Wednesday, January 20, 2016

டிபன் பாக்ஸ் உணவகம் - பெங்களுரு !

தினமும் ஸ்கூல் கிளம்பும்போது அம்மா ஒரு அலுமினிய தூக்கு சட்டியில் மதிய உணவை போட்டு எனது கையில் திணித்து விடுவார், இன்னைக்கு சாயங்காலம் மட்டும் இதுல ஏதாவது மிச்சம் இருந்துச்சு தொலைச்சு புடுவேன் என்று எச்சரித்து அனுப்புவார். அந்த ரிக்க்ஷா இழுக்கும் தாத்தாவிடம் அந்த பள்ளிகூட ஆயாகிட்ட பையனை சரியா சாப்பிட சொல்லி கொஞ்சம் மிரட்ட சொல்லுங்க என்பார், அந்த தாத்தாவும் அந்த ஆயாவிடம் அந்த புள்ளையை சரியா சாப்பிட சொல்லனுமாம் என்று சொல்லிவிட, மதியம் பள்ளி இண்டர்வல் மணி அடித்ததும் அந்த வகுப்பறையின் வெளியே ஒரு கோட்டில் நெருக்கி அடித்து உட்கார்ந்துக்கொண்டு அந்த அலுமினிய தூக்கு சட்டியை திறக்க பகீரத முயற்சி செய்வோம், அதை ஒரு மிஸ் திறந்து கொடுக்க அப்போது ஒரு வாசம் வீசும் பாருங்கள்....... அட, அட, அட அந்த வாசமே அம்மாவின் பாசத்தை சொல்லும். தயிர் சாதமும் ஊறுகாயும்தான் இருக்கும், அதன் அடியிலேயே சில நேரங்களில் முட்டை அல்லது ஒரு சிறிய கப்பில் இரண்டு துண்டு கடலை மிட்டாயும் !! அடுத்து வந்த காலங்களில் டிபன் பாக்ஸ் மாடல் மாறினாலும் அந்த அன்பு மட்டும் என்றும் மாறாது இருக்கிறது.... இன்று ஆபீஸ் கொண்டு போகும் டிபன் பாக்ஸ் உள்ளேயும் ஒரு சிறிய அன்பு ஒளிந்து இருக்கும், அந்த மனுஷன் இதை விரும்பி சாப்பிடுவானே என்று ஒரு துண்டு கூட வைத்து இருப்பதும், இன்னையில் இருந்து நான் டயட் இருக்க போறேன் ஒரு இட்லி கம்மியா வையி என்று நாம் சொல்வதை கேட்கும் அம்மா, அன்று இட்லியை வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் பெரிய சைஸ் இட்லியாக ஊற்றுவதும், அதை மனைவி சிரித்துக்கொண்டே எடுத்து வைப்பதும் என்று என்ன அருமையான அன்பை சுமந்து செல்கிறது இந்த டிபன் பாக்ஸ் !!ஒரு வித்யாசமான உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்று தேடி கொண்டு இருந்தபோது, பெயரே வித்யாசமாக இருந்த இது கண்ணில் பட்டது. என்ன என்று பார்க்க, அங்கு சில உணவு காம்போ வகைகள் டிபன் பாக்ஸ் கொண்டு பரிமாறபடுவது தெரிந்தது. வைட்பீல்ட் இன்-ஒர்பிட் மால் உள்ளே இருக்கும் இந்த உணவகத்தில் உள்ளே நுழையும்போதே அந்த வித்யாசமான அமைப்பு கொஞ்சம் புருவத்தை உயர்த்த வைக்கிறது. டிபன் பாக்ஸ் மீல் இருக்கிறதா என்று உறுதி படுத்திக்கொண்டு உட்கார்ந்தோம்.
இந்த டிபன் பாக்ஸ் உள்ளே இருக்கும் பதார்த்தம் ஊருக்கு ஊர் வேறுப்படும், எனது நாகர்கோவில் நண்பர் டிபன் பாக்ஸ் திறந்தார் என்றால் கண்டிப்பாக ஒரு மீன் துண்டு உள்ளே இருக்கும், இதுவே சர்தார் அவர்களின் டிபன் பாக்ஸ் உள்ளே டால், சப்பாத்தி மற்றும் ஒரு ஸ்வீட், திருச்சி - தஞ்சாவூர் டிபன் பாக்ஸ் உள்ளே ஒரு புல் மீல்ஸ் இடம் இல்லாமல் ஒளிந்து கொண்டு இருக்கும்.... இப்படி உள்ளே இருக்கும் பதார்த்தங்கள் மாறி இருந்தாலும், அந்த அன்பு ஒன்றாகவே இருக்கும். அது போலவே இங்கும் நீங்கள் எந்த மாநிலதவரோ, அவருக்கு ஏற்றார் போல டிபன் பாக்ஸ் உள்ளே உணவு இருக்கிறது, இங்கு டெல்லி, மும்பை, பெங்களுரு மற்றும் கொல்கத்தா வகை உணவுகள் இருப்பது சிறப்போ சிறப்பு !


நான் ஆர்டர் செய்து இருந்த டெல்லி டிபன் பாக்ஸ் தூக்கி கொண்டு, உங்க ஆத்தா கொடுத்து விட்டு இருக்காங்க எப்பெக்டில் எனது முன்னாடி வைத்தார் அந்த சர்வர். யாராவது ஒருவர் டிபன் பாக்ஸ்சை ஓபன் செய்யும்போது அவரது முகத்தை பாருங்களேன்.... முதலில் மேலே இருப்பதை எடுக்கும்போது அதற்க்கு அடுத்த தட்டுதான் கண்ணில் படும், "ஓஹோ இன்னைக்கு பூசணிக்காய் சாம்பார்" என்று கொஞ்சம் முகம் சுருங்கும், பின்னர் இரண்டாவது அடுக்கை எடுக்கும்போது மூன்றாவது அடுக்கு கண்ணில் படும், "அட பாரேன் எனக்கு புடிச்ச உருளைக்கிழங்கு வறுவல் வேணும்னு சொல்லி இருந்தேன் இன்னைக்கு பண்ணி இருக்கா" என்று கண்ணில் கொஞ்சம் காதலும் ஒளியும் தோன்றும், அடுத்து மூன்றாவது அடுக்கை எடுத்து அந்த கடைசி அடுக்கை எடுக்கும்போது அதில் இரண்டு சிறிய டப்பாக்களும், கொஞ்சம் கூட்டும், ஒரு சிறிய இடுக்கில் இஞ்சி மாங்கா ஊறுகாயும் இருக்கும், அந்த டப்பாக்களில் முறையே ரசமும், பெருங்காயம் மற்றும் மிளகாய் போட்ட மோரும் இருக்கும் "என் பொண்டாட்டி நேற்று புரட்டி புரட்டி போட்டு அடிச்சி துவைச்சிபுட்டு இன்னைக்கு இவ்வளவு செய்ஞ்சு உள்ளே வைச்சி இருக்கா பாரேன்... இவளை புரிஞ்சிக்கவே முடியலை" என்று ஊறுகாயை நக்கிகொண்டே இருப்போம். இப்போதும் அந்த முதல் அடுக்கு மூடி திறக்காமலேயே இருக்கும், அதை திறக்க முர்ப்ப்படும்போதுதான் நண்பர்கள் எல்லோரும் "அட, என்ன சார் பூசணிக்காய் சாம்பாரா.... என் பொண்டாட்டியும் பாருங்க ரசத்தை மட்டும் வைச்சி இருக்கா, போன் பண்ணி கேட்டேன், நல்லா கிளறி பாருங்க அதுதான் சாம்பார் அப்படின்னு சொல்றா" என்று சாப்பிட ஆரம்பிக்கும்போது நாமும் சாப்பிட ஆரம்பிப்போம், ஆனாலும் மனமெல்லாம் அந்த முதல் அடுக்கில் இன்று என்ன வைத்து இருக்கா அந்த ராட்சஸி என்றே தோன்றும் !


அந்த முதல் அடுக்கை திறப்பது என்பது சற்று கடினமான காரியமே, மேஜை முனையில் கொஞ்சம் இடித்து, பல்லை வைத்து கடித்து, நான் திறக்கறேன் என்று கூறும் பயில்வான் நண்பனிடம் கொடுத்து அதை எப்போதும் ஓபன் செய்வது என்ன விதமான டிசைன் என்றே தெரியவில்லை. அதை பெரும் முயற்சியில் ஓபன் செய்த பின்பு.... உள்ளே ஒரு கடலை உருண்டையும், கொஞ்சம் மிக்ஷர் கட்டிய பொட்டனமும், ஒரு மோர் மிளகாயும் இருக்க இப்போது அந்த கண்களில் ஒரு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதை போல ஒரு சந்தோசம் தெரியும், அந்த கடலை மிட்டாயை அப்படி ருசித்து சாப்பிட்டு அன்றைய பொழுதின் மதிய உணவை முடிப்போம் !! அது போலவே இங்கேயும் அவர்கள் ஒவ்வொன்றையும் எடுத்து வைக்க, ஐய்யா இதுவா, அட இங்க பாரேன் என்று ஆச்சர்யம் கூடுகிறது !


முடிவில் கொஞ்சம் கொஞ்சம் எல்லோரும் சாப்பிட, அன்றைய பொழுது நிறைய நினைவுகளையும், சுவையான உணவையும் ருசிக்க வைக்கிறது. கண்டிப்பாக சென்று பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று என்றே சொல்லுவேன் !!

மெனு கார்டு :

Labels : Suresh, Kadalpayanangal, tiffin box, bengaluru, bangalore, concept restaurant, veg and non-veg food

Wednesday, January 13, 2016

கின்னஸ் நண்பர் "ராஜ் மோகன்" !!

என்னுடைய பதிவை படிப்பவர்கள் பலர், அவர்களில் சிலர் என்னுடன் பேசுவதுண்டு, சிலர்  அப்படி உரிமையோடு பேசி இன்றளவும் நல்ல நண்பராக இருக்கின்றனர்... அப்படி இரண்டு வருடத்திற்கு முன்பு என்னை தொடர்ப்பு கொண்டு பேசினார் திரு. ராஜ் மோகன், இவர் ஒரு சமையல் கலை நிபுணர் என்பது பிறகு தெரிந்தது. தமிழ்நாடு முழுவதும் சென்று நான் ருசித்து எழுதும் உணவுகளை பற்றி சிலாகித்து பேசுவார். இன்று அவர் ஒரு கின்னஸ் சாதனை நாயகன் என்று எண்ணும்போது, மனம் உண்மையாகவே பெருமிதமும், சந்தோசமும் கொள்கிறது !!  
இவர் எப்போதும் இந்த உணவு வகைகளை பற்றி ஆராய்ச்சி செய்துக்கொண்டே இருப்பார் என்று சொல்லலாம். இவரது யூ டியூப் சேனலில் சுவையான பதார்த்தங்களை எளிமையாக அறிமுகபடுத்துவது, சன் டிவியில் சமையல் நிகழ்ச்சி, ஒரு கல்லூரியில் பணியாற்றுவது, இந்தியாவில் உணவு திருவிழா நடக்கும்போது செல்வது என்று எப்படி இவருக்கு நேரம் கிடைக்கிறது என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் சுறுசுறுப்பு இவருக்கு !


ஒரு நாள் அவரை நான் அழைத்து பேசியபோது ஒரு சாதனை முயற்சி செய்வதற்கு தயாராவதாக குறிப்பிட்டார், சில நாட்களுக்கு பிறகு அவர் ஒரு தொடர் சமையல் சாதனை செய்ய முனைகிறார் என்று தெரிந்தபோது நான் சுமார் 10 மணி நேரம் வரை இருக்கும் போலும் என்று நினைத்தேன், ஆனால் அது 24 மணி நேரத்திற்கும் மேலும் என்றபோது மிரண்டுதான் போனேன். 19-டிசம்பர்-2015 அன்று அவரது முகபபுத்தக தளத்தில் வரும் செய்திகளை உடனுக்குடன் பார்த்துக்கொண்டு நகத்தை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன், இதற்க்கு முன்பு செப் திரு. தாமு அவர்கள் 24 மணி நேரம் சமைத்து சாதனை செய்து இருந்தார் என்று தெரிந்தது, அதை அவர் கடந்த பின்பு எனக்கு ரிலாக்ஸ் ஆனது, ஆனால் மனிதர் அதனையும் மீறி 46 மணி நேரம், சுமார் 1204 உணவு வகைகளை சமைத்து மலைக்க வைத்து இருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் நின்றாலே நமக்கெல்லாம் கால்கள் வலிக்கும், இவர் நின்று, சமைத்து, ருசிக்க கொடுத்து இந்த சாதனை செய்து இருக்கிறார் என்பதை நினைக்கும்போது என்ன ஒரு இமாலய முயற்சி என்று தோன்றுகிறது.
இந்த சாதனை உங்களது வாழ்வில் ஒரு சிறிய மைல் கல்தான் நண்பரே, இதனை விடவும் இன்னும் பெரிய சாதனையை புரிய உங்களை வாழ்த்துகிறேன். இனி வரும் காலங்களில் நீங்கள் "அறுசுவை சக்ரவர்த்தியாக"வலம் வருவீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் !

Tuesday, January 12, 2016

பயணம் தொடர்கிறது !

நலமா ?! நீண்ட பெரிய இடைவெளி உருவாகிவிட்டது... புது வேலை, நிறைய அலுவல்கள், எனது குடும்பம், அவர்களுக்காக நேரம் செலவழித்தது,  எனக்கான தனிமை, YummyDrives.com ஆரம்பம், அதற்க்கான வேலைகள் என்று இந்த இடைவெளி சற்று அதிகமாகவே ஆகிவிட்டது எனலாம். ஒவ்வொரு பயணத்தின் போதும் ஓய்வு என்பது அவசியமே, ஆனால் இந்த ஓய்வு என்பது எனது எழுத்துக்களுக்கு மட்டுமே இருந்ததே அன்றி எனது சுவையான பயணத்திற்கு இல்லை... ஆதலால் எழுதுவதற்கு அதிகம் இருக்கிறது என்பது உங்களுக்கு சந்தோசம் கொடுக்கும் செய்திதானே !!நான் எழுதாமல் இருந்தபோது, தினமும் எனது தளத்திற்கு வந்து சென்று, பின்பு உரிமையோடு கோபித்துக்கொண்டு, சில சமயங்களில் திட்டியும், செல்ல மிரடல்களோடும் என்னை எழுத தூண்டிய நண்பர்களுக்கு நன்றி கூறுகிறேன் ! இப்போது இந்தியா முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டி இருப்பதால் இன்னும் சுவையான பயணமாக இருக்கும்.


இந்த வருடமும் மேலே சொன்னது போல நிறைய வேலைகள் இருந்தாலும், அந்த சோம்பேறித்தனத்தை மட்டும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து கண்டிப்பாக எழுத வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறேன், அதை நிச்சயம் செய்வேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. வாருங்கள்... நாளையில் இருந்து ஒரு இனிய பயணத்திற்கு தயாராவோம் !


நன்றி.... மீண்டும் சுவைக்க வருக :-)