Monday, May 11, 2015

அறுசுவை - இருளும் சுவையும் !

வாழ்வில் என்றாவது நாம் சாப்பிடும் சாப்பாட்டின் முழுமையான சுவையை அனுபவித்து இருக்கின்றீர்களா ?! அது என்ன முழுமையான சுவை என்பவர்களுக்கு..... நாம் சாப்பிடும்போது கவனித்து பார்த்தால் கருவேப்பில்லை, கருகிய வெங்காயம், பெருங்காயம், பூண்டு, திராட்சை, ஏலக்காய், பட்டை, கிராம்பு என்று நிறைய பொருளை ஒதுக்கி வைப்போம் இல்லையா. இன்னும் விரிவாக சொல்வதென்றால், சிறு வயதில் என்றாவது கிராம்பை கடித்திருப்போம், அதன் சுவையில் ஒரு வித்யாசம் தெரிந்து இன்று வரை சாப்பாட்டில் இருந்து ஒதுக்கி வைத்திருப்போம், அது போலவே கருவேப்பில்லை, பெருங்காயம் என்று ஒவ்வொரு உணவும் இன்று வரை நமது தட்டினில் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும், ஆனால் இன்று அதை சுவைத்து பார்த்தால் கண்டிப்பாக பிடிக்கும். எனக்கு வெண்பொங்கல் என்பது இருபத்திநான்கு வயது வரை பிடித்ததில்லை, அம்மா எவ்வளவுதான் நெய்யை ஊற்றி செய்து தந்தாலும் அது பிடித்ததில்லை..... ஒரு பசி நாளில், அதே வெண்பொங்கல் தேவாமிர்தமாக தெரிந்தது, இன்று வரை எங்கு சென்றாலும் அது எனது பிடித்தமான உணவு. இப்படி ஒரு உணவை அதன் உண்மை சுவை அறிந்து உண்ண வைக்கிறது "டயலாக் இன் தி டார்க்"உணவகம், முற்றிலும் புதுமையான அனுபவத்தில் !!





ஒரு உணவகத்திற்கு செல்லும்போது, உள்ளே நுழையும்போதே பக்கத்தில் சாப்பிடுபவர்கள் தட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்துக்கொண்டே சீட்டில் போய் உட்காருவோம். அந்த கணத்தில், பார்த்ததை வைத்து உணவு எப்படி இருக்கும் என்று மனதில் ஒரு கருத்து வரும். உணவு ஆர்டர் செய்து தட்டில் வந்தவுடன், அந்த உணவின் நிறம் மற்றும் அதன் அமைப்பை பார்த்து இப்படிதான் இருக்கும் என்று ஒரு எண்ணம் இருக்கும், அதன் பின்னர் பக்கத்து டேபிளில் யாராவது அதே உணவை நன்றாக இல்லை என்று சர்வரிடம் சத்தம் போடுவது காதில் கேட்கும்போது ஒரு கருத்து உருவாகும், பின்னர் அந்த உணவினை வாயின் அருகே கொண்டு செல்லும்போது வரும் வாசனை ஒரு மின்னல் வேக கருத்தினை மூளைக்கு கொண்டு செல்லும், இதை செய்துக்கொண்டு இருக்கும்போதே அந்த உணவில் நமக்கு பிடிக்காது இருக்கும் கருவேப்பில்லை இன்ன பிற வஸ்துக்களை உணர்வின் மூலம் தூக்கி கெடாசுவொம், முடிவில் அது நமது நாக்கிற்கு செல்லும்போது அது எவ்வளவுதான் தேவாமிர்தமாக இருந்தாலும் நமது மூளை இதற்க்கு முன்னே கிடைத்த செய்தியின்படி...... ஓகே என்று மட்டுமே சொல்ல வைக்கும் !! பல நேரங்களில் உண்டு கொண்டு இருக்கும்போதே பக்கத்து டேபிளில் இருக்கும் அம்மணிகளை கண்களால் சாப்பிட்டு, உணவின் சுவை தெரியாமலே போய் இருக்கும். இப்படிதானே இவ்வளவு நாட்களாய் உணவை உண்டு கொண்டு இருக்கிறோம் ! ஒரு உணவு..... அதை நமது உணர்வை கொண்டு மட்டுமே உண்டால் எப்படி இருக்கும். பார்ப்பது, கேட்பது, உணர்வது என்று எதுவுமே இல்லாமல், உணவை அதன் சுவையை மட்டும் உணர்ந்து உண்டால் எப்படி இருக்கும் ?! கும்மிருட்டில் உங்களது கைகளே உங்களுக்கு தெரியாதபோது, உணவை உண்டால் எப்படி இருக்கும் ?!




பெங்களுருவில் பீனிக்ஸ் சிட்டி மால் செல்லும்போது "டயலாக் இன் தி டார்க்" என்று ஒன்றை பார்ப்பேன், வெளியில் இருந்து பார்க்கும்போது அது ஒரு உணவகம் என்றே சொல்ல முடியாது. ஒரு டேபிள் போட்டு உட்கார்ந்து இருப்பார்கள், அதுவும் எதோ ஒரு கடை என்றும், பக்கத்தில் சென்றால் காசு பிடுங்கி விடுவார்கள் என்றும் நினைத்து இதுவரை அருகினில் கூட சென்றதில்லை. வித்யாசமான உணவகங்களை தேடி கொண்டு இருந்தபோது இதை பற்றி படித்தேன், அன்றில் இருந்து ஒரு முறையேனும் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து சென்ற வாரத்தில் சென்றேன். அங்கு சென்று சாப்பிட வேண்டும் என்று கேட்டவுடன், அதை பற்றி எளிமையாக விளக்கினார்கள், பின்னர் பணம் கட்டிவிட்டு ஒரு லாக்கரில் உங்களது போன், பர்ஸ் என்று எல்லாவற்றையும் வைக்க சொல்லிவிட்டு ஒரு சிறிய கதவை காட்டி, உங்களை எங்களது வழிகாட்டி அழைத்து செல்வார் என்றார்கள். கதவு இப்போது திறந்தவுடன் அசாதாரண இருட்டில் உள்ளே நுழைய...... தூரத்தில் ஒரு குரல் கேட்டது "வெல்கம் டு தி ரெஸ்டாரன்ட் சார், யு வில் நவ் எக்ஸ்பீரியன்ஸ் தி ரியல் டேஸ்ட்" என்று !


மருந்துக்கு கூட எங்கும் வெளிச்சம் இல்லை, எங்கும் கருப்பு நிறம், தடவி தடவி நடந்து சென்றால் ஒருவர் எங்களை வரவேற்று கவலைபடாதீர்கள், நான் உங்களை கைவிடமாட்டேன் என்று ஒரு அசரீரி போன்று சொல்ல அங்கே கடவுளை அந்த இருளில் தேடிக்கொண்டு இருந்தோம். எங்களது கைகளை இருக்க பற்றிக்கொண்டு வளைந்து வளைத்து அந்த கும்மிருட்டில் அழைத்து சென்று இங்கே உட்காருங்கள் என்று சொல்ல, எனது மூக்கே எனக்கு தெரியாத அந்த அசாதாரணமான இருட்டில் ஒரு சேர் இருப்பதே அப்போதுதான் தெரிந்தது. ஒரு வழியாக உட்கார, மனதின் ஓரத்தில் அப்போதும் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை கொண்டு வந்து இப்போது வைக்க போகிறார்கள் என்ற நம்பிக்கை எதற்காக இருந்தது என்று தெரியவில்லை. ஒரு சிறிய தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று கொடுக்கும்போது, காற்றில் கைகளை அலைபாய்ந்து பற்றிக்கொண்டேன். எனது முன்னாலே இருக்கும் ஒவ்வொன்றையும் எனது கைகளை பற்றி சொல்லி கொடுத்துவிட்டு, இன்னும் ஐந்து நிமிடத்தில் உங்களது உணவு தயாராகிவிடும் என்று சொல்லி மாயமானார் அந்த மகான். இப்போது நானும் எனது நண்பரும் மட்டுமே..... அந்த இருட்டை பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம், எங்களது கண்களுக்கு முன் எதுவுமே தெரியவில்லை என்பதால் எங்களது எல்லா புலன்களும் விழித்திருந்தது எங்களுக்கே தெரிந்தது. இப்போது எங்களுக்கு முன்னே உணவை கொண்டு வந்து வைத்துவிட்டு, சாப்பிடுங்கள் என்றதுமே நான் "என்ன உணவு என்று கொஞ்சம் சொல்லுங்களேன், இந்த கும்மிருட்டில் எதுவுமே தெரியவில்லை" என்றவுடன்..... முதலில் சாப்பிடுங்கள் சார், முடிவில் நான் சொல்கிறேன் என்றார் !!




தட்டை முதலில் தடவி தடவி பார்த்தேன், முதலில் தென்பட்டது ரைஸ், அதன் இடது பக்கம் கையை கொண்டு செல்ல அங்கு வடை போன்று நாலைந்து இருந்தது, அதற்க்கு மேலே வெங்காயம், கேரட் போட்ட சலட், அதற்க்கு பக்கத்தில் குருமா போன்று ஒன்று, அதற்க்கு பக்கத்தில் வெங்காய பச்சடி (ரைத்தா), அதற்க்கு கீழே தடவி பார்க்க அலுமினிய காகிதத்தில் சுற்றி வைக்கப்பட்ட ஒன்று. ஒவ்வொன்றையும் நக்கியும், தொட்டும், தடவியும் பார்த்து இதுதான் என்று குத்துமதிப்பாக தெரிந்து வைத்துக்கொண்டேன். பொதுவாகவே சாப்பிடும்போது இதைதான் தொட்டுக்கொள்ள வேண்டும் என்று எழுதபடாத சட்டம் ஒன்று உண்டு..... உதாரனத்திற்க்கு சொல்வதென்றால், இட்லிக்கு சட்னி சாம்பார், பூரிக்கு கிழங்கு, சாதத்திற்கு ரசம், சப்பாத்திக்கு குருமா என்று ஒரு பட்டியலே உண்டு.... சில நேரங்களில் இந்த எழுதபடாத விதியை உடைத்து பார்த்தால் ஒரு புதிய அருமையான ருசி தெரியும், உதாரணமாக இட்லிக்கு கிழங்கு, பூரிக்கு சாம்பார், சப்பாத்திக்கு மாங்காய் ஊறுகாய், பாயசத்திற்கு அப்பளம், சாதத்திற்கு குருமா, ஆப்பத்திற்கு இட்லி பொடி என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு. இப்படி நாம் சாப்பிடுவது என்பது நமக்கே தெரியாமல் நடந்தால்தான் உண்டு.... அதை இங்கே காணலாம், ருசிக்கலாம்.


முதலில் அலுமினிய பேப்பரில் இருந்ததை எடுத்து, கொஞ்சமாக பியித்து குருமா என்று நினைத்து வெங்காய பச்சடியை தொட்டு கொள்ள ஒரு புதிய சுவை அறிமுகமாகியது. அதன் பின்னர் வடை போன்று இருந்ததை கொஞ்சமாக கடித்து பார்த்து, நாக்கினால் அதன் சுவையை முழுமையாக உணர்ந்து சாப்பிடும்போது ஒரு புதிய அனுபவம், சலட் சாப்பிடுவோம் என்று நினைத்து பச்சை மிளகாயை அவ்வளவு ஆனந்தமாக சாப்பிட்டு தண்ணீர் குடித்தேன், வெஜிடபிள் பிரியாணியில் இருந்த ஏலக்காயை உணர்வதற்கே ஒரு நிமிடம் பிடித்தது அதை உணர்ந்தவுடன் ஏலக்காயும் பிடித்தது, பிரியாணியில் போட்டு இருந்த பட்டை கிராம்பை முதன் முதலாக முழுதாக சுவைத்தேன், வெங்காய பச்சடியை இவ்வளவு ருசியாக இருக்குமா என்ன, ஒரு சமயத்தில் ரோட்டியை பிரியாணியில் தொட்டு சாப்பிட்டும் இருந்தேன். ஒவ்வொரு மிடக்கையும் ஒவ்வொரு சுவையில் ருசித்து சாப்பிட்டது அன்றுதான் ! முடிவில் அவர் வந்து நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்று குவிஸ் நடத்த ஓரளவு சொன்னேன்..... அவர் சிரித்துக்கொண்டே நான் சாப்பிட்டது பீட்ரூட் குல்ச்சா, மேத்தி பன்னீர், ஹரியாலி கபாப், வெஜ் நக்கெட்ஸ், பீட்ரூட் - முள்ளங்கி போட்ட சலட் என்று சொல்லிக்கொண்டே போக இதில் பல வகை நான் சாப்பிட மாட்டேன் என்று ஒதுக்கி வைத்தது !! இதுவரை பார்வையினாலேயே சுவை பார்த்து ஒதுக்கி வைத்துக்கொண்டு இருந்த நான், சிறிது கண்களை மூடி சாப்பிட்டு பார்க்கும்போது எத்தனை வகை சுவை தெரிகிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையிலேயே ஒரு சாப்பாட்டின் சுவையை நீங்கள் உணர விரும்பினால் இங்கு கண்டிப்பாக செல்லலாம் !




முடிவில் வெளியே வந்து எங்களுக்கு பரிமாறியவரை கண்டபோதுதான் தெரிந்தது அவர் ஒரு பார்வை இல்லாதவர் என்பது. நாற்பைதைந்து நிமிடம் மட்டுமே தட்டு தடுமாறி சாப்பிட்ட எனக்கு அவர் வாழ்க்கையே இருட்டில்தான் என்பதும், அவர் அவ்வளவு சகஜமாக எதிலும் இடித்து கொள்ளாமல் நடப்பது கண்டும் ஆச்சர்யப்பட்டேன். சுவை மட்டும் அல்ல ஒரு சில நிமிடங்களுக்கு நமது வாழ்க்கையையும் நினைத்து பார்க்க வைக்கிறது இந்த வித்யாசமான உணவகம் !!

Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, dialogue in the dark restaurant, concept restaurant, different food, experience, eat in the dark, amazing experience, blind, taste of blind

8 comments:

  1. great experience for you (please parvai illathavar enru matri kollalame

    ReplyDelete
    Replies
    1. Thank you so much for the suggestion and I changed it immediately. Sorry for the mistake.

      Delete
  2. the first thing that came to mind by seeing the title was....
    now everyone will become like "Ratatouille".....
    many a times, even earlier while going through your blog i guess you are the Ratatouille and we the readers are Emile

    ReplyDelete
    Replies
    1. ha ha ha.... may be a big Ratatouille !! Happy to have that title and thanks for it. I am glad that you are enjoying my articles.

      Delete
  3. சாதரணமாக இருட்டில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். நீங்கள் வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டதால் தப்பித்தீர்கள். இதுவே சாம்பார் ரசம் மோர் என்று உள்ள தென் இந்திய சாப்பாட்டை இருட்டில் சாப்பிட முடியுமா என்று நினைத்து பாருங்கள்.

    அல்லது மீன்குழம்பை ஒரு கை பார்க்க முடியுமா.

    --
    Jayakumar

    ReplyDelete
  4. different experience arumaiyana pathivu

    ReplyDelete
  5. இந்த மாதிரி ஒரு உணவகம் பற்றி படித்திருக்கிறேன்..... நல்ல ஒரு அனுபவம் தான்.

    ReplyDelete
  6. வித்தியாசமான அனுபவம் ஜி...

    ReplyDelete