Wednesday, April 29, 2015

அறுசுவை (சமஸ்) - ஆதிகுடி ரவா பொங்கல், திருச்சி !!

சமஸ் அவர்கள் சென்று எழுதிய எல்லா உணவகங்களுமே சுமார் பதினைந்து வருடங்களாகவாவது இருக்கும் உணவகங்கள், அதன் தரத்திலும் சுவையிலும் இன்றளவும் எந்த குறையும் இருக்காதவை. நான் சென்று வந்த உணவகங்களில் காலபோக்கில் உணவகங்கள் மாற்றத்தை கொண்டு வந்து இருந்தன, ஆனால் இந்த ஆதிகுடி காபி கிளப் மட்டுமே அதே தோற்றத்துடன் இருப்பது கண்டு ஆச்சர்யமே..... வெளியில் மட்டும் இல்லை, உள்ளேயும்தான் ! ஒரு ஹோடேலின் அமைப்பே நம்மை அந்த உணர்வுக்கு கொண்டு செல்லும் இல்லையா..... உதாரணமாக பைவ் ஸ்டார் ஹோட்டல் செல்லும்போது உடம்பில் அந்த மிடுக்கும், சாலையோர கையேந்தி பவன் செல்லும்போது "என்ன பண்ணுவே" என்ற மிதப்பும், ஐயர் ஹோட்டல் செல்லும்போது சூடா ஒரு டிகிரி காபி என்று சப்பு கொட்டி குடிப்பதும், மிலிட்டரி ஹோட்டல் செல்லும்போது அந்த சிக்கன் லெக் பீஸ் கடிக்க தயாராவதும் என்று ஒவ்வொன்றுமே ஒவ்வொரு உணர்வை கொண்டு வந்து விடும். அது போலவே, இந்த ஹோடேலில் நுழையும்போது சுமார் இருபது வருடங்கள் பின்னே செல்லும் உணர்வு வரும் !!

முக்கிய குறிப்பு :
பட்டணம் பக்கோடா மாலையில் மட்டுமே
ரவா பொங்கல் காலையில் மட்டுமே கிடைக்கும்





திருச்சி மெயின் கார்ட் கேட் பகுதியில், கெயிட்டி என்று பழைய தியேட்டர் உண்டு, அதை தாண்டி நடந்து சென்றால் திருச்சியில் கவரிங் நகைகாகவே உருவாக்கப்பட்ட தெருவோ என்று சந்தேகப்படும் அந்த தெருவை தாண்டி மெயின் ரோட்டிலேயே தேவர் ஹால் பஸ் ஸ்டாப்பில் அடைத்துக்கொண்டு நிற்கும் ஆட்டோ ஸ்டான்ட் பின்புறம் ஒரு பழைய போர்டில் "ஆதிகுடி காபி கிளப்" என்று கிடைக்கும், அப்படி ஒரு பிஸியான ஏரியாவில் இப்படி ஒரு ஹோட்டல் என்ற ஆச்சர்யம் கண்டிப்பாக இன்னும் மிச்சமிருக்கிறது ! உள்ளே நுழையும்போதே சாமி பாடல்கள் ஒலிக்கிறது, சுவரெங்கும் சுவாமி படங்களும், பழைய மர ஸ்டூல் மற்றும் டேபிள், காசி துண்டு போட்ட சர்வர் என்று நாம் பின்னோக்கி செல்ல ஆரம்பிக்கிறோம்.




உள்ளே சென்று உட்கார என்ன வேண்டும் என்று கேட்க பட்டணம் பக்கோடா என்று சொன்னோம். அது வருவதற்கு முன் இங்கே பக்கோடாவை பற்றி சொல்லியே ஆக வேண்டும்..... வெளியே மொறு மொறுவேன்றும் உள்ளே அப்படியே மெது மெதுவென்றும் இருக்கும் பக்கோடா என்பது எந்த கரடு முரடான மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை ஓளிந்திருக்கும் என்று காட்டுவது போலவே இருக்கும். பக்கோடா என்பதை ஒரு மழை பெய்யும் நேரத்தில் சூடாக ஒரு டீயுடன் சாபிட்டால் சொர்க்கம்தான். போண்டா என்பதில் வெளியிலும் மெதுவாக இருக்கும், ஆனால் பக்கோடா என்பதில் வெளியே கிரிஸ்ப் ஆக இருக்கும், முதல் கடியில் அந்த மொறு மொறுப்பு வாயில் தெரிய அடுத்த கடியில் அந்த மெதுவான சுவை தெரியும். சார், நீங்க கேட்ட பட்டணம் பக்கோடா என்று எனது டேபிளில் வைக்க அதை காதலோடு பார்க்க ஆரம்பித்தேன். இஞ்சி, கொத்தமல்லி, பூண்டு, வெங்காயம் எல்லாம் போட்டு ஒரு சிறு உருண்டையாக பொறித்து எடுக்கப்பட்ட அந்த பக்கோடாவை முதல் கடியிலேயே அந்த சுவையின் மீது மையல் கொள்ள செய்கிறது.



இதை உண்டு முடித்துவிட்டு ரவா பொங்கல் என்று கேட்க, அது காலையில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிய அப்போதிலிருந்தே நான் காத்திருக்க ஆரம்பித்தேன். பொங்கல் என்பது அரிசியில் மட்டுமே செய்ய முடியும், உப்புமா என்பதில் கேரட், கொத்தமல்லி எல்லாம் போட்டு செய்தாலும் அது வேறு என்பது எனது எண்ணமாக இருந்தது. ஆனால், ரவையை நன்கு குழைய வேகவிட்டு அதில் பெரிய மிளகை தூக்கலாக போட்டு, கொஞ்சம் இஞ்சி, சீரகம், கொத்தமல்லி என்று எல்லாம் போட்டு ஒரு வடையோடு சாப்பிட்டால் இவ்வளவு நன்றாக இருக்கும் என்பது தெரியாமல் போய் விட்டது. இதற்க்கு சின்ன வெங்காய சாம்பார் மட்டும் இருந்துவிட்டால் இந்த ரவா பொங்கல் உள்ளே போவதே தெரியாமல் போகும் ஆபத்து இருக்கிறது.



 எப்போதும் இட்லி, தோசை என்று சாப்பிடும் ஆளாக இருந்தால், இங்கு சென்று ஒரு இருபது வருடம் பின்னே சென்று "வோய், இந்த பட்டணம் பக்கோடா கொண்டாரும்.... தரனனனாஆஅ" என்று சாப்பிட இந்த ஆதிகுடி சென்று வாருங்கள்.


Labels : Suresh, kadalpayanangal, arusuvai, samas, best, tasty, adhikudi, adigudi, adhigudi, pattanam pakoda, pakora, rava pongal, famous food, trichy

Tuesday, April 28, 2015

ஊர் ஸ்பெஷல் - புதுக்கோட்டை முட்டை மாஸ் !!

கடந்த சில வாரங்களாக வேலை பளு  என்பதால் இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்க நேரம் இல்லை, போனிலும் மெயில் மூலமும் விசாரிப்புகள்..... நன்றிகள் பல ! இனி வாரம் சில பதிவுகளையாவது போடுகிறேன்....அதில் இந்த வாரம் புதுக்கோட்டை முட்டை மாஸ் !! நான் புதுக்கோட்டையின் எல்லை பகுதியில்தான் இருந்து வந்தேன், அங்கிருந்து திருச்சி பக்கம் என்பதால் புதுக்கோட்டை அவ்வளவாக சென்றதில்லை. இதனால், அங்கு என்ன பேமஸ் என்ற கேள்விக்கு முளிப்பதையே பதிலாக தந்து வந்திருக்கிறேன், ஆனால் இந்த முறை ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு சென்றபோது அங்கு முட்டை மாஸ் பேமஸ் என்பதும் அது புதுக்கோட்டையின் நாக்குகளை அடிமைபடுத்தி வைத்து இருப்பதும் தெரிந்து நானும் சுவைத்தேன்...... சும்மா சொல்லக்கூடாது சுவை பின்னி எடுக்கிறது !


புதுகோட்டையில் எங்கு முட்டை மாஸ் சாப்பிடலாம் என்று தேடிபார்த்தால், அதை இந்த சமூகத்துக்கு அறிமுகம் செய்தது முத்துபிள்ளை கேண்டீன் என்று தெரிந்தது. அதை தேடி செல்ல அது தெற்கு வீதியில் இருந்தது, அதன் எதிரில் மாநகராட்சி கட்டிடம். மதிய வெயிலில் உள்ளே சென்று உட்கார, நல்ல காற்றோட்டமான இடத்தில் பெரிதாக இருந்த ஹோடேலில் ஒரு இடத்தை தேடி உட்கார்ந்தோம். என்ன சொல்ல என்று சுற்றி பார்க்கும்போதே எல்லோரும் ஆர்டர் செய்யும்போது முட்டை மாஸ் என்று சொல்ல எங்களுக்கும் ஒன்னு என்றோம். அதனோடு பரோட்டாவும், குஸ்காவும் சொல்ல பக்கத்து இலையில் இப்போது பார்வை செல்ல ஆரம்பித்தது.


                                           

பரோட்டவிர்க்கு சால்னா என்பது அமிர்தத்துக்கு சமானம், அதிலும் சால்னா நன்றாக இருந்துவிட்டால் இரண்டு பரோட்டவிர்க்கு ஒரு வாளி சால்னா சாப்பிடும் ஆட்கள் நம்மவர்கள். இன்னும் சிலர் அதை தோசை, ஆம்பலேட், ஹாப் பாயில் என்று சால்னா ஊற்றி சாப்பிடுவார்கள். அதையே அவித்த முட்டையில் செய்தால் ?! ஒரு அவித்த முட்டையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக செய்து அதை கல்லில் கொஞ்சம் வெங்காயம் போட்டு வதக்கி கொண்டே அதில் கொஞ்சம் சால்னாவை ஊற்ற இப்போது வெள்ளை முட்டை இங்கே பொன்னிறமாக மாறுகிறது. இப்போது அதை பிரட்டி பிரட்டி போட அந்த மஞ்சள் கருவும் சால்னாவோடு சேர ஒரு சுவையும், அந்த வாசனையும் என்று அமோகம் ! அதை கொண்டு வந்து எங்களது முன்னே வைக்க நாங்கள் மூக்கால் நுகர்ந்த வேகத்தை பார்த்தால் தோசை கல்லே பறந்து வரும் போன்று இருந்ததால் எங்களை ஒரு மாதிரி பார்த்தார். அப்போது, எங்களது பக்கத்து டேபிளில் வேறு விதமான முட்டையை வைக்க அது என்ன என்று கேட்க அது வேறு விதமான முட்டை மாஸ் என்றார்...... முட்டை மாஸ் என்பதில் நான்கு வகையாம்..... நார்மல் மாஸ், பொடி மாஸ், கோல்டன் மாஸ், பெப்பர் மாஸ் என்று, அப்போ மற்ற எல்லாத்தையும் கூட கொண்டு வாங்க என்று சொல்ல, அவர் இப்போது சந்தேகமாக பார்க்க ஆரம்பித்தார்...... பாஸ், நாங்க சாப்பிடுவோம் கொண்டு வாங்க என்று சொல்லிவிட்டு இப்போது நார்மல் மாசை காதலோடு பார்க்க ஆரம்பித்தோம் !!


புதுக்கோட்டை முட்டை மாஸ்..... பொடி  மாஸ் !
பரோட்டாவை ஒரு சிறு பீஸாக பியித்து அந்த முட்டை மாஸை கொஞ்சமாக எடுத்து வாயில் வைக்க, இளையராஜா பின்னணி இசையில் தனனம்தனனும் என்று பாடுவது மைண்ட் வாயிசில் கேட்டது. இப்போது வாயில் அந்த முட்டை பீசும், சால்னாவும் ஒரு இணை பிரியாத காதலர்கள் போல சுற்றி வர ஆரம்பிக்க அதில் பரோட்டா இது தாங்காதுடா சாமி என்று உள்ளே ஓடிவிட இப்போது முட்டை மாஸும் நானும் மட்டுமே.... வாயில் ஒரு வாட்டர் பால்ஸ் உருவாகி மெது மெதுவாக இறங்கியது. உண்மையிலேயே இதுவரை அவித்த முட்டையில் இவ்வளவு ருசியாக ஒரு டிஷ் செய்ய முடியும் என்பது தெரியாமல் போய் விட்டதே !!


பெப்பர் மாஸ் மற்றும் கோல்டன் மாஸ் !
புதுகோட்டை ஒரிஜினல் முட்டை மாஸ் !!
அடுத்து வந்த பொடி மாஸ், பெப்பர் மாஸ் மற்றும் கோல்டன் மாஸ் என்று எல்லாமுமே பரோட்டாவை சைடு டிஷ் ஆக்கிவிட்டது எனலாம். பெயர்க்கு ஏற்றார் போல பெப்பர் தூக்கலாக பெப்பர் மாசும், முட்டையில் தக்காளி போட்டு வேறு விதமாக வெட்டி கோல்டன் மாஸ் என்பதும், முட்டையை பொடி பொடியாக வெட்டி அதில் குழம்பு ஊற்றி வெங்காயம் போட்டு பிரட்டிய பொடி மாஸ் என்பதும் வெறும் முட்டையாக இருந்தது ஒரு சுவையான பல வகையான முட்டை மாஸ் ஆகி நம்மை சிறைபிடிக்கிறது என்பது நிஜமே. அடுத்த முறை புதுக்கோட்டை செல்பவர்கள் கண்டிப்பாக புதுக்கோட்டையில் முட்டை மாஸ் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் !


Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, oorum rusiyum, oor special, district special, district taste, pudukkottai, muttai mass, egg mass, famous dish, tasty

Monday, April 6, 2015

உணவு வேட்டை - மாஸ்டர்.... சூடா ஒரு டீ !!

என்னோடு இதுவரை சேர்ந்து பயணித்தவர்களுக்கு தெரியும் நான் எழுதும் விஷயங்களிலும், தேடலிலும் எந்த முனைக்கும் செல்வேன் என்று. இந்த பகுதி மிகவும் புதிது, இதன் தேடலின் ஆழமும் புதிது ! இந்த வருடத்தின் புதிய பகுதிகள் என்று இதை அறிமுகபடுத்தி இருந்தேன், அப்போதே நிறைய பேர் என்ன என்னவென்று விசாரித்தனர்....... அதுவே, "உணவு வேட்டை",  பொதுவாக வேட்டை என்று சொல்லும்போது ஒரு உணவு குறிவைக்கப்பட்டு இருக்கும், அதை மெல்ல மெல்ல நெருங்கி, அதை நோக்கி பின்னர் பாய்ச்சலாக பாய்ந்து, உணவை கவ்வி எடுத்துக்கொண்டு பின்னர் மெதுவாக மிக மெதுவாக ரசித்து உண்பதை வேட்டை என்போம்...... அதுவே இங்கும் நடந்தது, ஒரு உணவு அதை தேடிய நெடிய பயணம் என்று இருக்கும். இதன் தேடல் மிகவும் அதிகம் என்பதால் ஒரு அல்லது இரு வருடங்களுக்கு ஒரு தொடர் பதிவு என்பது போல இருக்கும். அது சரி, என்ன உணவு என்கிறீர்களா..... டீ !! என்ன டீயா, அதை பற்றி எழுத என்ன இருக்கு என்பவர்களுக்கு....... நிறைய இருக்கு பாஸ் !!



ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், நான் ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு அலைந்து திரிந்து விஷயங்களை சேகரிக்கும் விதத்தை பார்த்த நண்பர் ஒருவர், நாங்கள் டீ சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது, போட்டோ எடுக்கலையா என்றார். நான் குழப்பத்துடன் பார்க்க, எதை சாப்பிட்டாலும் போட்டோ எடுப்பியே அதனால கேட்டேன்..... அது சரி, டீயை பற்றி என்ன எழுத முடியும், அதுல டீ தூள், பால் மட்டும்தானே இருக்கு என்றார். நான் அவரை நிமிர்ந்து பார்த்து...... ஏன் எழுத முடியாது, எதுவுமே சின்ன விஷயம் கிடையாது. ஒரு தேடல் இருந்தால், அந்த விஷயத்தை பற்றி பத்து நாளைக்கு கூட எழுதலாம் என்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, அப்படியா, இந்த டீ பற்றி என்னவெல்லாம் எழுத முடியும் என்று கேட்க, நான் அதை நாளைக்கு சொல்றேன் என்றேன் !!



அடுத்த நாள் அவரை பார்க்குபோது..... மீண்டும் ஒரு டீ  கொடுத்து, எதை பற்றி எழுத போறேன் அப்படின்னு சொல்றேன் கேட்டுக்க என்றேன் !

டீ சாப்பிடும் நேரங்கள் :
அதிகாலை, மதியம், மாலை, நைட், நடு நிசி என்று இருக்கிறது. ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுக்கும். உதாரணமாக அதிகாலை சூரிய உதயத்தை பார்த்துக்கொண்டே குடிக்கும்போது அந்த அமைதி உள்ளுக்குள் டீயோடு இறங்கும், நடு நிசியில் குடிக்கும்போது தூக்கம் தொலைக்க அருந்துவோம் அதன் சுவையே வேறு என்றேன்.

டீ கோப்பைகள் :
என்றாவது நாம் டீ சாப்பிடும் கோப்பைகளை உற்று பார்த்து இருக்கிறோமா..... கிளாஸ், பேப்பர் கப், பிளாஸ்டிக் கப், எவர்சில்வர் டம்பளர், மண் பானை, கப் மற்றும் சாசர், பிராஸ் கப், டபரா செட் என்று நான் அடுக்கிகொண்டே போக எனது நண்பரின் முகம் ஆச்சர்யத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு கோப்பைக்கும் ஒரு சுவை உண்டா இல்லையா என்றேன்..... அவரது தலை தானாக ஆடியது.

இப்படி டீ கடைகள், எத்தனை வகையான டீ, டீ சாப்பிடும்போது கொறிக்கும் ஸ்நாக்ஸ், டீ சாப்பிடும் காலங்கள் (வெயில், மழை), டீ சாப்பிடும்போது நாம் அணியும் உடைகள், டீ சாப்பிடும்போது நமது கூட இருக்கும் நண்பர்கள் / உறவினர்கள், டீ தயாரிக்கும் முறை, ஒரு ரூபாய் டீயில் இருந்து எவ்வளவு வரை இருக்கிறது, வித்தியாசமான முறையில் டீ சாப்பிடும் இடங்கள் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனது நண்பருக்கு மயக்கம் வராத குறைதான் !

இப்படி நான் தேடி தேடி டீ சாப்பிட ஆரம்பித்து இன்றுடன் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆக போகிறது. எத்தனை விதமான அனுபவங்கள் தெரியுமா ?! சாதாரண டீதானே என்று இல்லாமல் அதன் ஆழம் வரை சென்று அதை உங்களுடன் பகிர போகிறேன்.  இது நாம் சாப்பிடும் உணவை பற்றி ஒரு ஆச்சர்யத்தை கண்டிப்பாக வரவழைக்கும் ! அடுத்த வாரம் முதல் வாருங்களேன் ஒரு பயணம்.... மிகவும் வித்யாசமான, ஆழமான பயணம். அதுவரை..... மாஸ்டர்..... சூடா ஒரு டீ !!


Labels : Food hunting, food hunt, unavu vettai, about tea, types of tea, flavours of tea, amazing information on food, master one tea