Monday, June 1, 2015

அறுசுவை - எசென்ஸ் தோசை, சேலம்

அறுசுவை பகுதியை விரும்பி படித்து வருபவர்கள் ஏராளம் என்பது எனது முகநூல் பக்கத்தில், எனக்கே படிக்க சொல்லி வரும் எனது இந்த அறுசுவை பகுதிகள்தான் அதிகம் !! இந்த வாரம் தோசையில் புதுவகையான, சேலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கும்..... எஸ்சென்ஸ் தோசை ! முதலில் இதை பற்றி கேள்விப்பட்டபோது, இந்த தோசையில் மல்லிகைபூ, ரோஜா பூ எஸ்சென்ஸ் ஊற்றி அதை மணக்க மணக்க தருகிறார்களோ என்று தோன்றியது. எங்களது வீட்டில் தோசை மாவை பிரிட்ஜில் வைத்துவிட்டு, மூடி இருந்தால், பிரிட்ஜில் இருக்கும் மல்லிகை பூ அல்லது மற்ற மணமான பொருட்களின் வாசனை அந்த தோசை மாவில் ஏறி விடும். அடுத்த நாள் அம்மா தோசை சுட்டு வைக்கும்போது மணக்க மணக்க இருக்கும்...... ஆனால் இந்த எசென்ஸ் தோசை என்பது வேறு. சுவையில் கட்டி போடுகிறது இந்த தோசை எனலாம் !!

அண்ணன், தம்பி இருவரும் எதிர் எதிரே கடை.... NNK மற்றும் NNR !!


சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது அம்மாபேட்டை, அங்கு TVK ரோட்டில் யாரை கேட்டாலும் சொல்லும் இடத்தில் இருக்கிறது இந்த ஹோட்டல். என்.என்.ஆர்., என்.என்.கே. சகோதரர்கள் சுமார் ஐம்பது வருடங்களாக இந்த கடையை நடத்தி வருகின்றனர். சிறிய ஹோட்டல், மர பெஞ்ச் என்று இருக்கிறது, மாலை ஐந்து மணிக்கு மேலே கும்பல் கும்பலாக வருகிறார்கள், சில நேரங்களில் இடம் கிடைக்க போட்டியே நடக்குமாம். நான் பார்த்த வரையில்  நிறைய பேர் இங்கு பார்சல்தான் எடுத்து செல்கின்றனர், அதில் அசைவ வகைகளும், ஆட்டுகால் சூப்பும் அடக்கம்.


வீட்டில் ஞாயிறு மதியம் மட்டன் எடுத்து சமைக்கும்போது குழம்பும், அந்த மட்டனை சுக்கா போல வெங்காயம், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து அரைச்சி வெச்சிருந்த மசாலாவை சேர்த்து வேக வைக்க அது தொட்டு கொள்ள கொளகொளவென வரும். அதை நன்றாக வேக விட்டால், கறி மட்டும் அந்த மசாலாவோடு இருக்கும், ஆனால் அம்மா அதையும் கொஞ்சம் கெட்டியான குழம்பு போல வைப்பார்கள். முதலில் சாதம் போட்டு விட்டு, அதன் மேலே குழம்பு ஊற்றுவார்கள், அதற்க்கு தொட்டு கொள்ள அந்த சுக்கா துண்டுகளை மட்டும் எடுத்து வைக்க நாம் நன்றாக சாப்பிட்டு விடுவோம். அடுத்து சாதம் போட்டுக்கொண்டு ரசம் ஊற்றம்மா என்று சொல்லும்போது, இப்போது அந்த சுக்காவை கொளகொளவென இருக்கும் அந்த மசாலாவோடு எடுத்து சாப்பாட்டு தட்டில்..... கவனிக்க காய் வைக்கும் தட்டில் வைக்காமல், சாப்பாட்டு தட்டில் வைப்பார்கள். நாம் அந்த மசாலாவை சாதத்திற்கு போட்டு சாப்பிட, ம்ம்ம்ம்ம் நன்றாக இருக்கிறதே என்று சாப்பிட, அடுத்துதான் ரசம் மோர் எல்லாம் ! அடுத்து நைட் தோசை சுட்டு வைத்துவிட்டு, அந்த மசாலாவை பக்கத்தில் வைத்திருப்பார்... இப்போது அந்த மசாலாவை கொஞ்சம் கொஞ்சமாக தொட்டு, நக்கி, ருசித்து நான்கு தோசை அதிகமாக இறங்கி இருக்கும். அவரது சதித்திட்டம் தெரியாமல், வலைக்குள் விழுந்து அந்த மசாலாவின் சுவைக்கு அடிமை ஆகி அதிகம் தின்று இருப்போம்....... இப்போது சொல்லுங்கள், என்னதான் கறிக்குழம்பு இருந்தாலும், அந்த தொட்டு கொள்ள செய்யும் கறியில் இருக்கும் மசாலா தொட்டு சாப்பிடுவது எவ்வளவு இன்பம் !!அந்த மசாலாவைதான் இங்கு எஸ்சென்ஸ் தோசை என்கின்றனர். ஒரு சிறிய ஊத்தாப்பம், அதன் மேலே இளசான ஆட்டுக் கறியை கொஞ்சமா நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அதனோடு இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து அரைச்சி வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வேக வைத்து, தண்ணீர் அதிகம் சேர்க்காமல், அடிபிடிக்காத மாதிரி மிதமான சூட்டிலேயே வேக வைத்து, கெட்டி சட்னி பதத்துல இறக்கி கறி துண்டுகளை மட்டும் எடுத்து விட்டு பார்த்தால்......எசன்ஸ் ரெடி, அதை இந்த ஊதாப்பத்தின் மேலே தடவி கொடுக்க இங்கே வாயிலேயே வாட்டர்பால்ஸ் உருவாகிறது. கொஞ்சமே கொஞ்சம் பியித்து அதை அந்த எஸ்சென்ஸ் தொட்டு சாப்பிட கறிக்குழம்பு எல்லாம் வேண்டவே வேண்டாம்....... இதுவே போதும் !!அடுத்த முறை சேலம் செல்லும்போது, கொஞ்சம் உள்ளே சென்று இதை சுவைத்துதான் பாருங்களேன்.... கண்டிப்பாக உங்களது பயணம் என்றும் நினைவில் நிற்கும் !! 
Labels : Suresh, Kadalpayanangal, salem, famous food, food, essence dosa, ammapet, dosai, different dosa, tasty, near salem,

5 comments:

 1. Hi Suresh Mouth Watering Monday athuvuma ....! i am going to try this month... Thanks for sharing.

  ReplyDelete
 2. இதெல்லாம் நல்லாவே இல்ல.....
  இப்டி ஓவர் வர்ணிப்பு கொடுக்குறத நிப்பாட்டுங்க.
  பொதுவா ஹோடெல்ல சாப்டா தான் அல்சர் வரும்.
  இங்க போஸ்ட் படிக்கிறப்பயெல்லம் அல்சர் வருது......
  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .......

  அந்த எஸ்சென்ஸ் தோசை ஒன்லி 15 ருபீஸ் ...............
  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .......

  ReplyDelete
 3. boss i need a job from your concern, expected salary Biriyani, tiffen, Snacks and other food items

  ReplyDelete
 4. படங்கள் - வாயிலேயே குற்றாலம்...!

  ReplyDelete
 5. இப்போதே சென்று சாப்பிட தூண்டும் பதிவு !!!! வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் கடல்பயணம்!!!

  ReplyDelete