Monday, October 19, 2015

JB சவுத்திரி பாதம் பால் - மதுரை

வெகு நாட்களாக பதிவுகள் எழுத முடியாத அளவுக்கு வேலை பளு அதிகம் இருந்தது, இப்போது சிறிது சிறிதாக எல்லாம் நன்கு செல்லும்படியால் மீண்டும் இந்த பயணத்தை ஆரம்பிக்கிறேன். என்ன ஆச்சு, ஏன் எழுதவில்லை  என்று கவலையோடு விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல !
*********************************************************************************
மதுரை என்றால் நினைவுக்கு வருவது ஜிகர்தண்டாவும், பரோட்டாவும் என்று இருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள், அது ஏகப்பட்ட சுவைகளை தன்னுள்ளே கொண்டு இருக்கிறது ! காரம் சாரமாக இரண்டு பரோட்டாவுடன் சால்னா போட்டு சாப்பிட்டுவிட்டு, அதற்க்கு தொட்டு கொள்ள என்று நாட்டு கோழி மிளகும் வெங்காயமும் போட்டு ஒன்றும் அதனோடு மதுரை ஸ்பெஷல் ஆன சுக்கா வருவலும் என்று சாப்பிட்டுவிட்டு பல்லின் இடுக்கில் இருக்கும் கறியை தோண்டிக்கொண்டே நடக்கும்போது, இப்போ சாப்பிட்டது கொஞ்சம் தண்ணியை தவிக்க விடுதே என்று யோசித்துக்கொண்டே நம்ம மக்கள் செல்வது இந்த மேற்கு மாசி வீதியில் இருக்கும் JB சவுத்திரி பாதாம் பால் கடையாக இருக்கும் !!


போத்திஸ், மதுரை முருகன் இட்லி கடை என்று இருக்கும் அந்த வீதியில் நடந்து கொண்டு இருந்தால், நேதாஜி சாலையை தாண்டி உங்களது இடது புறத்தில் எல்லா கடைகளும் நிலவில் இருந்து கடன் வாங்கியது போல ஒளி வெள்ளத்தில் இருக்கும்போது, திடீரென்று ஒரு கடையில் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் வெளிச்சம் இருக்க, ஆனால் மக்கள் கூட்டம் பிளாட்பாரத்தில் அள்ளி குவியும். அவர்களில் பலருக்கும் தலை முடி கருப்பாக இருந்தாலும் வெள்ளையாய் மீசை இருக்கும், இன்னும் சற்று உற்று கவனித்தால் அட பெண்களுக்கு கூட அதே வெள்ளை மீசை..... அப்போது ஒருவர் நம்ம டீ மாஸ்டர் டீயை ஆற்றுவதுபோல சர் சரென்று பித்தளை பாத்திரத்தில் ஆற்றி கொண்டு இருப்பார், திடீரென்று அப்படியே ஆற்றிக்கொண்டே தன்னையே சுற்றுவார், அப்போது பால் கொட்டிவிடுமோ என்று நமக்கு பதறும். இதை நீங்கள் பார்த்தால்...... நீங்கள் இருப்பது மதுரையின் மிக பிரபலமான பாதாம் பால் கடை.
அட, பாதாம் பாலுக்கா இவ்வளவு அலட்டல் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக ஒரு நல்ல பாதாம் பாலை இதுவரை சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். வெளியில் கிடைப்பது எல்லாம் தண்ணியான பாலில், இரண்டாம் தரமான பாதாம் பவுடரில், சக்கரையை கொட்டி இருக்கும் ஒன்று..... பாதாம் பாலுக்கு என்று ஒரு ரசனை உண்டு என்று உங்களுக்கு தெரியுமா ? சுண்ட காய்ச்சிய பசும் பாலை என்றாவது பருகி இருக்கின்றீர்களா, அதில் சக்கரை எல்லாம் போடாமலே ஒரு சுவை இருக்கும் கவனித்து இருக்கீர்களா ? அதில், நன்கு நயமான பாதாம் பருப்புகளை பொடி செய்து கொஞ்சம் கலக்கி கொதிக்க வைக்க வைக்க அதன் மேலே ஆடை படரும். இப்போது அந்த ஆடையை எடுத்து கொஞ்சம் சுவைத்து பாருங்கள், பாதாம் பாலின் சுவை தெரியும். சுட சுட அப்படி எடுத்த பாலை நன்கு நுரை வரும் படி ஆற்றி ஒரு கப்பினில் கொடுக்க, அதன் மேலே கொஞ்சம் நாட்டு சக்கரையை போடும்போது, டைடானிக் கப்பல் முழுகுவது போல கொஞ்சம் கொஞ்சமாக அது கரைந்துக்கொண்டே உள்ளே விழுகும், அப்போது நீங்கள் கொஞ்சமே கொஞ்சம் சாப்பிட்டால் உங்களுக்கு அந்த நுரை ஒரு வெள்ளை மீசையை வரைந்துவிடும்.... அது சொல்லாமல் சொல்வது என்பது நீங்கள் இந்த ஜன்மத்தின் அதி அற்புதமான சுவையை சுவைதுவிட்டீர்கள் என்பதே.

இது மட்டும் இல்லை, எனக்கு சூடாக சாப்பிட பிடிக்காது என்று முரண்டு பிடிபவர்களுக்கு லஸ்ஸி இருக்கிறது. நமது ஊரில் தயிர் என்று ஒரு டம்பளரில் எடுத்து லஸ்ஸி செய்யும் பாத்திரத்தில் ஊற்றுவார்கள், அதன் மேலே தண்ணியை ஊற்றி கொஞ்சம் ஓட்டி கொடுக்கும்போது நம்ம வீட்டில் நான் பால் சாப்பிட மாட்டேன் என்று அடம் செய்யும்போது அதை அவர்கள் வீட்டு பிரிட்ஜில் வைக்க, அடுத்த நாள் நாம் திருட்டுத்தனமாக அதே குளிர்ந்த பாலை குடித்துவிட்டு நீ உள்ள வைச்சு இருந்த லஸ்ஸியை குடிச்சிட்டேன் என்று சொல்லுவோம் இல்லையா அதை போலவேதான் கடையில் கொடுப்பார்கள்..... ஆனால் இங்கு லஸ்ஸி என்று கொடுக்கும்போது ஸ்ட்ரா கொடுங்க என்று கேட்க, அவர் முதலில் குடித்து பாருங்கள் என்றார். மதுரையில் மலையில் கிரானைட் கல் வெட்டி எடுக்க இங்குதான் பயிற்சி எடுத்து இருப்பார்கள் போல, லஸ்ஸியை முதன் முதலில் ஸ்பூன் கொண்டு வெட்டி எடுக்கும் படியாக அப்படி சுவையாகவும், திக் ஆகவும் இருந்தது. ஒரு வாய் போட்டவுடன், வாயில் எச்சில் ஊற இந்த லஸ்ஸி அப்படி சுவையோடு தொண்டையில் இறங்குகிறது.


அடுத்த முறை மதுரை சென்று நன்கு காரமாக சாப்பிட்ட பின், இங்கு சென்று பாதாம் பால் சாப்பிடுங்கள், சூடாக வேண்டாம் என்றால் லஸ்ஸி சாப்பிடுங்கள். ஜிகர்தண்டா மட்டுமே மதுரை பேரை சொல்கிறது என்ற எண்ணத்தை மாற்றி கொள்வீர்கள் !

பஞ்ச் லைன் :

சுவை - அருமையான, சுவையான பாதாம் பால் மற்றும் லஸ்ஸி !

அமைப்பு - ஒரு சிறிய இடம், பிளாட்போர்ம் வெளியே நின்றுகொண்டுதான் சாப்பிட வேண்டும். பார்கிங் என்பது இரு சக்கர வாகனங்களுக்கு இருக்கிறது, நான்கு சக்கர வாகனங்களுக்கு கண்டிப்பாக கஷ்டம்தான் !

பணம் - பாதாம் பால் முப்பது ரூபாய், லஸ்ஸி ஐஸ் இல்லாமல் முப்பத்தி ஐந்து ரூபாய் !

சர்வீஸ் - நல்ல சர்வீஸ் !

அட்ரஸ் : Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, madurai, JB Choudhary badam milk and lassi, best badham milk, amazing tasty lassi, west masi street, dessert

12 comments:

 1. நெடுநாள் தவத்திற்கு பிறகு நல்ல தித்திப்பான பதிவு.

  ReplyDelete
 2. நெடுநாள் தவத்திற்கு பிறகு நல்ல தித்திப்பான பதிவு.

  ReplyDelete
 3. சூடான பாதாம் பால், குளுமையான இனிப்பு லஸ்சி – இரண்டுமே எனக்கு பிடித்தமானவைதான். திருச்சியிலும் உண்டு. (எல்லாமே நீங்கள் சொன்ன சவுத்ரி ஆட்கள் கடைகள்தான்) மதுரைக்கு சென்றால் நீங்கள் குறிப்பிட்ட கடைக்கு போய்ப் பார்க்கிறேன்; சுவைக்கிறேன்.

  ReplyDelete
 4. நானும் இங்க நிறைய இடத்துல சுத்திருக்கேன் எனக்கு தெரியலேயே உங்களுக்கும் மட்டும் எப்படி...

  ReplyDelete
 5. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு 'சிவாஜி 'SP சௌத்திரியை தெரியும் ,நீங்கள் சொல்லும் ,சௌத்திரியை நானும் ரசித்ததுண்டு ,ருசித்ததுண்டு:!மதுரக்காரன்டா::)

  ReplyDelete
 6. வர்ணனைகள் அருமையா இருக்குஜி....

  ReplyDelete
 7. நானும் ரசித்ததுண்டு. சுவையானது.

  ReplyDelete
 8. வணக்கம்
  அண்ணா
  இரசித்து படிக்கத்தான் முடிந்தது... ருசிக்க முடியல அண்ணா.தேடலுக்கு நன்றி.த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. தில்லியில் இது போல பாதாம் பால் கடைகள் முன்பு இருந்தது. சூடாக இல்லாமல் ஜில்லென்று கொடுப்பார்கள். அது இன்னும் சுவை! குறிப்பாக வெயில் காலத்தில்....

  மதுரை/திருச்சியில் சௌத்ரி கடை பார்த்ததில்லை. திருச்சி வரும்போது எங்கே இருக்கிறது எனப் பார்க்க வேண்டும்!

  ReplyDelete
 10. ஒன் பை டூ கிடையாது... இந்த கண்டிஷன்தான் தடுக்கிறது

  ReplyDelete
 11. இந்தக் கடையில் நிறையமுறை லஸ்ஸி சாப்பிட்டு மெய்மறந்து போயிருக்கிறேன். தங்களின் பதிவை கண்டபின் தான் பாதாம்பால் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஊற்றெடுக்கிறது. அருமையான பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 12. http://tamil-bloglist.blogspot.in/ add your tamil blog its easy

  ReplyDelete