Monday, March 2, 2015

அறுசுவை(சமஸ்) - ரத்னா கபே இட்லி - சாம்பார் !!

சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணம் புத்தகத்தின் ரசிகன் நான் என்பதும், அவர் சென்ற பாதையில் சென்று அந்த உணவகத்தினை கண்டு, சுவைத்து  பகுதியை எழுதி வருகிறேன் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்..... தெரியாத விஷயம் என்பது எவ்வளவு தூரம் அதற்காக பயனபடுவேன் என்பதும், சிரமபடுவேன் என்பதும்தான் ! சென்ற முறை சென்னை சென்று இருந்தபோது சமஸ் அவர்கள் எழுதி இருந்த ரத்னா கபே சாம்பாரும், இட்லியும் சென்று சாப்பிட வேண்டும் என்று வயிற்ரை காய வைத்து காத்திருந்தேன். சென்னையில் மிகவும் பிஸியான திருவல்லிகேணியில் ரத்னா கபே இருக்கிறது என்கிற விவரம் மட்டுமே தெரியும்....... என்னோடு துணைக்கு வந்தனர் திரு.கோவை ஆவி மற்றும் திரு.மெட்ராஸ் பவன் சிவகுமார் !!




திருவல்லிக்கேணி என்று சொன்னாலே ஒண்டி குடித்தன வீடுகளும், டிராபிக் மிகுந்த சாலைகளுமே யாபகம் வரும். இரு சக்கர வாகனங்களில் சென்றால் கொஞ்சம் பார்க் செய்யலாம், இல்லையென்றால் தலைகீழாக நின்றாலும் பார்கிங் கிடைக்காது என்ற நிலைமையில் ஆட்டோ பிடித்து சென்றோம். திருவல்லிக்கேணி ஹை ரோட்டில் இருக்கும் இந்த கட்டிடத்தை யாரிடம் கேட்டாலும் சொல்லும் அளவுக்கு இந்த இடம் புகழ் பெற்றது, அதுவும் இங்கு கிடைக்கும் சாம்பார் என்பது யாரையும் சப்பு கொட்ட வைப்பது. தூரத்திலேயே ரத்னா கபே என்று மஞ்சள் போர்டில் தெரிந்தது கண்டு உற்சாகமானோம். உள்ளே நுழைய வட இந்திய ஸ்வீட் வகைகள் முன்னே இருக்க, சற்று உள்ளே சென்றால் உட்கார்ந்து சாப்பிட இடம் கிடைக்கிறது.


என்ன வேண்டும் என்று சர்வர் கேட்கும்போதே, பக்கத்தில் இருக்கும் மேஜையில் எல்லோரும் இட்லி, தோசை என்று சாப்பிட்டாலும் பக்கத்தில் சாம்பார் வைத்துக்கொண்டு இருப்பதை பார்த்து ரெண்டு இட்லி என்றோம் எல்லோரும். இங்கு இட்லி-சாம்பாருக்கும், சாம்பார் இட்லிக்கும் இருக்கும் வித்தியாசத்தை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். பொதுவாக ஹோடேலில் இட்லி என்று சொல்லி அது வரும்போது ஒரு சின்ன கப்பில் சாம்பாரும், அதை விட சிறிய கப்பில் சட்னியும் வரும். ஒரு சிறு இட்லி துண்டை எடுத்து அந்த சாம்பார் கப்பில் விட அந்த சாம்பாரில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டு அந்த இட்லி துண்டு வரும், இப்படி நீங்கள் ஒரு இட்லியை சாப்பிட்டு முடித்து இருக்கும்போது இப்போது சாம்பார் கப்பை பார்த்தால் தண்ணீர் எல்லாம் உறிஞ்சி எடுத்தபின் இப்போது பருப்பும், வெங்காயமும், கொத்தமல்லியும் என்று இருக்கும். இப்போது மீண்டும் சாம்பார் வாங்கி, மீண்டும் இட்லி தொட்டு என்று முடிக்கும்போது கடைசி வரையில் நீங்கள் சாம்பார் தண்ணீரை மட்டுமே சாப்பிட்டு இருப்பீர்கள் !! இதுவே சாம்பார் இட்லி எனும்போது அதை ஊற வைத்து கொண்டு வருவார்கள், இதில் இட்லியின் உட்புறம் வரை ஊறி இருக்கும்போது ஒவ்வொரு இட்லி துண்டையும் சாப்பிடும்போது சாம்பாரை குடிப்பது போல மட்டுமே இருக்கும்........ இட்லி - சாம்பார் சாப்பிட்டது போல இருக்காது ?!



சாம்பார்...... இதில் எத்தனை வகை இருக்கிறது என்று தெரியுமா ? டிபன் என்றாலும், சாப்பாடு என்றாலும் இதை போட்டு சாப்பிடும்போது வரும் ருசியே தனி. வெங்காய சாம்பார், சின்ன வெங்காய சாம்பார், அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார், கீரை சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், மாங்காய் சாம்பார், பீட்ரூட் சாம்பார், கத்திரிக்காய் சாம்பார், பலா கொட்டை சாம்பார் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இதில் சின்ன வெங்காய சாம்பார் என்பது மிகவும் ஸ்பெஷல்,  நன்கு வேக வைக்கப்பட்ட சின்ன வெங்காயத்தை எடுத்து பிதுக்கி, அதை சுவைக்கும்போது தெரியும் சுவையே தனி. இந்த சாம்பாரில் துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, புளி, பெருங்காயம், உப்பு, கடுகு, வெங்காயம், சாம்பார் பொடி, மஞ்சள் பொடி என்று எல்லாம் சேர்ந்து கொஞ்சம் கருவேப்பில்லை போட்டு இறக்கும்போது இங்கே பசிக்க ஆரம்பித்து விடும்....... அதை இட்லிக்கு விட்டு சாப்பிடுவது என்பது தனி கலை மற்றும் சுவை இல்லையா ?!




ரெண்டு இட்லி வாங்கிகிட்டு, தொட்டுக்க எதையும் காணோமே அப்படின்னு யோசிக்கும்போது ஒரு சின்ன வாளியில் சாம்பார் எடுத்துக்கொண்டு வந்து மிகவும் தாராளமாய் இட்லி மீது ஊற்றுகின்றனர். அது அந்த வெள்ளை நிற இட்லியில் தாவி ஓடி சிறிது நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய வீடு போல இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும். ஒரு நிமிடம் மூழ்கிய இட்லிக்கு நாம் மவுன அஞ்சலி செலுத்தும்போது, அந்த இட்லியில் சாம்பார் இறங்கி ஊறி இருக்கும், இப்போது நாம் ஸ்பூன் கொண்டு துழாவி ஒரு சிறு துண்டை எடுத்து வாயில் வைக்க, அந்த பருப்பு அரைத்து ஊற்றப்பட்டு, வெங்காயத்தின் சுவையும் சேர்ந்து இட்லி சாம்பார் என்பது அமுதத்திற்கு இணையாக இங்கே உள்ளே இறங்கி கொண்டு இருக்கும் ! அரை இட்லி முடிக்கும் முன்னரே அந்த சாம்பார் காலியாகி விட்டு இருக்க, இப்போது சாம்பார் என்று கேட்க மீண்டும் அந்த இட்லியை மூல்கடிக்கிண்ட்றனர், மீண்டும் அரை இட்லி, மீண்டும் சாம்பார்....... என்று திருப்தியாக சாப்பிட்டு விட்டு பில் கேட்கும்போது தோன்றும், நல்ல வேளை இட்லிக்கு மட்டும் பில் போட்டு இருக்காங்க, சாம்பாருக்கு போட்டு இருந்தால் சொத்தைத்தான் எழுதி வைக்கணும் என்று ! திருப்தியாக சாப்பிட்டு வெளியே வரும்போது யாரேனும் என்ன சாப்பிட்டீங்க என்று கேட்டால் இட்லி என்று வாயிலிருந்து வந்தாலும், ஒரு அண்டா சாம்பார் குடித்ததை எப்படி சொல்வது என்ற வெட்கம் இங்கே இருந்தே தீரும் !




இட்லி சாம்பார் பிரியர்கள் மறக்காமல் போக வேண்டிய இடம் இது, எந்த உணவு சாப்பிட்டாலும் இங்கு கொஞ்சம் சாம்பார் கேட்பதை பார்க்கலாம். விலையும் கொஞ்சம் சீப்தான் என்றே தோன்றுகிறது, அடுத்த முறை திருவல்லிக்கேணி பக்கம் சென்றால் ஒரு பக்கெட் சாம்பார் குடித்துவிட்டு வர வாழ்த்துக்கள்....... சாப்பிட்டு வெளியே வரும்போது, நிறைகுடம் நீர் (சாம்பார்) தளும்பல் இல்லை என்பது தெரியும் !!

திருவல்லிகேணியில் எங்கு என்று பார்த்துகொள்ளவும்.....




Labels : Suresh, Kadalpayanangal, Chennai, Rathna café, Ratna café, idli, idly, sambaar, sambhar, best idly sambar, triplicane, near marina beach, samas, arusuvai, tasty, food

11 comments:

  1. வணக்கம்
    நல்ல சுவையான உணவு உள்ள இடத்தை சொல்லியுள்ளீர்கள் நிச்சயம் தெரிந்த நண்பர்களுக்கு சொல்லுகிறேன்.. நாங்கள் இந்தியா வந்தால் பார்க்கிறோம்..... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஸ்பூன் எல்லாம் எப்படி ஜி சரிப்பட்டு வரும்...?

    ReplyDelete
  3. ஹஹஹா.. அந்த சாம்பார் சுவை இன்னும் நன்றாக என் நினைவில் இருக்கு..!

    ReplyDelete
  4. Licking the saampar finger will be finishing touch. No spoons suites for me

    ReplyDelete
  5. எங்க ஹாஸ்டல் விக்டோரியா முன்னாடி தான் சார் இந்த இடம்!! ஒவ்வொரு முறையும் சாலையை கடக்கும்போது இந்த போர்டை படித்திருக்கிறேன்,ஆனாலும் ஒருபோதும் உள்ளே போனதில்லை!!

    ReplyDelete
  6. ரொம்..........ப நாள் ஆச்சு. மறுபடி ஒருதரம் போகணும்.

    ReplyDelete
  7. திருவல்லிக்கேணி சென்றதுண்டு! இங்கு சென்றதில்லை! பார்ப்போம்! நன்றி!

    ReplyDelete
  8. சரியா சாப்பாட்டு நேரத்துல படிச்சேன்....... சாம்பாரை அப்படியே குடிக்கணும் போல இருக்கு ! !

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு சார் ..பணிக்கு சென்று திருபியவுடன் உங்கள் இப் பதிவு பசியை கிளப்பி விட்டது . அடுத்த முறை இந்தியா வரும் போது இங்கு செல்ல நினைக்கிறன் ...ஒரு விஷயம் , சைவ உணவு விலை ஏன் இவ்வளோ அதிகம் ?? மெது வடை ,நெய் தோசை விலை எல்லாம் ஏறத்தாழ இலங்கை விலையை விட அதிகமா இருக்கு ??? - நன்றி

    ReplyDelete
  10. அடுத்த வாரம் சென்னை செல்கிறேன். நேரம் இடம் கொடுத்தால் ரத்னா கபே போய் சாப்பிட்டு வருவேன்.

    ReplyDelete