Wednesday, March 25, 2015

சாகச பயணம் - ஓடத்தில் ஒரு பயணம் !!

"முதல் மரியாதை" படம் பார்த்தபோது ராதா, ஒரு வட்டமான படகை துடுப்பு போட்டு ஓட்டுவார். சிறு வயதில் இருந்து தண்ணீரில் செல்லவென்று படகு என்று ஒன்று இருக்கும், அது நீளமான வடிவத்தில் இருக்கும் என்று படித்தும், கத்தி கப்பல் செய்தும் இருக்கும் நாம் திடீரென்று இப்படி வட்ட வடிவில் ஒரு படகை பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருக்கத்தானே செய்யும். பின்னாளில் அதன் பெயர் ஓடம் என்று கேள்விப்பட்டது, தண்ணீர் வற்றிய காவிரி ஆற்றில் எப்படி இந்த படகுகள் போகும், அதுவும் டெக்னாலஜி என்று வந்து பாலம் எல்லாம் கட்டியபின் இந்த ஓடங்கள் எல்லாம் மறைந்தே விட்டன..... இருந்தாலும் சிறு வயதில் இருந்து ஒரு முறையாவது இந்த ஓடத்தில் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்துகொண்டே இருந்தது !


இது எங்கு இருக்கும் என்று கேட்டதற்கு பலரும் ஓகேனக்களில் இன்றும் இருக்கிறது என்றனர், அங்கு செல்ல வேண்டும் என்று காத்திருந்தபோதுதான் ஆபீசில் இருந்து பீமேஸ்வரி பிஷிங் கேம்ப் செல்லலாம் என்றனர். அங்கு இதை பார்த்தவுடன் ஆனந்த கூத்தாடியது மனது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது புரண்டு கொண்டு ஓடும் காவேரி, இனிதான வெயிலும் நிழலும், சுற்றிலும் மலைகள் என்று ரம்மியமாக இருந்தது பொழுது. அங்கு கரையின் ஓரமாக அமைதியாக இருந்தது அந்த ஓடம் !!


அதில் செல்ல வேண்டும் என்றபோது எல்லோருமே குழந்தைகள் ஆகி இருந்தனர், அந்த கரை புரண்டு ஓடும் தண்ணீரில் செல்வது என்பது ஒரு சாகசமே என்றாலும் மனதில் பயத்தை விட சந்தோசமே அதிகம் இருந்தது. அந்த துடுப்பை எடுத்துக்கொண்டு ஒரு படகோட்டி போல ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு அந்த ஓடத்தை பார்க்க ஆரம்பித்தேன். இளம் மூங்கில் கொண்டு வடிவமைக்கப்பட்ட அந்த ஓடத்தை, வெளிப்புறத்தில் தார்பாய் கொண்டு நன்கு தண்ணீர் வராமல் சீல் செய்து இருந்தனர். படகை தூக்கி பார்ப்போமே என்று முனைந்ததில் அது ஒன்றும் அவ்வளவு கனமாக இல்லை. ஓடத்தில் உட்கார தயாரானபோது அதில் ஒரு சிறிய ஸ்டூல் போன்று போட்டனர், நமது ஆடைகள் அழுக்காகாமல் இருக்க !!


ஒவ்வொருவராக ஏறி உள்ளே உட்காரும்போது அந்த படகு பயங்கரமாக ஆட ஆரம்பித்தது, சமாளித்து உள்ளே ஏறினேன். எல்லோரும் ஏறி உட்கார்ந்தபின்பு அந்த ஓடம் ஓட்டி (?!) மெதுவாக துடுப்பு போட ஆரம்பித்தார். சல சலவென ஓடும் காவேரியின் குளுமையில் அந்த ஓடம் ஆடி ஆடி செல்ல, சுற்றிலும் மலைகள் என்று மிகுந்த சந்தோசம் தந்தது. யாராவது ஒருவர் ஒரு பக்கம் சாய்ந்தாலும் ஓடம் பயங்கரமாக ஆடியது, அதை ஓடம் ஓட்டி மிகுந்த திறமையாக சமாளித்தார் எனலாம். ஓடத்தில் செல்வது என்பது நிச்சயமாக ஒரு புது விதமான அனுபவம் எனலாம், அதுவும் அந்த மாலை நேரத்து காற்றுடன் செல்வது என்பது நிச்சயம் நினைவில் நிற்கும் ஒன்று !தண்ணீரின் போக்கில் போய் கொண்டு இருந்த படகை இப்போது எதிர் திசையில் செலுத்த ஆரம்பிக்கும்போதுதான் அந்த ஓடம் ஓட்டியின் கை வலிமை தெரிந்தது, படகில் இருக்கும் அனைவரது எடையையும் அவர் எதிர் திசையில் எடுத்து செல்வது பார்த்து பரிதாபம்தான் வந்தது. ஒரு கட்டத்தில் யாருக்காவது இன்னும் த்ரில் வேண்டுமா என்று கேட்டார், எல்லோரும் ஆமாம் என்றவுடன் அந்த ஓடத்தை அப்படியே சுற்ற ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்கு நன்றாக இருந்தாலும், பின்னர் தலை பயங்கரமாக சுற்ற ஆரம்பித்தது. போதும் போதும் என்று கூவிய பின் சற்று நிதானிக்க ஆரம்பித்து பின்னர் கரையை நோக்கி செல்ல ஆரம்பித்தது அந்த ஓடம்.தட்டு தடுமாறி அந்த படகில் இருந்து இறங்கி, தலை சுற்றலுடன் மனதில் சந்தோசத்துடன் நடக்க ஆரம்பிக்க..... அந்த படகு மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தது !!Labels : Suresh, Kadalpayanangal, sagasa payanam, thrill ride, bheemeshwari, odam, boat ride, country boat ride, ogenakkal, ogenakal boat, round boat ride, amazing ride in cauvery

Tuesday, March 24, 2015

அறுசுவை (சமஸ்) - குணங்குடிதாசன் சர்பத், தஞ்சாவூர் !!

தஞ்சாவூர் பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக வயல் வெளிகள் இருந்தாலும், வெயில் காலத்தில் அந்த கண்ணே கிறங்கும் அளவுக்கு வெயில் மண்டையை பிளக்கும். அதில் இருந்து தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறது பெப்சி, கோக், டிராபிகானா, இளநீர் இல்லையா........ என்னதான் அதை குடித்தாலும் இன்னும் குடிக்க வேண்டும் என்று தோன்றாது, ஆனால் நன்னாரி சர்பத் போட்டு கொடுத்தால் கண்டிப்பாக இன்னொரு சர்பத் போடுங்க என்று சொல்லுவோம் இல்லையா ?! அந்த சர்பத் வரிசையில் மிகவும் சுவையான, வித்யாசமான ஒன்றுதான் இந்த குணங்குடிதாசன் சர்பத் கடையில் கிடைக்கும் நார்த்தங்காய் சர்பத்தும், பால் சர்பத்தும் !!திரு.சமஸ் அவர்கள் தஞ்சாவூர் சுற்றி எழுதிய கடைகளில் எல்லா இடத்திலும் வெகு சூசகமாகவே அந்த விலாசம் கொடுத்து இருப்பார், அதை தேடி கண்டு பிடிப்பது என்பதே ஒரு கலை, அதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் யாரிடம் அந்த கடையை பற்றி கேட்டாலும் எச்சிலை விழுங்கிக்கொண்டு அங்க இருக்கு என்று வழி சொல்வார்கள். இந்த குணங்குடி தாசன் சர்பத் கடைக்கும் அப்படியே.... ஆனால் கொஞ்சம் பொறாமையோடு ! நல்ல வெயில் அடிக்கும் மதிய நேரத்தில் தொண்டை காய்ந்து போய் கீழவாசல் ஏரியாவில் இந்த கடையை தேடி அலைந்தோம், மிக சிறிய கடை என்பதால் சட்டென்று கடந்து போக வாய்ப்பு இருந்தும் அந்த கடையின் முன்னாடி இருக்கும் அந்த சர்பத் பாட்டில் உங்களை சுண்டி இழுத்துவிடும் !


அது கடைவீதி என்பதால் கூட்டம் அதிகம், எல்லோரும் நடந்து நடந்து களைத்து போய் இங்குதான் வருகிறார்கள். கடையின் உள்ளே உட்கார கொஞ்சம் சேர் இருக்கிறது இருந்தும் வெளியில் அந்த சர்பத் எப்படி போடுகிறார்கள் என்று ஆவலோடு நிறைய பேர் நிற்கிறார்கள். பொதுவாக சர்பத் போடும்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுவார்கள், சர்பத் குடிக்கும்போது அந்த புளிப்பு சுவை இருந்துகொண்டே இருக்கும், சில நேரங்களில் எலுமிச்சை பழத்தின் கொட்டை வாயில் சிக்கும்போது அதன் மேலே இருக்கும் அந்த புளிப்பு சுவையை தடவி எடுத்துவிட்டு அதை வெளியில் துப்புவோம் இல்லையா. இனிப்பும், புளிப்பும் என்று மாறி மாறி வரும் அந்த சுவையே சர்பத்தின் வெற்றி எனலாம் ! இங்கு....... எலுமிச்சை இல்லை, அதற்க்கு பதில் நார்த்தங்காய் !!அந்த காலத்தில் வீட்டில் நார்த்தங்காய் ஊறுகாய் என்பது கண்டிப்பாக இருக்கும், இந்த காலத்தில் பலருக்கும் நார்த்தங்காய் என்பது தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே ! எலுமிச்சை பழத்தின் அக்கா போல சிறிது பெரிதாக ஆரஞ்சு பழ சைசில், வெளி தோல் கொஞ்சம் சொர சொரப்பாக இருப்பதே நார்த்தங்காய். அதை ஊறுகாய் போடும்போது சாதத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வைக்கும்போது அந்த புளிப்பு சுவை அப்படியே மூளைக்கு செல்லும் !! எச்சில் ஊற வைக்கும் அந்த புளிப்பு சுவையை சர்பத்திர்க்கு போட்டால் எப்படி இருக்கும்..... அதுதான் இந்த குணங்குடி தாசன் சர்பத்தின் சிறப்பு ! 


ஒரு வெளிர் வெள்ளை பிளாஸ்டிக் கிளாஸ் எடுத்து, அதில் ஐஸ் கட்டிகளை தட்டி போட அது நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை போல அந்த டம்ப்ளரில் விழுந்து உருளுகிறது. அதன் மேலே இப்போது நார்த்தங்காய் எடுத்து கொஞ்சம் பிழிந்து விடுகின்றனர், அதில் இருக்கும் காரதன்மைக்கு இப்போது ஐஸ் உருகி புகை வருகிறது. அதில் இவர்களே ஸ்பெஷல் ஆக தயாரித்த சர்பத் கொஞ்சம் ஊற்றுகின்றனர். சர்பத் என்பதில் கொஞ்சம் அதிகம் ஆரஞ்சு நிறமும், கிரேப் நிறமும் என்று இரண்டு வகைகளே உண்டு. இந்த ஆரஞ்சு நிறத்தை சரியான கலவையாக ஊற்றி அந்த தண்ணீரை கொண்டு கலக்கும்போது அந்த ஐஸ் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருக்கும் அப்போது இந்த கிரேப் நிறத்தில் இருக்கும் சர்பத்தை கொஞ்சமாக ஊற்ற அந்த டம்ப்ளரில் வர்ண ஜாலம் நிகழ ஆரம்பிக்கும் ! இப்போது அதை எடுத்து கைகளில் தரும்போதும் நாம் அந்த கலரிலேயே மூழ்கி இருப்போம் இல்லையா !!


இந்த சர்பத் முதல் வாய் எடுத்து வைக்கும்போதே அந்த வித்யாசமான ருசி தெரிந்து விடுகிறது. ஒரு வாய் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு, பின்னர் ஏதேனும் ஸ்வீட் சாப்பிடுங்கள்..... அதிகம் புளிப்பு, அதிகம் இனிப்பு என்று உணர முடியும். அதுவே இங்கும் நிகழ்கிறது, புளிப்பும் இனிப்பும் அந்த சில்லென்ற சுவையினில் உள்ளே செல்ல செல்ல வயிற்றில் அந்த குளுமையை உணர முடியும். இதில் குளிர்ந்த பால் கலந்து கொடுப்பது என்பது பால் சர்பத் இங்கு ! கண்டிப்பாக இங்கே சென்று சாப்பிட்டு பாருங்கள்...... உங்களுக்கே தெரியும் அந்த தெய்வீக ருசி !!Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, samas, saappattu puraanam, சாப்பாட்டு புராணம், tanjore, thanjavur, kunangudi dasan, sarbath, gunangudi dasan, paal sarbath, milk sarbath, amazing taste

Friday, March 20, 2015

ஊர் ஸ்பெஷல் - உடன்குடி கருப்பட்டி (பகுதி - 1) !!

இன்றைய காலகட்டங்களில் கருப்பட்டி என்று சொன்னாலே ஐயே என்று முகம் சுளிக்கும்படி ஆகிவிட்டது எனலாம். இன்று எங்கும் எதிலும் சர்க்கரை என்றாகிவிட்ட சூழலில் கருப்பட்டி தேடி செல்வது என்பது கேலிகூத்து என்றுதான் நினைத்தேன், ஆனால் மக்கள் இன்றும் இதன் மேல் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று புரிந்தது ! இன்றும் தென்மாவட்டங்களில் கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதை காண முடிந்தது. நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரம் பார்க்காமல் வளர்ந்த இந்த தலைமுறைக்கு பனை மரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்ககூடியது என்பது தெரியுமா ? கருப்பட்டி என்பதின் மருத்துவ குணங்கள் தெரியுமா ? ஒரு பனை மரம் சுனாமியையும் தாங்ககூடிய வலிமை உடையது என்பது தெரியுமா ? நமது தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் பனை ஓலையில் எழுதப்பட்டது என்பது தெரியுமா ? கருப்பட்டி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா ? ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்...... இந்த பயணம் பல ஆச்சர்யங்களை தந்தது என்றால் மிகையில்லை !! 

உடன்குடி (ஆங்கிலம்:Udangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். உடன்குடி என்ற சொல் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து உருவானது.'உடை'என்பது இந்த ஊரைச் சுற்றி உடை மரங்கள் இருந்தன. 'குடி' என்பது கிராமம் அல்லது மக்கள் கூட்டம்.இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து 'உடன்குடி' என்றானது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும். இது திருசெந்தூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம். திருசெந்தூரில் இருந்து இரு பக்கமும் பனை மரங்கள் அடர்ந்த ரோட்டில் பயணம் செய்தால் வரும் இந்த ஊர், மிகவும் அமைதி எனலாம் !
நம் தமிழ் நாட்டின் மாநில மரம் எது தெரியுமா ? உங்களை போலவே நானும் தலையை சொரிந்தேன், அந்த கருப்பட்டி செய்பவர் என்னை இந்த கேள்வி கேட்க்கும் வரை ! பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்க படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. சேலம், சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

சார்... பனை மரம் சார்......... சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅர் பனை மரம் !சர்க்கரை பல தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது அதில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை.  சர்க்கரையை கரும்பினால் செய்கின்றோம், வெல்லம் என்பதில் இரு வகை உண்டு..... கரும்பு வெல்லம், பனை வெல்லம் ! கருப்பட்டி என்பது பனையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. இதில் பனை வெல்லம் என்பதை கருப்பட்டி என்கிறோம் ! கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் பனாட்டு என்றும் வழங்கப்பட்டது. கருப்புக்கட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும். கரும்பஞ்சாறு எப்படி கருப்பஞ்சாறு ஆனதோ, அது போல. இன்று கருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது.

பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக. பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இதை லிட்டர் 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய் வரை விற்கிறேன். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்.

பதநீர் எடுத்தாச்சு !


பதநீர் காய்ச்சப்படுகிறது........

இப்படி எடுக்கப்பட்ட பதநீரைதான் காய்ச்சி கருப்பட்டி செய்கின்றனர். அதில் என்னவெல்லாம் அடங்கி இருக்கிறது, எப்படி அப்படி ஒரு வடிவத்தில் செய்கிறார்கள், அதை எப்படி அனுப்புகின்றனர் என்றெல்லாம் அடுத்த வாரம் பார்ப்போமா ?!

Labels : Suresh, Kadalpayanangal, oor special, district special, udangudi, udankudi, karuppatti, jaggery, palm jaggery, how jaggery is made, palm, palm tree, sweet, famous for, udangudi is famous for, sweet trip

Thursday, March 19, 2015

அறுசுவை - UBM கெடா விருந்து, ஈரோடு

மீல்ஸ், மினி மீல்ஸ், மைக்ரோ மீல்ஸ், நான்-வெஜ் மீல்ஸ், வெஜ் மீல்ஸ், மீன் சாப்பாடு, முட்டை சாப்பாடு..... இப்படியெல்லாம் கேள்வி பட்டு இருப்பீர்கள்....... ஆனா நான் சொல்லபோற இந்த சாப்பாடு....... அதுக்கும் மேல :-) !! நண்பரும் சக பதிவரும் ஆன திரு."சங்கவி" சதீஷ் அவர்கள் அவரது தளத்தில் இதை எழுதியபோது படித்து பார்த்தேன், அப்போதிலிருந்தே செல்ல வேண்டும் என்று நினைத்தது சென்ற வாரம்தான் அமைந்தது. இங்கு செல்வதற்கு முன் கிடைத்த தகவல்கள் எல்லாமே வியக்க வைத்தன, பொதுவாக ஒரு ஹோட்டல் சென்று சாப்பிட உட்கார்ந்தால் சோறு, மட்டன் சிக்கன் குழம்பு வகைகள், தொட்டு கொள்ள என்று நாம் இரண்டு அல்லது மூன்று வகையான கறி என்று சாப்பிட்டு இருப்போம், வெளியே வரும்போது அம்மாடி, நிறைய சாப்பிட்டோம் என்று நினைப்போம் இல்லையா..... ஆனால் இந்த UBM கெடா விருந்து சென்று திரும்பும்போது மட்டும் உங்களால் எவ்வளவு சாப்பிட முடியும் என்று டெஸ்ட் எடுத்து திரும்புவது போல, அவ்வளவு சாப்பிட்டு இருப்பீர்கள் !!ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி சுமார் 25 கிலோமீட்டர் குன்னத்தூர் ரோட்டில் பயணம் செய்ய வரும் ஒரு ஊர் சீனாபுரம், அங்கு ரோட்டின் மேலேயே மரங்களுக்கு இடையில் சட்டென்று கடந்து போகும் இந்த UBM, பசியோடு இருக்கும் நேரத்தில் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு தேடவும் இல்லையென்றால் தாண்டி சென்று விடுவீர்கள் ! வாரத்தின் எல்லா நாட்களும் மதியம் 12 மணிக்கு இந்த "அதுக்கும் மேல" கெடா விருந்து கிடைக்கும், சுமார் மூன்றரை மணி வரை கிடைக்கும் இந்த விருந்துக்கும் ஒரு நாள் முன்னரே சொல்லிவிட வேண்டும், கும்பலாக சுமார் பத்து பேர் வரை இருந்தால்   இன்னும் முன்னரே சொல்ல வேண்டி வரும் !
மரங்களுக்கு இடையில் இருப்பதால் சாப்பிடும் முன் சற்று நன்கு இளைப்பாறலாம், பின்னர் உள்ளே  செல்ல வெள்ளை வேட்டி சட்டையில் கைகளை கூப்பி வீட்டிற்க்கு விருந்தாளியை வரவேற்ப்பது போன்று சிரித்த முகத்துடன் வரவேற்ப்பதுதான் இந்த UBM கெடா விருந்தின் ஓனர். உட்கார வைத்து சுமார்  இரண்டு அல்லது இரண்டரை அடி வாழை இலையை உங்கள் முன் போடும்போது சின்ன இலையா கொடுங்க என்று மட்டும் சொல்லி விடாதீர்கள், விரைவில் அந்த இலை பற்றவில்லை என்று சொல்ல வேண்டி வரும்.

அந்த இலையில் தண்ணீர் தெளித்து முடித்தவுடனே கை வலிக்கிறது, அவ்வளவு பெரிசு. நல்ல வெள்ளை நிறத்தில் சாதம் கொஞ்சமாக வைக்க, இன்னும் கொஞ்சம் என்று நாங்கள் கேட்க, இது சைடு டிஷ் மெயின் அயிட்டம் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிகீங்க என்றார்..... நாங்கள் குழப்பத்துடன் பார்த்தோம். அடுத்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக இலையை நிரப்ப எங்களுக்கு இங்கு சாப்பிடாமலேயே வயிறு நிரம்ப ஆரம்பித்தது. ஒரு ஆட்டை காது, வாய், கால் என்று பார்த்திருக்கிறேன் ஆனால் இங்கு ரத்த பொரியல், குடல் குழம்பு, ஆட்டுக்கால் பாயா, மூளை பொரியல், மட்டன் சுக்கா என்று பல வகையில் முதலில் பார்த்தேன் ! அடுத்து நாட்டுக்கோழி, வான்கோழி, புறா என்று எல்லாம் இலையில் வந்தன....... மெதுவாக எங்களது வேட்டை ஆரம்பம் ஆனது !
உண்மையாகவே சாதம் என்பது தொட்டுக்கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க கூடாது என்று அன்பான கட்டளை வேறு ! பாதி சாப்பிடும்போதே அடுத்த அடுத்த அயிட்டம் வர ஆரம்பிக்க எங்களுக்கு மயக்கம் வர ஆரம்பித்தது. என்ன என்ன அயிட்டம் என்று தெரிய வீடியோ இணைத்திருக்கிறேன், பாருங்களேன் !! பொறுமையாக..... மிக பொறுமையாக சாப்பிடலாம் இங்கு, கேட்க்க கேட்க்க வருகிறது. அதுவும் கடைசியில் ரோஜா குல்கந்து போட்டு அதன் மேல் புளிக்காத தயிர் போட...... அட அட அட என்ன ருசி !

சாப்பிட்டு முடித்தவுடன் வெளியில் வரும்போது வெத்தலை பாக்கு, ஐஸ் கிரீம் பல பல வகைகளில் என்று இருந்தது. எல்லாம் சாப்பிட்டுவிட்டு அந்த மர நிழலில் ஒரு மலை பாம்பு போல படுத்து இருப்பது அவ்வளவு சுகம் !!


பஞ்ச் லைன் :

சுவை - ஒரு அசைவ உணவு அதுவும் இவ்வளவு வகையாக, ருசியாக வீட்டுக்கு விருந்து சென்றது போல உணர்வு வருகிறது ! நல்ல சுவை !!

அமைப்பு - ஒரு சிறிய தோப்பு வீடு, கார் வெளியே ரோட்டில் பார்க் செய்யலாம். போன் செய்துவிட்டு செல்லவும், இல்லையென்றால் சாப்பாடு கிடைக்காது.

பணம் - ஒரு சாப்பாட்டின் விலை 500 ரூபாய் !

சர்வீஸ் - அருமையான கவனிப்பு, ஒரு சொந்தக்காரரின் வீடிற்கு சென்று வந்த உணர்வு வரும்.

Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, keda virunthu, erode, near erode, UBM, thoppu keda virunthu, best non veg food, near kunnathur, must have food, mouth watering, all types of non veg, unlimited food

Monday, March 2, 2015

அறுசுவை(சமஸ்) - ரத்னா கபே இட்லி - சாம்பார் !!

சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணம் புத்தகத்தின் ரசிகன் நான் என்பதும், அவர் சென்ற பாதையில் சென்று அந்த உணவகத்தினை கண்டு, சுவைத்து  பகுதியை எழுதி வருகிறேன் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்..... தெரியாத விஷயம் என்பது எவ்வளவு தூரம் அதற்காக பயனபடுவேன் என்பதும், சிரமபடுவேன் என்பதும்தான் ! சென்ற முறை சென்னை சென்று இருந்தபோது சமஸ் அவர்கள் எழுதி இருந்த ரத்னா கபே சாம்பாரும், இட்லியும் சென்று சாப்பிட வேண்டும் என்று வயிற்ரை காய வைத்து காத்திருந்தேன். சென்னையில் மிகவும் பிஸியான திருவல்லிகேணியில் ரத்னா கபே இருக்கிறது என்கிற விவரம் மட்டுமே தெரியும்....... என்னோடு துணைக்கு வந்தனர் திரு.கோவை ஆவி மற்றும் திரு.மெட்ராஸ் பவன் சிவகுமார் !!
திருவல்லிக்கேணி என்று சொன்னாலே ஒண்டி குடித்தன வீடுகளும், டிராபிக் மிகுந்த சாலைகளுமே யாபகம் வரும். இரு சக்கர வாகனங்களில் சென்றால் கொஞ்சம் பார்க் செய்யலாம், இல்லையென்றால் தலைகீழாக நின்றாலும் பார்கிங் கிடைக்காது என்ற நிலைமையில் ஆட்டோ பிடித்து சென்றோம். திருவல்லிக்கேணி ஹை ரோட்டில் இருக்கும் இந்த கட்டிடத்தை யாரிடம் கேட்டாலும் சொல்லும் அளவுக்கு இந்த இடம் புகழ் பெற்றது, அதுவும் இங்கு கிடைக்கும் சாம்பார் என்பது யாரையும் சப்பு கொட்ட வைப்பது. தூரத்திலேயே ரத்னா கபே என்று மஞ்சள் போர்டில் தெரிந்தது கண்டு உற்சாகமானோம். உள்ளே நுழைய வட இந்திய ஸ்வீட் வகைகள் முன்னே இருக்க, சற்று உள்ளே சென்றால் உட்கார்ந்து சாப்பிட இடம் கிடைக்கிறது.


என்ன வேண்டும் என்று சர்வர் கேட்கும்போதே, பக்கத்தில் இருக்கும் மேஜையில் எல்லோரும் இட்லி, தோசை என்று சாப்பிட்டாலும் பக்கத்தில் சாம்பார் வைத்துக்கொண்டு இருப்பதை பார்த்து ரெண்டு இட்லி என்றோம் எல்லோரும். இங்கு இட்லி-சாம்பாருக்கும், சாம்பார் இட்லிக்கும் இருக்கும் வித்தியாசத்தை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். பொதுவாக ஹோடேலில் இட்லி என்று சொல்லி அது வரும்போது ஒரு சின்ன கப்பில் சாம்பாரும், அதை விட சிறிய கப்பில் சட்னியும் வரும். ஒரு சிறு இட்லி துண்டை எடுத்து அந்த சாம்பார் கப்பில் விட அந்த சாம்பாரில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு அந்த இட்லி துண்டு வரும், இப்படி நீங்கள் ஒரு இட்லியை சாப்பிட்டு முடித்து இருக்கும்போது இப்போது சாம்பார் கப்பை பார்த்தால் தண்ணீர் எல்லாம் உறிஞ்சி எடுத்தபின் இப்போது பருப்பும், வெங்காயமும், கொத்தமல்லியும் என்று இருக்கும். இப்போது மீண்டும் சாம்பார் வாங்கி, மீண்டும் இட்லி தொட்டு என்று முடிக்கும்போது கடைசி வரையில் நீங்கள் சாம்பார் தண்ணீரை மட்டுமே சாப்பிட்டு இருப்பீர்கள் !! இதுவே சாம்பார் இட்லி எனும்போது அதை ஊற வைத்து கொண்டு வருவார்கள், இதில் இட்லியின் உட்புறம் வரை ஊறி இருக்கும்போது ஒவ்வொரு இட்லி துண்டையும் சாப்பிடும்போது சாம்பாரை குடிப்பது போல மட்டுமே இருக்கும்........ இட்லி - சாம்பார் சாப்பிட்டது போல இருக்காது ?!சாம்பார்...... இதில் எத்தனை வகை இருக்கிறது என்று தெரியுமா ? டிபன் என்றாலும், சாப்பாடு என்றாலும் இதை போட்டு சாப்பிடும்போது வரும் ருசியே தனி. வெங்காய சாம்பார், சின்ன வெங்காய சாம்பார், அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார், கீரை சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், மாங்காய் சாம்பார், பீட்ரூட் சாம்பார், கத்திரிக்காய் சாம்பார், பலா கொட்டை சாம்பார் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதில் சின்ன வெங்காய சாம்பார் என்பது மிகவும் ஸ்பெஷல்,  நன்கு வேக வைக்கப்பட்ட சின்ன வெங்காயத்தை எடுத்து பிதுக்கி, அதை சுவைக்கும்போது தெரியும் சுவையே தனி. இந்த சாம்பாரில் துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, புளி, பெருங்காயம், உப்பு, கடுகு, வெங்காயம், சாம்பார் பொடி, மஞ்சள் பொடி என்று எல்லாம் சேர்ந்து கொஞ்சம் கருவேப்பில்லை போட்டு இறக்கும்போது இங்கே பசிக்க ஆரம்பித்து விடும்....... அதை இட்லிக்கு விட்டு சாப்பிடுவது என்பது தனி கலை மற்றும் சுவை இல்லையா ?!
ரெண்டு இட்லி வாங்கிகிட்டு, தொட்டுக்க எதையும் காணோமே அப்படின்னு யோசிக்கும்போது ஒரு சின்ன வாளியில் சாம்பார் எடுத்துக்கொண்டு வந்து மிகவும் தாராளமாய் இட்லி மீது ஊற்றுகின்றனர். அது அந்த வெள்ளை நிற இட்லியில் தாவி ஓடி சிறிது நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய வீடு போல இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும். ஒரு நிமிடம் மூழ்கிய இட்லிக்கு நாம் மவுன அஞ்சலி செலுத்தும்போது, அந்த இட்லியில் சாம்பார் இறங்கி ஊறி இருக்கும், இப்போது நாம் ஸ்பூன் கொண்டு துழாவி ஒரு சிறு துண்டை எடுத்து வாயில் வைக்க, அந்த பருப்பு அரைத்து ஊற்றப்பட்டு, வெங்காயத்தின் சுவையும் சேர்ந்து இட்லி சாம்பார் என்பது அமுதத்திற்கு இணையாக இங்கே உள்ளே இறங்கி கொண்டு இருக்கும் ! அரை இட்லி முடிக்கும் முன்னரே அந்த சாம்பார் காலியாகி விட்டு இருக்க, இப்போது சாம்பார் என்று கேட்க மீண்டும் அந்த இட்லியை மூல்கடிக்கிண்ட்றனர், மீண்டும் அரை இட்லி, மீண்டும் சாம்பார்....... என்று திருப்தியாக சாப்பிட்டு விட்டு பில் கேட்கும்போது தோன்றும், நல்ல வேளை இட்லிக்கு மட்டும் பில் போட்டு இருக்காங்க, சாம்பாருக்கு போட்டு இருந்தால் சொத்தைத்தான் எழுதி வைக்கணும் என்று ! திருப்தியாக சாப்பிட்டு வெளியே வரும்போது யாரேனும் என்ன சாப்பிட்டீங்க என்று கேட்டால் இட்லி என்று வாயிலிருந்து வந்தாலும், ஒரு அண்டா சாம்பார் குடித்ததை எப்படி சொல்வது என்ற வெட்கம் இங்கே இருந்தே தீரும் !
இட்லி சாம்பார் பிரியர்கள் மறக்காமல் போக வேண்டிய இடம் இது, எந்த உணவு சாப்பிட்டாலும் இங்கு கொஞ்சம் சாம்பார் கேட்பதை பார்க்கலாம். விலையும் கொஞ்சம் சீப்தான் என்றே தோன்றுகிறது, அடுத்த முறை திருவல்லிக்கேணி பக்கம் சென்றால் ஒரு பக்கெட் சாம்பார் குடித்துவிட்டு வர வாழ்த்துக்கள்....... சாப்பிட்டு வெளியே வரும்போது, நிறைகுடம் நீர் (சாம்பார்) தளும்பல் இல்லை என்பது தெரியும் !!

திருவல்லிகேணியில் எங்கு என்று பார்த்துகொள்ளவும்.....
Labels : Suresh, Kadalpayanangal, Chennai, Rathna café, Ratna café, idli, idly, sambaar, sambhar, best idly sambar, triplicane, near marina beach, samas, arusuvai, tasty, food