Thursday, May 7, 2015

அறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி !!

திண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி ! இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த சிவா பிரியாணி கடை என்பதை வெகு எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தோம், அப்போதிலிருந்து திண்டுக்கல் செல்லும்போது எல்லாம் ஒரு வேளையாவது இங்கு சாப்பிடாமல் திரும்பியதில்லை எனலாம்..... சுவையில் அப்படி கட்டி போடுகின்றனர். இன்று விளம்பரங்களுக்குதானே மவுசு, திண்டுக்கல் என்றாலே தலப்பாகட்டி பிரியாணி, பொன்ராம் பிரியாணி, வேணு பிரியாணி என்று சொல்லும் அளவுக்கு விளம்பரங்களில் மூளையை மழுங்கடிக்கும் செயல் செய்து வருகின்றனர், ஆனால் இந்த சிவா பிரியாணி கடை விளம்பரம் இல்லாமலே சுவையிலேயே பிரபலம் எனலாம்..... விளம்பரம் மட்டும் இருந்தால் இன்னும் எங்கேயோ சென்றுவிடும் என்பது மட்டும் நிச்சயம் !!மூடி இருக்கும் இந்த கடைதான், இரவினில் சுவையான உணவை தருது !

சின்ன கடைதான், ஆனால் சுத்தம் ஜாஸ்தி !

வேணு பிரியாணி இருக்கும் அதே தெருவில் மெயினிலெயெ ஒரு சிறிய கடையாக, மாலை ஆறு மணிக்கு மட்டுமே திறந்திருக்கும் இந்த சிவா பிரியாணி. சுவையாக இருக்கிறதே மூன்று வேளையும் சாப்பிடலாம் என்று சென்றால் மாலையில் மட்டுமே என்று போட்டு இருப்பது கண்டு ஏமாற்றமே வரும். ஞாயிறு மட்டுமே மதியத்தில் இருந்து இருக்கும். உள்ளே நுழையும்போதே மிக சிறிய கடை என்பது தெரியும், கும்மென்று பிரியாணி வாசனை ஆளை தூக்கும். கையை கழுவிக்கொண்டு உட்கார, நல்ல பெரிய வாழை இலையை முன்னே போட்டு என்ன வேண்டும் என்று கேட்க பிரியாணி என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்........ அது ருசியாக, நன்றாக இருக்கும் என்றாலும், இங்கே ஸ்பெஷல் என்பதே வேறு !!இந்த மிளகு குழம்புதான் ஆளை அசத்துது !

இங்கு முதலில் இரண்டு இட்லி வாங்கி கொள்ளுங்கள், அதற்க்கு மூன்று வகையான குழம்பு உண்டு...... ஆட்டுக்கால் பாயா, நாட்டு கோழி குழம்பு, மிளகு கொழம்பு. இதில் டாப் என்பது மிளகு குழம்பு என்பதே, நாட்டு கோழியை நன்கு பியித்து போட்டு, அதில் மிளகை அரைத்து ஊற்றி, மசாலாவுடன் கொதிக்க வைத்து நல்ல திக் ஆக குழம்பு இருந்தால் அதை சூடான ஆவி பறக்கும் இட்லியின் மீது ஊற்றி, அது சிறிது ஊறியவுடன் தின்று பாருங்கள்.... தேவாமிர்தம்தான். அதனோடு சற்று கெட்டியான தேங்காய் சட்னியும் கொடுக்கின்றார்கள், அதனோடு இட்லியும், குழம்பும் என்று ஒரு காட்டு காட்ட வேண்டியதுதான் ! அடுத்து தொட்டு கொள்வதற்கு ஏதேனும் அசைவம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நாட்டுக்கோழி சாப்ஸ் சொன்னோம், அதனோடு மட்டன் சுக்கா ஒன்றும் !

நாட்டு கோழி சாப்ஸ் !

இளசான ஆட்டின் மட்டன் சுக்கா !


நல்லா வெந்த நாட்டு கோழியை தோசை கல்லில் போட்டு, அதனோடு கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய் போட்டு வதக்க ஒரு அருமையான வாசம் வரும். அதன் மேலே பெப்பர் கொஞ்சம் அதிகமாக தூவி, அவர்களது ஸ்பெஷல் ஆன குழம்பை ஊற்ற அது தோசைகல்லில் நன்கு தலபுல என்று கொதிக்க கொதிக்க ஒரு வாழை இலையில் போட்டு கொண்டு வந்து கொடுக்கின்றார்கள், இதை போலவே மட்டன் சுக்காவையும். நல்ல சூடான இட்லிக்கு அதை கொஞ்சம் வழித்து எடுத்து சாப்பிட என்ன அருமையா இருக்கு தெரியுமா. இட்லியே சாப்பிடறோமே, என்று தோசை என்றோம்..... பேப்பர் ரோஸ்ட் கொண்டு வரட்டுமா என்றார், அவ்வளவு பெரிசு வேண்டாம் சாப்பிட முடியாது என்று அந்த பேப்பர் ரோஸ்ட்டை ரெண்டா வெட்டி கொண்டு வாங்க என்றோம், அவரும் சுட்டு கொண்டு வந்தபோதுதான் தெரிந்தது அது நம்ம வீட்டு தோசை சைஸ் என்பது. உண்மையிலேயே ஒரு பேப்பர் போல அவ்வளவு மெலிசு.... அதனோடு மீண்டும் மிளகு கொழம்பு என்று ஆரம்பம் ஆனது ஒரு முடிவில்லாமல் !
பேப்பர் ரோஸ்ட்..... ரொம்பவே மெலிசா !

அடுத்த முறை திண்டுக்கல் செல்லும்போது நீங்கள் நம்பி செல்ல ஒரு இரவு உணவகம் இந்த சிவா பிரியாணி எனலாம். இங்கு பார்கிங் என்பது மட்டுமே பிரச்சனை, மற்றபடி சுவைக்கு நான் கேரண்டி !!
Labels : Suresh, kadalpayanangal, dindikul, siva biriyani, best milagu kulambu, idli, tasty, near madurai, dindigul, famous, biriyani, night, restaurant

9 comments:

 1. நான் இதுவரை திண்டுக்கல் சென்றதே இல்லை! போகணும். டிடியைப் பார்க்கவாவது!

  ReplyDelete
 2. Suresh Awsome , அருமை போங்க...பசியை தூண்டும் பதிவு...!

  ReplyDelete
 3. அட்டகாசம் போங்க...!

  தலப்பா கட்டி விளம்பரம் மட்டும் நல்லாயிருக்கும்...! ஹிஹி...

  ReplyDelete
 4. அருமை அருமை சூடான சுவையான தகவல்

  ReplyDelete
 5. SUPER ...NEXT WEEK I AM GOING TO DINDUGAL I DONT MISS

  ReplyDelete
 6. உங்கள் பதிவு ஒவ்வொன்றும் தனி முத்திரை பதிக்கிறது, உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. senthil karaikudiMay 9, 2015 at 3:05 PM

  வணக்கம் சுரேஷ் அன்னா. நான் தங்கள் பதிவு பற்றி தி இந்து தமிழ் நாளிதழ் மூலம் அறிந்து குறிப்பாக அறுசுவை தலைப்பில் உள்ள பதிவுகளைப் படித்து வருகின்றேன் அனைத்தும் மிக அருமை திண்டுக்கல் சிவா பிரியானி குறித்த பதிவு என்னை மிகவும் கவர்ந்துள்ளது தொடரட்டும் தங்கள் முயற்சி

  ReplyDelete
 8. Thanks for the post and I'm a regular customer that hotel


  P.R.C Gopal Ex army.

  ReplyDelete