Wednesday, June 10, 2015

அறுசுவை - அழகர்கோவில் தோசை, மதுரை !!

தோசை என்பது எப்படி இருக்க வேண்டும், ரவுண்டா, பொன்னிறமா, அங்க அங்க கொஞ்சம் நல்லா வெந்து, உள்ளே உஜாலா போட்ட வெண்மையா இருக்கனுமா இல்லையா ?! ஆனா, என்னுடைய நண்பர் ஒருவர் வந்து கருகி போன இட்லிய போட்டோ எடுத்து வந்து என்கிட்டே காண்பிச்சு அதை தோசைன்னும், அதை நான் ஒரு நாள் போய் கண்டிப்பா சாப்பிட்டே ஆகணும் அப்படின்னும் சொல்லிகிட்டே இருந்தார்.... நாங்க யாரு, இதுவரை எத்தனை வகையான தோசை பார்த்து இருப்போம், ஊத்தப்பம் கூட கொஞ்சம் திக் ஆக தோசை மாதிரிதானே இருக்கும், என்கிட்டயா நடக்கும். இப்படியே நினைசிக்கிட்டுதான் நான் இந்த அழகர்கோவில் தோசையை சாப்பிட போனேன், என்னுடைய மனதில் அதுவரை இருந்த தோசையின் உருவகத்தை மாற்றி அமைத்ததோடு, சுவையையும் இன்று வரை நினைவில் வைத்திருக்க வைக்கிறது ! அடுத்த முறை மதுரை செல்லும்போது கண்டிப்பா.... அழகர்கோவில் தோசை சாப்பிட்டு வரணும் !!


சிறு வயதில் இருந்தே தோசை என்றால், அதுவும் முறுகலாக கிடைக்கும் தோசை என்றால் வயிறு சிறிது பெரிதாகும். அரிசி மாவும், உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை என்று பாடி திரிந்தவர்களாயிற்றே நாம், இதுவரை தோசை என்பது இப்படிதான் இருக்கும் என்று மனதில் உருவக படுத்தி வைத்திருந்தேன், உள்ளே வைக்கும் விஷயம் மட்டும் மசாலா, வெங்காயம், மைசூர் மசாலா என்று மாறுமே தவிர இந்த தோசை எப்போதும் அப்படியேதான் இருக்கும். இதில் நண்பர் ஒருவர், பெரிய இட்லியை காட்டி, இது தோசை என்றபோது சந்தேகம்தான் வந்தது, ஆனாலும் அட்ரஸ் வாங்கி வைத்துக்கொண்டேன்.


மதுரை காமராஜர் சாலையில் இரண்டு பக்கமும் பார்த்துக்கொண்டே சென்றால் 112 என்ற இலக்கம் ஒரு சிறிய வீட்டின் முன்புறமாக இருக்கும், அதில் இங்கு அழகர்கோவில் தோசை கிடைக்கும் என்று போட்டு இருக்கும், சந்தேகமே படாமல் உள்ளே சென்றால் வலது பக்கம் ஒரு சிறிய அடுப்பில் எண்ணை சட்டி காய்ந்து கொண்டு இருக்க, திரு.விஷ்வநாதய்யர் சிரித்த முகத்துடன் உங்களை வரவேர்ப்பார். ஒரு தோசை இருபது ரூபாய், நமது முன்னே தோசை மாவை எடுத்து (அரிசியும், உளுந்துமே கலந்து அதில் சீரகம் எல்லாம் ஜாஸ்தியாக போட்டு, மிளகு, சுக்கு மற்றும் பயிறு வகைகள் இருக்கும்) தோசை கல்லில் ஊற்ற போகிறார் என்று பார்த்தால், அதை அப்படியே எண்ணை காய்ந்து கொண்டு இருந்த வடை சட்டியில் ஊற்றி, அதை பரப்பி விடுகிறார்... நமக்கு இங்கே கிடைக்க போவது பெரிய வடையா, இல்லை தோசையா என்ற சந்தேகம் வருகிறது !!


அந்த தோசை மெதுவாக வெந்து கொண்டு இருக்கும்போது, அவரிடம் பேசியதில்.... அவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அழகர் கோவிலில் வேலை பார்த்ததாகவும், பின்னர் வேலையை விட்ட பிறகு அவரின் ஸ்பெஷல் ஆன இந்த அழகர் கோவில் தோசையை வீட்டிலேயே சுட்டு விற்று வருவதாகவும் தெரிவித்தார். இவரது அழகர்கோவில் தோசையை பற்றி தினமலரில் வந்ததில் இருந்து நிறைய பேர் வருவதாகவும் சந்தோசபட்டார். யார் தோசை வேண்டும் என்றாலும் போன் செய்து கேட்டுவிட்டால் மாவு தயார் செய்வார் என்றும், அது காலை 10 மணியில் இருந்து மதியம் 3 மணி வரையிலும், மறுபடியும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் கிடைக்குமாம்.


இப்போது தோசை மொறு மொறுவென ஆகிவிட்டு இருக்க, அதை எடுத்து எங்களுக்கு ஒரு பேப்பரில் வைத்து தந்தார், என்னடா சட்னி சாம்பார் எல்லாம் தரமாட்டாங்களா என்று எனது நண்பர் கேட்க, நான் கேட்கவில்லை !. அவ்வளவு மொறு மொறுப்பான தோசையில் கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வாயில் போட மிகவும் வித்யாசமாக இருதது, அந்த சீரகம் ஒவ்வொரு கடியிலும் கொஞ்சம் காரத்தை கொடுக்க, வெளியே மொறு மொறுவென இருந்த அந்த தோசையின் உட்பகுதி மிகவுமே மிருதுவாக இருந்தது. கரக் மொறுக் என்று முதல் முதலாக இப்படி தோசை சாப்பிடுகிறேன், உண்மையிலேயே இது வித்யாசமான, சுவையான தோசைதான். கொஞ்சமே கொஞ்சம் கெட்டி சட்னியும், கார சட்னியும் வைத்து தந்தால் இன்னும் இரண்டு கூடவே இறங்கும்.


மதுரை நண்பர்களும், அங்கு செல்பவர்களும் வித்தியசமாக சாப்பிட இங்கு செல்லலாம், அழகர்கோவில் தோசை நன்றாக, சுவையாக இருக்கிறது. 

போன் : +91 74187 68574
 பெயர் : திரு.விஷ்வநாதய்யர்
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை.


Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, alagarkovil dosai, tasty, crispy, dosa, madurai, near kamarajar salai road, different taste

4 comments:

 1. வித்தியாசமான "தோசை" தான்...

  ReplyDelete
 2. இதுவரை கேள்விப்படாத தோசை..
  நன்றாக இருக்கிறது..
  உங்கள் உணவு பயணம் அருமை.

  ReplyDelete
 3. அழகர்கோயில் மடப்பள்ளியில் சுடச்சுட இந்த தோசையை சாப்பிட்டிருக்கிறேன். வித்தியாசமான சுவைதான். நீங்கள் கூறியுள்ள இடத்தில் இன்னும் சாப்பிட்டதில்லை. அருமையான பதிவு!

  ReplyDelete
 4. இந்த முறை மதுரை வந்த போது, அழகர் கோவிலுக்கு போயிருந்தேன்.. அங்கேயே ஒரிஜினல் அழகர் கோவில் தோசை சாப்பிட்டோம்.... :)

  ReplyDelete