Monday, June 22, 2015

அறுசுவை - மதுரை மல்லிகைப்பூ & அல்வா !!

மல்லிகைப்பூ மற்றும் அல்வா என்பதை நமது கவுண்டமணி பழக்கிவிட்டது, அன்றில் இருந்து இது ஒரு பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது, மற்ற ஊரில் இருப்பவர்கள் அல்வா வாங்கினால் மல்லிகைப்பூ கிடைக்காது, மல்லிகைப்பூ வாங்கினால் அல்வா கிடைக்காது என்பதுதான் நிதர்சனம், ஆனால் இந்த மதுரைகாரர்களுக்கு மட்டும் இந்த மல்லிகையும், வாயில் வைத்தால் வழுக்கி செல்லும் இந்த அல்வாவும் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும் ! அதுவும் இந்த ஊருக்கு சென்றுவிட்டு ரயிலில் திரும்பும் மாமன்கள் எல்லாமே இந்த கடையில் இருந்து வாங்காமல் செல்லமாட்டார்கள் என்று கூட சொல்லலாம்...... அதுதான் இந்த பிரேமவிலாஸ் அல்வா !!



இப்போ மல்லிகைப்பூவுக்கு வருவோம், வெள்ளை வெளேருன்னு சும்மா கும்முன்னு மலராம இருக்கிறதுதான் மல்லிகைபூ ஸ்பெஷல். இந்த மதுரைல மட்டும் மல்லிகை பூ கட்டும் அழகே தனி, ரொம்பவே நெருக்கி நெருக்கி கட்டி இருப்பாங்க, அதில் ஒரு முழம் மட்டும் வாங்கினால் அந்த வாசனையே ஆளை தூக்கும். மற்ற ஊர்களில் எல்லாம் மலர்ந்த, நெருக்கி கட்டாத, சிறிய மல்லிகையை கொடுப்பாங்க, இங்க அந்த பூவை கல்யாணம் ஆனவங்க வாங்கியே தீருவாங்க ! அதை வாங்கிகிட்டு பம்மிகிட்டே போற அழகு இருக்கே..... ஆம்பளைகளும் வெட்கபடுவொம் சாமி !!


அல்வா அப்படின்னா எப்படி இருக்கணும் ?! ஒரு தட்டில வைச்சி தரும்போது நாம தட்டை சாயச்சா அப்படியே அங்க ஓடணும், அதை பிடிக்க நாம் கையை கொண்டு போனா சுமா கெளத்தி மீன் போல வழுக்கிட்டு ஓடனும், ஒரு துண்டு பியிச்சு வாயில் போட்டால் அந்த தொண்டைக்குள்ள எந்த சிக்னலையும் நிற்காம புல் ஸ்பீட்ல போற வண்டி மாதிரி வயித்துல ஓடனும், அந்த கலரை பார்த்தீங்களா..... சும்மா தள தள தளன்னு நம்ம கலர்ல ஒரு நண்பேண்டா பீலிங் குடுக்கும், அது மட்டும் இல்லை அந்த அல்வாவில் அங்க அங்க வெள்ளையா தெரியற முந்திரி பருப்பு என்பது அதற்க்கு மச்சம் போன்று அழகு தரும், அதை சாப்பிட்டுவிட்டால் இந்த இனிப்பு ஒரு ரெண்டு மணி நேரமாவது வாயிலேயே இருக்கணும், அப்படி இருக்கிறதுதானே அல்வா ?!


மதுரை ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இருக்கும் தங்க ரீகல் தியேட்டர் எதிரில் ஒரு முனை கடை இருக்கும், அது என்ன கடை என்று தெரிந்துகொள்ளவே முடியாதபடி ஒரே கூட்டமாக இருக்கும். நெருங்கி சென்றால் எல்லோரும் மந்தார இலையில் இருந்து ஒரு துண்டு எடுத்துபோட்டுக்கொண்டு காரத்தை இன்னொரு கையில் வைத்திருப்பார்கள், அதுதான் இந்த ஊரின் சிறப்புமிக்க பிரேமவிலாஸ் திருநெல்வேலி லாலா மிட்டாய் கடை !! அல்வா கொடுங்க எனும்போதே சுருட்டி வைத்த மந்தார இலையை ஒரு சிறிய பேப்பரில் வைத்து கொடுப்பார்கள், அதை வாங்கி பிரிப்பது என்பது எவ்வளவு சந்தோசம் தரும் விஷயம் தெரியுமா ?!



முதலில் அந்த பேப்பரை எடுத்து விட்டு மந்தார இலையை பாருங்களேன், இதுவரையில் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் அல்லது மெட்டல் என்று வாழ்ந்த நமக்கு அது எவ்வளவு ஆச்சர்யம் தரும் தெரியுமா. காய்ந்த அந்த இலையை தொட்டு தடவி பிரிக்க.... சூரிய வெளிச்சத்தில் ஒரு வைர நெக்லஸ்ஷை பிரித்த மாதிரி அப்படி டால் அடிக்கும். அல்வா மீது கொஞ்சம் கூட கஞ்சத்தனம் இல்லாமல் அந்த நெய் அப்படி மின்னும், அதை அப்படியே கண்களால் பார்த்துக்கொண்டே அல்வாவை தொடும்போது உடம்பில் ஒரு சிலிர்ப்பு ஓடும்..... ஒரு வாய் எடுத்து உள்ளே போடும்போதுதான் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு மல்லிகைப்பூ விற்பது கண்ணுக்கு தெரியும். உடனே வீட்டில் இருப்பவருக்கும் பிடிக்குமே என்று ஒரு கால் கிலோ அல்வா வாங்கிகொண்டு, மல்லிகை பூ விலை கேட்கும்போது அதிகம் சொன்னாலும் சரி, விடு கழுதை இப்போ வாங்காம எப்போ வாங்கறது என்று வாங்குவார்கள். இதை வாங்கும்போது அவர்கள் அந்த பூக்காரியின் கண்களையே பார்ப்பதில்லை என்பது கவனிக்க வேண்டியது. அப்படியே வீட்டிற்க்கு ஒரு போன் போட்டு..... அடியே, சும்மா இந்த பக்கம் வந்தேன், உனக்கு பிடிக்குமேன்னு அல்வா வாங்கி இருக்கேன் என்று சொன்னவுடன், அந்த பக்கத்தில் இருந்து என்ன சொல்வார்களோ தெரியவில்லை, இங்கே வெட்கம் பிடுங்கி தின்னும் !! அந்த மல்லிகை பூவையும், அல்வாவையும் மறைத்து கொண்டு செல்வதற்கு அவர்கள் படும் பாடு சொல்லி தெரிவதில்லை..... இப்போது அதை வீட்டிற்க்கு கொண்டு செல்ல வீர நடை போடுவார்கள் பாருங்க...... அன்னைக்கு மழை கொட்டோ கொட்டென்று கொட்டும், நனைந்து கொண்டே சந்தோசபடலாம் !!






Labels : Suresh, Arusuvai, Madurai, premavilas, alwa, famous, jasmine, malligai, poo, madurai famous, food tour, amazing taste, kadalpayananga

16 comments:

  1. உங்களின் வர்ணனை இருக்கே, ஆகா...! அதுவே அதிக தித்திப்பு...!

    ReplyDelete
  2. அல்வாவுக்கும் மல்லிகை பூவுக்கும் இப்போதும் பெண்கள் மயங்குகிரார்களா என்ன ?
    இத விடயம் வந்ததுமே செந்திலையும் கவுண்டரையும் பற்றிய நினைவு வருவதையும் மறக்கமுடியாது அடுத்தது அல்வா சுருடப்பட்டு படத்தில் காண்பிப்பது வாழை இலை இல்லை என் நினைக்கிறேன் ,வேறு எதோ இலை மாதிரி தெரிகிறது நண்பரே .
    உங்கள் உழைப்புக்கு நன்றிகள் சுரேஷ் .தொடர்ந்து ஊர் ஊராக அலைந்து விபரங்கள் திரட்டி தருவது என்பது எவ்ளவு கடினம் என்பது எனக்கு தெரியும் .உங்கள் பதிவுகளை
    தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் என்ன ? யோசிக்கவும் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. Thank you so much for your comments Mr.Karikalan, sorry for the typo error and I have corrected it now.
      Sure, I will take your suggestions and will upon the books.

      Delete
  3. அழகான வர்ணணையில் அல்வா பரிமாறியவிதத்தில் லயித்துப் போனேன்! அருமை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Thank you so much for visiting my blog Thalir Suresh, It is really encouraging words !

      Delete
  4. ஆண்களின் சந்தோஷத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள்... அல்வா போல

    ReplyDelete
    Replies
    1. Happy to see you again madam, so how are you ?

      Delete
  5. //சுருட்டி வைத்த வாழை இலையை ஒரு சிறிய பேப்பரில் வைத்து கொடுப்பார்கள்//

    வாழை இலையா?? மந்தார இல்லை போல் உள்ளது...

    - Sar

    ReplyDelete
    Replies
    1. Thanks for visiting my blog Sar ! Sorry, it was a typo error and I have corrected it now.

      Delete
  6. Replies
    1. Yes, it is Manthaara ilai, Sorry it was a typo error and I have corrected it ! Thanks for visiting my blog.

      Delete
  7. வணக்கம்
    அண்ணா
    சுவையான உணவுபற்றி தித்திக்கும் கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  8. மணக்கும் மல்லிகையும் இனிக்கும் அல்வாவும் உங்க வரிகளில் மணமாய் தித்திக்குதே!
    இப்போ எனக்கு மதுரைக்குப் போகனும்..

    ReplyDelete
  9. பலமுறை இந்த அல்வாவை சாப்பிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் இல்லாத ருசி, தங்களின் பதிவை படிக்கும் போது ருசித்தது. சாப்பிடும் ஆவலை தூண்டியது. நாளைக்கே ஒரு கிலோ வாங்கிற வேண்டியதுதான்.
    த ம 6

    ReplyDelete
  10. நீங்கள் வீட்டுக்கு அல்வா வாங்கிட்டு போனீங்க சரி!!!! ஆனால் மல்லிகை பூ வாங்கிட்டு போனீங்களா????

    ReplyDelete
  11. the narration is excellent-rajathi

    ReplyDelete