Tuesday, June 9, 2015

சிறுபிள்ளையாவோம் - கலர் சோடா !!

லவ் - ஓ..... இதை சிறுவயதில் குடித்ததில்லை என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்பவெல்லாம் கடைக்குள் ஒரு சிறிய தெர்மாகோல் பெட்டி இருக்கும், அதில் இருந்து கருப்பு கலர் ஒன்றை எடுத்து கொடுப்பார்கள், ஒபனர் என்று கேட்டு வாங்கி சென்று வீட்டில் அதை உடைத்தவுடன் அந்த பொங்கும் நுரையை கைகளில் அள்ளி குடிப்போம், பின்னர் அம்மா அதை டம்ப்ளரில் ஊற்றியவுடன் புரண்டு புரண்டு ஒரே அழுகை..... பின்னே அதை பாட்டிலில்தானே குடிக்க வேண்டும் ?! மடக் மடக் என்று குடித்துவிட்டு ஏப்பம் ஏப்பமாய் வரும் பாருங்கள்....... அட அட சுகமோ சுகம் ! ஆனால் ஒரு நாள் இரவு அப்பாவிற்கு வயிறு உப்புசம் என்று சொல்லி ஒரு சீட்டில் எழுதி கலர் சோடா ஒன்னு வாங்கி வாடா என்றார் என் அம்மா, கலர் கொஞ்சம் மஞ்சள் நிறமாக இருந்தாலும் கலர் சோடாவாயிற்றே, அதை நான்தான் முதலில் குடிப்பேன் என்று சொல்லி வாங்கி குடித்துவிட்டு பயங்கரமாக வாந்தி எடுத்தேன்...... அது ஜிஞ்சர் சோடா !!


அதன் பின்னர் கவனித்தபோதுதான் தெரிந்தது பன்னீர் சோடா, சாதா சோடா, ஜிஞ்சர் சோடா, லெமன் சோடா, கருப்பு சோடா, ஆரஞ்சு சோடா என்று வகை வகையாக இருப்பது. கொஞ்சம் வயது சென்ற பின்னர் வயறு வலிக்கிறது என்று இரவினில் துடித்தபோது அந்த ஜிஞ்சர் சோடா தந்த நிவாரணம் இன்றும்  மறக்க முடியாது. இன்றைய வெளிநாட்டு சந்தை படுத்துதலில் இந்த பானங்கள் எல்லாம் முற்றிலும் அழிந்து வருகிறது.

                         



லவ் - ஓ என்னும் பானம் இன்றும் எல்லோரது நினைவில் இருக்கும். அந்த பாட்டில் எடுத்து கொஞ்சம் குலுக்கி நுரை வழிய வழிய அப்படியே வாயில் சரித்து குடித்த அந்த இனிய பொழுதுகள் மறக்க கூடியவையா ?! சிறிது உப்பு கலந்த அந்த கோலி சோடாவும், இனிப்பு கலந்த அந்த பன்னீர் சோடாவும் இன்றைய பெப்சி, கோக் எல்லாம் தோற்று போகும். இன்று லிட்டர் லிட்டராக வீட்டில் வாங்கி வைத்து இருந்தாலும் குடிக்க மனம் வரவில்லை, ஆனால் அன்று அந்த ஒரு பாட்டில் கிடைத்தால் தீபாவளிதான். எனக்கு இந்த சோடாவில் மிகவும் பிடித்தது என்பது அதை குடித்தபின்னர் வரும் ஏப்பம்தான், சூடாக அந்த வெப்ப காற்று வயிற்றில் இருந்து வரும்போதே அந்த கலர் சோடாவின் வாசனையோடு வரும்...... வீட்டில் பொய்யே சொல்ல முடியாது.



இன்றும் மதுரை பக்கத்து கிராமங்களில் வயிற்று வலி என்றால் ஜிஞ்சர் சோடாதான், வீட்டில் விருந்தாளி வந்தால் சோடா கலர் வாங்கி கொடுப்பார்கள், வெயிலுக்கு சென்று வந்தால் பன்னீர் சோடா என்று களை கட்டுகிறது. வெயிலுக்கு பெப்சி, கோக் வாங்கி குடிப்பதற்கு பதில் இந்த கலர் சோடா வாங்கி குடித்து பாருங்கள், அதன் சுவை நம்மை சிறுப்பிள்ளை ஆக்கிவிடும் !!



Labels : Suresh, kadalpayanangal, color soda, sirupillaiyaavom, childhood memories, live your childhood, child, soda, ginger soda, love-o, love-1, lemon soda, orange soda, time travel

11 comments:

  1. அதுவும் பன்னீர் சோடா! நினைவில் நிற்கும் சுவை!

    ReplyDelete
  2. namma oor pakkam BOVONTO romba famous

    ReplyDelete
  3. அந்த சோடா மூடியை தட்டி தட்டி வட்டமாக்கி ஆணிகொண்டு சரியான இடைவெளியில் இரு துவாரமிட்டு நூல் கோர்த்து “டர்ர்ர்ர்ர்ர்ர்......டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” கைவலிக்க இழுத்து விளையாடியது ஓர் பொற்காலம்....

    ReplyDelete
    Replies
    1. நீ ரசிகன்'டா. இதுமாதிரி விளையாடாதவர்கள் உண்டா. மதுரை மாப்பிள்ளை வினாயகரை விட்டுவிட்டீர்களே.

      Delete
  4. சேலத்தில் 'வின்சென்ட்' , தெற்கில் 'காளி மார்க்' - இவையெல்லாம் மறக்கமுடியுமா? இன்றும்கூட, பெப்சி, கொக்கோ கொலாவைவிட மக்கள் போவோன்ட்டோ வைத் தான் விரும்புகிறார்கள்! - இராய செல்லப்பா

    ReplyDelete
  5. eppavume, ippavume hotela nalla oru pudi pudichapiragu, illana plain soda kanla padrapa ellam.........lemon soda with uppu......

    ReplyDelete
  6. எங்க ஊர்ல கருப்பு சோடாவ டானிக்னு சொல்லுவோம்.
    ஜிஞ்சர் சோடாவுல எங்க அம்மா அஞ்சால் அலுப்பு மருந்து கலந்து குடிப்பாங்க!
    வேண்டாம்னு சொன்னாலும் எங்களுக்கும் அர டம்ளர் கண்டிப்பா உண்டு!!

    ReplyDelete
  7. Ginger Soda is available as Ginger Ale / Beer in US/Canada. But indian ginger beers are very strong in taste. Ginger Ale available here is mild compared to indian taste.

    ReplyDelete
  8. சின்ன வயதில் தாத்தோவோடு பெட்டிக்கடையில் குடித்த கலர் சோடா நினைவுக்கு வருகின்றது! இதெல்லாம் இப்போது கிடைக்கிறதா? பன்னீர் சோடா மட்டும் எங்க ஊரில் கிடைக்கின்றது!

    ReplyDelete