Monday, August 24, 2015

அறுசுவை - ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை !

மதுரை....... இந்த ஊரையும், அவர்களின் சுவையையும் சொல்லிக்கொண்டே சென்றால் நிறைய பதிவுகள் வரும் !  ஒரு இடத்தில் புட்டு செய்கிறார்கள் என்றால், இன்னொரு இடத்தில் சூடான இட்லி, பரோட்டா, பருத்தி பால், பிரேம விலாஸ் அல்வா, வெங்காய குடல் என்று வகை வகையாக இருக்கும், இந்த முறை மதுரை சென்று இருந்த போது பரோட்டாவும் சால்னாவும் எங்கு இருக்கும் என்று தேடியதில் எல்லோரும் சொன்னது தமுக்கம் மைதானம் பக்கம் இருந்த ஆறுமுகம் பரோட்டா கடை. இன்டர்நெட்டில் தேடி பார்த்தாலும் இந்த கடையை பற்றி பலரும் நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் நாங்கள் பெரிய அளவில் பிரம்மாண்டமாக இருக்கும் என்று சென்றால் வெட்ட வெளியில் பரோட்டா  இருந்தனர், காத்திருந்து சாப்பிட்டனர் எல்லோரும்...... உண்மையான மதுரை பரோட்டாவின் சுவை !!



சந்திரன் மெஸ்ஸின் இடது புறத்தில், ஒரு டீ கடை இருக்கிறது, காலையில் பார்த்தால் அது டீ கடை, மாலையில் சுவையான மதுரை பரோட்டா கிடைக்குமிடம் ! மாலை ஆகும்போது நமது உயரத்திற்கு பரோட்டா போடும் கல்லை எடுத்து வருகின்றனர், அதில் மூன்று பக்கத்தில் இருந்து தோசையோ, பரோட்டாவோ போடலாம். அதை துடைத்து, கழுவி எடுத்து வைத்து மேஜையை போட ஆரம்பிக்கும்போதே ஆட்கள் அங்கு காத்திருக்க ஆரம்பிக்கின்றனர். மைதா மாவினை பிசைந்து வைத்துவிட்டு, என்ன ஒரு லாவகத்தோடு அங்கு பரோட்டா செய்கின்றனர் என்று பார்த்தால் அசத்தலாக இருக்கிறது. அதை கல்லில் போட்டுவிட்டு, எண்ணையை எந்த கஞ்சத்தனமும் இல்லாமல் ஊற்ற, அந்த வெள்ளை கொஞ்சம் கொஞ்சமாக பொன்னிறமாக ஆகிறது !!


இரண்டு பரோட்டாவை சூடாக இலையில் எடுத்துபோட்டு, சால்னாவை ஊற்றும்போது புகை நமது மூஞ்சியை தாக்குகிறது, வாசனையோ அதிவேக விசையோடு நமது மூக்கினுள் நுழைந்து எச்சிலை வரவழைத்து விடுகிறது. அதற்க்கு தொட்டு கொள்ள மதுரை மண்ணின் ஸ்பெஷல் ஆன மட்டன் சுக்காவும், சிக்கன் பிரையும் வந்தது. இந்த மதுரை மட்டன் சுக்கவை பற்றி சொல்லியே ஆக வேண்டும், மட்டன் துண்டுகளை சிறியதாக எடுத்து போட்டு, அதனோடு கொஞ்சம் குழம்பும் ஊற்றி, வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் போட்டு தோசை கல்லில் வதக்கும்போது அந்த வண்ணமும், வாசனையும் இப்படிதான் பிணைந்து இருக்க வேண்டும் என்று மனது ஆனந்த கூப்பாடு போடும். ஒரே ஒரு துண்டை எடுத்து வாயில் போட, அந்த பரோட்டாவும் சால்னாவும் நான் முந்தி, நீ முந்தி என்று வாயினுள் வருவதற்கு செல்வதற்கு தயாராகும்.



சிறிய கடைதான் என்றாலும், நீங்கள் அங்கு இருக்கும்போது கொத்து பரோட்டா, சுக்கா, இட்லி, குடல் என்று காதில் கேட்டுக்கொண்டே இருக்கும், அந்த அளவுக்கு வியாபாரம் ! வெளியே சிறிய பெஞ்ச் போட்டு இருப்பார்கள், இதன் பக்கத்திலேயே ஒரு கோவில் இருப்பதால் பார்கிங் செய்வது மிகவும் எளிது. நிறுத்தி, நிதானமாக, ருசித்து சாப்பிட்டு விட்டு செல்லலாம். பரோட்டாவும், மட்டன் சுக்காவும் ஆளை மயக்குகிறது, அதுவும் அந்த குழம்பில் ஊற போட்டு அடிப்பது என்பது மதுரைகாரர்களின் பரம்பரை பழக்கம்.





பஞ்ச் லைன் :

சுவை - மதுரையில் சுவையான பரோட்டாவும், மட்டன் சுக்காவும் சாப்பிட அருமையான இடம்.

அமைப்பு - மிக சிறிய இடம், பக்கத்தில் பார்கிங் இடம் இருக்கிறது. கொஞ்சம் வெளியே காற்றாட பிளாட்பாரத்தில் உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும்.

பணம் - சுவைக்கு விலை குறைவுதான்.

சர்வீஸ் - நல்ல சர்விஸ் ! மிகவும் பொறுமையாக சர்வீஸ் செய்கிறார்கள் ! 

அட்ரஸ் : 
Next to Chandran mess
Alagar kovil road, Tallakulam, Madurai, Tamil Nadu 625002

Near to Madurai tamukkam maidanam




Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Madurai, Arumugam parotta stall,  best non veg mess in Madurai, Madurai hotel, non veg, asaivam, near to chandran mess, famous parotta, mutton sukka

Friday, August 21, 2015

நன்றி நண்பர்களே ! - YummyDrives.com

கடல்பயணங்கள் தளத்தில் பதிவிட்டு இரண்டு மாதமாகிவிட்டது, நங்கூரத்தை இன்று எடுத்து மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கறேன்.... இத்தனை நாட்களாக பொறுத்து இருந்த நண்பர்களுக்கு நன்றி ! விளையாட்டு போன்று ஆரம்பித்த ஒன்று, மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது என்றால் எப்படி இருக்கும்..... என்னை கேட்டால் விரிவாக சொல்வேன் ! YummyDrives.com துவக்க விழா நிகழ்சிகள் இனிதே முடிந்த பின்பு சுமார் ஆறு மாதமாய் தேக்கி வைத்து இருந்த தூக்கத்தை தூங்கி முடித்தேன், இன்னும் அந்த ஆச்சர்யத்தில் இருந்து மீளாமல் இருக்கிறேன், இதனாலேயே கொஞ்சம் லேட்டாக எல்லோருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் ! சென்ற வருடத்தில் ஒரு நாளில் தோன்றிய ஒரு சிறு பொறி, வளர்ந்து பெரிதாகி உங்களது முன் YummyDrives.com ஆக உருவெடுத்து நிற்கிறது, தினமும் அதை பற்றிய சந்தோசங்களை பகிரும் நண்பர்களை கண்டு சரியான ஒரு தளத்தை அமைத்து கொடுத்து இருக்கின்றோம் என்று புரிந்தது !



இந்த தளம் ஆரம்பிக்க முக்கிய காரணம் என்பது பலரும் என்னிடம் இந்த கடை எங்கு இருக்கிறது, எப்படி செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆர்வத்துடன் விசாரித்தது ஆகும். இவ்வளவு ஆர்வமுடன் விசாரித்தவர்களிடம், ஏன் நீங்கள் எனது தளத்திற்கு சென்று தேட கூடாது, என்ன விதமான சிரமம் ஏற்படுகிறது என்றெல்லாம் கேட்டு அதற்க்கு ஏற்றாற்போலவே அமைத்தேன். இனி நீங்கள் எந்த ஊருக்கு சென்றாலும் சுவையான உணவை தேடி தெரிந்து கொள்ளலாம், எங்களுக்கும் நீங்கள் சொல்ல முடியும். இன்னும் தளத்தையும், ஆப் செயலியையும் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறோம்...... ஒரு பெரிய பயணத்தின் ஆரம்பம் எப்போதுமே அந்த முதல் அடிதானே, நாங்கள் அந்த முதல் அடியை எடுத்து வைத்து இருக்கின்றோம், அடுத்த வருடத்தில் இந்த தளம் கண்டிப்பாக பிரபலமடைந்து இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது !



இந்த துவக்க விழா மிக அருமையாக, நாங்கள் நினைததர்க்கும் மேலாகவே சிறப்பாக நடைபெற்றது எனலாம். இதில் சிலருக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.... இல்லையென்றால் எனக்கு கண்டிப்பாக தூக்கம் வராது.



கேபிள் சங்கர் / ஜீவா :

இந்த தளம் ஆரம்பித்த பின்னர், ஒன்றில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன்.... இது எனது தளம் அல்ல, நமக்கானது இது என்று. இதில் எல்லோரும் இணைய வேண்டும் என்று விரும்பினேன், அப்போது முதலில் ஜீவாவிடம் போன் செய்து எனது இந்த முயற்சியை சொல்லியபோது, உடனே இணைந்தார். பின்னர் இந்த தளம் முழுமையாக உருவான பின்பு, கேபிள் சங்கர் அவர்களிடம் தயக்கத்துடன் எனது முயற்சியை சொல்லி அவரது கருத்து கேட்டேன், அவரும் மகிழ்ச்சியுடன் இணைந்தார். பின்னர், நாங்கள் மூவரும் தினமும் பேசி இந்த தளத்தை மெருகெற்றினொம், துவக்க விழாவிற்கு முயற்சிகள் தொடங்கினோம். இவர்களுக்கு நன்றி என்று சொல்லி எங்களது நட்பையும், முயற்சியையும் கொச்சைபடுத்த விரும்பவில்லை, ஆனால் கொடுத்த ஆதரவு என்றும் மறக்க முடியாதது.



ஜாக்கி சேகர் :

முதலில் இவரை கூப்பிட்டு, இந்த தளத்தின் வெளியீடு வைத்து இருக்கிறோம், கண்டிப்பாக வர வேண்டும் என்றேன். அடுத்து ஜீவாவிடம் பேசும்போது, அவரை வரவேற்ப்புரைக்கு கூப்பிடலாம் என்றார், அவரிடம் பின்னர் பேசி சம்மதிக்க வைத்தபோது எனது விருப்ப பதிவர் ஒருவர் இந்த விழாவிற்கு வருகிறார், அதுவும் எங்களது முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விழாவிற்கு அவரை வரவேற்று, அவரது பேச்சை கேட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது குடும்பத்தோடு வந்தது இன்னமும் மகிழ்ச்சி, அவரோடு அதிகம் அப்போது பேச முடியவில்லை என்பதுதான் ஒரு குறையாக இருந்தது. நன்றி ஜாக்கி சேகர் சார் !



சுரேகா சுந்தர் :

இவரது பேச்சிற்க்கும், சிரிப்பிற்கும் நான் அடிமை எனலாம். முதன் முதலில் அவரை நான் சென்னை பதிவர் சந்திப்பில்தான் பார்த்தேன், அந்த நிகழ்ச்சியை அவ்வளவு உயிர்ப்போடு நடத்தி சென்றார். நிகழ்ச்சியை இவர்தான் ஏற்று அன்று நடத்த போகிறார் என்றபோது எனது மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவரோடு பேசி, அந்த நிகழ்ச்சியின் விருந்தினர் பற்றி கொஞ்சம் மட்டுமே குறிப்புகள் கொடுத்தேன், ஆனால் அவர் ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தி அந்த விருந்தினர்களை பற்றி சுவையோடு பேசி அந்த அரங்கத்தை அவரது பேச்சினால் கட்டுக்குள் வைத்திருந்தார் எனலாம். நன்றிகள் சார், அடுத்த முறை உங்களை சந்திக்கவே சென்னை வருவதாக இருக்கிறேன்.



தமன் / வெங்கடேஷ் ஆறுமுகம் / ரொபினா சுபாஷ் :

இவர்கள்தான் இந்த நிகழ்ச்சியின் விருந்தினர்கள் என்று முடிவான நாள் என்பது அந்த திங்கள்கிழமை எனலாம். தமன் அவர்கள் வருவதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்பது தெரிந்ததும் மகிழ்ந்தேன். அன்று முதலில் வந்த விருந்தினர் அவர்தான், எந்த வித பந்தாவும் இல்லாமல், உள்ளே வந்து அமைதியாக உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தது கண்டு ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் மிக பெரிய உயரத்தை தொடுவீர்கள் தமன்.


வெங்கடேஷ் ஆறுமுகம் சாரை எனக்கு ஒரு உணவு பதிவின் மூலம் மட்டுமே முதலில் தெரியும், முகபுத்தகத்தில் ஒரு ரிக்வெஸ்ட் அனுப்பிய பின்புதான் அவர் கலக்க போவது யாரு புகழ் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பதே எனக்கு தெரியும். அவரை பற்றி அவரது சகோதரி எழுதிய பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும். இவரது மனம் திறந்த பேச்சும், உணவை பற்றிய சுவையான விளக்கமும் என்று அசத்தி விட்டார். நன்றி சார், நீங்கள் எங்களது துவக்க விழாவிற்கு வந்து எங்களை பெருமைபடுதியதுர்க்கு.



ரொபினா அவர்களை பற்றி முதலில் ஜீவா சொல்லிய பின், அவரது தொடர் பேச்சு சாதனைதான் முதலில் தோன்றியது. பொதுவாகவே FM எனும்போது அந்த சுவாரசியமான பேச்சுதானே யாபகம் வரும், அவர் பேசும்போது அந்த சுவாரசியம் வெளிப்பட்டது. அவருக்கு நினைவு பரிசு வழங்க என்னை அழைத்தபோதுதான், எனக்கு பிரியாணி டெலிவரி செய்ய ஆள் வெளியே வந்து இருந்தனர், சட்டென்று என்னை கூப்பிட்டதை கவனிக்காமல் வெளியே சென்றதால் அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். விழாவின் வெள்ளி தாரகையாக அவர் மின்னினார் என்று சொல்லலாம், நன்றி ரொபினா... இந்த விழா உங்களால் மிகவும் சிறப்புற்றது.



கணேஷ் பாலா :

ஒரு குழந்தை போன்றவர் இவர் என்று சொல்லலாம், எனது மிக சிறந்த நண்பரும் கூட. அந்த துவக்க விழாவிற்கு பானர் டிசைன் செய்தது, இன்விடேஷன் என்று கலக்கியவர். ஒரே ஒரு போன் மட்டுமே, "அதுக்கு என்ன கடலு, செய்ஞ்சுடலாம்" என்று உற்சாகமூட்டியவர். நன்றி சார், உங்களது கைவண்ணம் அந்த இடத்தை பிரகாசமாக்கியது எனலாம்.



சிவகீர்த்தி / ராஜ்குமார் / முத்துகுமாரசுவாமி :

முதலில் நானகவே ஒரு வெப்சைட் உருவாக்கினேன், அது சரியாக இல்லாமல் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நின்றபோது எனக்கு முத்துக்குமாரசுவாமியை அறிமுகபடுதியவர் நண்பர் சிவகீர்த்தி. அன்றில் இருந்து தினமும் சுமார் பத்து முறையாவது அவரை அழைத்து வெப்சைட் உருவாக்கம் பற்றி பேசுவேன். இன்று இந்த தளம் மின்னுவதற்கு இவர்களே காரணம். இன்று இவர்கள் இருவரும் எனது நெருங்கிய நட்பு பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் எனலாம். நன்றி நண்பர்களே !

இந்த தளம் உருவாகிய பிறகு, ஆப் ஒன்று உருவாக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதை செய்ய ஆள் தேடிக்கொண்டு இருந்தபோது பலரும் எனது மனதில் இருந்ததை வடிவமைக்க முடியவில்லை. ராஜ்குமார் அவர்கள் எனது பதிவினை விரும்பி படிப்பவர், உதவிக்கு வந்தார். அவர் அறிமுகபடுத்திய நபரே இந்த ஆப் உருவானதற்கு காரணர். நன்றி சார், இன்னும் பயணிக்க வேண்டும் நாம் !



சிதம்பரம் சௌந்தரபாண்டியன் :

எனது தளத்தின் ரசிகராய் இருந்து, நண்பராக மாறி, மிக நெருங்கிய நண்பராக இருந்து இன்று எனது உடன் பிறவா சகோதரனாகி இருக்கிறார் இவர் எனலாம். இந்த தளம் ஆரம்பிக்க போகிறேன் என்று சொன்ன நாளில் இருந்து, அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் இவர் கவனித்து வந்தார். மீம்ஸ் எல்லாம் செய்தது இவரே, தனது பெயர் வெளியே வர கூடாது என்ற அன்பு கட்டளையுடன் எல்லாவற்றையும் செய்தார். துவக்க விழா அன்று எல்லோருக்கும் பிரியாணி ஆர்டர் செய்து அசத்தினார், மாரி பட டிரைலர் பாணியில் இந்த தளத்திற்கு வீடியோ செய்தார், இப்படி நிறைய செய்தார். இவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் !



இன்னும் நிறைய, நிறைய நண்பர்கள் என்னை நெகிழ வைத்தனர் எனலாம், அவர்களை பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன். அன்று எவ்வளவு அலுவல்கள் இருந்தும் வந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !! ஒரு புதிய தளம், நம் எல்லோருக்குமாக... நாமே உருவாக்கியது !


இந்த துவக்க விழாவினை  அருமையாக வீடியோ எடுத்த ஸ்ருதி டிவி அவர்களுக்கு எனது நன்றி, விழாவினை  இங்கே சொடுக்கவும்....


Labels : Suresh Kumar, Kadalpayanangal, YummyDrives.com, Yummy Drives, launch event, successful launch, Cable Sankar, Taman Kumar, Rofina, Masala FM, Jackie Sekar, Venkatesh Arumugam 

Wednesday, August 5, 2015

ஓர் இனிய தொடக்கம்.... YummyDrives.com !!

மூன்று வருடங்களுக்கு முன்பு ப்ளாக் என்பதை எழுதும்போது, அது எனது வாழ்க்கையில் என்ன வகையான மாற்றத்தை கொண்டு வரபோகிறது என்று அறியாமல் இருந்தேன்...... இன்று அது ஒரு இனிய மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது என்று நினைக்கும்போது, வியப்பாக இருக்கிறது ! மிக சிறந்த நண்பர்களையும், தகவல்களையும், தருணங்களையும் தந்த இந்த உலகிற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோது கிடைத்த விடைதான் இந்த..... YummyDrives.com !!


சிறந்த சுவையான உணவுகளை பற்றி எழுதும்போது, அதை படிக்கும் சிலர் என்னை தொடர்ந்து கேட்கும் கேள்வி என்பது.....
  1. இந்த தளம் ஆங்கிலத்தில் இல்லையா ?
  2. ஒரு ஊருக்கு சென்றுவிட்டு, உங்களது தளத்தில் சென்று அங்கு என்ன உணவு நன்றாக இருக்கும் என்று தேடுவதும், அந்த தகவல் கிடைப்பதும் சிரமமாக இருக்கிறது.
  3. இது போன்ற உணவு மற்றும் பயணம் பற்றி எழுதும் வலைபதிவர்கள் யார் 
இதற்க்கு நான் விடையே இந்த புதிய தளமான YummyDrives.com !!


இந்த புதிய தளம் என்பது ஆங்கிலத்தில் இருக்கும், ஒரு உணவகம் அல்லது பயணம் பற்றிய மிக சுருக்கிய தகவல்கள், நிறைய படங்கள், அந்த இடத்தின் கூகிள் மேப் என்று உங்களுக்கு தேவையான அத்தனை தகவல்களும் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பி படிக்கும் அனைத்து உணவு மற்றும் பயணம் பற்றி எழுதும் பிரபல வலைபதிவர்களின் பதிவுகள் அவர்களின் அனுமதியோடு பிரசுரிக்கபடுகிறது. நீங்களும் தகவல்களை இந்த தளத்திற்கு சமர்ப்பிக்கலாம்.... மிக எளிதாக ! உங்களுக்காக ஆண்ட்டிராயிட் செயலியும் அறிமுகபடுதபட உள்ளது, இதனால் நீங்கள் எங்கு சென்றாலும் மிக எளிதில் அந்த இடத்தின் உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் !! இது மட்டும் அல்ல, இன்னமும் உண்டு... பிரபல வலைபதிவர்களான திரு.கேபிள் சங்கர் மற்றும் கோவை நேரம் ஜீவா அவர்களும் என்னோடு இந்த பயணத்தில் இருக்கின்றார்கள் என்பது நான் மிகவும் பெருமைப்படும் விஷயம்.


உங்களை அன்போடு இதன் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கிறேன், இது உங்களுக்காக அமைக்கப்பட்ட மேடை..... சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் !

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
No.6, Mahavir Complex, Munusamy Salai,
K.K.Nagar, Chennai, Tamil Nadu 600078
Phone:044 6515 7525

நாள் : 14 - ஆகஸ்ட் - 2015, வெள்ளிகிழமை 
நேரம் : மாலை ஆறு மணி 
Labels : Suresh, Kadalpayanangal, yummydrives, launch, others, cable sankar, kovai neram, Jeeva