Wednesday, May 13, 2015

சிறுபிள்ளையாவோம் - ஜட்கா வண்டி பயணம் !!

குதிரை வண்டி என்று சொன்னதுமே வெள்ளை அல்லது பழுப்பு கலரில், வாலை ஆட்டியபடி கழுத்தில் சுற்றப்பட்ட மணி அதிர செல்லும் வண்டி யாபகம் வந்தால், நீங்களும் இந்த பயணத்தை இன்றும் விரும்புகிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது. கை ரிக்ஷா வரும் முன்பு எல்லாம் எங்களது ஊரில் இதில்தான் பயணம். அதுவும் வண்டியோட்டியின் அருகில் உட்காருவதற்கு சிறுவர்களுக்கு ஆர்வம் ஜாஸ்தி. காலை தொங்க போட்டு உட்காரும்போது குதிரையின் வால் காலில் பட சென்ற அந்த கணங்கள் வாழ்வில் மறக்கவே மறக்காது. அப்படி ஒரு பயணத்தை செய்து பார்த்தேன்..... பழனியில் !!

ஒரு சிறுவன் (?!) வண்டியோட்டியின் அருகில் !!பழனியில் சென்று இறங்கியவுடன் அதன் சுற்று வட்ட பாதையில் செல்வதற்கு ஆட்டோ ஒன்றை அமர்த்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்துகொண்டு இருக்கும்போது கண்களில் பட்டது இந்த குதிரை வண்டி. நாங்கள் மூன்று பேர், அதை தாங்குமா என்று கூட யோசிக்க அவகாசம் தராமல் "குதிரை வண்டி பாருங்க, வாங்க அதில் போகலாம்" என்று சொல்ல, ஆட்டோ ஓட்டுனர் என்னை ஒரு மாதிரியாக பார்த்ததாக நினைவு. ஆர்வத்தில் அந்த குதிரை வண்டியின் குறுக்கே சென்று கையை போட்டு ஸ்டாப் என்று சொன்னவுடன், அந்த வண்டிக்கு பிரேக் சிஸ்டம் என்பது வேறு என்பது அது என்னை தாண்டி கொண்டு சென்றதிலும், அந்த வண்டிக்காரர் என்னை முறைத்துக்கொண்டே குதிரை மிரண்டுடும் என்று சொன்னதிலும் தெரிந்தது.


முடிவில் பழனி பாதையை முழுமையாக சுற்றி வந்து அதே இடத்தில இறக்கி விட வேண்டும் என்று சொல்லிவிட்டு வண்டியின் பின்னே சென்று ஏறினேன். குதிரை வண்டியில் ஏறி உட்காரும்போது கவனித்து இருக்கின்றீர்களா..... ஒரு கனமான போர்வை போட்டு இருக்கும், அதன் கீழே பசும்புல் வாசம் வீசும். அந்த புல் நாம் உட்காரும் இடத்தை மெத் மெத் என ஆக்கும். குதிரை நாம் அதன் சாப்பாட்டின் மீதுதான் உட்காருகிறோம் என்று தெரிந்தால் அப்போதே தள்ளி விட்டு இருக்கும், பெருந்தன்மையாக நம்மை உட்கார சொல்லி இழுத்தும் செல்லும். குதிரையை அந்த காலத்தில் அழகு படுத்துவது என்பது ஒவ்வொரு வண்டியோட்டிக்கும் அவ்வளவு ஆசையான விஷயம். சங்கு போல இருக்கும் மணியை லெதர் பெல்ட் போட்ட ஒன்றில் கோர்த்து குதிரைக்கு போடுவதும், அதன் மண்டையில் செங்குத்தாக நிற்கும் கலர் கொண்டையும், வால் பகுதியில் காட்டப்படும் மணியும் என்று ஒவ்வொரு குதிரையும் அவ்வளவு அழகு இல்லையா !குதிரை செல்லும்போது வேகம் வேண்டும் என்பதற்காக சாட்டையை வைத்து சொடுக்குவதும், அப்போது அது வேகத்தை கூட்டும்போது அதன் லாடம் டக் டக் டக் என்று சத்தம் போடுமே, அதுவும் இந்த குதிரை வண்டிக்காரர் அந்த குதிரையை செல்லமாக மிரட்டும் அழகே தனி. ஹே.....டுர்......தே.... மற்றும் செல்லமான கெட்ட வார்த்தைகள் என்று எவ்வளவு அழகாக ஓட்டுவார் தெரியுமா. சுகமான காற்றுடன் அந்த வண்டியில் செல்லும்போது அந்த வண்டிகாரரிடம் அது ஏன் இந்த குதிரை வண்டியை ஜட்கா வண்டி என்கிறோம் என்பதற்கு பதில் இல்லை, ஆனாலும் என்ன ஜட்கா என்ற பெயர் நன்றாகத்தானே இருக்கிறது !!இதுவரை பயணம் என்றால் காரில் ஏறி, அது ஸ்டார்ட் ஆகிவிட்டது என்பதும் ஓடுவதும் தெரியாமல் அவ்வளவு சத்தமும் அதிர்வும் இல்லாமல் சென்று, செல்லும்போது வெளி சத்தம் இல்லாமல் இனிய பாடலை கேட்டுக்கொண்டு , குளிர்சிக்காக ஏசி போட்டு செல்லும் சொகுசு பயணத்தில்...... இந்த முறை வண்டியில் ஏறி உட்காரும்போதே குதிரை அங்கும் இங்கும் அலைபாய தடுமாறி உட்கார்ந்து, முன்னே நகர்ந்து வண்டிகாரரை தள்ளி உட்கார சொல்லி அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர் ஓரத்தில் தொங்க விட்டு இருந்த கைஅடக்கமான ரேடியோவில் பாட்டு வெளி சத்தத்தோடு அலற, அவ்வப்போது வாகனங்கள் கடக்கும்போது வரும் காற்று என்று இந்த பயணம்தான் சந்தோசத்தை கொடுத்தது !! இந்த கால குழந்தைகள் இந்த வண்டியில் செல்வதை விட காரில் செல்வதையே விரும்புகிறார்கள், இந்த பயணத்தின் சந்தோசத்தை யார் அவர்களுக்கு புரிய வைப்பது.
Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, childhood, horse vehicle riding, jatka, kuthirai vandi, amazing ride, best ride, reviving childhood, memorable journey

10 comments:

 1. போட்டோ எடுக்க யாரை கூட்டிக்கொண்டு போனீர்கள்.

  --
  Jayakumar

  ReplyDelete
 2. பலமுறை அனுபவித்துள்ளேன்...

  இப்போது எங்கள் ஊரில் குதிரை வண்டியை தேட வேண்டியிருக்கிறது...!!!

  ReplyDelete
 3. வணக்கம்
  அண்ணா.

  தங்களின் ஒவ்வொரு தேடலிலும் ஒவ்வொரு விடங்களை அறிமுகப்படுத்துவதில் நீங்கள் வல்லவர்.. நாங்களும் சென்று வந்தது போல ஒரு உணர்வு.. பகிர்வுக்கு நன்றி த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. திருச்சி உறையூர் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில் ஜட்கா வண்டி இருந்தது. இப்பொழுது இல்லை. நானும் என் குழந்தைகளும் இப் பயணத்தை பழநியில் அனுபவித்து மகிழ்ந்தோம்.
  தங்களுடைய பதிவிற்கு நன்றி

  ReplyDelete
 5. அழகான படங்களுடன் அற்புதமான பதிவு.

  நானும் திருச்சியில் இதனை முன்னொரு காலத்தில் அனுபவித்துள்ளேன். :)

  ஓடும் குதிரை வாலால் நாம் அவ்வப்போது நன்கு ப்ரஷ் அடிக்கப்படும்போது மிகவும் த்ரில்லிங் ஆகத்தான் இருக்கும்.

  இப்போது குதிரைகளையோ, குதிரை வண்டிகளையோ எங்கள் ஊரான திருச்சியில் சுத்தமாகப் பார்க்கவே முடியவில்லை. :(

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. திருச்செந்தூரில் இன்னும் சில குதிரை வண்டிகள் உண்டு. ஆனால் அதில் செல்பவர்களும் குறைவு. சிறுவயதில் ஜட்காவில் சென்ற ஞாபகத்தை கிளறிவிட்டீர்கள் ! !

  ReplyDelete
 7. குதிரை, குதிரைக்காரர், குதிரை வண்டி எல்லாம் அழகோ அழகு. அது யாருங்க வண்டியில பூச்சாண்டி மாதிரி சவாரி செய்யறது?

  ReplyDelete
 8. உங்கள் குதிரை வண்டி பயணம், எனது பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. திருச்சி – புத்தூரில் ’கிந்தனார்’ பெயரில் குதிரை வண்டி ஸ்டாண்ட் இருந்தது. இப்போது அதை தேட வேண்டி உள்ளது. திருச்சியில் பெரும்பாலும் குதிரை வண்டி என்றுதான் சொல்வார்கள். (ஜட்கா என்று சொல்லுவதில்லை)

  ReplyDelete
 9. இராமேஸ்வரத்திலும் இந்த குதிரை வண்டி உண்டு...
  குற்றாலத்திலும் பார்த்த ஞாபகம்... போய் பல வருடம் ஆகி விட்டது...
  மும்பை அருகில் அலிபாக்'இல் கடலுக்கு நடுவில் உள்ள கோட்டைக்கு போக இன்றும் குதிரை வண்டி உண்டு...
  (Gateway of Indiaவில் உண்டு... but அது சாரட்... நீங்க வந்து பதிவும் போட்ருக்கீங்களே சீனியர்...)

  ReplyDelete
 10. அந்தநாள் ஞாபகம்....ஜட்காவில் ஓட்டுனர் பக்கத்து இருக்கை எப்போதும் எனது.ஆகா என்ன த்ரில்!

  ReplyDelete