருக்கு என்பார் ), சின்ன ஸ்பூன் கொண்டு அந்த ஏடை குத்தும்போது பொலக் என்று அது உள்ளே போகும், அந்த ஸ்பூனை இப்போது வெளியே எடுத்து சிறுபிள்ளை போல நாக்கினால் நக்கி பாருங்கள்........ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்  பாஸந்தி !!


பொதுவாகவே பாலினால் செய்த எந்த இனிப்பை எடுத்துக்கொண்டாலும் அது சிறிது சாப்பிட்டாலே திகட்ட ஆரம்பிக்கும், ஆனால் இந்த பாலினால் செய்த பாஸந்தி என்னும் இனிப்பு இன்னும் வேண்டும் என்று கேட்க்க தூண்டுகிறது எனலாம். பாலை சுண்ட காய்ச்சி சீனி போட்டு தந்தால் போதும் போதும் எனும் நாம் இந்த சுண்ட காய்ச்சிய பாலில் செய்யப்பட்ட பாசந்தியை ஒரு கை பார்க்கிறோம் என்பது விந்தைதான் !! அதுவும் பாஸந்தி சாப்பிடும்போது மேலே தூவப்பட்டு இருக்கும் அந்த பாதாம், ஏலக்காய் துகள்கள் பற்களின் இடையில் மாட்டிக்கொள்ள அந்த பாஸந்தி கரைந்தபின்னும் ஊரும் எச்சிலில் அந்த ஏலக்காய் சுவை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறங்க அந்த உணர்வே போதும் !! இந்த முராரி ஸ்வீட்ஸ் மற்ற இனிப்புகளுக்கும் புகழ் பெற்றது, கீழே பாருங்கள்..... அடுத்த முறை கும்பகோணம் செல்லும்போது மறக்காமல் பாஸந்தி சாப்பிட்டு வாருங்கள். பூரி - பாஸந்தி என்பதில் இங்கு பூரி அழிந்து போனாலும்...... பாஸந்தி காலங்களை கடந்து நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் !

இவ்வளவு சொல்லிய பின் கும்பகோணம் பாஸந்தியின் செய்முறை பற்றி சொல்லாமல் செல்வேனா.... வீட்டிலேயே தயார் செய்யலாம் ! • பால் - 3 கப்

 • சீனீ - 3 கப்

 • நீளமாக நறுக்கவும்:

 • முந்திரி - 1/4 கப்

 • பாதாம் - 15

 • பிஸ்தா - 1/4கப்

 • குங்குமப்பூ - 1 ஸ்பூன்

 • செய்முறை
  1. அடிக்கனமான அகன்ற பாத்திரத்தை எடுத்த்துக் கொள்ளவும்.
  2. பாத்திரத்தை அடுப்பில் வைத்த்து, அதில் பாலை விட்டு மிதமான சூட்டில் பாலை காய்ச்சவும்.
  3. பாலின் மேல் படியும் ஏடுகளை ஒரு சிறு கரண்டியால் எடுத்து தனியே வைக்கவும்.
  4. பால் ஊற்றிய அளவில் இருந்து பாதியாகும் வரை காய்ச்சி பால் ஏடுகளை சேகரித்துக் கொள்ளவும்.
  5. பாலுடன் சர்க்கரை சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை கிளறவும்.
  6. இதனுடன் சேகரித்து வைத்துள்ள பால் ஏடுகளை சேர்த்து, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.
  7. இப்போது சுவையான பாஸந்தி தயார்.

  Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, samas, sappaattu puraanam, kumbakonam, murari sweets, muraari, basanthi, poori pasanthi, poori basanthi, best food, tasty

  7 comments:

  1. They make good Makkan Beda.. You can try that too.

   ReplyDelete
  2. சமீபத்தில் தான் சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணம் புத்தகம் படித்தேன். ஒவ்வொரு இடமாக சென்று நீங்கள் ரசிப்பது நன்று. இங்கே இருக்கிற திருவானைக்கோவில் நெய் தோசை சாப்பிடவே இன்னும் போகல! :(

   பூரி போச்சே.... :( இருந்தாலும் பாசந்தியாவது கிடைத்ததே....

   ReplyDelete
  3. அருமை!!! விருதுநகர் புராட்டா பற்றி ஒரு பதிவு போடலாமே

   ReplyDelete
  4. அது பிடாரி குளம் இல்லை. பொற்றாமரை குளம்

   ReplyDelete