Wednesday, February 24, 2016

சிறுபிள்ளையாவோம் - பஞ்சுமிட்டாய் !!

சிறுவயதில் அரசு பொருட்காட்சி கூட்டிக்கொண்டு போகிறேன் என்று சொன்னாலே அந்த பெரிய அப்பளமும், பஞ்சு மிட்டயும்தான் யாபகம் வரும். வாரத்தில் ஒரு தடவையாவது அம்மா அப்பளம் பொரிப்பதால், அந்த பெரிய அப்பளம் கையில் கிடைக்கும்போது அதன் சைஸ் பார்த்து சந்தோசம் வருமே தவிர, ஒரு ஆச்சர்யம் என்பது பஞ்சு மிட்டாய் பார்க்கும்போது மட்டுமே வரும் இல்லையா. கொஞ்சம் கொஞ்சமாக பாகாக வாயில் கரைந்து, கையில் பிசுபிசுக்கும் அந்த பிங்க் நிற தின்பண்டத்தை, இன்று காலத்தை தாண்டியும் சிறுவர்கள் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் ஒரு சிறிய பொருட்காட்சிக்கு சென்று இருந்த போது, இந்த பஞ்சு மிட்டாயை பார்த்தேன், அருகில் இருந்த மனைவி, ஐயோ கொழந்தைங்க அதை பார்த்தா ஓடுவாங்க.... புடிங்க என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நான் எல்லோரையும் விட்டு முன்னாடி ஓடி கொண்டு இருந்தேன் !!பஞ்சு மிட்டாய் என்பது எவ்வளவு அதிசயமோ, அதை விட அதிசயம் என்பது அந்த சுற்றும் டிரம்மில் இருந்து நூல் போல வருவது. சிறு வயதில் அவர் டிரம்மின் நடுவே தடவி கொடுப்பார், அது அவருக்கு அடங்கிய பசு போல நூல் போல அந்த பஞ்சு மிட்டாயை கொடுத்துக்கொண்டே இருக்கும், கொஞ்சம் வயதான பின்தான் தெரிந்தது அவர் தடவி கொடுக்கவில்லை அதன் நடுவே இருக்கும் ஓட்டையில் சர்க்கரையை போடுகிறார் என்பதும், அதுதான் இப்படி வருகிறது என்பதும். நாமும்தான் விஞ்ஞானி ஆயிற்றே, அடுத்த நாள் அம்மா இட்லிக்கு மாவு அரைக்க என்று அரிசியை போட்டு எடுத்துவிட்டு, உழுந்தை போடுவதற்கு என்று ரெடி ஆகிக்கொண்டு இருந்தார், சற்று அந்த பக்கம் சென்று வருவதற்கும், சர்க்கரை டப்பாவை எடுத்து அப்படியே கொஞ்சம் கொட்டி க்ரிண்டெர் ஆன் செய்து ஓட விட்டேன், சனியன் இந்த விஞ்ஞானியை எப்போது இந்த க்ரிண்டெர் மதித்து இருக்கிறது, அந்த பஞ்சு மிட்டாய் வரவே இல்லை, அதை பிடிக்க வைத்து இருந்த குச்சி வேஸ்ட் ஆனதுதான் மிச்சம் ! அடுத்த நாள் அப்பாவிற்கு முதல் தோசை செய்து போட்டு, அம்மா தோசையில் உப்பிற்கு பதில் சர்க்கரையை கொட்டியது தான்தான் என்று நம்ப வைத்தது தனி கதை !

பஞ்சு மிட்டாய் செய்பவரை பார்த்து இருக்கின்றீர்களா.... சிறு வயதில் குழந்தைகள் புடை சூழ செல்லும் அவரை பார்த்தால், ஏதோ வரம் வாங்கி வந்தவர் போல இருப்பார். பஞ்சு மிட்டாய் என்பதுதான் அவர் பெயரே என்னும் அளவுக்கு அவரை அப்படியே கூப்பிடுவார்கள் குழந்தைகள். தெருவின் முனையில் நின்று அந்த டிரம்மை சுற்றி விட்டு, அதன் நடுவே அந்த மேஜிக் சர்க்கரையை அள்ளி போடும்போது, எல்லா குழந்தைகளின் மூக்கும் அந்த சுற்றும் டிரம்மினுள் எட்டி பார்க்கும். அதன் உள்ளே இருந்து அப்போது வரும் வாசனையே அலாதி. கொஞ்சம் கொஞ்சமாக நடுவிலே போட்ட அந்த சர்க்கரை வெளியே நூலாம்படை போல பொங்கி வரும்போது, ஒரு மந்திரவாதி போல ஒரு குச்சியை வைத்துக்கொண்டு அந்த பஞ்சை அள்ளி எடுக்கும்போது இங்கே மனம் ராட்டினமாய் சுற்ற தொடங்கும். எனக்கு எனக்கு என்று குதிக்கும் குழந்தைக்கு அந்த பஞ்சு பொதிந்த மேகம் ஒன்றை கொடுப்பது போல அந்த குச்சியை கொடுக்கும்போது, அதை வெற்றியுடன் காசு கொடுத்து வாங்கி அதை திங்க வாயை கொண்டு போகும்போது அதை முதலில் தின்பது என்பது அந்த மூக்குதானே !
பஞ்சு மிட்டாய் தின்பது என்பது ஆயக்கலையில் சேர்க்காமல் விட்டது, அன்று அது இல்லாமல் இருந்ததால்தான் என்று அடித்து சொல்லலாம். பஞ்சு மிட்டாயை மூக்கு முதலில் உள்ளே போகும்படியாக கடித்து, இழுக்கும்போது நாம் நினைததர்க்கும் மாறாக நிறைய வரும். அதை அப்படியே வாயில் போட முடியாமல், இப்போது கையை கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பியித்து தின்போம். அவ்வப்போது நாக்கை முடிந்தவரை வெளியே நீட்டி அந்த ரோஸ் கலர் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்பதும், அந்த சர்க்கரை கையில் பிசு பிசுக்க பொறுமையாக தின்பதும், தனது சைஸ் மீறி இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தின்று ஒரு வெற்றி பெருமிதம் செய்வதும், வாங்கி தந்த அம்மாவிற்கு அந்த இனிப்பு வாயோடு ஒரு முத்தம் கொடுப்பதும்.... பஞ்சு மிட்டாய் ஒரு ஏகனந்த அனுபவம் இல்லாமல் வேறென்ன.

அடுத்த முறை பஞ்சு மிட்டாய் விற்பவர் இல்லாமல், செய்பவரை தேடி செல்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பஞ்சு மேகத்தில் கரைந்து செல்லுங்கள்..... மீண்டும் குழந்தையாவீர்கள் !Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, childhood memories, old memories, tamilnadu, panju mittai, cotton candy making, candy

Tuesday, February 23, 2016

அறுசுவை - செட்டி கடை, கரூர் !

நம்ம ராசி எப்படின்னா, ஒரு ஊருக்கு புதுசா போனா நாமளே நினைச்சாலும் வழக்கமானதை சாப்பிட முடியறதில்லை.... ஒரு வித்தியாசமான, ருசியான உணவை அறிமுகம் செஞ்சிடறாங்க... சுழி அப்படி !! இந்த முறை கரூர் சென்று இருந்தேன், அங்கு எங்கு நல்ல உணவு கிடைக்கும் என்று கேட்டதற்கு எல்லோரும் எங்கு நல்ல சிக்கன் கிடைக்கும், மட்டன் கிடைக்கும், பரோட்டா கிடைக்கும் என்றுதான் சொன்னார்கள், சரி அதையே சாப்பிடலாம் என்று கிளம்பினோம். அப்படி நண்பருடன் சென்று கொண்டு இருந்தபோது, அவரது நண்பரை வழியில் பார்த்தோம், அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது என்னுடைய கடல்பயணங்கள் தளம் பற்றியும், நான் உணவை வேட்டையாடுவது (?!) பற்றியும் சொல்ல, அவரோ அப்படி என்றால் நீங்கள் செட்டி கடைக்கு கூட்டிக்கிட்டு போங்க என்று சொல்ல, நண்பரோ.... அட ஆமாம் மறந்தே போச்சு என்றார். முடிவில் அங்கு சென்றபோது ஒரு மிக வித்யாசமான அனுபவம் கிடைத்தது, நான் மீண்டும் குழந்தை பருவதிர்க்கே சென்றேன் என்றால் மிகை ஆகாது !!
கரூரில் இருக்கும் ஒரு முக்கியமான தெரு என்பது ஜவஹர் பஜார் என்பது, அந்த தெருவின் முடிவில் இருக்கும் கருப்பாயி கோவிலுக்கு சிறிது முன்பு ஒரு சிறிய கடையாக இருக்கிறது செட்டி கடை, அந்த கடைக்கு வெளியில் இருக்கும் போர்டு R.ரெங்கநாதன் கரம் கடை என்று சொன்னாலும், செட்டி கடை என்பதுதான் அடையாளம். தூரத்தில் இருந்து பார்க்கும்போதே அங்கே குழந்தைகளும், பெரியவர்களும் நிற்ப்பதை பார்த்து என்ன இருக்கமோ என்று பார்க்க வைத்தது, அங்கு சென்று உண்டவுடன்தான் தெரிந்தது இது வேற மாதிரி என்று !!பொதுவாகவே இன்று சிறிய பெட்டி கடைகள் அல்லது தின்பண்டம் விற்கும் கடைகளை பார்த்தாலே லேஸ் சிப்ஸ், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிஸ்கட், அடைக்கப்பட்ட ஜூஸ் என்று எல்லாமே நமக்கு பதப்படுத்தப்பட்ட கெமிக்கல் உணவு வகைகளே கிடைக்கின்றது. சிறு வயதில் கிடைத்த அந்த மொறு மொறு மைசூர் பாகு, இலந்தை வடை, ஆரஞ்சு மிட்டாய், பல்லி மிட்டாய், முறுக்கு, இலந்தை பொடி, கொடுக்காபுளி, தட்டை வடை, கோலி சோடா என்று இங்கு அதிகம் கிடைபதில்லை. எறும்பு வருது, யாரும் சாபிடறதில்லை,ஒடம்புக்கு வந்துடும் என்று விதவிதமான காரணங்கள். இதனால் காற்றும், பிளாஸ்டிக் சுற்றியும் வைக்கப்படும் பலவும் சுமார் ஆறுமாதத்திற்கு பயன்படுத்தலாம் என்று வருகிறது, அப்படியென்றால் அதில் என்னவெல்லாம் கலந்து இருப்பார்கள் என்று சொல்ல தேவை இல்லை. செயற்கை சுவையையே சாப்பிட்டு வரும் நமக்கு ஒரு இயற்கை சுவையை சுவைக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் !

சீம் பால் கட்டி !

பீட்ருட், கடலை, கேரட் போட்ட கரம் !

இலந்தை வடை !


காராமான செட்டு !


கடையின் உள்ளே நுழைந்து பார்க்கும் போதே வியப்பில் புருவம் உயர்கிறது, சிறு குழந்தையாகிறோம். ஒரு இலந்தை வடை குடுங்க என்று கேட்டு அந்த நுனி நாக்கில் நக்கி, அதன் சுவை மூளையை விட மனதை வேகமாய் அடைந்து முகத்தில் ஒரு ஜோதி தெரிகின்றது. பின்னர், எனது முன்னால் இருந்ததை பார்த்து இது என்ன கட்டி கட்டியாய் இருக்கு என்று கேட்க அது சீம் பால் கட்டி என்று தெரிய வரும்போது, எனது அம்மா பால்காரரிடம் கன்னு போட்டுடுச்சா என்று அக்கறையாய் கேட்டு கொஞ்சம் சீம் பால் கொண்டு வாங்க என்று பால்காரரிடம் கேட்டு, அதில் திரட்டி செய்து தந்தது யாபகம் வருகிறது, அது போலவே இங்கு ஒன்றை எடுத்து வாயில் வைத்து கடிக்க, இந்த இயற்கையின் சுவையை யாரால் வெல்ல முடியும் என்றே தோன்றுகிறது. அடுத்து வெங்காய செட்டு, மோரு, கார கடலை, புளிப்பு முறுக்கு என்று சரமாரியாக இறங்க ஆரம்பிக்கிறது. டேய் போதும்டா என்று இழுத்து செல்லும்போதுதான் உணர்கிறேன் அவ்வளவு உண்டும் வயிறு புடைக்கவில்லை, இன்னும் அதே லைட் பீலிங்..... உண்மையிலேயே அந்த காலத்திற்கு சென்று வந்தேன் எனலாம் !!

அடுத்த முறை கரூர் செல்லும்போது இங்கு சென்று வாருங்கள், அந்த குழந்தை பருவத்திற்கு சென்று வர முடியும் ! இந்த கடைக்கு எதிரே, சற்று தள்ளி இன்னொரு கடையும் இருக்கிறது, அங்கும் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.


Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Karur, Chetty kadai, Childhood snacks, Tamil nadu, go back to old days, yummy food