Tuesday, May 12, 2015

ஊர் ஸ்பெஷல் - உடன்குடி கருப்பட்டி (பகுதி - 2) !!

உடன்குடி கருப்பட்டி (பகுதி-1) பற்றி எழுதி இருந்தேன், அதன் பின்னர் ஏதோ ஒரு யாபகத்தில் புதுக்கோட்டை முட்டை மாஸ் பற்றி எழுதிவிட்டேன்..... உடன்குடி கருப்பட்டி பகுதி இன்னும் மிச்சம் இருக்கும்போது எப்படி முட்டை மாஸ் பற்றி எழுதலாம் என்று உரிமையோடு கடிந்துக்கொண்ட நண்பர்களுக்கு நன்றி, உங்களை போன்றவர்கள் படிப்பதனால்தான் இந்த பகுதிக்கு இவ்வளவு உழைப்பை செலவிடுகின்றேன் ! சென்ற பகுதியில் உடன்குடி என்னும் ஊரை பற்றியும், பனை மரத்தினை பற்றியும், கள் பற்றியும் மிக விரிவாக பார்த்து இருந்தோம், இந்த பகுதியில் அதை எப்படி கருப்பட்டி ஆக்குகின்றனர் என்று பார்ப்போமே. கருப்பட்டி தயாரிப்பவர்கள் இன்று கிராமத்தில்தான் இருக்கின்றார்கள் என்று தெரியும், ஆனால் அந்த கிராமத்திலேயே மிக மிக தொலைவில்தான் இது செய்யப்படுகிறது என்றால் அது எப்படிப்பட்ட முள் காடாக இருக்க வேண்டும் என்று நினைத்து பாருங்கள்..... அங்கும் கடல்பயணங்கள் பயணப்பட்டது, கண்ட காட்சிகள் ஆச்சர்யத்தை வரவழைத்தது !!பதநீர் என்பதை நான் இதுவரை ஒரு பெரிய குடத்தில் மட்டுமே பார்த்து இருக்கிறேன், பொதுவாக கிராமத்திலும் நகரத்தில் எப்போதாவதும் பதநீர் பதநீர் என்று கூவிக்கொண்டு வருபவர்களை காணும்போது பதநீர் என்பது இவ்வளவுதான் என்று தோன்றும், ஆனால் முதன் முதலாக பதநீர் என்பதை தொட்டி தொட்டியாக காணும் பாக்கியம் கிடைத்தது. ஒரு பனை மரத்தில் நாள் ஒன்றுக்கு 6 லிட்டர் வரை பதநீர் கிடைக்கும். 18 லிட்டர் பனை பதநீரை காய்ச்சினால் தான் 10 கிலோ கருப்பட்டி வெல்லம் கிடைக்கும்.அதிகாலையிலேயே மரத்தில் ஏறி பதநீர் என்பதை சட்டி சட்டியாக இறக்கி அதை கொண்டு வந்து இங்கு கொடுத்து காசு வாங்கி கொள்கின்றனர். பதநீரை காய்ச்சும் அந்த அடுப்பு என்பது மிகவும் வித்யாசயமாக இருக்கின்றது, நின்று கொண்டு காய்ச்சும் வண்ணம் இந்த அடுப்பு தரையில் இருந்து பள்ளம் தோண்டி வைத்து இருக்கின்றனர், அதனில் இருந்து ஒரு சுரங்கம் போன்று அமைத்து தூரத்தில் முடிகிறது, அங்கு இருந்துதான் விறகும், தேங்காய் மட்டைகளும், பனைமர இலைகளும் கொண்டு நெருப்பு மூட்டுகின்றனர். பதநீரை ஒரு சிறிய டம்பளரில் மட்டுமே குடித்து பழகிய எனக்கு அன்று குடம் குடமாய் அள்ளி ஒரு பெரிய வாணலியில் ஊற்றியது கண்டு மகிழ்ச்சி, அதே சமயம் அந்த குடத்தை தூக்கி தூக்கி ஊற்றிய அந்த வயதான அம்மாவின் உடம்பில் அங்கங்கு சிதறிய பதநீரை குடிக்க அவரை மொய்த்த தேன் ஈக்களும், கொசுவும் என்று இருந்தும் அதை பார்க்காமல் அடுத்த வேலை என்று இருந்தது கண்டு மனதில் சங்கடம் !


பதநீர் வாசனை இதுவரை நுகர்ந்து இருக்கின்றீர்களா ? பதநீர் வாசனை என்பது சுண்ணாம்பு வாசனை என்பதுதான் இதுவரைக்கும் எல்லோருக்கும் தெரியும், ஆனால் இங்கு பதநீர் காய்ச்சும்போது ஒரு வாசனை அந்த இடம் எங்கும் பரவுகிறது. ஒரு பெரிய கரண்டி கொண்டு அந்த வாணலியில் கிண்ட, அந்த பதநீர் இப்போது பிரவுன் நிறமாக கொஞ்சம் கொஞ்சமாக திக் ஆக ஆரம்பிக்கிறது. அதை இப்போது பதம் பார்த்து பார்த்து ஒரு கட்டத்தில் தீயை அணைக்க, எனக்கோ அதை சற்று எடுத்து வாயில் வைக்க ஆவல் அதிகரிக்கிறது ! இந்த பக்கம் ஆற்று மணல் மீது தண்ணீர் தெளித்துக்கொண்டு இருந்தனர், அதன் மீது இப்போது ஒரு பருத்தி சேலையினை தண்ணீரில் பிழிந்து மேலே போடுகின்றனர். ஒருவர் இப்போது ஒரு மூட்டை நிறைய கொட்டங்குசியை அள்ளிக்கொண்டு வர எனக்கு இங்கே என்ன நடக்கிறது என்று ஆர்வம் அதிகமானது !ஒரு ரோபோவினை போல சரசரவென்று அந்த கொட்டங்குசியை ஒரு பாட்டி அடுக்கி வைக்க ஆரம்பித்தார். நானும் அதை எடுத்துக்கொண்டு இன்னொரு பக்கத்தில் அடுக்க ஆரம்பித்தேன், அந்த பாட்டி இப்போது என்னைவிட வேகமாக அடுக்கிவிட வேண்டும் என்று ஒரு அசாதாரண சுறுசுறுப்பை காட்ட ஆரம்பித்தார், கேலியும் கிண்டலும் என்று எங்களுக்கு பின்னே அங்கே வேலை பார்த்தவர்கள் செய்ய, நான்தான் முதலில் என்று கூவிக்கொண்டே அந்த பாட்டியை வம்புக்கு இழுத்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது..... முடிவில் நான் அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், தோத்துட்டேன் என்று கையை தூக்க, எங்களுக்கு பின்னால் பகடி செய்தவர்கள் சிரிக்க, அந்த பாட்டி இப்போது அதை போட்டுவிட்டு அட விடுய்யா, இங்க பாரு கையெல்லாம் கீறி இருக்கு என்று சொல்லி, நீ ராசாயா, எல்லாத்திலும் நீதான் ஜெயிப்ப என்று நெட்டி முறிக்க, அங்கே தோற்றது, ஜெயித்தது என்று எதுவும் இல்லாமல் போனது. கிராமத்து ஆத்தாக்கள் எந்த பிள்ளையாய் இருந்தாலும் தாங்கள் தோர்ப்பதையே விரும்புகிறார்கள்.... கருப்பட்டியை விட பெரிதா அந்த சுவை !!


இப்போது ஒரு சிறிய ஜக்கில் சிறிது ஆறி இருந்த காய்ச்சிய பதநீரை எடுத்து வந்து இந்த கொட்டாங்குச்சியில் ஊற்ற தயாராகின்றனர். ஒரே அளவில் அந்த கொட்டாங்குச்சியில் மெதுவாக ஊற்ற ஆரம்பிக்க, எனக்கோ அந்த காய்ச்சிய பதநீர் எப்படி இருக்கும் என்று ஆர்வம் தாளவில்லை. கொஞ்சமே கொஞ்சம் கையில் எடுத்து நக்கி பார்க்க அந்த கருப்பட்டி கொஞ்சம் சூடாக இருந்தால் எப்படி இருக்குமோ அந்த சுவை ! இப்போது நானும் ஒரு ஜக் எடுத்து ஊற்ற ஆரம்பித்தேன், ஒரு இடத்தில் அதிகமாகவும், ஒரு இடத்தில் குறைவாகவும் ஊற்ற எல்லோரும் சிரித்தனர், அதையும் மீறி இப்படி பட்ட வேலையை ஆர்வத்துடன் செய்வதை பார்த்து படித்த ஆளுக்கு ஏன் இந்த வெட்டி வேலை என்று எனது காதுபடவே பேசுவதை கேட்க முடிந்தது...... அவர்களுக்கு என்ன தெரியும், நான் இப்போதுதான் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன் என்று ! இப்படி ஊற்றப்பட்ட பதநீரை சுமார் மூன்று மணி நேரம் வரை காய வைக்க, இப்போது அந்த கொட்டாங்குச்சியை எடுத்து டக்கென்று தட்ட கருப்பட்டி ரெடி !! இப்படி செய்யப்பட்ட கருப்பட்டியை கடைக்கு எப்படி அனுப்பி வைக்கின்றனர் என்று அறிய முயன்றதில், கருப்பட்டியை மூட்டை மூட்டையாக ஒரு இடத்தில் முதலில் குவித்து வைக்கின்றனர், அதை சுமார் 14 கிலோ கொண்ட சிறிய மூட்டையாக பனை ஓலையில் செய்யப்பட்ட ஒரு பெட்டியில் வைத்து அதை கட்டி வைக்கின்றனர். இப்போது அதை கடைக்கு அனுப்புவோம் என்றவுடன், பொதுவாகவே கருப்பட்டியை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி பழக்கப்பட்ட எனக்கு கருப்பட்டி கடையை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. உடன்குடியில் பிரபலமான கருப்பட்டி கடை என்பது MS சன்ஸ் என்று சொல்ல, அதை ஒரு பெரிய அளவில் கற்பனை செய்துக்கொண்டு செல்ல அங்கே ஒரு சிறிய கடையாக வெளிச்சம் குறைவாக இருந்தது அந்த கருப்பட்டி விற்கும் கடை. உள்ளே சென்று விலை கேட்க்கும்போதுதான் அதில் மூன்று வகை இருப்பதும் கிலோ 40 ரூபாயில் இருந்து, நல்ல கருப்பட்டி சுமார் 70 ரூபாய் வரை கிடைக்கும் என்பதும் தெரிந்தது. பதநீரை எங்கு இருந்து எடுக்கிறார்கள், யார் பதநீர் கொடுக்கிறார்கள் என்பதை கொண்டு அதை தரம் பிரிக்கின்றனர். பின்னர் அதை சிறிது எடுத்து வாயில் போட்டும் அதன் தரம் பிரிக்கின்றனர். மிகுந்த ஆர்வத்துடன் எங்களுக்கு என்று கருப்பட்டியை ஆர்வத்துடன் வாங்கி கொண்டோம். 
புகையிலையை பதப்படுத்தி காய வைக்க பனைக் கருப்பட்டி அவசியம். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்புக்காக அதிகளவில் கருப்பட்டி அனுப்பப்படுகிறது. இவ்வளவு சிரமம் கொண்டு கருப்பட்டியின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளுவோமே...
 • கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.
 • கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும். 
 • கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.
 • குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது. 
 • சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.
அடுத்த முறை உடன்குடி வழியாக சென்றால் இந்த ஊரின் சிறப்புமிக்க கருப்பட்டியை வாங்கி வாருங்கள், அப்படியே இந்த ஊரின் ஸ்பெஷல் கருப்பட்டி காபியையும் குடித்து வாருங்கள் !!

Labels : Suresh, kadalpayanangal, oor special, district special, udangudi, udankudi, karuppatti, palm jaggery, jaggery, famous for, district special, tamilnadu special, karuppatti kaapi

9 comments:

 1. ஒரு விஷயத்தை பற்றி மேம்போக்காக சொல்லி செல்லாமல் மிக அழகாக நேர்த்தியாக ஒவ்வொரு இடத்துக்கும் சென்று அங்கு தயாராகும் உணவினைப்பற்றி சிலாகித்து சொல்வதை படிக்கும்போது படிப்போருக்கே ஒரு ரசனை ஏற்பட்டுவிடுகிறது.

  அதே போல் இந்த கருப்பட்டி பாகம்...

  அங்கே முள் காடாக இருக்கும் என்று சொல்லும்போதே அதன் தொலைவும் சிரமமும் அறிய முடிந்தது.

  அங்கு சென்று அங்கு வேலை செய்வோரை தூர இருந்து பார்க்காமல் உடன் இருந்து அவர்களுடன் பணியும் புரிந்து அவர்களையும் உற்சாகப்படுத்தி அவர்கள் அன்பினையும் பெற்று கருப்பட்டி சுவையோடு அன்புச்சுவையையும் கூட்டி எழுத்துக்கே மெருகேற்றி இருக்கிறீர்கள் நண்பரே.

  கருப்பட்டி உருவாக்கும் முறைப்பற்றி மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல் அது எங்கு சென்று எப்படி தரம் பார்த்து பிரித்து விற்கப்படுகிறது என்பது வரை மிக அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்.

  நிறைந்த அன்பு வாழ்த்துகள்.

  தொடரட்டும் உங்கள் பயணம்...

  ReplyDelete
 2. வணக்கம்
  தங்களின் தேடல் பயணம் தொடரட்டும்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. மருத்துவ பயன்கள் உட்பட அனைத்தும் அருமை.... அசத்தல்.... பாராட்டுக்கள் ஜி...

  ReplyDelete
 4. "அவர்களுக்கு என்ன தெரியும், நான் இப்போதுதான் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன் என்று ! "

  அருமை நண்பரே.......

  ReplyDelete
 5. கட்டுரை மிக அருமை....................வாழ்த்துக்கள்...................ஒரு கட்டுரையை முழுமையாக எப்படி எழுத வேண்டும் என தங்களிடமிருந்து கற்றுக் கொண்டேன்...................நன்றி...............ஆலயம்.எஸ்.ராஜா

  ReplyDelete
 6. அனைத்து தகவல்களும் அருமை. இத்துடன் ஒவ்வொரு ஊரின் சிறந்த கடையின் தொடர்பு எண்ணை தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி!

  ReplyDelete
 7. அனைத்து தகவல்களும் அருமை. இத்துடன் ஒவ்வொரு ஊரின் சிறந்த கடையின் தொடர்பு எண்ணை தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி!

  ReplyDelete
 8. அனைத்து தகவல்களும் அருமை. இத்துடன் ஒவ்வொரு ஊரின் சிறந்த கடையின் தொடர்பு எண்ணை தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி!

  ReplyDelete