Friday, June 5, 2015

அறுசுவை (சமஸ்) - மாயவரம் லாட்ஜ் பொங்கல், திருச்சி !!

நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே திருச்சி.... ஆனாலும் இந்த மாயவரம் லாட்ஜ் என்பது ஒரு லாட்ஜ் மட்டுமே என்று இன்றுவரை நம்பி இருந்தேன் ! திருச்சி தெப்பகுளத்தை ஒட்டிய பர்மா பஜார் பகுதிகளில் வெளிநாட்டு பொருட்களை பார்த்துக்கொண்டே நடந்தால் ஒரு தெருவின் உள்ளே மாயவரம் லாட்ஜ் இருக்கும். சினிமாவில் எல்லாம் பழைய காலத்து பில்டிங் காண்பிப்பார்கள் இல்லையா அது போலவே இன்றும் ஹோட்டல் எல்லாம் வை-பை, கம்ப்யூட்டர், ரிசெப்ஷன் என்று மாறிவிட்ட பின்பும் இந்த லாட்ஜ் மட்டும் பழைய காலத்து சுவடோடு இருக்கிறது. லாட்ஜ் மட்டும் இல்லை உணவிலும்தான்.... அதே சுவையோடு !!


ஐயர் ஹோட்டல்..... இருபது வருடங்களுக்கு முன்பு எல்லாம் மக்கள் இந்த ஹோட்டல் தேடி தேடி செல்வார்கள், அதற்க்கு காரணம் அங்கு கிடைக்கும் சாம்பார், மற்றும் உணவுகள். இன்று அஞ்சப்பர், அமெரிக்க உணவகங்கள், செயின் உணவகங்கள் என்று வந்து பலவித சுவை வந்தாலும், அன்று சுவையாக சாப்பிட வேண்டும் என்றால் ஐயர் ஹோடேல்தான் !! காலையில் உள்ளே நுழையும்போதே பட்டை போட்டுக்கொண்டு ஒரு மர மேஜையின் பின்னே உட்கார்ந்துக்கொண்டு வாங்கோ என்று சிரிப்பார்கள், அவரின் பின்னே பெரிய சுவாமி படங்கள் அந்த காலையில் பூக்களுடன் பத்தி மணம் கமழ இருக்கும். உள்ளே அந்த கட்டிடம் மிக பழமையாக வெள்ளை அடிக்கப்பட்டு இருக்கும், நாம் உட்கார்ந்தவுடன் ஒரு சிறு குழந்தை படுக்கும் அளவுக்கு ஒரு இலை போடுவார்கள், அதனில் இரு இட்லி வைத்து அந்த பருப்பு சாம்பார் ஊற்றும்போது அப்படியே ஆவி பறக்கும் ! சாப்பிட்டு முடித்தவுடன் காதின் மேல் இருந்து பென்சில் எடுத்து அண்ணாவுக்கு பில் கொடுத்தாச்சு என்று குரல் வரும்..... இது அத்தனையும் இன்றும் பார்க்க வேண்டும் என்றால் திருச்சி மாயவரம் லாட்ஜ் !!

               


இந்த ஐயர் ஹோட்டல் ஸ்பெஷல் என்பது சூடான வெண்பொங்கலும், சுவையான அடையும்தான் அத்தோடு பில்டர் காபி. நினைத்து பாருங்கள், அன்று கல்யாண சமையல் என்றாலே இவர்கள்தான் கோலோசுவார்கள், அந்த வென்பொங்கல்தான் அன்று வெண்மையின் அளவுகோல் இல்லையா. அதை வைக்கும்போதே நெய் மின்னும், பல இடங்களில் அந்த முந்திரி பருப்பு உண்மையிலேயே முந்திக்கொண்டு பார்க்கும், அந்த வெண்மையில் கரும்புள்ளியாக அந்த மிளகு நம்மை சுண்டி இழுக்கும். அதை வைத்துவிட்டு கரண்டியில் மேலே வைத்து ஒரு அழுத்து அழுத்துவார்கள், அந்த குழியில்தான் சாம்பார் ஊற்றுவார்கள். ஒரு விள்ளல் எடுத்து அந்த சாம்பாரில் தொட்டு குளிப்பாட்டி சாப்பிட அங்கு ஒலிக்கும் சுப்ரபாதத்தை கேட்டுக்கொண்டே கண்ணை ருசிக்கு மூடினால் சொர்க்கம்தானே !!  இவர்கள் செய்யும் அடை என்பது மிகவும் ஸ்பெஷல்.... வீட்டில் இதை செய்பவர்கள் குறைவு. அந்த ஆடை பொன்னிறமாக வரும்போது அதற்க்கு வெள்ளை நிறத்தில் அவியல் போட்டு ஒவ்வொரு வாய்க்கும் பேஷ் பேஷ் என்று சொல்ல வைப்பார்கள் !



ஒரு தெய்வானுபவ நிலையில் சாப்பிட்டு முடித்துவிட்டு காபி என்று சொல்ல அவர் காபி போட்டு நமது முன்னே சர்ரென்று ஆற்றிவிட்டு நுரை போங்க வைத்துவிட்டு சென்றவுடன்..... இன்று பில்ட்டர் காபி என்று போட்டு எல்லா இடத்திலும் அந்த சுவையையே கெடுத்து விட்டனர் எனலாம், அன்று இந்த சுவைக்காகவே ஐயர் ஹோட்டல் சென்றவர்கள் அதிகம்..... அந்த காபியை எடுத்து சர்ரென்று நுரையோடு உறிய, அது எவ்வளவு ஆனந்தம். காலங்கள் கடந்து அதே சுவையுடன், பழமையுடன் நிற்கும் இந்த இடத்திற்கு சென்று வரும்போது பகட்டான இன்றைய ஹோட்டல்கள் முன்பு அந்த கால ஹோட்டல் ஆன இது எவ்வளவு நிறைவை தருகிறது என்று உணர முடியும். என்ன இருந்தாலும் பழசு பழசுதானே !!






Labels : Suresh, kadalpayanangal, Arusuvai, samas, writer samas, suggested food, trichy, mayavaram lodge, pongal, adai aviyal, tasty, breakfast, dinner

8 comments:

  1. இப்போதெல்லாம் டிஃபனோடு நிறுத்திக்கொண்டு விட்டர்கள் போலிருக்கிறது,அந்தக்காலத்தில்(1966-67) சுவையான சாப்பாடும் கிடைக்கும்.அதுவும் செவ்வாய் இரவு ஒரு பொரித்த குழம்பு போடுவார்கள் பாருங்கள்,டிவைன்!மேசையில் உட்காராமல் உள்ளே தரையில் உட்கார்ந்து சாப்பிடுவேன்.இது பற்றி என் பதிவில் நான் எழுதியது..http://chennaipithan.blogspot.in/2011/06/blog-post_23.html

    ReplyDelete
  2. எங்கள் வீடு அதற்கு கூப்பிடும் தூரத்தில் உள்ள வடக்கு ஆண்டார் தெரு கருப்பண்ண ஸ்வாமி கோவில் அருகில் இருந்த போதிலும்

    நாங்களும் அந்தக் காலத்தில் அதாவது 1970 வரை

    நிரந்த கஸ்டமர். தான்.

    அதற்குப்பிறகு, என் அப்பாவுக்கு எங்கள் வீடு பிடிக்கவில்லை . ஸ்வர்க்கத்தில் ஒரு அபார்ட்மெண்ட் காலி இருக்கிறது என்று நியூஸ்
    கேட்டு அவர் உடனே யர்த்தை வகேட் செய்து அங்கே சென்றபின் ,

    திருச்சியை விட்டு தஞ்சைக்கு சென்ற படியால்,

    மாயவரம் லாட்ஜ் எங்கள் நினைவில் தான் உள்ளது.

    அங்கு சாப்பாடும் நன்றாகவே இருக்கும்.


    இப்போது இல்லையா ?


    அடடா !!!


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  3. பேஸ்... பேஸ்...

    Old is Gold என்று சும்மாவா சொனார்கள்...

    ReplyDelete
  4. வணக்கம்
    அறியாத இடத்தை தங்களின் வழி அறியக்கிடைத்துள்ளது... இடம் மட்டுமா.. உணவு வகைகளும் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. எங்கள் ஊராம் திருச்சியில் எங்கள் வீட்டின் மிக அருகே அமைந்துள்ள மாயவரம் லாட்ஜ் பற்றிய பதிவுக்கு நன்றிகள். 100வருட பழமை வாய்ந்தது. இன்றும் பெரும்பாலும் அதே பாரம்பரிய வழக்கங்கள் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருவதுதான் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

    தொடர்ந்து வருகைதரும் டீஸண்டான கஸ்டமர்களுக்கும், குடும்பத்துடன் தங்குவோருக்கும் மட்டுமே இந்த லாட்ஜில் தங்க இடமுண்டு. ரூம்கள் காலியாகவே இருந்தாலும் முன்பின் தெரியாத ஆசாமிகளுக்கு ரூம் தரப்படுவது இல்லை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. .
    .
    திருச்சியிலுள்ள மாயவரம் லாட்ஜ் பற்றிய செய்திகளும் படங்களும்
    படிக்க, பார்க்க சுவையாக இருந்தது.

    எங்கள் மயிலாடுதுறையிலும் மணிக்குண்டு அருகில் இப்பவும்
    'மயூரா லாட்ஜ்' என்ற பெயரில் ஒரு சுவை உணவகம் இருக்கிறது.

    .

    ReplyDelete
  7. தெப்பக்குளம் பிஷப் ஹிபர் கல்லூரியில் படித்த போதும் பின்னரும், ஏறத்தாழ வாரத்தில் நான்கு நாட்கள் அந்த வழியில் சென்றுள்ளேன்(1978 வரை). லாட்ஜ் என்கிற பெயரில் உணவகமா என்று நினைப்பதுண்டு.ஆனால் இன்று வரை உள்ளே சென்று சாப்பிட வாய்ப்பில்லை. அடுத்த முறை நிச்சயம் சென்று சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

    ReplyDelete
  8. We are also permanent customer of Mayavaram Lodge.

    ReplyDelete