Wednesday, March 25, 2015

சாகச பயணம் - ஓடத்தில் ஒரு பயணம் !!

"முதல் மரியாதை" படம் பார்த்தபோது ராதா, ஒரு வட்டமான படகை துடுப்பு போட்டு ஓட்டுவார். சிறு வயதில் இருந்து தண்ணீரில் செல்லவென்று படகு என்று ஒன்று இருக்கும், அது நீளமான வடிவத்தில் இருக்கும் என்று படித்தும், கத்தி கப்பல் செய்தும் இருக்கும் நாம் திடீரென்று இப்படி வட்ட வடிவில் ஒரு படகை பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருக்கத்தானே செய்யும். பின்னாளில் அதன் பெயர் ஓடம் என்று கேள்விப்பட்டது, தண்ணீர் வற்றிய காவிரி ஆற்றில் எப்படி இந்த படகுகள் போகும், அதுவும் டெக்னாலஜி என்று வந்து பாலம் எல்லாம் கட்டியபின் இந்த ஓடங்கள் எல்லாம் மறைந்தே விட்டன..... இருந்தாலும் சிறு வயதில் இருந்து ஒரு முறையாவது இந்த ஓடத்தில் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்துகொண்டே இருந்தது !


இது எங்கு இருக்கும் என்று கேட்டதற்கு பலரும் ஓகேனக்களில் இன்றும் இருக்கிறது என்றனர், அங்கு செல்ல வேண்டும் என்று காத்திருந்தபோதுதான் ஆபீசில் இருந்து பீமேஸ்வரி பிஷிங் கேம்ப் செல்லலாம் என்றனர். அங்கு இதை பார்த்தவுடன் ஆனந்த கூத்தாடியது மனது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது புரண்டு கொண்டு ஓடும் காவேரி, இனிதான வெயிலும் நிழலும், சுற்றிலும் மலைகள் என்று ரம்மியமாக இருந்தது பொழுது. அங்கு கரையின் ஓரமாக அமைதியாக இருந்தது அந்த ஓடம் !!


அதில் செல்ல வேண்டும் என்றபோது எல்லோருமே குழந்தைகள் ஆகி இருந்தனர், அந்த கரை புரண்டு ஓடும் தண்ணீரில் செல்வது என்பது ஒரு சாகசமே என்றாலும் மனதில் பயத்தை விட சந்தோசமே அதிகம் இருந்தது. அந்த துடுப்பை எடுத்துக்கொண்டு ஒரு படகோட்டி போல ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு அந்த ஓடத்தை பார்க்க ஆரம்பித்தேன். இளம் மூங்கில் கொண்டு வடிவமைக்கப்பட்ட அந்த ஓடத்தை, வெளிப்புறத்தில் தார்பாய் கொண்டு நன்கு தண்ணீர் வராமல் சீல் செய்து இருந்தனர். படகை தூக்கி பார்ப்போமே என்று முனைந்ததில் அது ஒன்றும் அவ்வளவு கனமாக இல்லை. ஓடத்தில் உட்கார தயாரானபோது அதில் ஒரு சிறிய ஸ்டூல் போன்று போட்டனர், நமது ஆடைகள் அழுக்காகாமல் இருக்க !!


ஒவ்வொருவராக ஏறி உள்ளே உட்காரும்போது அந்த படகு பயங்கரமாக ஆட ஆரம்பித்தது, சமாளித்து உள்ளே ஏறினேன். எல்லோரும் ஏறி உட்கார்ந்தபின்பு அந்த ஓடம் ஓட்டி (?!) மெதுவாக துடுப்பு போட ஆரம்பித்தார். சல சலவென ஓடும் காவேரியின் குளுமையில் அந்த ஓடம் ஆடி ஆடி செல்ல, சுற்றிலும் மலைகள் என்று மிகுந்த சந்தோசம் தந்தது. யாராவது ஒருவர் ஒரு பக்கம் சாய்ந்தாலும் ஓடம் பயங்கரமாக ஆடியது, அதை ஓடம் ஓட்டி மிகுந்த திறமையாக சமாளித்தார் எனலாம். ஓடத்தில் செல்வது என்பது நிச்சயமாக ஒரு புது விதமான அனுபவம் எனலாம், அதுவும் அந்த மாலை நேரத்து காற்றுடன் செல்வது என்பது நிச்சயம் நினைவில் நிற்கும் ஒன்று !



தண்ணீரின் போக்கில் போய் கொண்டு இருந்த படகை இப்போது எதிர் திசையில் செலுத்த ஆரம்பிக்கும்போதுதான் அந்த ஓடம் ஓட்டியின் கை வலிமை தெரிந்தது, படகில் இருக்கும் அனைவரது எடையையும் அவர் எதிர் திசையில் எடுத்து செல்வது பார்த்து பரிதாபம்தான் வந்தது. ஒரு கட்டத்தில் யாருக்காவது இன்னும் த்ரில் வேண்டுமா என்று கேட்டார், எல்லோரும் ஆமாம் என்றவுடன் அந்த ஓடத்தை அப்படியே சுற்ற ஆரம்பித்தார். சிறிது நேரத்திற்கு நன்றாக இருந்தாலும், பின்னர் தலை பயங்கரமாக சுற்ற ஆரம்பித்தது. போதும் போதும் என்று கூவிய பின் சற்று நிதானிக்க ஆரம்பித்து பின்னர் கரையை நோக்கி செல்ல ஆரம்பித்தது அந்த ஓடம்.



தட்டு தடுமாறி அந்த படகில் இருந்து இறங்கி, தலை சுற்றலுடன் மனதில் சந்தோசத்துடன் நடக்க ஆரம்பிக்க..... அந்த படகு மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தது !!



Labels : Suresh, Kadalpayanangal, sagasa payanam, thrill ride, bheemeshwari, odam, boat ride, country boat ride, ogenakkal, ogenakal boat, round boat ride, amazing ride in cauvery

8 comments:

  1. பரிசல் பயணப் படங்கள் அருமை.

    ReplyDelete
  2. சித்ரதுர்கா அருகே ஒரு டேம்-இல் இதே போன்ற பரிசல் பயணம் வாய்க்கப்பெற்றேன்....

    ReplyDelete
  3. சிலிர்க்க வைக்கும் அனுபவம் தான்...

    ReplyDelete
  4. அதுக்குப் பேரு ஓடம் இல்லை, பரிசல்.

    ReplyDelete
  5. மீன் வருவல் அருமையாக இருக்கும் ஜி

    ReplyDelete
  6. நான் கல்லூரியில் படிக்கும்போது சென்றுயிருக்கிறேன்.வழிநெடிகிலும் மீன் மற்றும் இறைச்சி நாற்றம் வீசும்.பரிசல்கார்ருக்கு கர்நாடக சென்று பாக்கெட் சாரயம் வாங்கி தந்தது இன்னும் நினைவில் இருக்கிறது .

    ReplyDelete