தியேட்டர்.... தமிழனின் சந்தோசம், துக்கம், கண்ணீர் எல்லாம் இங்கேதான். பொழுது போகவில்லை என்றால் எத்தனையோ இடங்கள், வழிகள் இருந்தாலும் படம் பார்ப்பதை தவம் போல் செய்வது தமிழனுக்கு மட்டுமே சாத்தியம் ! சிறு வயதில் இருந்து படம் பார்க்க தியேட்டர் போவேன், ஒரு ரூபாய் டிக்கெட்டில் இருந்து இன்றைய மல்டிப்ளெக்ஸ் வரை தியேட்டர் போய் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சென்னை ECR சாலையை கடக்கும்போது கண்ணில் படும் இந்த டிரைவ் இன் தியேட்டர், இங்கேதான் காருக்குள் உட்கார்ந்து படம் பார்க்கலாம் என்று சொல்லி கேட்க்கும்போது ஒரு நாள் கார் வாங்கணும் என்று மனதில் ஓங்கி சொல்லி கொள்வேன். இந்த முறை சென்னை சென்று இருந்தபோது கண்டிப்பாக இங்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன், எனக்குள் இருந்த நிறைய கற்பனைகளை உடைத்து எறிந்தது எனது சுகமான அனுபவங்கள்...... இனி படம் பார்க்க வேண்டும் என்றால் டிரைவ் இன் தான் என்று முடிவு செய்தேன் எனலாம் !!
திருவான்மியூரில் இருந்து ECR சாலையில் செல்லும்போது, இஞ்சம்பாக்கம் அருகில் ரோட்டின் அருகிலேயே இருக்கிறது இந்த தியேட்டர். பிராத்தனா என்னும் டிரைவ் இன் தியேட்டர் ஒன்றும், ஆராதனா என்னும் உள்ளே உட்கார்ந்து பார்க்கும் ஒன்றும் இங்கே இருக்கிறது. தியேட்டர் கேட் உள்ளே காரில் நுழையும்போதே மனது சிறு பிள்ளையாய் குதிக்கிறது. இடது பக்கம் திரும்பி செல்லுங்கள் என்று சொல்லி, காரை திருப்பும்போது நண்பர்களிடத்தில் காரின் உள்ளேயே உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும், சத்தம் போட கூடாது, மழை வந்தால் கண்ணாடியை ஏற்றி விட்டு கொள்ளலாம், வைப்பர் போட்டு படம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தேன். டிரைவ் இன் உள்ளே ஒருவருக்கு காரில் உட்கார்ந்து படம் பார்க்க 120 ரூபாயும், பைக்கில் வந்து படம் பார்க்க விரும்புவோருக்கு கேலரி என்று சேர் போட்டு வைத்து இருக்கிறார்கள் இங்கு ஒருவர்க்கு 60 ரூபாய் ஆகிறது. கார் நிறுத்த என்று 50 ரூபாய் !!
பணம் கொடுத்துவிட்டு காரை உள்ளே எடுத்து போக, அங்கு A,B,C,D,E..... என்று கார் நிறுத்த இடம் போட்டு, ஒவ்வொரு ரோவ்விர்க்கும் நம்பர் போட்டு இருந்தது. எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம் என்று சொல்லியதால், காரை திரைக்கு நேரே நிறுத்தினோம். திரையை பார்க்க வசதியாக சிறிது மேடாக வைத்து இருக்கின்றனர், இதனால் காரை முன்னே ஏற்றி நிறுத்த உள்ளே உட்கார்ந்தபடி பார்க்க வசதியாக இருக்கிறது. படம் ஆரம்பிக்கும் முன்னர் கொறிக்க ஏதாவது வாங்குவோம் என்று சென்றோம், அங்கு இருந்த சூடான வெஜிடபிள் கட்லெட் அமோகம் ! சிறிது நேரத்தில் ஒருவர் கொசு மருந்து புகையை எல்லா இடத்திலும் அடித்துக்கொண்டு இருந்தார். அங்கு இருந்து திரும்பி பார்க்க இப்போது திரையில் கொஞ்சம் வெளிச்சம் தெரிய..... படம் போட்டாச்சு டோய் என்று அவசர அவசரமாக வந்தோம், வழியில் காரில் இருந்து ஒரு குடும்பம் பாய், தலையணை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தது !!
நாங்கள் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே ஒவ்வொரு காரில் இருந்தும் பெட்ஷீட், பாய், தலையணை என்று ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தது. அதை காரின் முன்னாடி விரித்து முடித்து தலையணை போட்டு பார்க்க ஆரம்பித்தனர். இதுவரை டிரைவ் இன் தியேட்டர் என்றால் காரின் உள்ளே உட்கார்ந்துதான் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்த எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது, நாங்கள் இப்போது காரின் உள்ளே உட்கார்ந்து பார்க்க பிடிக்காமல் வெறும் தரையில் காரின் முன்னே உட்கார்ந்தோம். படம் தொடங்கி ஓட ஆரம்பித்தது, சில்லென்ற காற்று வீச அந்த இருளில் படுத்துக்கொண்டே வானத்தை பார்க்க அதோ அங்கே ஒரு நட்சத்திரம், அட ஒரு விமானம் மினுக் மினுக் என்று வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டு சென்றது, அன்று முழு நிலவு ஆனதால் அந்த வெளிச்சமும் நிலவும் ஒரு இரவின் வெண்மையை காட்டியது, அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரம் மினுக்க ஆரம்பிக்க அந்த பிரபஞ்சத்தில் ஆழ்ந்து பயணிக்க ஆரம்பிக்கிறோம்....... மூடிய தியேட்டரில் படம் பிடிக்கவில்லை என்றாலும் நாம் அந்த திரையை முறைக்க வேண்டி இருக்கும், ஆனால் இங்கு நட்சத்திர வானம், பிடிக்கவில்லை என்றால் எழுந்து காற்றாட நடப்பது, தூரத்தில் குழந்தைகள் விளையாடும் இடம், கொறிக்க எந்நேரமும் திறந்து இருந்த கடைகள் என்று எவ்வளவு ஆனந்தம் இருக்கிறது !
சில்லென்ற காற்று, படுத்துக்கொண்டே படம்...... |
படுத்துக்கொண்டே நிலவின் வெளிச்சத்தில் கார் மின்னுகிறது...... |
திரையில் காவிய தலைவன் ஓடிக்கொண்டு இருக்க, இங்கே ஒருவர் எங்களது காரின் அருகே வந்து "சார், சாப்பிட எதாவது வேண்டுமா, காருக்கே கொண்டு வந்து தருகிறேன்....." என்று சொல்ல அவரவர்க்கு பிடித்ததை சொல்ல, இதுவரை தியேட்டர்களில் பாப்கார்ன் மட்டுமே சாப்பிட்ட நமக்கு இங்கு விதம் விதமான உணவுகள் கிடைக்கிறது. சாப்பிடும்போது டிவி பார்த்துக்கொண்டே இருக்கும் நமக்கு இப்படி பெரிய திரையில் படம் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் என்றே எண்ணுகிறேன். ஆர்டர் செய்த சிறிது நேரத்தில் வந்து விட எல்லாம் சூடாக வேறு இருப்பதாலும், காசும் கொஞ்சமே அதிகம் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட, கொஞ்சம் படம் பார்க்க என்று இருப்பது ஒரு சுகமே !!
காரின் உள்ளே இருந்து படம் பார்த்தல்....... |
குடும்பத்துடன் ரிலாக்ஸ் ஆக கை கால்களை குறுக்கி கொள்ளாமல், ஏசி ஒற்றுக்கொள்ளவில்லை என்றெல்லாம் இல்லாமல், சுகமாக படம் பார்க்க கார் இருப்பவர்கள் இங்கே செல்லலாம். படம் பிடிக்கவில்லை என்றால் வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தை எண்ணிக்கொண்டு இயற்கையை ரசித்தால் உங்களுக்கு சுகமான நித்திரை கிடைக்கும். இது வரை மூடிய தியேட்டரில் படம் பார்த்த உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்...... வாழ்வில் சில சமயம் ஒரு மாறுதல் தேவை, படம் பார்க்கும் முறையிலும் கூட !!
Labels : Suresh, Kadalpayanangal, prathana, drive in theatre, theatre, different theatre, marakka mudiyaa payanam, memorable journey, watch a movie, movie watching with a difference.
ஆனந்தம்...
ReplyDeleteசிறுவயதில் கீற்றுக் கொட்டகையில் படம் பார்த்த ஞாபகம் வந்து இருக்குமே...!
ஆம் தனபாலன் சார், இது புது வகையான அனுபவம் !
Deleteசுகமான அனுபவம்தான். உணவுகளின் விலையும் 'சங்கீதா'க்களுடன் ஒப்பிட்டால் குறைவுதான்!
ReplyDelete:)))
ஆம் ஸ்ரீராம், நீங்கள் சென்று வந்தால் மகிழ்வீர்கள் !
Deleteநல்ல அனுபவம்தான்....இயல்பாக ரசிக்க முடிந்தது திறந்த திரையரங்கை உங்கள் எழுத்தில்.......
ReplyDeleteநன்றி பாண்டியராஜ், நீங்கள் என் எழுத்தை ரசித்தது கண்டு மகிழ்கிறேன் ! தங்கள் வரவுக்கும், கருத்திற்கும் நன்றி !
DeleteDTS நல்லா இருந்துச்சா ஜி?
ReplyDeleteDTS அப்படின்னா !! நான் எங்கங்க படத்தை பார்த்தேன் :-)
Deleteடூரிங் டாக்கீஸ் போல என்று சொல்லுங்கள்! இப்போது எங்காவது டூரிங்க் டாக்கீஸ் இருக்கிறதா? இருந்தால் சென்று பார்த்து அந்த அனுபவத்தை எழுதுங்களேன்! எங்க ஊர் பக்கம் எதுவும் இல்லை!
ReplyDeleteThanks for visiting my blog and your comments.... here is my blog about Touring Talkies which is still available today !
Deletehttp://www.kadalpayanangal.com/2014/10/blog-post_10.html
Super
ReplyDeleteநன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteடிரைவ் இன் படம் பார்த்ததைக் கூட அழகாய் எழுத முடியும்னு சொல்லுகிறது உங்கள் பதிவு. நானும் இந்த தியேட்டரில் குருவி படம் பார்த்தேன்... நூடுல்ஸ் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு , போர் அடிக்கும் போது தூங்கி விட்டு கடற்கரை காற்றில் அண்ணாக்களின் குடும்பத்துடன் உருண்டு படம் பார்த்தது நினைவில் வந்தது... அருமை...
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மேடம் ! உற்சாகம் தரும் வார்த்தைகள் என்னை இது போல் எழுத தூண்டுகிறது ! நீங்களும் இங்கு சென்று மகிழ்ந்தது கண்டு சந்தோசம் !
Deleteஎன்னையும் உங்களோடு படம் பார்க்க வைத்துவிட்டீர்கள்! அருமையான பதிவு.. அழகான வரிகள்..!
ReplyDeleteNICE INTERPREATION ... KEEP IT UP
ReplyDeleteஎன் குடும்பத்தினர் எல்லோருக்கும் மிக பிடித்த இடம் , புது படம் வந்தால் இங்கு வருவோம் ...........
ReplyDelete