Tuesday, February 3, 2015

அறுசுவை - நடமாடும் அமெரிக்க உணவகம், பெங்களுரு

அமெரிக்கா சென்று இருந்தபோது வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு கான்டீன் இருந்தது, உணவு சுமார்தான் அதனால் கொஞ்சம் பல்லை கடித்துக்கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தேன். ஒரு வியாழன் அன்று எல்லோரும் உற்சாகமாக மதிய உணவு சாப்பிட கிளம்பிக்கொண்டு இருந்தனர், அன்று மட்டும் என்ன ஸ்பெஷல் என்று விசாரிக்க, இன்று புட் ட்ரக் வந்து இருக்கிறது என்றனர். வெளியே சென்று பார்த்தால் ஒரு வேன், அதில் இரண்டு பக்கத்திலும் கதவுகளை வைத்து நடமாடும் உணவகம் என்று ஆக்கி இருந்தனர்...... அடேய், எங்க ஊர்காரனுங்க சைக்கிள், பஸ், வேன், லாரி, ஆட்டோ என்று எல்லாவற்றிலும் நடமாடும் உணவகம் வைத்து இருந்தனர், செப்பேடுகளில் தேடி பார்த்தாலும் அந்த காலத்தில் மாட்டு வண்டியில் மோர் விற்ற பயல்கள் எல்லாம் நம்ம பயலுகதான், நாங்க வெளியே சென்றாலே தள்ளு வண்டி கடையில்தான் இட்லி சாப்பிடுவோம், எங்ககிட்டயே போய் நடமாடும் உணவகமாம்ல என்று அங்கு சென்று சாப்பிட்டு வந்தேன். அவர்களிடம் நமது ஊர் தள்ளுவண்டி கடைகளின் போட்டோவை காட்டி பெருமை அடித்தேன் !! இன்று அமெரிக்கா சாண்ட்விட்ச், ஹாட் டாக் எல்லாம் சாப்பிட வாய் ஊரும்போது இங்கே உண்மையான அமெரிக்கா உணவகம் இல்லை என்பது குறை (இருந்தாலும் விலை ஜாஸ்தி ), அப்படி தேடியபோது கிடைத்ததுதான் இந்த புட் ட்ரக் !!

அமெரிக்கன் உணவு..... இதை சொல்லியவுடனே நமக்கு எல்லாம் யாபகத்திற்கு வருவது பர்கர், மாட்டு கறி, சிக்கன் பொரிச்சது மட்டுமே, ஆனால் அங்கு அதற்கும் மேலே சில உணவுகள் உண்டு. ஒரு முறை அதை உண்டவர்கள் மீண்டும் உண்ண செல்வார்கள் என்பது நிச்சயம். பெங்களுருவில் கொஞ்சம் விலை குறைச்சலாக, அந்த சுவையுடன் அமெரிக்க உணவு வகைகள் கிடைப்பது என்பது சிரமமாக இருந்ததை இந்த புட் ட்ரக் எளிதாக்கி இருக்கிறது எனலாம். இதை நடத்துபவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிபவர்கள்தான். பெங்களுருவில் இப்போது சில உணவகங்கள் இது போல இப்போதுதான் பெருக ஆரம்பித்து இருக்கிறது, இதில் சிரமம் என்று சொன்னால் இவர்கள் பொசுக் என்று லீவ் போடுவதும், எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பதுதான் !

பெங்களுரு புட் ட்ரக்.......... மேலும் உணவகங்கள் பற்றி தெரிந்து கொள்ள !


எனக்கு பிடித்த உணவுகள் என்பது சாசேஜ், சிக்கன் வித் பார்பிகியு சாஸ் மற்றும் அந்த கார்ன் சாண்ட்விட்ச் !! நமது ஊரில் இந்திய முறைப்படி பெப்பர் தூவியும், சான்ட்விட்சை கருக்கியும் தருவது என்பது இருக்கும், ஆனால் இங்கு அமெரிக்க முறைப்படி செய்யபடுவதால் அந்த டேஸ்ட் மிகவும் நன்றாக இருக்கிறது. வெளிநாடு சென்று வந்தவர்களும், அந்த நாட்டின் உணவு எப்படி இருக்கும் என்று டேஸ்ட் செய்ய நினைப்பவர்களும் கண்டிப்பாக இங்கே வரலாம் ! நாங்கள் கார்ன் சாண்ட்விட்ச், சிக்கன் ஹாட்டாக் மற்றும் சிக்கன் வித் பார்பிக்கியு சாஸ் ஆர்டர் செய்துவிட்டு கவனிக்க ஆரம்பித்தோம். நம்ம ஊரு வேன் ஒன்றின் பின் பக்கம் கிச்சன் போல செய்து, யூனிபோர்ம் அணிந்த ஆட்கள் சுத்தமாக வேலை செய்து கொண்டு இருந்தனர். முன்னாடி டிரைவர் சீட்டின் பக்கத்தில் இருந்துக்கொண்டு ஒருவர் ஆர்டர் எடுத்து பின்னே ஒரு ஸ்லிப்பை கொடுக்க நமது உணவு நமது கண் எதிரே தயாராகிறது !!

கார்ன் சாண்ட்விட்ச் என்பது நம்ம ஊரு ஸ்வீட் பிரட் போல இல்லாமல் கொஞ்சம் உப்பு போட்ட பிரட் எடுத்து அதன் உள்ளே கொஞ்சம் சாஸ் ஊற்றி, கார்ன் என்பதை நன்கு வேக வைத்து அந்த பிரட்டை பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொடுத்தனர். இதில் ஹாட் டாக் (தமிழில் அப்படியே மாற்றினால்..... சூடான நாய் !!) என்பது நமக்கு புதுசு..... கோழியை வேக வைத்து அதை ஒரு சிறிய பலூன் போல கொடுக்கின்றனர், அதை பிரட் இடையில் வைத்து சாஸ் ஊற்றி தரும்போது அட, அட, அட ருசியோ ருசி !! இதை முதல் தடவை உண்ணுபவர்களுக்கு பிடிக்குமோ என்னவோ.... அமெரிக்கா சென்று சாப்பாடிற்கு அலைந்து பல நாட்கள் அமெரிக்க உணவுகளை உண்ணும்போதுதான் இந்த உணவுகள் பிடிக்குமோ என்னவோ. பெங்களுருவாசிகள் அமெரிக்க உணவுகளை உண்ணுவதற்கு நம்ம கையேந்தி பவன் இருக்கு !!பஞ்ச் லைன் :

சுவை - உண்மையான அமெரிக்க உணவின் சுவை வேண்டுபவர்கள் இங்கு செல்லலாம். ஒரு புதுமையான, ருசியான உணவு வகைகள்.

அமைப்பு - நடமாடும் உணவகம், ரோட்டின் ஓரத்தில் பார்க் செய்யப்பட்டு இருக்கும். பார்கிங் சிறிது சிரமம்தான்.
பணம் - விலை பட்டியலே கொடுத்துள்ளேன், பாருங்களேன் !
சர்வீஸ் - நல்ல சர்விஸ் ! மிகவும் பொறுமையாக சர்வீஸ் செய்கிறார்கள் ! 


மெனு :

அட்ரஸ் :  
பெங்களுரு கல்யான் நகரில், 7th மெயின் ரோட்டில் இருக்கிறது. கூகிள் மேப் சென்று பார்பிக்கியு நேசன், கல்யாண் நகர் என்று போட்டால் அந்த ரோட்டிற்கு சென்று உங்களை விடும், அதே ரோட்டின் முனையில் (பார்பிகியு நேசன் முன்னே நின்றால், இடது பக்கம் செல்லும் ரோடு) முனையில் ஒரு சிறிய ட்ரக் உங்களது பார்வைக்கு படும்.
சில சமயங்களில் இது இருப்பதில்லை, ஆதலால் போன் செய்து கேட்டுக்கொண்டு செல்லுங்கள்.Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Bangalore, Bengaluru, American food, food truck, different food, hot dog, sausage, sandwich, kalian nagar, banaswadi, outer ring road, tasty, food

5 comments:

 1. நல்லதொரு விரிவான தகவல்....
  அமெரிக்க உணவு கண்ணில் பட்டதுமே ஒரு பிடிபிடித்தீர்கள் போல...

  ReplyDelete
 2. நமக்கு இதெல்லாம் செட்டாகாதுங்க சகோ . என்னதான் சாப்பிட்டாலும் முடிவில் ஒரு பிடி ரசம் சாதம் வேணும் நமக்கு

  ReplyDelete
 3. Noted.... புகுந்து விளாசிட வேண்டியதுதான்..😁😁

  ReplyDelete
 4. நீங்கள் அறிமுகப்படுத்தி விட்டதால் "பொசுக்" என்பது காணாமல் போய் விடும்...

  ReplyDelete
 5. தகவலுக்கு நன்றி. பெங்களூர் வந்தால் சொல்கிறேன்! :)

  ReplyDelete