Wednesday, June 24, 2015

ஊர் ஸ்பெஷல் - விருதுநகர் எண்ணை பரோட்டா !!

விருதுநகர்.... இந்த வார்த்தையை கேட்டாலே காமராஜர் பெயர்தான் எனக்கு நினைவுக்கு வரும், ஆனால் பலருக்கும் நினைவுக்கு வருவது என்பது எண்ணை பரோட்டா !! சிறு வயதில் இருந்து தோசை என்பது குழந்தைகளுக்கு பிரியம் என்றாலும், கொஞ்சம் விவரம் வந்துவிட்டால் அவர்களுக்கு பரோட்டாதான் மிகவும் பிடிக்க ஆரம்பிக்கும். எப்போதுமே பரோட்டா என்றால் அந்த மிருவான தன்மைதான் நினைவுக்கு வரும், அதில் சால்னா போட்டு ஊற வைத்து அடிப்பது என்பது பலருக்கும் பரம்பரை பழக்கம், இதில் நான் காலேஜ் படிக்கும்போது முதல் முறையாக எனது நண்பன் ஒருவன் பரோட்டா சாப்பிடலாம் என்று அழைத்து போக, அங்கே நுழையும்போதே ஒரு குழிவான தோசை கல்லில் வடை போன்று போட்டுக்கொண்டு இருந்தார்கள், உள்ளே சென்று உட்கார்ந்து ரெண்டு பரோட்டா என்று சொல்ல எனக்கு நான் பார்த்த வடையை வைத்தார்கள், அதன் பின்னர் அதற்க்கு சட்னி வைக்காமல் சால்னா ஊற்றும்போது வேண்டாம் என்று சொல்ல, எனது நண்பன்தான் அதை ஊற வைத்து சாப்பிடுவது எப்படி என்று பாடம் எடுத்தான். முதன் முறையாக பரோட்டா இப்படியும் இருக்கும் என்று தெரிந்த நாள் அது...... அன்று முதல் அந்த எண்ணை பரோட்டா கிடைக்கும்போது எல்லாம் கொண்டாட்டம்தான் !!



விருதுநகர் (Virudhunagar), தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய்,மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் சிறப்பு என்பது பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர் மற்றும் "வியாபார நகரம்" என்று சொல்லப்படும் இந்த ஊரில் ரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன.பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது. இதை எல்லாம் விட உணவு பிரியர்களின் எண்ணை புரோட்டா எனும் உணவுக்கு இந்த ஊர் சிறப்பு பெற்றது.  




பரோட்டா (Parotta or Paratha) என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது பாக்கிசுத்தான்,வங்காளதேசம்நேபாளம்இந்தியாஇலங்கைமலேசியாசிங்கப்பூர்இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. சிலோன் பரோட்டா, காயின் பரோட்டா, மலபார் பரோட்டா, வீச்சு பரோட்டா, மதுரை பரோட்டா என்ற பல வகை இருந்தாலும், இந்த பொரிச்ச எண்ணை பரோட்டாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு !!


விருதுநகரில் எண்ணை பரோட்டா சாப்பிட வேண்டும் என்று யாரை கேட்டாலும் கை காட்டுவது என்பது பர்மா கடையைத்தான். முன்பு சிறிய கடையாக இருந்தது இன்று பள பளவென்று பெரிய கடையாக மாற்றி இருக்கின்றார்கள், உள்ளே நுழைந்தால் ஒரு சினிமா ஹால் உள்ளே நுழைந்தது போன்று ஒரு பீலிங். 




உட்கார வைத்து இலை போட்டு என்ன வேண்டும் என்று ஒரு மெனு கார்ட் கொடுக்கின்றனர். நடப்பது, ஊர்வது, பறப்பது, நெளிவது, நீந்துவது என்று எல்லாமே ஒரு மெனு கார்டில் அடக்கமாகி இருக்கிறது. நான் ரெண்டு எண்ணை பரோட்டா என்று சொல்லிவிட்டு அடுத்து என்ன சொல்வது என்று மெனு கார்டை பார்க்கும் முன்பே இன்னைக்கு இது ஸ்பெஷல் என்று ஒரு லிஸ்ட் சொல்லி அதில் இருந்து தேர்ந்து எடுக்க சொல்வது கொஞ்சம் கடுப்பை தருகிறது, மீண்டும் அவரை ஒதுக்கிவிட்டு மெனு கார்டை பார்க்கும்போது அவர் விடாமல் அது கொண்டு வரட்டுமா, இது கொண்டு வரட்டுமா என்பது எந்த வகையில் வரும் என்று தெரியவில்லை. முடிவில் ஒரு சிக்கன் மசாலா, மட்டன் சுக்கா, ஆம்பலேட் எல்லாம் சொல்லிவிட்டு சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தோம்.... நல்ல பெரிய ஹோட்டல், இதே போன்று பை-பாஸ் பக்கத்தில் இருக்கிறது என்றும், ஆனாலும் இந்த கடை இருந்த இடம்தான் முதலில் ஆரம்பித்தது என்றனர். முடிவில் எங்களது இலையில் அந்த பொன்னிறமான அந்த எண்ணை பரோட்டா வந்து இறங்கியது.



பரோட்டா சாப்பிடுவது என்பது ஒரு தெய்வானுபவம் என்பது அதை ருசித்து சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். அதுவும் இந்த எண்ணை பரோட்டா சாப்பிடுவது என்பதற்கு ஒரு தனி பக்குவம் வேண்டும் ! முதலில் அந்த பரோட்டாவை பார்க்கும்போது மிகவும் கடினமாக இருக்கிறதே என்று தோன்றும், ஆனால் நல்ல நாட்டு கோழியை நல்லெண்ணெய் விட்டு, கையால் அரைத்த மசாலாவை போட்டு இந்த சால்னா செய்து அதில் எண்ணை மிதக்க மிதக்க கொண்டு வந்து, நன்கு கலக்கி அந்த பரோட்டா மீது ஊற்றும்போது, குழந்தையின் சிரிப்புக்கு மயங்குவது போல அந்த எண்ணை பரோட்டா அப்படியே இளகி போவதை காணலாம். முதன் முதலில் எடுத்து சாப்பிடுவது கொஞ்சம் கரக் மொறுக் என்று இருந்தாலும் அடுத்து சிறிது நேரத்தில் அது நன்கு ஊறியவுடன் அந்த  சால்னாவின் சுவையை அப்படியே கொண்டு இருக்கும். இப்போது ஒவ்வொரு வாய்க்கும் மிக மிருதுவான பரோட்டா ஆகி இருக்கும். மீண்டும் அந்த மேஜிக் பார்க்க ஆசைப்பட்டு எண்ணை பரோட்டாவை கண்டிப்பாக வாங்கி சாப்பிடுவீர்கள்.



சிலருக்கு அந்த எண்ணை பரோட்டாவை சாப்பிடும்போது அந்த எண்ணை ஒற்றுக்கொள்லாமல் போகலாம். எண்ணையில் ஊறியதால் அப்படி இருப்பதால், நாங்கள் அடுத்து தோசை மற்றும் பொரிச்ச நாட்டுக்கோழி வாங்கி சாப்பிட்டோம். நான் இந்த எண்ணை பரோட்டா என்பதை பல முறை, பல கடைகளில் வெவ்வேறு தருணங்களில் சாப்பிட்டு பார்த்துவிட்டு எழுதுகிறேன்.... அது வரையில், பர்மா கடையில் கிடைக்கும் பரோட்டாவில் எண்ணை கொஞ்சம் அதிகமே, அதுவே நீங்கள் அங்கு இருக்கும் மற்ற ரோட்டர கடைகளிலும், பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் இருக்கும் கடைகளில் கிடைப்பதை சாப்பிட்டால் அப்படி தெரியாது. ஆனாலும், பல மக்களின் சாய்ஸ் என்பது இந்த பர்மா கடை மட்டுமே !!



இதை சாப்பிட மக்கள் பக்கத்து ஊரில் இருந்து எல்லாம் வருகிறார்கள், சாயங்காலம் ஆனால் இங்கு கூட்டம் அலை மோதுகிறது. யாரிடம் கேட்டாலும் இந்த எண்ணை பரோட்டா கதையை பற்றி பல விதமாக சொன்னாலும், ஆரம்பத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.... ஆனாலும் என்ன, சுவை ரிஷி மூலம் அறியாது அல்லவா !!





Labels : Suresh, Kadalpayanangal, oor special, district special, tamil nadu, food tour, viruthupatti, virudhunagar, oil parotta, prata, ennai parotta, seepu parotta, famous parotta, amazing taste, unique

Monday, June 22, 2015

அறுசுவை - மதுரை மல்லிகைப்பூ & அல்வா !!

மல்லிகைப்பூ மற்றும் அல்வா என்பதை நமது கவுண்டமணி பழக்கிவிட்டது, அன்றில் இருந்து இது ஒரு பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது, மற்ற ஊரில் இருப்பவர்கள் அல்வா வாங்கினால் மல்லிகைப்பூ கிடைக்காது, மல்லிகைப்பூ வாங்கினால் அல்வா கிடைக்காது என்பதுதான் நிதர்சனம், ஆனால் இந்த மதுரைகாரர்களுக்கு மட்டும் இந்த மல்லிகையும், வாயில் வைத்தால் வழுக்கி செல்லும் இந்த அல்வாவும் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும் ! அதுவும் இந்த ஊருக்கு சென்றுவிட்டு ரயிலில் திரும்பும் மாமன்கள் எல்லாமே இந்த கடையில் இருந்து வாங்காமல் செல்லமாட்டார்கள் என்று கூட சொல்லலாம்...... அதுதான் இந்த பிரேமவிலாஸ் அல்வா !!



இப்போ மல்லிகைப்பூவுக்கு வருவோம், வெள்ளை வெளேருன்னு சும்மா கும்முன்னு மலராம இருக்கிறதுதான் மல்லிகைபூ ஸ்பெஷல். இந்த மதுரைல மட்டும் மல்லிகை பூ கட்டும் அழகே தனி, ரொம்பவே நெருக்கி நெருக்கி கட்டி இருப்பாங்க, அதில் ஒரு முழம் மட்டும் வாங்கினால் அந்த வாசனையே ஆளை தூக்கும். மற்ற ஊர்களில் எல்லாம் மலர்ந்த, நெருக்கி கட்டாத, சிறிய மல்லிகையை கொடுப்பாங்க, இங்க அந்த பூவை கல்யாணம் ஆனவங்க வாங்கியே தீருவாங்க ! அதை வாங்கிகிட்டு பம்மிகிட்டே போற அழகு இருக்கே..... ஆம்பளைகளும் வெட்கபடுவொம் சாமி !!


அல்வா அப்படின்னா எப்படி இருக்கணும் ?! ஒரு தட்டில வைச்சி தரும்போது நாம தட்டை சாயச்சா அப்படியே அங்க ஓடணும், அதை பிடிக்க நாம் கையை கொண்டு போனா சுமா கெளத்தி மீன் போல வழுக்கிட்டு ஓடனும், ஒரு துண்டு பியிச்சு வாயில் போட்டால் அந்த தொண்டைக்குள்ள எந்த சிக்னலையும் நிற்காம புல் ஸ்பீட்ல போற வண்டி மாதிரி வயித்துல ஓடனும், அந்த கலரை பார்த்தீங்களா..... சும்மா தள தள தளன்னு நம்ம கலர்ல ஒரு நண்பேண்டா பீலிங் குடுக்கும், அது மட்டும் இல்லை அந்த அல்வாவில் அங்க அங்க வெள்ளையா தெரியற முந்திரி பருப்பு என்பது அதற்க்கு மச்சம் போன்று அழகு தரும், அதை சாப்பிட்டுவிட்டால் இந்த இனிப்பு ஒரு ரெண்டு மணி நேரமாவது வாயிலேயே இருக்கணும், அப்படி இருக்கிறதுதானே அல்வா ?!


மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் தங்க ரீகல் தியேட்டர் எதிரில் ஒரு முனை கடை இருக்கும், அது என்ன கடை என்று தெரிந்துகொள்ளவே முடியாதபடி ஒரே கூட்டமாக இருக்கும். நெருங்கி சென்றால் எல்லோரும் மந்தார இலையில் இருந்து ஒரு துண்டு எடுத்துபோட்டுக்கொண்டு காரத்தை இன்னொரு கையில் வைத்திருப்பார்கள், அதுதான் இந்த ஊரின் சிறப்புமிக்க பிரேமவிலாஸ் திருநெல்வேலி லாலா மிட்டாய் கடை !! அல்வா கொடுங்க எனும்போதே சுருட்டி வைத்த மந்தார இலையை ஒரு சிறிய பேப்பரில் வைத்து கொடுப்பார்கள், அதை வாங்கி பிரிப்பது என்பது எவ்வளவு சந்தோசம் தரும் விஷயம் தெரியுமா ?!



முதலில் அந்த பேப்பரை எடுத்து விட்டு மந்தார இலையை பாருங்களேன், இதுவரையில் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் அல்லது மெட்டல் என்று வாழ்ந்த நமக்கு அது எவ்வளவு ஆச்சர்யம் தரும் தெரியுமா. காய்ந்த அந்த இலையை தொட்டு தடவி பிரிக்க.... சூரிய வெளிச்சத்தில் ஒரு வைர நெக்லஸ்ஷை பிரித்த மாதிரி அப்படி டால் அடிக்கும். அல்வா மீது கொஞ்சம் கூட கஞ்சத்தனம் இல்லாமல் அந்த நெய் அப்படி மின்னும், அதை அப்படியே கண்களால் பார்த்துக்கொண்டே அல்வாவை தொடும்போது உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஓடும்..... ஒரு வாய் எடுத்து உள்ளே போடும்போதுதான் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு மல்லிகைப்பூ விற்பது கண்ணுக்கு தெரியும். உடனே வீட்டில் இருப்பவருக்கும் பிடிக்குமே என்று ஒரு கால் கிலோ அல்வா வாங்கிகொண்டு, மல்லிகை பூ விலை கேட்கும்போது அதிகம் சொன்னாலும் சரி, விடு கழுதை இப்போ வாங்காம எப்போ வாங்கறது என்று வாங்குவார்கள். இதை வாங்கும்போது அவர்கள் அந்த பூக்காரியின் கண்களையே பார்ப்பதில்லை என்பது கவனிக்க வேண்டியது. அப்படியே வீட்டிற்க்கு ஒரு போன் போட்டு..... அடியே, சும்மா இந்த பக்கம் வந்தேன், உனக்கு பிடிக்குமேன்னு அல்வா வாங்கி இருக்கேன் என்று சொன்னவுடன், அந்த பக்கத்தில் இருந்து என்ன சொல்வார்களோ தெரியவில்லை, இங்கே வெட்கம் பிடுங்கி தின்னும் !! அந்த மல்லிகை பூவையும், அல்வாவையும் மறைத்து கொண்டு செல்வதற்கு அவர்கள் படும் பாடு சொல்லி தெரிவதில்லை..... இப்போது அதை வீட்டிற்க்கு கொண்டு செல்ல வீர நடை போடுவார்கள் பாருங்க...... அன்னைக்கு மழை கொட்டோ கொட்டென்று கொட்டும், நனைந்து கொண்டே சந்தோசபடலாம் !!






Labels : Suresh, Arusuvai, Madurai, premavilas, alwa, famous, jasmine, malligai, poo, madurai famous, food tour, amazing taste, kadalpayananga

Wednesday, June 10, 2015

அறுசுவை - அழகர்கோவில் தோசை, மதுரை !!

தோசை என்பது எப்படி இருக்க வேண்டும், ரவுண்டா, பொன்னிறமா, அங்க அங்க கொஞ்சம் நல்லா வெந்து, உள்ளே உஜாலா போட்ட வெண்மையா இருக்கனுமா இல்லையா ?! ஆனா, என்னுடைய நண்பர் ஒருவர் வந்து கருகி போன இட்லிய போட்டோ எடுத்து வந்து என்கிட்டே காண்பிச்சு அதை தோசைன்னும், அதை நான் ஒரு நாள் போய் கண்டிப்பா சாப்பிட்டே ஆகணும் அப்படின்னும் சொல்லிகிட்டே இருந்தார்.... நாங்க யாரு, இதுவரை எத்தனை வகையான தோசை பார்த்து இருப்போம், ஊத்தப்பம் கூட கொஞ்சம் திக் ஆக தோசை மாதிரிதானே இருக்கும், என்கிட்டயா நடக்கும். இப்படியே நினைசிக்கிட்டுதான் நான் இந்த அழகர்கோவில் தோசையை சாப்பிட போனேன், என்னுடைய மனதில் அதுவரை இருந்த தோசையின் உருவகத்தை மாற்றி அமைத்ததோடு, சுவையையும் இன்று வரை நினைவில் வைத்திருக்க வைக்கிறது ! அடுத்த முறை மதுரை செல்லும்போது கண்டிப்பா.... அழகர்கோவில் தோசை சாப்பிட்டு வரணும் !!


சிறு வயதில் இருந்தே தோசை என்றால், அதுவும் முறுகலாக கிடைக்கும் தோசை என்றால் வயிறு சிறிது பெரிதாகும். அரிசி மாவும், உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை என்று பாடி திரிந்தவர்களாயிற்றே நாம், இதுவரை தோசை என்பது இப்படிதான் இருக்கும் என்று மனதில் உருவக படுத்தி வைத்திருந்தேன், உள்ளே வைக்கும் விஷயம் மட்டும் மசாலா, வெங்காயம், மைசூர் மசாலா என்று மாறுமே தவிர இந்த தோசை எப்போதும் அப்படியேதான் இருக்கும். இதில் நண்பர் ஒருவர், பெரிய இட்லியை காட்டி, இது தோசை என்றபோது சந்தேகம்தான் வந்தது, ஆனாலும் அட்ரஸ் வாங்கி வைத்துக்கொண்டேன்.


மதுரை காமராஜர் சாலையில் இரண்டு பக்கமும் பார்த்துக்கொண்டே சென்றால் 112 என்ற இலக்கம் ஒரு சிறிய வீட்டின் முன்புறமாக இருக்கும், அதில் இங்கு அழகர்கோவில் தோசை கிடைக்கும் என்று போட்டு இருக்கும், சந்தேகமே படாமல் உள்ளே சென்றால் வலது பக்கம் ஒரு சிறிய அடுப்பில் எண்ணை சட்டி காய்ந்து கொண்டு இருக்க, திரு.விஷ்வநாதய்யர் சிரித்த முகத்துடன் உங்களை வரவேர்ப்பார். ஒரு தோசை இருபது ரூபாய், நமது முன்னே தோசை மாவை எடுத்து (அரிசியும், உளுந்துமே கலந்து அதில் சீரகம் எல்லாம் ஜாஸ்தியாக போட்டு, மிளகு, சுக்கு மற்றும் பயிறு வகைகள் இருக்கும்) தோசை கல்லில் ஊற்ற போகிறார் என்று பார்த்தால், அதை அப்படியே எண்ணை காய்ந்து கொண்டு இருந்த வடை சட்டியில் ஊற்றி, அதை பரப்பி விடுகிறார்... நமக்கு இங்கே கிடைக்க போவது பெரிய வடையா, இல்லை தோசையா என்ற சந்தேகம் வருகிறது !!






அந்த தோசை மெதுவாக வெந்து கொண்டு இருக்கும்போது, அவரிடம் பேசியதில்.... அவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அழகர் கோவிலில் வேலை பார்த்ததாகவும், பின்னர் வேலையை விட்ட பிறகு அவரின் ஸ்பெஷல் ஆன இந்த அழகர் கோவில் தோசையை வீட்டிலேயே சுட்டு விற்று வருவதாகவும் தெரிவித்தார். இவரது அழகர்கோவில் தோசையை பற்றி தினமலரில் வந்ததில் இருந்து நிறைய பேர் வருவதாகவும் சந்தோசபட்டார். யார் தோசை வேண்டும் என்றாலும் போன் செய்து கேட்டுவிட்டால் மாவு தயார் செய்வார் என்றும், அது காலை 10 மணியில் இருந்து மதியம் 3 மணி வரையிலும், மறுபடியும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கிடைக்குமாம்.


இப்போது தோசை மொறு மொறுவென ஆகிவிட்டு இருக்க, அதை எடுத்து எங்களுக்கு ஒரு பேப்பரில் வைத்து தந்தார், என்னடா சட்னி சாம்பார் எல்லாம் தரமாட்டாங்களா என்று எனது நண்பர் கேட்க, நான் கேட்கவில்லை !. அவ்வளவு மொறு மொறுப்பான தோசையில் கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வாயில் போட மிகவும் வித்யாசமாக இருதது, அந்த சீரகம் ஒவ்வொரு கடியிலும் கொஞ்சம் காரத்தை கொடுக்க, வெளியே மொறு மொறுவென இருந்த அந்த தோசையின் உட்பகுதி மிகவுமே மிருதுவாக இருந்தது. கரக் மொறுக் என்று முதல் முதலாக இப்படி தோசை சாப்பிடுகிறேன், உண்மையிலேயே இது வித்யாசமான, சுவையான தோசைதான். கொஞ்சமே கொஞ்சம் கெட்டி சட்னியும், கார சட்னியும் வைத்து தந்தால் இன்னும் இரண்டு கூடவே இறங்கும்.


மதுரை நண்பர்களும், அங்கு செல்பவர்களும் வித்தியசமாக சாப்பிட இங்கு செல்லலாம், அழகர்கோவில் தோசை நன்றாக, சுவையாக இருக்கிறது. 

போன் : +91 74187 68574
 பெயர் : திரு.விஷ்வநாதய்யர்
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை.






Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, alagarkovil dosai, tasty, crispy, dosa, madurai, near kamarajar salai road, different taste

Tuesday, June 9, 2015

சிறுபிள்ளையாவோம் - கலர் சோடா !!

லவ் - ஓ..... இதை சிறுவயதில் குடித்ததில்லை என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்பவெல்லாம் கடைக்குள் ஒரு சிறிய தெர்மாகோல் பெட்டி இருக்கும், அதில் இருந்து கருப்பு கலர் ஒன்றை எடுத்து கொடுப்பார்கள், ஒபனர் என்று கேட்டு வாங்கி சென்று வீட்டில் அதை உடைத்தவுடன் அந்த பொங்கும் நுரையை கைகளில் அள்ளி குடிப்போம், பின்னர் அம்மா அதை டம்ப்ளரில் ஊற்றியவுடன் புரண்டு புரண்டு ஒரே அழுகை..... பின்னே அதை பாட்டிலில்தானே குடிக்க வேண்டும் ?! மடக் மடக் என்று குடித்துவிட்டு ஏப்பம் ஏப்பமாய் வரும் பாருங்கள்....... அட அட சுகமோ சுகம் ! ஆனால் ஒரு நாள் இரவு அப்பாவிற்கு வயிறு உப்புசம் என்று சொல்லி ஒரு சீட்டில் எழுதி கலர் சோடா ஒன்னு வாங்கி வாடா என்றார் என் அம்மா, கலர் கொஞ்சம் மஞ்சள் நிறமாக இருந்தாலும் கலர் சோடாவாயிற்றே, அதை நான்தான் முதலில் குடிப்பேன் என்று சொல்லி வாங்கி குடித்துவிட்டு பயங்கரமாக வாந்தி எடுத்தேன்...... அது ஜிஞ்சர் சோடா !!


அதன் பின்னர் கவனித்தபோதுதான் தெரிந்தது பன்னீர் சோடா, சாதா சோடா, ஜிஞ்சர் சோடா, லெமன் சோடா, கருப்பு சோடா, ஆரஞ்சு சோடா என்று வகை வகையாக இருப்பது. கொஞ்சம் வயது சென்ற பின்னர் வயறு வலிக்கிறது என்று இரவினில் துடித்தபோது அந்த ஜிஞ்சர் சோடா தந்த நிவாரணம் இன்றும்  மறக்க முடியாது. இன்றைய வெளிநாட்டு சந்தை படுத்துதலில் இந்த பானங்கள் எல்லாம் முற்றிலும் அழிந்து வருகிறது.

                         



லவ் - ஓ என்னும் பானம் இன்றும் எல்லோரது நினைவில் இருக்கும். அந்த பாட்டில் எடுத்து கொஞ்சம் குலுக்கி நுரை வழிய வழிய அப்படியே வாயில் சரித்து குடித்த அந்த இனிய பொழுதுகள் மறக்க கூடியவையா ?! சிறிது உப்பு கலந்த அந்த கோலி சோடாவும், இனிப்பு கலந்த அந்த பன்னீர் சோடாவும் இன்றைய பெப்சி, கோக் எல்லாம் தோற்று போகும். இன்று லிட்டர் லிட்டராக வீட்டில் வாங்கி வைத்து இருந்தாலும் குடிக்க மனம் வரவில்லை, ஆனால் அன்று அந்த ஒரு பாட்டில் கிடைத்தால் தீபாவளிதான். எனக்கு இந்த சோடாவில் மிகவும் பிடித்தது என்பது அதை குடித்தபின்னர் வரும் ஏப்பம்தான், சூடாக அந்த வெப்ப காற்று வயிற்றில் இருந்து வரும்போதே அந்த கலர் சோடாவின் வாசனையோடு வரும்...... வீட்டில் பொய்யே சொல்ல முடியாது.



இன்றும் மதுரை பக்கத்து கிராமங்களில் வயிற்று வலி என்றால் ஜிஞ்சர் சோடாதான், வீட்டில் விருந்தாளி வந்தால் சோடா கலர் வாங்கி கொடுப்பார்கள், வெயிலுக்கு சென்று வந்தால் பன்னீர் சோடா என்று களை கட்டுகிறது. வெயிலுக்கு பெப்சி, கோக் வாங்கி குடிப்பதற்கு பதில் இந்த கலர் சோடா வாங்கி குடித்து பாருங்கள், அதன் சுவை நம்மை சிறுப்பிள்ளை ஆக்கிவிடும் !!



Labels : Suresh, kadalpayanangal, color soda, sirupillaiyaavom, childhood memories, live your childhood, child, soda, ginger soda, love-o, love-1, lemon soda, orange soda, time travel

Monday, June 8, 2015

அறுசுவை - பீடா.... பல வகை !!

பீடா..... நான் எட்டாவது படிக்கும்போது திருச்சி பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் இருந்த காஞ்சனா ஹோடேலில் அம்மாவுக்கும், எனக்கும் பிரியாணி வாங்கி கொடுத்துவிட்டு, வெளியே ஏப்பத்துடன் வந்து அப்பா ஒரு ஸ்வீட் பீடா வாங்கினார். அதுவரையில் நான் எத்தனையோ முறை இது போன்ற கடைகளை பார்த்து இருந்தாலும், முதல் முறையாக என்ன அது என்று நோக்கினேன். நான் பார்ப்பதை அறிந்து கொஞ்சமாக பியித்து தந்தார்..... ம்ம்ம்ம்ம் ஒரு வெற்றிலை இவ்வளவு சுவையாக இருக்குமா என்ன ! பின்னர் பத்தாவது படிக்கும் போது, ஒரு முறை நண்பர்கள் ( மாப்பிள்ளை பெஞ்ச் நாங்கள் !) எல்லோரும் வெளியில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது எங்களது செட்டில் பிஞ்சிலேயே பழுத்த ஒருவன் பீடா வாங்கினான், உனக்கும் வேண்டுமா என்றபோது ஒரு ஸ்வீட் பீடா என்றேன்..... ஏண்டா நீயெல்லாம் இன்னும் வயசுக்கு வரவே இல்லையா என்பது போல பார்த்து, நான் இன்னொரு பீடா சொல்றேன் ட்ரை பண்ணு என்று சொல்லி 120 ஒன்று என்றான். நான் அதை வாயில் போட போகும்போது மற்ற நண்பர்களும் வயசுக்கு வரவேண்டும் என்று என்னிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பியித்து, கடைசியில் எனக்கு மிஞ்சியது என்பது தக்கனூண்டுதான். அதை சாப்பிட்டதில் இருந்து தலை சுற்றியது, ஒரு வழியாக வகுப்பிற்கு வந்து வாட்டர் பாட்டில் எடுத்து மூஞ்சியை பல முறை அலம்பி பெஞ்சில் சென்று உட்கார்ந்து இருந்தோம்...... வகுப்பில் அன்று இங்கிலீஷ் டீச்சர் வந்து ஏன் கணக்கு பாடம் எடுத்தார் என்பது இன்று வரை எனக்கு புரியாத புதிர் !! அன்று மட்டும் என்னை பார்த்து இருந்தால், நீங்கள் மந்திரிச்சு விட்ட கோழியை இதுவரை பார்த்ததில்லை என்றால் என்னை பார்த்து தெரிந்து கொண்டு இருக்கலாம். அப்படி வாழ்க்கையில் பீடா என்பதில் ஸ்வீட் பீடா, 120, 320, 420 என்று மட்டுமே எண்ணி இருந்த என்னை அதிலும் வெரைட்டி உண்டு என்று பொடனியில் தட்டியது இந்த கடை !!



அலுவல் விஷயமாக ஹைதராபாத் பயணம் செய்யும்போது எல்லாம், வழியில் நிறைய இடங்களில் பான் ஷாப் என்று நிறைய உண்டு. பெங்களுரிலும் சில இடங்களில் ஹைதராபாத்தி பான் என்று உண்பது உண்டு. அப்படி என்ன அதில் இருக்கிறது என்று தோன்றியது, அதை பற்றி நண்பரிடம் விசாரித்ததில் மீண்டும் நான் வயசுக்கு வரவில்லையோ என்பது போலவே பார்த்து, அதை பற்றி நீ தெரிந்து கொள்ள டிம்மி பான் பேலஸ் சென்று வா என்றார். சிகந்திராபாத்தில் PG  ரோடு என்னும் இடத்தில் (கூகிள் செய்தால் வரலாறே கிடைக்கும்) இருக்கிறது இந்த கடை, சிறிய கடைதான் உள்ளே நுழைந்தால் கலர் கலராக, ரகம் ரகமாக பீடா வைத்து இருக்கின்றனர் !


நம்மூரில் எல்லாம் ஒரு சிறிய கடை இருக்கும், அங்கே சென்று ஸ்வீட் பீடா போட்டாலே நம்மை ஏதோ டாஸ்மாக் சென்று வந்தது மாதிரி பார்ப்பார்கள். ஸ்வீட் பீடா என்று கேட்டவுடன் அவரது முன்னால் இருக்கும் டப்பாவில் இருந்து ஒவ்வொன்றாய் எடுத்து போட ஆரம்பிப்பார், அது என்னது என்று தெரியுமா........ தெரியாதவர்கள் இந்த வீடியோ பாருங்கள், இது ஸ்வீட் பீடாவுக்கு மட்டும்தான், வேறு வகையை எல்லாம் சொன்னால் இந்த பதிவுகள் போதாது.
குறிப்பு : இது டிம்மி பான் பேலஸ் கடை அல்ல, பீடா செய்யும் குறிப்பே சுவாரசியத்திற்கு !!


உள்ளே நுழைந்து என்ன பீடா சாப்பிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே ஒரு கண்ணாடி பெட்டியுனுள் விதம் விதமாக வைத்து இருந்தனர், நானெல்லாம் பீடா என்பதை ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று பார்த்துவிட்டு இத்தனை வகையா, எதை எடுப்பது என்று தெரியாமல் முழிக்க, அவரோ ஒரு வேளை இவருக்கு ஸ்பெஷல் ஜர்தா பீடா வேண்டும் போல என்று சார் உங்களுக்கு வேண்டிய பீடா இவர் தருவார் என்றார்..... அவர் ஏதோ உடுப்பி ஹோடேலில் மெனு வாசிப்பதை போல கட கடவென சொல்லிக்கொண்டே போக எனக்கு இங்கே தலையை சுற்றியது, முடிவில் அவ்வளவு மூச்சு வாங்கி சொல்லியவரிடம் ஒரு ஸ்வீட் பீடா என்று மட்டும் சொன்னேன், என்னை முறைத்து விட்டு பட படவென இப்போது திட்ட ஆரம்பித்தார், அப்புறம்தான் தெரிந்தது அவர் என்னை திட்டவில்லை ஸ்வீட் பீடாவில் இருந்த வகையை சொன்னார் என்று !! கடைசியில் ஒரு மீனாக்ஷி பீடாவும், ஒரு மில்க் சாக்லேட் பீடாவும் வாங்கி கொண்டேன்.







இந்த மீனாக்ஷி (ஏம்பா, நான் சரியாதான் பீடா பேர் சொல்றேனா ?!) பீடாவை வாயில் போட்டவுடன் ஒரு சிறிய காரமும், அதே சமயம் இனிப்பும் தெரிந்தது. அப்போதுதான் கவனித்தேன் பீடாவினுள் வைக்கப்படும் பாக்கே ஒரு பத்து வகை இருந்ததை, அந்த கடையை சுற்றி கவனிக்கும்போதுதான் தெரிந்தது அத்தனை வகை பீடா சாமான்கள் இருந்ததை. பீடான்னா சும்மா இல்லை பாஸ்! அப்புறம் இந்த மில்க் சாக்லேட் பீடா இருக்கே, முதலில் கடிக்கும்போது சாக்லேட் சாபிடுவது போலதான் இருக்கும், அடுத்த கடிக்கு பீடாவை கடிக்கும்போது அதனுள்ளே இருக்கும் குல்கந்துவும் இந்த சாக்லேட்டும் கலந்து ஒரு அருமையான சுவையை குடுக்கிறது. ஏம்பா, தமிழ்நாட்டில் வெறும் நாலைந்து வகையை வைச்சு எமாதரீங்களே !!






அடுத்து அவர்கள் மெனு கார்ட் (பீடாவுக்கு மட்டும் சார் !) பார்த்தேன், அடேங்கப்பா எத்தனை வகை. அதில் என்னை மிகவும் கவர்ந்தது கடைசியில் இருந்த பீடா வகை..... ஹனிமூன் ஸ்பெஷல், டேய்... அதில் என்னதைடா கலப்பீங்க ?! அடுத்த முறை செல்லும்போது கண்டிப்பாக சென்று வாரங்கள்.




Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, beedaa, pan, scendrabad, hyderabad, pan palace, Dimmy's pan palace, best pan, variety of pan, beeda, must try, tasty, dessert