Friday, February 27, 2015

உலக பயணம் - கொழும்பு கிரிக்கெட் ஸ்டேடியம் !!

வேர்ல்ட் கப் கிரிக்கெட் மேட்ச் நடக்க ஆரம்பித்து விட்டது, இந்த சமயத்தில் நானும் ரவுடிதான் என்று பதிவு போடவில்லை என்றால் எப்படி ?! கிரிக்கெட், சிறு வயதில் இருந்தே அதற்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகராறு....... தெருவில் கிரிக்கெட் விளையாடும் நண்பர்களிடத்தில் நானும் என்று சென்றால் நீதான் இந்த டீமின் பன்னிரெண்டாவது ஆள் என்று சொல்லி சேர்த்து கொள்வதும், கடைசி வரை எனது முறை ஏன் வரவில்லை என்று காதிருப்பதுமே பொழைப்பா போச்சு. பின்னர் கொஞ்சம் தெளிந்த பிறகு கடைசி ஒரு ஓவர் மட்டுமே கொடுத்து பந்தை உருட்டி விடுவார்கள் !! அப்படி கிரிக்கெட் விளையாடிய நான் இந்த முறை கொழும்பு சென்றபோது அந்த புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானத்தை பார்க்க முடியுமா என்று முயற்சித்தேன்....... முடிவில் பார்த்தேன் !!





பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம் என்னும் பெயருடைய இந்த இடத்திற்கு செல்ல, அங்கு மிகுந்த பாதுகாப்பு. 1986ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த விளையாட்டு மைதானத்தில் சுமார் 35,000 பேர் வரை உட்காரலாம். கிரிக்கெட் என்பதை நான் டிவியிலேயே பார்க்க மாட்டேன், வெகு சில நேரங்களில் மட்டும் விளையாடுவதை பார்ப்பேன். இப்போது பரந்து விரிந்த கிரிக்கெட் மைதானத்தின் முன்பு உட்கார்ந்து இருப்பது என்பது ஒரு அறுபுதமான அனுபவம்தான் !



கலர் கலரான இருக்கைகள், உயர்ந்த விளக்கு தூண்கள், முன்னே இருக்கும் பச்சை புல் போர்த்திய மைதானம், சிலு சிலு காற்று என்று சந்தோசமாக இருந்தது. இந்த மைதானத்தில் இந்தியா இலங்கை மேட்ச் நடக்கின்றது என்று கற்பனை செய்துக்கொண்டு பார்த்தால், அந்த இடத்தில் விளக்குகள், காதை பிளக்கும் ஓசை, கொண்டாட்டங்கள், டிவி என்று கண் முன்னே அந்த காட்சி விரிகிறது ! இந்த உலக கோப்பை நடக்கும் சமயத்தில் இந்தியா விளையாடும் மேட்ச் மட்டும் பார்க்கின்றேன், அதை இங்கே பொருத்தி பார்க்க நான் உட்கார்ந்த இடத்தில் இருந்தே குதிக்கிறேன் !



ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல இருந்தாலும், அடுத்த முறை ஒரு மைதானத்தில் இந்தியா விளையாடும் மேட்ச் பார்க்க வேண்டும். அதுவும் இலங்கை நண்பர்களுடன், எனது பதிவை விரும்பும் நண்பர்களுடன் இந்த இடத்தில் மேட்ச் பார்க்க வேண்டும்...... அப்போது ஒரு வித்யாசமான சத்தம் செய்துகொண்டு அதை ரசிக்க அந்த பதிவை நீங்கள் படிக்க வேண்டும் :-)



Labels : Suresh, kadalpayanangal, Colombo, cricket stadium, world cup, cricket, srilanka, sight seeing, stadium

Thursday, February 26, 2015

அறுசுவை - ஜன்னல் கடை, சென்னை

சென்னையில் உணவகங்கள் என்று சொன்னால் அதற்க்கு பஞ்சமே இல்லை, கடையின் பெயரை விதவிதமான விளக்குகள் கொண்டு கவர்வது ஒரு வகை என்றால், பல கடைகளுக்கு பெயரே கிடையாது. வாடிக்கையாளர்கள் ஒரு பெயர் வைத்து அழைத்து அது காலப்போக்கில் நிலைத்து நின்று விடுவது உண்டு, அப்படி ஒரு கடைதான் "ஜன்னல் கடை". ஒவ்வொரு முறை சென்னை செல்லும்போது வித்யாசமான உணவு வகைகளை தேடிபோவது உண்டு, சில நேரங்களில் உணவு வகை ருசியாக இருக்கும், சில நேரங்களில் அனுபவம் வித்தியாசமாக இருக்கும் இதில் இந்த கடை இரண்டாவது வகை !


உணவகம் என்றால் ஒன்று டேபிள் சேர் எல்லாம் போட்டு வைத்து இருப்பார்கள், இல்லையென்றால் தள்ளுவண்டியில் வைத்திருப்பார்கள் நாம் நின்று கொண்டு சாப்பிடவேண்டும். மயிலாப்பூரின் புகழ் பெற்ற கோவிலான கற்பகாம்பாள் கோவில் சென்று அதன் இடதுபுறம் செல்லும் சந்தில் சென்றால் சிறிது தூரத்தில் ஒரு வீட்டின் ஜன்னலில் ஒரு சிறு கூட்டம் தெரியும், ஒரு வேளை எதாவது பிரச்சனையோ என்று எட்டி பார்த்தல் அந்த கூட்டம் சப்பு கொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறதே என்று நினைத்தால்......... அதுதான் ஜன்னல் கடை !!



இதை தேடி செல்வதற்கு சிரமம் எதுவும் இல்லை, யாரிடம் கேட்டாலும் சொல்கிறார்கள். காலை சுமார் ஏழு மணி அளவில் இங்கு சென்று என்ன இருக்கிறது என்று எட்டி பார்க்க இட்லி, வடை, பூரி, பொங்கல் என்று இருந்தது, அன்றைய ஸ்பெஷல் என்பது வெஜிடேபிள் உப்புமா !! முதலில் இந்த கடையை ஏற இறங்க பார்க்கிறோம், ஒரு பழைய காலத்து வீடு, அந்த வீட்டின் கதையை சொல்லும் ஒரு சிறிய ஜன்னலின் பின்னே சுவையான உணவுகள் தயாராகி கொண்டும், இருந்தும் கொண்டு இருக்கின்றன. மயிலை என்பதால் அந்த வீடும், உணவின் சுவையும் ஐயர் வீட்டு சுவை என்பது மனதில் சட்டென்று தெரிந்து விடுகிறது. ரெண்டு இட்லி, ஒரு வடை என்னும் ஒரு சம்பரதாயமான ஒன்றை கேட்டு வாங்கி கொண்டு நான் நகர, எனது நண்பன் ஜெகதீசன் அன்றைய ஸ்பெஷல் ஆன வெஜிடேபிள் உப்புமா வாங்கி கொண்டு நகர்ந்தான் !!



ஒரு சிறிய பிளாஸ்டிக் தட்டில், பாலிதீன் பேப்பர் போட்டு இட்லி வடை இருக்க, அதில் தேங்காய் போடாத சட்டினிகளும், கொஞ்சம் பருப்பு போடாத சாம்பாரும் இருந்தது. இந்த உணவின் சுவையை பற்றி சொல்வதென்றால் சாப்பிடலாம் என்று மட்டுமே சொல்ல முடிந்தது ! நமக்குதான் இப்படி, நண்பனுக்கு எப்படியோ என்று பார்த்தால் அவன் சப்பு கொட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தான். கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வாயில் வைக்க, மஞ்சள் போட்டு ரவையை பதமாக வறுத்து, அதில் பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், தக்காளி எல்லாம் போட்டு உப்பும், காரமும் சேர்ந்த அருமையான உப்புமா அதன் உடன் வடை என்று அமோகமாக இருந்தது. ஒரு நடை கோவிலுக்கு வரும் நீங்கள், கண்டிப்பாக ஒரு வித்யாசமான அனுபவத்திற்க்காக இங்கே சாப்பிடலாம்.







பஞ்ச் லைன் :

சுவை - உணவின் சுவை பற்றி அவ்வளவு சிலாகிக்க முடியாது என்றாலும், அந்த அனுபவம் புதுமை ! கண்டிப்பாக மோசமான உணவு இல்லை :-​) காலை, மதியம், மாலை என்று எல்லா வேளையும் உணவு உண்டு.

அமைப்பு - ஒரு சிறிய ஜன்னல், அதில்தான் வாங்கி சாப்பிட வேண்டும். வாழ்க்கையில் இப்படி ஒரு முறையில் சாப்பிட்டு பாருங்களேன் ! மிக சிறிய ஜன்னல் என்பதால், அதை சுற்றி கூட்டம் அலை மோதும்.

பணம் - விலை கம்மிதான் !!
சர்வீஸ் - அடிதடி, தள்ளு முள்ளு இருந்தாலும் நல்ல கவனிப்பு !

அட்ரஸ் : 


ஜன்னல் கடையின் எதிரே இருக்கும் கடை, அட்ரஸ் பார்த்துக்கொள்ளுங்கள் !



Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, mylapore, Chennai, kapaleeshwarar temple, jannal kadai, window hotel, window restaurant, different concept, near beach, near marina beach

Monday, February 16, 2015

அறுசுவை - "டாஸ்மாக்" டீ !!

நான் எழுதும் பதிவுகளில் டீ குடிப்பது பற்றி அதிகம் எழுதுவது உண்டு, அதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது..... விரைவில் சொல்கிறேன் !  பொதுவாக மாலை நேரங்களில் நமது தெருவில் நடந்தால் டீ கடையில் நுரை பொங்க டீ சாப்பிட்டு அப்படியே அங்கே போடப்படும் வாழைக்காய் பஜ்ஜியில் தேங்காய் சட்னி போட்டு தோய்த்து சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவது என்பது ஜனநாயக தர்மம்..... அது போலவே இந்த சூரிய உதயமும், கடற்கரையில் காலை எட்டிப்போட்டு நடை போடும்போது அந்த சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேகங்களில் வர்ணஜாலங்களை இறக்கி அது மறையும் அழகில் மயங்கி கொண்டே சரக்கு அடிப்பது என்பது தமிழ் குடிமகனின் சந்தோசங்களில் ஒன்று !! நான் மேலே சொன்னவற்றில் இரண்டையுமே சேர்த்து செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது........ சந்தோசம், டபுள் சந்தோசம் இல்லையா ! சூரியன் மறையும் இடம் தேடி எங்கு செல்லலாம் என்று யோசித்து யோசித்து, கடைசியில் நின்றது சிங்கப்பூரில் !!


டீ..... சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் !
கண்ணாடிக்கு வெளியே சிங்கப்பூர்..... எழுபதாவது மாடியில் இருந்து !

பொதுவாகவே டீ சாப்பிடும்போது அந்த டீக்கு சர்க்கரையை அதிகம் போட்டு விடுவார்கள் இந்த டீ கடைகாரர்கள், இதனால் அந்த டீயில் கிடைக்கும் அந்த சிறிய கசப்பான சுவை கிடைக்காமல் போகிறது, சில சமயங்களில் அதில் ஐஸ் போட்டு ஐஸ் டீ குடிப்பேன். இப்படியெல்லாம் டீ சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது சரக்கு மிக்ஸ் செய்து அடிக்கிறியா என்று நண்பன் ஒருவன் கேட்க..... அதானே, நாம் செய்வது இருக்கட்டும், உலகில் அப்படி ஒரு டீ இருக்கிறதா என்று தேடி பார்க்க..... இருந்தது, "சரக்கு" டீ !! இதன் பெயர் லாங் ஐலாண்ட் ஐஸ் டீ !!

வாங்க ஜில்லுனு ஒரு டீ சாப்பிடலாம் !

லாங் ஐலாண்ட் ஐஸ் டீ என்பது காக்டெயில் வகை ! பெயரில் என்னமோ டீ இருந்தாலும், இதில் கலப்பது எல்லாம் சுத்தமான சரக்கு :-) வோட்கா, ஜின், டக்கீலா, ரம் எல்லாம் கலக்கும்போது டீ போன்ற கலர் வருவதாலும், அதில் ஐஸ் டீ போன்ற சுவை கிடைப்பதாலும் இந்த பெயர். சிங்கப்பூரில் புகழ் பெற்ற ஹோட்டல் என்பதில் ஒன்று ஸ்டாம்போர்ட், அதன் எழுபதாவது மாடியில் ஒரு பார் இருக்கிறது. அதன் கண்ணாடியை தாண்டி தெரியும் சிங்கபூரை ரசித்தவாறு, சூரியன் மறையும் காட்சியை ரசிக்க வேண்டும் என்பது பிளான், அதன் நடுவே இந்த டீ குடிக்க வேண்டும்...... கேட்க்கும்போதே கிளுகிளுப்பாக இல்லை !!
இதுதான் பாஸ் டீ கடை !


உள்ளே சென்று உட்கார்ந்தவுடன், அந்த அறையின் குளுமையில் மனம் நிறைந்தது. பின்னர் ஒரு "டீ" சொல்லிவிட்டு, கொஞ்சம் கொறிக்கவும் சொன்னோம். இப்போது சிங்கப்பூர் அந்த மாலை நேரத்தில் விழுந்து கொண்டு இருந்தது. சூரியன் தினமும் மறைந்தாலும், நாம் கட்டிடங்களுக்கு இடையில் வாழ்வதால் அதன் அழகை ரசிக்க முடிவதில்லை, கொஞ்சம் கவனித்து பார்த்தால் அது மஞ்சளில் ஆரம்பித்து, ஆரஞ்சு நிறமாகி, பின்னர் அது மேகங்களுக்கும் அந்த கலரை கடன் கொடுத்து, மேலே எழுந்த ஒரு பந்து மெதுவாக கீழே வீழ்வது போல மெதுவாக மிகவும் மெதுவாக விழுவது என்பது மிகவும் ரசிக்க வேண்டிய ஒன்று. அதிலும், ஒரு மலையிலோ அல்லது உயரமான கட்டிடத்தில் இருந்து பார்க்கும்போது நாம் காலையில் பார்த்த அந்த நெருக்கடியான சாலைகள் மறைந்து கட்டிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டு சேலையை போர்த்துவது போல விளக்குகள் மின்னும் அழகு என்பது இரவுக்கே உரித்தானது..... கண்ணுக்கு கிடைக்கும் விருந்துடன், இந்த இனிமையான சுவையான ஐஸ் டீ ! நான் மேலே சொன்னதை படமாக பாருங்கள்...... சிங்கப்பூரின் அழகு உங்களுக்கே புரியும் !!
சூரியன் மறைய தயார் ஆகிறது......


கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறுது மேகங்கள்.....

கட்டிடங்கள் அந்த சூரியனின் வெளிச்சத்தை வாங்கிவிட்டன......

சூரியன் மறைய, கட்டிடங்கள் பட்டு புடவை கட்டி தகதகக்க.....

அந்த இருளிலும் சூரியன் தெரிகிறது.... வீதிகளிலும், கட்டிடங்களிலும் !
இந்த ஐஸ் டீ ஒரு வாய் எடுத்து வைக்கும்போது சாதாரண ஐஸ் டீ சுவையை கொடுத்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட அந்த போதை தெரியும். ஐஸ் அந்த சிறிய தம்ப்ளரில் நடனமாட அந்த எழுபதாவது மாடியில் நேரம் செல்ல செல்ல தலை சுற்றும்போது அது உயரத்தை நினைத்து மட்டும் இல்லை என்று தெரியும்....... அப்போதுதான் வீட்டில் இருந்து ஒரு போன், "எங்க இருக்கீங்க"........ "தீ சாப்பிதறேன் செல்லம்"...... "வாயெல்லாம் குளறுது, "உண்மையாவா", "அட நிஜமாதான் சொல்றேன், டீதான் சாப்பிடறேன், சத்தியமா"........ பாஸ், நீங்களே சொல்லுங்க நாம டீதானே சாப்பிடறோம் !!


Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, tea, long island ice tea, cocktail tea, tea with a difference, vodka tea, rum tea, tequila tea, super tea, memorable tea, Singapore tea, tea at top of the building, tea at top

Friday, February 13, 2015

ஊர் ஸ்பெஷல் - ஓசூர் ரோஜா (பகுதி - 2) !!

சென்ற வாரத்தில் ஓசூர் ரோஜா (பகுதி - 1)  படித்து விட்டு நிறைய பேர் ஆச்சர்யபட்டார்கள், இந்த பகுதியில் இன்னும் காண்போமா ?! ஊரை பற்றியும், ரோஜாவின் வகைகள் பற்றியும் பார்த்தாகிவிட்டது..... இந்த பகுதியில் இன்னும் சில ஆச்சர்யமான தகவல்களை பார்க்கலாமே ! ஓசூர் பெங்களுரு பக்கத்தில் இருக்கிறது என்று இருந்தாலும் ரோஜாவை பார்ப்பதற்கு மட்டுமே சுமார் பத்து முறைக்கு மேல் அலைந்தேன் என்று சொல்லலாம். ஓசூர் சென்று ரோஜா தோட்டம் என்று கேட்டால் ஊருக்கு வெளியே இருக்கும் என்பார்கள், நானும் காரை எடுத்துக்கொண்டு ரோஜா தோட்டம் தென்படுகிறதா என்று சென்று வருவேன், ஒரு முறை ராயக்கோட்டை செல்லும் வழியில் ஒரு ஊரில் ரோஜா தோட்டம் இருக்கிறது என்று சென்றேன், அதில் மலர்ந்த சிறிய ரக ரோஜாவை பார்த்தேன், அதை பட்டன் ரோஜா என்றார்கள்....... அவ்வளவு பெரிய ரோஜா தோட்டத்தில் நின்று படம் எடுத்துக்கொண்டாலும் படத்தில் காண்பிப்பது போல மலர்ந்தும் மலராத ரோஜா தோட்டம் எங்கு இருக்கும் என்று தேடிக்கொண்டு இருந்தபோது........ அட, எக்ஸ்போர்ட் ரோஜாவா அது தேன்கனிகோட்டை பக்கம் இருக்கும் என்றனர்.





 எக்ஸ்போர்ட் ரோஜா என்பது மலர்ந்தும் மலராதது போல, சிகப்பாகவும் பல வண்ணங்களிலும் மனதை மயக்குவது போல இருப்பது. தேடி தேடி சென்றாலும் கிடைக்கவில்லை, அதிகாலையில்தான் ரோஜாவை பறிப்பார்கள் என்று மூன்று மணிக்கு எழுந்து அந்த பகுதியில் அலைந்தேன் !! இப்படி அலைந்து திரிந்து கொண்டு இருந்ததால் அந்த ஏரியாவில் கொஞ்சம் அறிந்த முகம் ஆகி, ஒருவர் என்ன வேண்டும் என்று கேட்க, ரோஜா தோட்டம் பார்க்கணும் என்றவுடன் அதோ தெரியுதே பசுமை குடில் அங்கே போங்க என்றார்..... இப்போது புரிந்தது ஏன் நான் ரோஜாவை பார்க்க முடியவில்லை என்று ! இந்த பயணத்தில் லட்சக்கணக்கான ரோஜாவின் மத்தியில் நின்றது, ஒரு ரோஜா மலர்வதை சிறிதாக பார்த்தது, ரோஜா பறிப்பவர்களுடன் பறித்து கையில் முள் குத்திக்கொண்டது, ரோஜாவை மார்க்கெட் அனுப்பும் முறை, ரோஜா சாகுபடி, ரோஜா பதுக்கல்கள் (விலை ஏற்றதிர்க்காக), ரோஜா பதியன் செய்யும் முறை என்று தெரிந்துக்கொண்டது ஏராளம்........ ஒவ்வொன்றும் இந்த காதலர் தினத்திற்கு அர்ப்பணம் !! ரோஜா தோட்டம் பார்க்கவேண்டும் என்றால் ஓசூர் - மதிகேரே ரோட்டில் நிறைய பார்க்கலாம், தளி, பேரிகை, கேளமங்கலம் பகுதிகளிலும் காணலாம் !

 

பாதுகாப்பான சூழ்நிலையில் பயிர்களை வளர்ப்பதற்காக உப்பிப்பெருத்த உள்ளுறைச் சட்டங்களின் மேல் ஒளிபுகும் இயல்புள்ள பொருளை மூடாக்காகப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கட்டமைப்புகளே பசுமைக்கூடங்களாகும்.  வருடம் முழுவதும் அல்லது தேவைக்கேற்ற பயிர் உற்பத்திக்கு வித்திடும் ஏதுவான நுட்ப காலநிலையினை உருவாக்குவதற்கே பசுமைக்கூடம் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் பயிர் சாகுபடி செய்யும் நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.  இத்தொழில்நுட்பமானது வெளிப்பரப்பில் உற்பத்திக்கு ஏதுவற்ற ஆபரணச் செடிகளின் பருவம் மாறிய உற்பத்திக்கும் குளிர்ப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் அதிக மதிப்புடைய உணவுப் பயிர்களின் உற்பத்தியிலும் பங்களிக்கின்றது.  முதன்மையாக சுற்றுப்புறத்திற்கு தேவையான வெப்பத்தை அளித்து கடுங்குளிர்ச்சி நிலையானது தவிர்க்கப்படுகின்றது.  மேலும் வெப்பம், வெளிச்சம், கரியமிலவாயு அளவு, காற்றின் ஈரப்பதம், நீர்த் தேவை, பயிர் சத்துக்களின் தேவை மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு போன்றவையும் கட்டுப் படுத்தப் படுகின்றது.  இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..... பசுமை குடில் !  

ரோஜா சாகுபடி அல்லது ரோஜா வளர்ப்பு பற்றி இங்கு சிறிது கூறியே ஆக வேண்டும், அழகு ரோஜாவை கைகளில் ஏந்தும் நாம் கண்டிப்பாக சில விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லதுதானே !! ரோஜா செடி பயிர் செய்ய நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது குறுமண் நிலம் ஏற்றது. தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதியில் பயிரிடலாம். ரோஜாவை விதை கொண்டு வளர வைக்க முடியாது,  வேர்பிடித்த வெட்டு துண்டுகள் மற்றும் ஒட்டும் கட்டிய செடிகள் மூலமே இன பெருக்கம் செய்ய முடியும். பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் முன்னரே, 45 செ.மீ நீள, அகல, ஆழம் உள்ள குழிகளை 2.0 x 1.0 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஆறவிடவேண்டும். நடுவதற்கு முன்னர் குழி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரம், 1.3 சதம் லிண்டேன் மருந்து 20 கிராம் மற்றும் மேல்மண் இடவேண்டும். லிண்டேன் மற்றும் இடுவதால் கரையான் மற்றும் எறும்புகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பிறகு வேர்பிடித்த வெட்டுத் துண்டுகளைக் குழிகளின் மத்தியில் மழைக்காலங்களில் நடவேண்டும். மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..... ரோஜா பயிர் சாகுபடி !

ரோஸ் பதியன் முறைகள் !!


ரோஜா சாகுபடி செய்ய இன்று சொட்டு நீர் பாசன முறையே பயன்படுகிறது, அதை பற்றியும் சிறிது தெரிந்து கொள்வோமே. சொட்டு நீர்ப் பாசனம் அல்லது நுண்ணீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது முதன்மை குழாய், துணைக் குழாய்கள், மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது, பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும். ஓவ்வொரு விடுகுழாய் அல்லது உமிழி மற்றும் புழைவாய், பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை, பயிர்களின் வேர்ப் பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது. மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....... சொட்டு நீர் பாசனம் ! 



ரோஜா செடி என்பது வளரவும், புது பூ வர சுமார் மூன்று மாதங்கள் ஆகும்..... பின்னர் சுமார் நான்கு வருடங்கள் வரை செடி இருக்கும். செடி வளரும்போதே அதை கட் செய்ய செய்ய கிளைகள் அதிகம் ஆகும். இந்த எக்ஸ்போர்ட் வகை செடிகள் பறிக்கும்போது ரோஜாவின் தண்டு பகுதி சுமார் ஒன்றரை அடி இருக்குமாறு பார்த்துக்கொள்கின்றனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ரோஜாவை பறிக்கின்றனர். ஒரு மொட்டு விட்ட உடன் மூன்றாவது நாளில் ஒரு சிறிய பிளாஸ்டிக் குல்லா போன்று போடுகின்றனர் (நினைத்து பாருங்கள், தினமும் ஆயிரக்கணக்கில் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் !), இது ரோஸ் மொட்டு நீண்டு வளர உதவும், இல்லையென்றால் பூ குண்டாக மலரும், அது மட்டும் இல்லாமல் ரோஜா முழுவதும் பூப்பதை தடுக்கிறது..... மார்க்கெட்டில் மலர்ந்த பூவுக்கு மவுசு இல்லை ! ஒரு ரோஜா பூ மலர்வதை பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்பட ரோஜாவை பார்த்துக்கொண்டே வந்தவர், இந்த பூ சிறிதாக மலர போகிறது என்றார்..... சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து காத்திருந்து அந்த பூ மலர்வதை கண்டேன், உண்மையிலேயே ஒரு ரோஜா மலர்வதை காண்பது அற்புதமே !!








ரோஜா மலரும் போது.........
 ரோஜாவை பறித்தவுடன் ஒரு பக்கெட் தண்ணீரில் போடுகின்றனர், இது அது வாடுவதை தடுக்கிறது. ரோஜாவை காலை பத்து மணி முதல் 12 மணி வரை செய்கின்றனர், பின்னர் அதை கொண்டு சென்று ஒரு மெசினில் காம்பு பகுதியை விட அது முள்ளையும், இலையையும் எடுக்கின்றது. பின்னர் அதை தரம் வாரியாக பிரித்து, 20 ரோஜா கொண்ட ஒரு கட்டாக மாற்றுகின்றனர். ரோஜா டிமாண்டு என்பது வருடம் முழுவதும் இருப்பதால் விலை அவ்வளவாக மாறுவதில்லை, ஆனாலும் கல்யாண சீசன் மற்றும் காதலர் தினத்தில் ரோஜாவை குளிர் பதன கிடங்கில் பதுக்கி வைத்து சாதாரண நாளில் இரண்டு ரூபாயில் இருந்து நான்கு ரூபாய்க்கு விற்கும் ஒரு ரோஜாவை, அன்று பதினைந்து ரூபாய் வரை விற்க்கின்றனர் !! 


என்னது இதெல்லாம் குப்பையா....... ரோஜா சார், ரோஜா !!

குளிர் பதன கிடங்கின் உள்ளே ரோஜா தூங்கும் காட்சி !!

இப்படிதான் ரோஜாவை பேக் செய்கின்றனர், பின்னாடி ரோஜா இலை எடுக்கும் மெசின் !!
ரோஜா தோட்டம் தேடி புறப்பட்ட இந்த பயணம் பத்து முறை தேடி சலித்து இருந்தாலும், முடிவில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை எனலாம். காதலர் தின பதிவாக இந்த பதிவு உங்களை மகிழ்வித்து இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த முறை இங்கு சென்று வாருங்கள்....... ரோஜா எவ்வளவு அழகு என்பது புரியும் !! ரோஜா அக்தர் செய்யும் முறை, ரோஜாவின் மருத்துவ குணம், ரோஜா பூ கொண்டு செய்யப்படும் அலங்கார முறை, ரோஜா மாலை கட்டுதல், கருப்பு அல்லது ப்ளூ ரோஜா செய்யும் முறை என்று நான் அறிந்து கொண்டதையும், அதை கண்டும் செய்தும் மகிழ்ந்ததையும் சொல்ல ஆரம்பித்தால் பதிவுகள் நீண்டு கொண்டே செல்லும் என்பதால்........... ரோஜாவுடன் வணக்கங்கள் !!

ஒரு செடியில் எத்தனை ரோஜா சொல்லுங்க, அப்போ அங்க இருந்த லட்சம் செடிக்கு ?!

காதலர் தினத்தில், ரோஜா தோட்டத்தில்......... உங்கள் கடல் பயணங்கள் !!

காதலர் தினத்திற்கு...... காதலுடன்........ ரோஜா போன்ற சிரிப்புடன் !!
Labels : Suresh, Kadalpayanangal, Rose, hosur, krishnagiri, rayakottai, thali, kelamangalam, berigai hosur is famous for, rose export, rose farm, rose essence, color of rose, meaning for rose color, types of rose, roses, valentine day, feb 14, 14 feb, kadhalar dhinam, lovers day, love, red rose, bouquet of rose

Thursday, February 5, 2015

சிறுபிள்ளையாவோம் - குச்சி அப்பளம் !!

சிறு வயதில் அப்பளம் என்றாலே ஒரு தனி சந்தோசம்தான், கறுக் மொறுக் என்று கடித்து தின்றுக்கொண்டே இருக்கலாம், அதிலும் கடைகளில் கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கும் அந்த குச்சி அப்பளம் நினைவில் இருக்கிறதா ?! கடைக்கு சென்றால் ஐந்து பைசா, பத்து பைசாவிற்கு ஒரு பண்டம் மட்டும் கிடைத்தால் இன்னொரு கைக்கு என்ன செய்வது என்று இரண்டு கைக்கும் ஒன்று என்று கிடைக்கும் பொருளாய் வாங்குவோம், அதில் இந்த அப்பளம் என்பது மட்டும் ஜாஸ்தியாகவே கிடைக்கும் ! இந்த முறை கிராமத்திற்கு குலசாமி கும்பிட என்று சென்று இருந்தபோது ஒரு கடையில் இந்த அப்பளம் விற்று கொண்டு இருந்தது..... யாருக்கு குச்சி அப்பளம் வேண்டுமோ அவர்கள் கையை தூக்குங்கள் என்று கேட்டபோது பொடிசுகள் எல்லாம் சாக்லேட், பிரிட்டானியா பிஸ்கட், பெப்சி என்று கேட்டு வாங்கி குடிக்க நான் மட்டுமே கையை தூக்கி இருந்ததை காணமுடிந்தது....... அட நமக்கு என்ன, ஒரு ஐஞ்சு அப்பளம் கொடுங்க என்றேன், ஒரு பாக்கெட்டில் பத்து இருக்கும் என்றனர், அட நான் கேட்டது அஞ்சு பாக்கெட் என்றேன் !!



இந்த குச்சி அப்பளத்தை வாங்கியவுடன் ஒரு பவுன் மோதிரத்தை கைகளில் போடுவதுபோல் கவனமாக ஒவ்வொரு விரலிலும் மாட்டிக்கொண்டு அதை மெதுவாக கடித்து தின்பது என்பது என்ன சுகம் ! அப்பளம் தின்பதே ஒரு வகையான கலை எனலாமா, அதுவும் இந்த குச்சி அப்பளத்தை உடைத்து தின்பது என்பது மிகவும் சந்தோசமான மற்றும் சோகமான விஷயம். முதலில் அப்பளத்தை வாயில் வைத்துக்கொண்டு எச்சிலால் கொஞ்சம் கொஞ்சமாக நனைப்போம், அது ஒரு கட்டத்தில் ஊறி போய் உடைந்து வாயில் உதிர அதை கொஞ்சமாக சுவைப்பது என்பது சுகமோ சுகம், ஆனாலும் அது உடைந்துவிட்டதே என்ற வருத்ததுடன் அல்லவா சுவைப்போம் !







சிகரட் பிடிப்பவர்களை பார்த்து பார்த்து இந்த குச்சி அப்பளத்தை அவர்களை போலவே வாயில் வைத்துக்கொள்வது என்பது ஒரு பெரியமனுஷத்தனம் இல்லையா ! சில நேரங்களில் வாய் முழுவதும் அந்த அப்பளத்தை வைத்துக்கொண்டு ஓடுவோம், பின்னர் ஒவ்வொன்றாக தின்று தின்று காலி செய்வது மட்டுமே வேலை. சிறு வயதில் பத்து காசுக்கு ரெண்டு குச்சி அப்பளம் கிடைக்கும், நண்பன் ஒருவன் அதே பத்து காசுக்கு ஒரு தேன் மிட்டாய் சாப்பிட்டால் அந்த அப்பளத்தை மெதுவாக சாப்பிட்டு வெறுப்பேற்றுவது நினைவுக்கு வருகிறது !



இன்றைய நாளில் இது கடைகளில் தொங்கவிடப்பட்டு இருந்தாலும் சிப்ஸ், பிஸ்கட், கேக், பெப்சி என்று மட்டுமே குழந்தைகள் உண்கிறார்கள் என்பதை காண முடிந்தது, வெகு அரிதாக குழந்தைகள் இதை சுவைக்கிறார்கள். எத்தனை விதமான தின்பண்டங்கள் நாம் சுவைத்து இருந்தாலும் இந்த அப்பளம் எப்படி நீளமாக செய்யப்படுகிறது என்றைய அந்த ஆச்சர்யம் இன்றும் அதை பார்க்கும்போது ஏற்படுகிறதா இல்லையா ?! மேலே படத்தில் இருக்கும் எல்லோருமே வெவ்வேறு  கம்பெனியில் மேனேஜர் ஆக இருப்பவர்கள்தான் என்றாலும் அந்த அப்பளத்தை நாங்கள் கையில் எடுக்க மீண்டும் சிறுபிள்ளையானோம் !!

 Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, Childhood memories, Childhood, sweet memories, do you remember this, kuchi appalam, neela appalam, childhood snacks, 1980 snacks, appalam