Friday, March 20, 2015

ஊர் ஸ்பெஷல் - உடன்குடி கருப்பட்டி (பகுதி - 1) !!

இன்றைய காலகட்டங்களில் கருப்பட்டி என்று சொன்னாலே ஐயே என்று முகம் சுளிக்கும்படி ஆகிவிட்டது எனலாம். இன்று எங்கும் எதிலும் சர்க்கரை என்றாகிவிட்ட சூழலில் கருப்பட்டி தேடி செல்வது என்பது கேலிகூத்து என்றுதான் நினைத்தேன், ஆனால் மக்கள் இன்றும் இதன் மேல் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று புரிந்தது ! இன்றும் தென்மாவட்டங்களில் கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துகின்றனர் என்பதை காண முடிந்தது. நகரத்தில் பிறந்து வளர்ந்து பனை மரம் பார்க்காமல் வளர்ந்த இந்த தலைமுறைக்கு பனை மரம் என்பதன் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்ககூடியது என்பது தெரியுமா ? கருப்பட்டி என்பதின் மருத்துவ குணங்கள் தெரியுமா ? ஒரு பனை மரம் சுனாமியையும் தாங்ககூடிய வலிமை உடையது என்பது தெரியுமா ? நமது தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் பனை ஓலையில் எழுதப்பட்டது என்பது தெரியுமா ? கருப்பட்டி உடம்புக்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா ? ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்...... இந்த பயணம் பல ஆச்சர்யங்களை தந்தது என்றால் மிகையில்லை !! 









உடன்குடி (ஆங்கிலம்:Udangudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். உடன்குடி என்ற சொல் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து உருவானது.'உடை'என்பது இந்த ஊரைச் சுற்றி உடை மரங்கள் இருந்தன. 'குடி' என்பது கிராமம் அல்லது மக்கள் கூட்டம்.இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து 'உடன்குடி' என்றானது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும். இது திருசெந்தூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம். திருசெந்தூரில் இருந்து இரு பக்கமும் பனை மரங்கள் அடர்ந்த ரோட்டில் பயணம் செய்தால் வரும் இந்த ஊர், மிகவும் அமைதி எனலாம் !




நம் தமிழ் நாட்டின் மாநில மரம் எது தெரியுமா ? உங்களை போலவே நானும் தலையை சொரிந்தேன், அந்த கருப்பட்டி செய்பவர் என்னை இந்த கேள்வி கேட்க்கும் வரை ! பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்க படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. சேலம், சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

சார்... பனை மரம் சார்......... சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅர் பனை மரம் !



சர்க்கரை பல தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது அதில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை.  சர்க்கரையை கரும்பினால் செய்கின்றோம், வெல்லம் என்பதில் இரு வகை உண்டு..... கரும்பு வெல்லம், பனை வெல்லம் ! கருப்பட்டி என்பது பனையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. இதில் பனை வெல்லம் என்பதை கருப்பட்டி என்கிறோம் ! கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் பனாட்டு என்றும் வழங்கப்பட்டது. கருப்புக்கட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும். கரும்பஞ்சாறு எப்படி கருப்பஞ்சாறு ஆனதோ, அது போல. இன்று கருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது.





பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக. பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி. சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இதை லிட்டர் 10 ரூபாய்க்கு வாங்கி, 20 ரூபாய் வரை விற்கிறேன். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்.

பதநீர் எடுத்தாச்சு !


பதநீர் காய்ச்சப்படுகிறது........

இப்படி எடுக்கப்பட்ட பதநீரைதான் காய்ச்சி கருப்பட்டி செய்கின்றனர். அதில் என்னவெல்லாம் அடங்கி இருக்கிறது, எப்படி அப்படி ஒரு வடிவத்தில் செய்கிறார்கள், அதை எப்படி அனுப்புகின்றனர் என்றெல்லாம் அடுத்த வாரம் பார்ப்போமா ?!

Labels : Suresh, Kadalpayanangal, oor special, district special, udangudi, udankudi, karuppatti, jaggery, palm jaggery, how jaggery is made, palm, palm tree, sweet, famous for, udangudi is famous for, sweet trip

9 comments:

  1. பனை தரும் பயன்கள் ஏராளம்...

    கருப்பட்டி காபி சுவைக்கு எதுவும் ஈடாகாது...!

    ReplyDelete
  2. மிக அற்புதமான பதிவு. பனை மரத்தைப் பற்றியும் கருப்பட்டிப் பற்றியும் விரிவான விளக்கங்கள். அனைத்துமே பயன் தரக்கூடியது.
    த ம 2

    ReplyDelete
  3. Hi Suresh,

    I'm a big fan of your blog, almost read new blogs on the same day. We are thankful to you for the time you are spending on writing and sharing these wonderful information.
    Sorry for not commenting to all the posts but today I am posting after a long time because of a need :)
    Do you have any information on buying good quality Udangudi karupatti in Chennai?

    Thanks
    Kumar Kannan

    ReplyDelete
  4. வணக்கம்......................தகவல்கள் அருமை............எனக்குத் தெரிந்த கூடுதல் தகவல்களைத் தருகின்றேன்..............காலையில் பதநீர் இறக்கியபின் மீண்டும் மாலையில் இறக்கினால் அதற்கு மாலைப் பதநீர் என்று பெயர்..............அது மிக சுவையாக இருக்கும்............மேலும் சுண்ணாம்பு சேர்க்கப்படாத பதநீர் புளிப்பேறி கள்ளாகிவிடும்....................அதில் ஒருமரத்துக் கள்ளிற்கு போதை அதிகம்............பதநீரில் மாம்பழம், இளம் நுங்கு சேர்த்துச் சாப்பிட்டால் சுவை அற்புதம்............மேலும் பனையிலிருந்து பனம்பழம் கிடைக்கும்.................இதை கருப்பட்டி சேர்த்து அவித்துச் சாப்பிட சுவையாய் இருக்கும்...............மேலும் பனம் கொட்டையை தேரி மண்ணில் புதைத்து வைத்து பனம்கிழங்கு உற்பத்தி செய்வார்கள்............அதை சுட்டோ..........மஞ்சள் தடவி அவித்து அப்படியேவோ அல்லது இஞ்சி பூண்டு சேர்த்து இடித்தோ சாப்பிடலாம்...............கருப்பட்டி சேர்த்தும் அவித்துச் சாப்பிடலாம்..........நன்றி.........

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  6. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  7. So so informative... very good

    ReplyDelete
  8. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete