Thursday, February 5, 2015

சிறுபிள்ளையாவோம் - குச்சி அப்பளம் !!

சிறு வயதில் அப்பளம் என்றாலே ஒரு தனி சந்தோசம்தான், கறுக் மொறுக் என்று கடித்து தின்றுக்கொண்டே இருக்கலாம், அதிலும் கடைகளில் கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கும் அந்த குச்சி அப்பளம் நினைவில் இருக்கிறதா ?! கடைக்கு சென்றால் ஐந்து பைசா, பத்து பைசாவிற்கு ஒரு பண்டம் மட்டும் கிடைத்தால் இன்னொரு கைக்கு என்ன செய்வது என்று இரண்டு கைக்கும் ஒன்று என்று கிடைக்கும் பொருளாய் வாங்குவோம், அதில் இந்த அப்பளம் என்பது மட்டும் ஜாஸ்தியாகவே கிடைக்கும் ! இந்த முறை கிராமத்திற்கு குலசாமி கும்பிட என்று சென்று இருந்தபோது ஒரு கடையில் இந்த அப்பளம் விற்று கொண்டு இருந்தது..... யாருக்கு குச்சி அப்பளம் வேண்டுமோ அவர்கள் கையை தூக்குங்கள் என்று கேட்டபோது பொடிசுகள் எல்லாம் சாக்லேட், பிரிட்டானியா பிஸ்கட், பெப்சி என்று கேட்டு வாங்கி குடிக்க நான் மட்டுமே கையை தூக்கி இருந்ததை காணமுடிந்தது....... அட நமக்கு என்ன, ஒரு ஐஞ்சு அப்பளம் கொடுங்க என்றேன், ஒரு பாக்கெட்டில் பத்து இருக்கும் என்றனர், அட நான் கேட்டது அஞ்சு பாக்கெட் என்றேன் !!



இந்த குச்சி அப்பளத்தை வாங்கியவுடன் ஒரு பவுன் மோதிரத்தை கைகளில் போடுவதுபோல் கவனமாக ஒவ்வொரு விரலிலும் மாட்டிக்கொண்டு அதை மெதுவாக கடித்து தின்பது என்பது என்ன சுகம் ! அப்பளம் தின்பதே ஒரு வகையான கலை எனலாமா, அதுவும் இந்த குச்சி அப்பளத்தை உடைத்து தின்பது என்பது மிகவும் சந்தோசமான மற்றும் சோகமான விஷயம். முதலில் அப்பளத்தை வாயில் வைத்துக்கொண்டு எச்சிலால் கொஞ்சம் கொஞ்சமாக நனைப்போம், அது ஒரு கட்டத்தில் ஊறி போய் உடைந்து வாயில் உதிர அதை கொஞ்சமாக சுவைப்பது என்பது சுகமோ சுகம், ஆனாலும் அது உடைந்துவிட்டதே என்ற வருத்ததுடன் அல்லவா சுவைப்போம் !







சிகரட் பிடிப்பவர்களை பார்த்து பார்த்து இந்த குச்சி அப்பளத்தை அவர்களை போலவே வாயில் வைத்துக்கொள்வது என்பது ஒரு பெரியமனுஷத்தனம் இல்லையா ! சில நேரங்களில் வாய் முழுவதும் அந்த அப்பளத்தை வைத்துக்கொண்டு ஓடுவோம், பின்னர் ஒவ்வொன்றாக தின்று தின்று காலி செய்வது மட்டுமே வேலை. சிறு வயதில் பத்து காசுக்கு ரெண்டு குச்சி அப்பளம் கிடைக்கும், நண்பன் ஒருவன் அதே பத்து காசுக்கு ஒரு தேன் மிட்டாய் சாப்பிட்டால் அந்த அப்பளத்தை மெதுவாக சாப்பிட்டு வெறுப்பேற்றுவது நினைவுக்கு வருகிறது !



இன்றைய நாளில் இது கடைகளில் தொங்கவிடப்பட்டு இருந்தாலும் சிப்ஸ், பிஸ்கட், கேக், பெப்சி என்று மட்டுமே குழந்தைகள் உண்கிறார்கள் என்பதை காண முடிந்தது, வெகு அரிதாக குழந்தைகள் இதை சுவைக்கிறார்கள். எத்தனை விதமான தின்பண்டங்கள் நாம் சுவைத்து இருந்தாலும் இந்த அப்பளம் எப்படி நீளமாக செய்யப்படுகிறது என்றைய அந்த ஆச்சர்யம் இன்றும் அதை பார்க்கும்போது ஏற்படுகிறதா இல்லையா ?! மேலே படத்தில் இருக்கும் எல்லோருமே வெவ்வேறு  கம்பெனியில் மேனேஜர் ஆக இருப்பவர்கள்தான் என்றாலும் அந்த அப்பளத்தை நாங்கள் கையில் எடுக்க மீண்டும் சிறுபிள்ளையானோம் !!

 Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, Childhood memories, Childhood, sweet memories, do you remember this, kuchi appalam, neela appalam, childhood snacks, 1980 snacks, appalam

6 comments:

  1. Thank you Ji, for taking me to my childhood for a while! During my school days this one was one of my favorite! We call it as 'Booti'

    ReplyDelete
  2. ஐ! எனக்கும் இந்த அப்பளம் பிடிக்கும் சகோ. எங்க ஊருல இதை "போட்டி"ன்னு சொல்லுவோம். எந்த செஞ்சாங்களோன்னு நினைச்சுத்தான் இதை இப்பத்திய பெற்றோர் நினைச்சுதான் வாங்கி தர்றதில்ல.ரெடிமேட் அப்பளம் கடைகள்ல கிடைக்குது. அதை வீட்டுல சாப்பிட்டாலும் கடைகள்ல விக்கும் அப்பளம் டேஸ்ட் கிடைக்குறதில்ல.

    ReplyDelete
  3. இந்த அப்பளம் எனக்கும் பிடிக்கும்! இப்பவும் எங்களூரிலும் கிடைக்கிறது! ஆனால் பழைய் சுவை இல்லை!

    ReplyDelete
  4. விஜயவாடா நகருக்கு ஒவ்வொரு பள்ளி விடுமுறையிலும் செல்வோம். அங்கேயும் இந்த அப்பளம் கிடைக்கும். தெலுங்கில் இதை “கொட்ரம்” என்று சொல்வார்கள்..... ஐந்து பைசாவிற்கு இரண்டு அப்பளம் கிடைக்கும். அத்தைப்பாட்டிக்கு வெற்றிலை பாக்கு வாங்கச் செல்லும்போது எனக்கும் அப்பளம் வாங்கிக் கொள்வேன்! இனிமையான நினைவுகள்......

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  5. பள்ளி பருவத்தில் இதனை சுவைக்க மறந்ததில்லை மீண்டும் அக்கால நினைவிற்கு எங்களை எடுத்து சென்றமைக்கு நன்றி ஜி......

    பயணம் சிறக்கட்டும்.....

    நன்றி.

    ReplyDelete