Tuesday, January 6, 2015

அறுசுவை (சமஸ்) - ரெண்டு இட்லி, ஏழு வகை சட்னி !!

தஞ்சாவூர்..... இந்த ஊருக்கு ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக செல்லும்போது எல்லாம் ரசித்து, ருசித்து சாப்பிட வைத்து விடுகிறது ! சமஸ் அவர்கள் குறிப்பிட்ட உணவகத்திற்கு சென்று சுவைத்து இந்த பதிவினை எழுதி வருகிறேன் என்பதை இதை தொடர்ந்து படித்து வரும் அனைவருக்கும் தெரியும், அதில் மகுடம் வைத்தது போன்றதுதான் இந்த உணவகம் என்று சொல்லலாம் ! தஞ்சாவூர் சமையல் என்று தனியாக சொல்லும்படியாக ருசியுடன் இருக்கும் உணவுகள், அதில் சுவையான சட்னி வகைகள் என்று சொன்னால் உங்களது உள்நாக்கு வேர்காதா ?! சென்ற முறை இந்த உணவகத்திற்கு தேடி சென்றபோது மாலை ஏழு மணிக்கு மேல்தான் கடை என்று சொன்னதால் திரும்பிவிட்டேன், இந்த முறை தவறவிடக்கூடாது என்று தேடி சென்றேன்...... உண்மையிலேயே ருசிதான் !!


தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் சென்று அங்கு இருந்து வெளியே வந்து இடது பக்கம் திரும்பினால் பார்கிங், அதை கடந்து சென்றால் தூரத்தில் மஞ்சளாக ஒரு போர்டு இருக்கும்........ அதுதான் சுப்பையா டிபன்ஸ் !! முன்பு ரயில்வே ஸ்டேஷன் வெளியே வந்து மெயின் ரோட்டில் இடது புறம் திரும்பினால் அங்கு நாலாவதாக இருக்கும் கடை, இன்று அந்த பகுதியை இடித்து கட்டுவதால் கடை ரயில்வே ஸ்டேஷன் உட்புறமே மாறிவிட்டது. அடுத்த முறை செல்லும்போது வேறு எங்கேனும் மாறியும் இருக்கலாம், ஆனால் கூச்சபடாமல் யாரை கேட்டாலும் வழி சொல்வார்கள். மேலோட்டமாக பார்த்தால் அது வழக்கமாக எல்லா ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கும் ஒரு உணவகம் போல்தான் தோன்றும்..... ஆனால் இங்குதான் இருக்கிறது சட்னியில் ஸ்பெஷல் !!
 
 
 
 
இட்லி, வீட்டில் அல்லது வெளியில் எங்கு சென்றாலும் வயிற்றை கெடுக்காத ஒரு உணவு. பொதுவாகவே, ரயில் அல்லது பஸ் நிலையங்களின் அருகில் கிடைக்கும் இட்லியை கார் நகராமல் இருக்க டயரின் அடியில் கல் வைப்பதற்கு பதில் பயன்படுத்தும் அளவு இருக்கும். இட்லி என்பது வெள்ளை வெளேரென்று இருக்க வேண்டும், அதுவும் இட்லி தட்டில் இருந்து எடுக்கும்போது வரும் ஆவியே உங்களுக்கு எச்சிலை ஊற வைக்க வேண்டும். அந்த இட்லியை ஒரு தட்டில் கவிழ்க்கும்போது மோதிக்கொள்ளும் ஒவ்வொரு இட்லியும் அசையும் அழகே தனி. முக்கியமாக சிலர் இட்லியை திருப்பி போட்டு, அதில் இட்லி வெந்து இருக்கிறதா என்று பார்க்க குத்திய ஓட்டையில் ஒரு கரண்டி நல்லெனையை ஊற்றி அதன் மேலே சின்ன வெங்காய சாம்பாரை ஊற்றி, ஊற வைத்து அடிப்பார்கள்........ அது போன்ற இட்லி கிடைக்கும் இடம் இது எனலாம் !! இங்கு இட்லி மட்டுமே ஸ்பெஷல் இல்லை..... இனிமேல்தான் இருக்கிறது ஸ்பெஷல் !
 


ஒரு இட்லிக்கு தொட்டுக்கொள்ள நல்ல சட்னி கிடைக்க வேண்டும், எவ்வளவுதான் ருசியான இட்லியாக இருந்தாலும் இந்த சட்னி என்பது ருசிக்கு ருசி சேர்க்க வேண்டும் என்பது முக்கியம். பொதுவாக எல்லா உணவகத்திலும் எழுதபடாத விதி என்பது தேங்காய் சட்னி, கார சட்னி மற்றும் சாம்பார், இதை வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். ஒரு இட்லியை ஒவ்வொரு விள்ளளுக்கு ஒரு சுவை என்று சாப்பிட வேண்டும் என்றால் இந்த சுப்பையா டிபன்ஸ் கடைக்கு வாருங்கள். தேங்காய் சட்னி, மல்லி சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி, கத்தரிக்காய் கொத்சு, சாம்பார் மற்றும் எண்ணை பொடி கொடுப்பதுதான் இங்கே ஸ்பெஷல்.
 
 
 
சட்னி என்பதை எல்லோரும் மிகவும் சிறிதாக நினைத்து விடுகின்றனர்..... தேங்காய் சட்னியில் தேங்காய் என்பதுடன் சிறிது இஞ்சி சேர்த்து இருந்தால் இருக்கும் அந்த காரம், மல்லி சட்னியில் நாசியை துளைக்கும் அந்த மணம், தக்காளி சட்னியில் கிடைக்கும் அந்த புளிப்பு, கார சட்னியில் கிடைக்கும் அந்த கண்ணை கவரும் வண்ணமும் ஒரு மிளகாய் தூக்கலாக இருக்கும் அந்த காரமும், நல்ல இளம் கத்திரிகாயை நல்லெண்ணையில் வதக்கி மசித்து செய்யப்பட்ட அந்த கொத்சு, சிறு சிறு வெங்காயமாக தேர்ந்தெடுத்து அதை மசியும் பதத்தில் வேக வைத்து பருப்புடன் செய்யப்பட்ட அந்த சாம்பார் மற்றும் நன்கு வறுக்கப்பட்ட கடலைபருப்பில் நற நறவென சிக்கும் பதத்தில் அரைக்கப்பட்ட இட்லி பொடியில் ஊற்றப்பட்ட நல்லெண்ணெய் உடன் கூடிய பொடி என்று இவ்வளவும் உங்களது இலையில் இருக்க இட்லி ஒரு ஓரமாக இருந்தால்.... நீங்கள் இட்லிக்கு சட்னியை தொட்டு கொள்ள வேண்டுமா, இல்லை சட்னிக்கு இட்லியை தொட்டுக்கொள்ள வேண்டுமா என்று குழப்பம் வருகிறதா இல்லையா ?!
 
எழாவது சட்னி (இட்லி பொடி) காணலையே என்று தேடினால்....நீயும் என் இனமே !!

ஒரு விள்ளல் இட்லி எடுத்து முதலில் நீங்கள் தொட போகும் சட்னி எது ? இதை முடிவு செய்யவே கொஞ்சம் குழம்பும் ! என்னதான் இட்லிக்கு நிறைய சட்னி வகை இருந்தாலும் எனக்கு பிடித்தது என்னவோ இந்த சின்ன வெங்காய சாம்பாரும், எண்ணை பொடியும்தான். சூடான இட்லியை பியித்து நீச்சல் தெரியாத ஒருவனை தண்ணீரில் திணற திணற முக்கி எடுப்பது போல அந்த சாம்பாரில் முக்கி எடுக்க இப்போது இட்லியின் வெள்ளை நிறம் போயே போச்சு..... அதில் அந்த சின்ன வெங்காயத்தை யானை மிதித்தது போல அந்த இட்லியை கொண்டு அழுத்தி, கொஞ்சம் வெங்காயம் மற்றும் சாம்பாரோடு அந்த இட்லியை வாயில் போட....... சுப்பையா சார், நீங்க ரசிகன் சார் என்று தோன்றுகிறது. அடுத்து ஒரு விள்ளல் எடுத்து இந்த எண்ணை பொடியில் தோய்த்து எடுக்க வேண்டும், இதில் முன்னர் சொல்லியது போல் எல்லாம் செய்யாமல் மேலாக தொட்டு எடுத்து, பின்னர் அடுத்த பக்கத்தில் இந்த பொடியில் இருந்து ஓடி வந்து இருக்கும் நல்லெண்ணெய்யை இட்லியை வைத்து உறிஞ்ச வேண்டும்...... ஒரு வாய் சாப்பிட அந்த காரமும், ருசியும் என்ன காம்பினேசன் என்று தோன்றும். இப்படியே ஒவ்வொரு வகை சட்னியையும் தொட்டு சாப்பிட அடுத்து ரெண்டு இட்லி என்று கண்டிப்பாக சொல்வீர்கள்..... பந்தயம் வைத்துக்கொள்ளலாமா ?!
 
தஞ்சாவூர் நண்பர் திரு.செந்தில் குமார் உடன்.....

அடுத்த முறை தஞ்சாவூர் பக்கம் போகும்போது கண்டிப்பாக இந்த கடையில் சாப்பிட போங்கள், ஒவ்வொரு விள்ளளிலும் உங்களது நாக்கு ஒரு பரதநாட்டியம் ஆடுவது நிச்சயம். சுமார் முப்பது வருடங்களாக தஞ்சாவூர் மக்களை இந்த சட்னியின் சுவையை கொண்டு கட்டி போட்டு இருக்கும் இந்த கடையில் எந்த சந்தேகமும் வேண்டாம்........ கண்டிப்பாக ருசியோ ருசிதான் !! 
 

கார்டு திருப்பி போட்டு இருக்கேன்....... :-)


Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, samas, best south indian food, idli, idly, chatni, best thottugai, seven types of chutney, 7 types of chutni, subbaiya tiffins, tanjore, thanjavur, best restaurant in tanjore
 

26 comments:

 1. வணக்கம்
  அண்ணா
  பார்த்தவுடன் காலைப்பொழுதில் பசி எடுத்து விட்டது எடுத்து சாப்பிட முடியாமல் உள்ளது... சுவையான உணவு பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன், தஞ்சாவூரில் உங்களுக்காகவே அந்த இட்லி காத்து கிடக்கிறது !

   Delete
 2. "இட்லி சுப்பன் ஹோட்டல்" என்று அந்த கடைக்கு பெயர் மாற்றம் செய்யலாம். நீங்களும் நம்மள மாதிரி இட்லி பண்டாரம் போல!

  ReplyDelete
  Replies
  1. இட்லி பிரியன் என்றும் சொல்லலாமே நம்பள்கி :-) உங்களது சங்கத்தில் உறுப்பினராவதில் மகிழ்கிறேன் !

   Delete
 3. இவ்வளவு சட்னிகளா...? இப்பவே கண்ணை கட்டுதே...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல்லில் இப்படி ஒரு ஹோட்டல் ஆரம்பித்து விடலாமா சார் ?!

   Delete
 4. உடனே, தஞ்சாவூர் சென்று சாப்பிடத்தோன்றுகிறது !.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி பாஸ்கரன் சார் !

   Delete
 5. சட்னி மட்டுமே சாப்பிடலாம் போல இருக்கே..

  ReplyDelete
  Replies
  1. அதைதானே நான் செய்ஞ்சேன் நண்பரே...... நமது எண்ண அலைகள் ஒத்து போகின்றன.

   Delete
 6. நானும் உங்கள் இனமே...... :-) என்ன ஒரு வர்ணனை அருமை....

  ReplyDelete
  Replies
  1. நீயும் என் இனமடா.... நன்றி பிரேம்குமார் !

   Delete
 7. உங்கள் வர்ணனை சட்னி சுவையை மிஞ்சி விட்டது

  ReplyDelete
  Replies
  1. நன்றி லோகநாதன், இங்கு சென்று சுவைத்து பாருங்கள் நான் சொன்னது கொஞ்சம்தான் என்று புரியும் !

   Delete
 8. லிட்டர் கணக்குல ஜொள்ளு விட வச்சுட்டிங்களே சுரேஷ்....

  ReplyDelete
  Replies
  1. அந்த ஜொள்ளு இந்த பதிவை பார்த்து மட்டும்தானே ?! நன்றி ஜெகதீஷ் !

   Delete
 9. முன்பு, அதாவது 70 களில் நீங்கள் சொல்லும் இடத்தில் 'சுப்பையா பிள்ளை பால்கடை' என்று இருந்தது. பித்தளை டம்ளர்களில் பனங்கல்கண்டு கலந்து தரப்படும் அந்த பால் அப்போது செம ஃபேமஸ். அவர்கள்தான் இந்தக் கடையையும் நடத்துகிறார்களா?

  அந்த வெங்காய சாம்பாரில் ஒரு ஸ்பூனர் நெய் விட்டு, இட்லியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அதுவும் ஒரு தனிச் சுவைதான்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, ஆஹா அந்த நெய் மறந்துவிட்டேனே... அடுத்த ட்ரிப் சீக்கிரமே போடணும் ஸ்ரீராம் !

   Delete
  2. கேள்விகளை சாய்ஸில் விட்டு விட்டீர்கள் போல!

   :)))))

   Delete
 10. சட்னி வகைகளை சிலாகித்த விதம் அருமை! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ், வேற எதுவும் சட்னி சேர்க்கலாமா :-)

   Delete
 11. அடுத்த தடவை தஞ்சைக்கு செல்லும் போது, நீங்கள் குறிப்பிட்ட,
  சுப்பையா டிபன்ஸ் சென்று வரலாம் என்று இருக்கிறேன். தகவலுக்கு நன்றி.
  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. நன்றி இளங்கோ, சுவைத்து பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிருங்களேன் !

   Delete
 12. போன பிறவியிலே நாட்டுக்கோட்டைசெட்டியாரா பொறந்திருப்பீங்கபோல...................

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராமநாதன், அப்போ அடுத்த பிறவியில் :-)

   Delete
 13. சட்னி எல்லாரும் வைத்து விட முடியாது .அதன் மூலப்பொருள் ,விகிதாச்சாரம் ,பதம் மிக முக்கியம் .சிறு கூட்டலும் ,கழித்தலும் சுவையையே மாற்றி விடும் .என்னைபொறுத்த வரையில் ஆண்களே சமையற்கலையில் சிறந்தவர்கள்.ஒரு சிறு மண்குடிசையில் கிடைக்கும் மீன் குழம்பு அல்லது கறிகுழம்பின் ருசி இந்த உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் கிடைக்காது .

  ReplyDelete