பயணம் என்றாலே சந்தோசம், அதுவும் சிறு வயதில் இருந்து இந்த ரயில் பயணங்கள் என்பது மிகவும் சந்தோசம் தரும். நமது ஊரில் ரயில் என்பதை ப்ளூ கலர், ஜன்னல் எல்லாம் வைச்சு, கரண்டில் ஓடும் என்றெல்லாம்தான் பார்த்து இருக்கிறோம், அதில் இது புது வகை..... டபுள் டக்கர் ட்ரைன் !! மாடி வைச்ச பஸ் என்று ஒரு முறை சென்னையில் பார்த்ததில் இருந்தே வாயை பிளந்தவன், அதுவும் எனக்கு பிடித்த ட்ரைன் என்பதில் மாடி வைத்து இருந்தால் அது மறக்க முடியாத பயணம்தானே !!

சென்னை எப்போதாவது செல்லும்போதெல்லாம் இந்த டபுள் டக்கர் ட்ரைன் வரும்போது அதில் ஏறுபவர்களை பொறாமையாக பார்த்து இருக்கிறேன், சென்ற முறை சென்னை செல்லும்போது கண்டிப்பாக இந்த டிரெயினில் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து ரிசர்வ் செய்து இருந்தேன். பிளாட்பாரம் சென்று நின்றவுடன் ஒரு மிதப்பு அப்போதே வந்துவிட்டது, இன்று நான் டபுள் டக்கர் ட்ரெயினில் செல்ல போகிறேன் என்று முகமும், எனது உடல் செய்கையும் காண்பிக்கத்தான் செய்தது. நேரம் செல்ல செல்ல தூரத்தில் அந்த புகைவண்டி தெரிய ஆரம்பித்தவுடன் இங்கே மனம் துள்ள ஆரம்பித்தது, மஞ்சளும் சிகப்பும் என்று கலர் கொண்டு அருகே வந்து நிற்க, வேக வேகமாய் ஏறினேன் !


பெங்களுருவில் இருந்து சென்னை வரை செல்லும் இந்த புகைவண்டியில், எல்லோருக்கும் இந்த மாடியில்தான் சீட் வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. சிலருக்கு சீட்டு கீழே என்றவுடன் முகம் வாடி அதில் உட்கார்ந்து விட்டு ட்ரைன் கிளம்பியவுடன் மாடியில் வந்து இடம் கிடைக்கிறதா என்று தேடுகிறார்கள் ! எனக்கு மாடியில்தான் இடம் என்பதால், அங்கிருந்து வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன், அப்போது அங்கு வந்த சமோஸா, கூல் ட்ரிங்க்ஸ், தோசை என்று அவ்வப்போது சாப்பிடவும் தவறவில்லை. உயரம் என்பதே ஒரு வசீகரம்தான் இல்லையா, அதுவும் அங்கு இருந்து பார்க்கும்போது சிறியதாக தெரியும் இந்த பூமியை பார்த்துவிட்டு நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று தெரியும் அந்த தருணம் இருக்கிறதே.... மறக்க முடியாததுதானே !
கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து அது செல்ல செல்ல நமக்கு இங்கே இந்த டெக்னாலஜி கண்டு மலைப்பு ஏற்ப்படுகிறது. இவ்வளவு பெட்டிகளையும், மக்களையும் சுமந்து செல்லும் இந்த டபுள் டக்கர் ட்ரைன் என்பதில் பயணம் பிரமிப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது !!
Labels : Suresh, Kadalpayanangal, marakka mudiya payanam, memorable journey, double decker train, chennai, bangalore, train, amazing ride, unique travel, train