Friday, February 13, 2015

ஊர் ஸ்பெஷல் - ஓசூர் ரோஜா (பகுதி - 2) !!

சென்ற வாரத்தில் ஓசூர் ரோஜா (பகுதி - 1)  படித்து விட்டு நிறைய பேர் ஆச்சர்யபட்டார்கள், இந்த பகுதியில் இன்னும் காண்போமா ?! ஊரை பற்றியும், ரோஜாவின் வகைகள் பற்றியும் பார்த்தாகிவிட்டது..... இந்த பகுதியில் இன்னும் சில ஆச்சர்யமான தகவல்களை பார்க்கலாமே ! ஓசூர் பெங்களுரு பக்கத்தில் இருக்கிறது என்று இருந்தாலும் ரோஜாவை பார்ப்பதற்கு மட்டுமே சுமார் பத்து முறைக்கு மேல் அலைந்தேன் என்று சொல்லலாம். ஓசூர் சென்று ரோஜா தோட்டம் என்று கேட்டால் ஊருக்கு வெளியே இருக்கும் என்பார்கள், நானும் காரை எடுத்துக்கொண்டு ரோஜா தோட்டம் தென்படுகிறதா என்று சென்று வருவேன், ஒரு முறை ராயக்கோட்டை செல்லும் வழியில் ஒரு ஊரில் ரோஜா தோட்டம் இருக்கிறது என்று சென்றேன், அதில் மலர்ந்த சிறிய ரக ரோஜாவை பார்த்தேன், அதை பட்டன் ரோஜா என்றார்கள்....... அவ்வளவு பெரிய ரோஜா தோட்டத்தில் நின்று படம் எடுத்துக்கொண்டாலும் படத்தில் காண்பிப்பது போல மலர்ந்தும் மலராத ரோஜா தோட்டம் எங்கு இருக்கும் என்று தேடிக்கொண்டு இருந்தபோது........ அட, எக்ஸ்போர்ட் ரோஜாவா அது தேன்கனிகோட்டை பக்கம் இருக்கும் என்றனர்.

 எக்ஸ்போர்ட் ரோஜா என்பது மலர்ந்தும் மலராதது போல, சிகப்பாகவும் பல வண்ணங்களிலும் மனதை மயக்குவது போல இருப்பது. தேடி தேடி சென்றாலும் கிடைக்கவில்லை, அதிகாலையில்தான் ரோஜாவை பறிப்பார்கள் என்று மூன்று மணிக்கு எழுந்து அந்த பகுதியில் அலைந்தேன் !! இப்படி அலைந்து திரிந்து கொண்டு இருந்ததால் அந்த ஏரியாவில் கொஞ்சம் அறிந்த முகம் ஆகி, ஒருவர் என்ன வேண்டும் என்று கேட்க, ரோஜா தோட்டம் பார்க்கணும் என்றவுடன் அதோ தெரியுதே பசுமை குடில் அங்கே போங்க என்றார்..... இப்போது புரிந்தது ஏன் நான் ரோஜாவை பார்க்க முடியவில்லை என்று ! இந்த பயணத்தில் லட்சக்கணக்கான ரோஜாவின் மத்தியில் நின்றது, ஒரு ரோஜா மலர்வதை சிறிதாக பார்த்தது, ரோஜா பறிப்பவர்களுடன் பறித்து கையில் முள் குத்திக்கொண்டது, ரோஜாவை மார்க்கெட் அனுப்பும் முறை, ரோஜா சாகுபடி, ரோஜா பதுக்கல்கள் (விலை ஏற்றதிர்க்காக), ரோஜா பதியன் செய்யும் முறை என்று தெரிந்துக்கொண்டது ஏராளம்........ ஒவ்வொன்றும் இந்த காதலர் தினத்திற்கு அர்ப்பணம் !! ரோஜா தோட்டம் பார்க்கவேண்டும் என்றால் ஓசூர் - மதிகேரே ரோட்டில் நிறைய பார்க்கலாம், தளி, பேரிகை, கேளமங்கலம் பகுதிகளிலும் காணலாம் !

 

பாதுகாப்பான சூழ்நிலையில் பயிர்களை வளர்ப்பதற்காக உப்பிப்பெருத்த உள்ளுறைச் சட்டங்களின் மேல் ஒளிபுகும் இயல்புள்ள பொருளை மூடாக்காகப் பயன்படுத்தி உருவாக்கப்படும் கட்டமைப்புகளே பசுமைக்கூடங்களாகும்.  வருடம் முழுவதும் அல்லது தேவைக்கேற்ற பயிர் உற்பத்திக்கு வித்திடும் ஏதுவான நுட்ப காலநிலையினை உருவாக்குவதற்கே பசுமைக்கூடம் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் பயிர் சாகுபடி செய்யும் நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.  இத்தொழில்நுட்பமானது வெளிப்பரப்பில் உற்பத்திக்கு ஏதுவற்ற ஆபரணச் செடிகளின் பருவம் மாறிய உற்பத்திக்கும் குளிர்ப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் அதிக மதிப்புடைய உணவுப் பயிர்களின் உற்பத்தியிலும் பங்களிக்கின்றது.  முதன்மையாக சுற்றுப்புறத்திற்கு தேவையான வெப்பத்தை அளித்து கடுங்குளிர்ச்சி நிலையானது தவிர்க்கப்படுகின்றது.  மேலும் வெப்பம், வெளிச்சம், கரியமிலவாயு அளவு, காற்றின் ஈரப்பதம், நீர்த் தேவை, பயிர் சத்துக்களின் தேவை மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு போன்றவையும் கட்டுப் படுத்தப் படுகின்றது.  இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..... பசுமை குடில் !  

ரோஜா சாகுபடி அல்லது ரோஜா வளர்ப்பு பற்றி இங்கு சிறிது கூறியே ஆக வேண்டும், அழகு ரோஜாவை கைகளில் ஏந்தும் நாம் கண்டிப்பாக சில விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லதுதானே !! ரோஜா செடி பயிர் செய்ய நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது குறுமண் நிலம் ஏற்றது. தமிழ்நாட்டில் சமவெளிப் பகுதியில் பயிரிடலாம். ரோஜாவை விதை கொண்டு வளர வைக்க முடியாது,  வேர்பிடித்த வெட்டு துண்டுகள் மற்றும் ஒட்டும் கட்டிய செடிகள் மூலமே இன பெருக்கம் செய்ய முடியும். பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் முன்னரே, 45 செ.மீ நீள, அகல, ஆழம் உள்ள குழிகளை 2.0 x 1.0 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஆறவிடவேண்டும். நடுவதற்கு முன்னர் குழி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரம், 1.3 சதம் லிண்டேன் மருந்து 20 கிராம் மற்றும் மேல்மண் இடவேண்டும். லிண்டேன் மற்றும் இடுவதால் கரையான் மற்றும் எறும்புகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பிறகு வேர்பிடித்த வெட்டுத் துண்டுகளைக் குழிகளின் மத்தியில் மழைக்காலங்களில் நடவேண்டும். மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..... ரோஜா பயிர் சாகுபடி !

ரோஸ் பதியன் முறைகள் !!


ரோஜா சாகுபடி செய்ய இன்று சொட்டு நீர் பாசன முறையே பயன்படுகிறது, அதை பற்றியும் சிறிது தெரிந்து கொள்வோமே. சொட்டு நீர்ப் பாசனம் அல்லது நுண்ணீர்ப் பாசனம் (Drip irrigation system) என்பது முதன்மை குழாய், துணைக் குழாய்கள், மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது, பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும். ஓவ்வொரு விடுகுழாய் அல்லது உமிழி மற்றும் புழைவாய், பயிர்களுக்கு தேவையான நீர், ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பொருள்களை, பயிர்களின் வேர்ப் பகுதியில், நேராக அளந்து அளிக்கிறது. மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....... சொட்டு நீர் பாசனம் ! ரோஜா செடி என்பது வளரவும், புது பூ வர சுமார் மூன்று மாதங்கள் ஆகும்..... பின்னர் சுமார் நான்கு வருடங்கள் வரை செடி இருக்கும். செடி வளரும்போதே அதை கட் செய்ய செய்ய கிளைகள் அதிகம் ஆகும். இந்த எக்ஸ்போர்ட் வகை செடிகள் பறிக்கும்போது ரோஜாவின் தண்டு பகுதி சுமார் ஒன்றரை அடி இருக்குமாறு பார்த்துக்கொள்கின்றனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ரோஜாவை பறிக்கின்றனர். ஒரு மொட்டு விட்ட உடன் மூன்றாவது நாளில் ஒரு சிறிய பிளாஸ்டிக் குல்லா போன்று போடுகின்றனர் (நினைத்து பாருங்கள், தினமும் ஆயிரக்கணக்கில் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் !), இது ரோஸ் மொட்டு நீண்டு வளர உதவும், இல்லையென்றால் பூ குண்டாக மலரும், அது மட்டும் இல்லாமல் ரோஜா முழுவதும் பூப்பதை தடுக்கிறது..... மார்க்கெட்டில் மலர்ந்த பூவுக்கு மவுசு இல்லை ! ஒரு ரோஜா பூ மலர்வதை பார்க்க வேண்டும் என்று நான் ஆசைப்பட ரோஜாவை பார்த்துக்கொண்டே வந்தவர், இந்த பூ சிறிதாக மலர போகிறது என்றார்..... சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து காத்திருந்து அந்த பூ மலர்வதை கண்டேன், உண்மையிலேயே ஒரு ரோஜா மலர்வதை காண்பது அற்புதமே !!
ரோஜா மலரும் போது.........
 ரோஜாவை பறித்தவுடன் ஒரு பக்கெட் தண்ணீரில் போடுகின்றனர், இது அது வாடுவதை தடுக்கிறது. ரோஜாவை காலை பத்து மணி முதல் 12 மணி வரை செய்கின்றனர், பின்னர் அதை கொண்டு சென்று ஒரு மெசினில் காம்பு பகுதியை விட அது முள்ளையும், இலையையும் எடுக்கின்றது. பின்னர் அதை தரம் வாரியாக பிரித்து, 20 ரோஜா கொண்ட ஒரு கட்டாக மாற்றுகின்றனர். ரோஜா டிமாண்டு என்பது வருடம் முழுவதும் இருப்பதால் விலை அவ்வளவாக மாறுவதில்லை, ஆனாலும் கல்யாண சீசன் மற்றும் காதலர் தினத்தில் ரோஜாவை குளிர் பதன கிடங்கில் பதுக்கி வைத்து சாதாரண நாளில் இரண்டு ரூபாயில் இருந்து நான்கு ரூபாய்க்கு விற்கும் ஒரு ரோஜாவை, அன்று பதினைந்து ரூபாய் வரை விற்க்கின்றனர் !! 


என்னது இதெல்லாம் குப்பையா....... ரோஜா சார், ரோஜா !!

குளிர் பதன கிடங்கின் உள்ளே ரோஜா தூங்கும் காட்சி !!

இப்படிதான் ரோஜாவை பேக் செய்கின்றனர், பின்னாடி ரோஜா இலை எடுக்கும் மெசின் !!
ரோஜா தோட்டம் தேடி புறப்பட்ட இந்த பயணம் பத்து முறை தேடி சலித்து இருந்தாலும், முடிவில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை எனலாம். காதலர் தின பதிவாக இந்த பதிவு உங்களை மகிழ்வித்து இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த முறை இங்கு சென்று வாருங்கள்....... ரோஜா எவ்வளவு அழகு என்பது புரியும் !! ரோஜா அக்தர் செய்யும் முறை, ரோஜாவின் மருத்துவ குணம், ரோஜா பூ கொண்டு செய்யப்படும் அலங்கார முறை, ரோஜா மாலை கட்டுதல், கருப்பு அல்லது ப்ளூ ரோஜா செய்யும் முறை என்று நான் அறிந்து கொண்டதையும், அதை கண்டும் செய்தும் மகிழ்ந்ததையும் சொல்ல ஆரம்பித்தால் பதிவுகள் நீண்டு கொண்டே செல்லும் என்பதால்........... ரோஜாவுடன் வணக்கங்கள் !!

ஒரு செடியில் எத்தனை ரோஜா சொல்லுங்க, அப்போ அங்க இருந்த லட்சம் செடிக்கு ?!

காதலர் தினத்தில், ரோஜா தோட்டத்தில்......... உங்கள் கடல் பயணங்கள் !!

காதலர் தினத்திற்கு...... காதலுடன்........ ரோஜா போன்ற சிரிப்புடன் !!
Labels : Suresh, Kadalpayanangal, Rose, hosur, krishnagiri, rayakottai, thali, kelamangalam, berigai hosur is famous for, rose export, rose farm, rose essence, color of rose, meaning for rose color, types of rose, roses, valentine day, feb 14, 14 feb, kadhalar dhinam, lovers day, love, red rose, bouquet of rose

8 comments:

 1. ரோஜா தூங்கும் காட்சி !!ரொம்ப பெரிய ரசனைக்காரர் மட்டுமில்லை நல்ல கவிஞராகவும் இருப்பிங்க போலிருக்கே?!!

  ReplyDelete
 2. வணக்கம்
  அண்ணா
  ரோஜா தோட்டத்தை கண்முன் கொண்டுவந்தீர்கள் தங்களின் தேடலுக்கு பாராட்டுக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. அருமையான பதிவு!
  உணவின் காதலராக இருந்த நீங்கள் எப்போது மலரின் காதலராக மாறினீர்கள்!

  ReplyDelete
 4. முழுமையான அனுபவமான அமைந்தது....

  இந்த வாரம் ரோஜாக்களுக்கு பெருமையான வாரம்...
  சரியான நேரத்தில் சரியான பதிவு

  ReplyDelete
 5. அருமையான விளக்கம்...

  வாழ்த்துக்கள் ஜி...

  ReplyDelete
 6. ரோஜாக்கள் - அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறதே....

  அழகான படங்கள், விளக்கங்கள் என அருமையான பகிர்வு. நன்றி நண்பரே.

  ReplyDelete
 7. தேன்கனிக்கோட்டை பசுமைக்குடில் முகவரி கிடைக்குமா​?

  ReplyDelete