Tuesday, March 8, 2016

அறுசுவை - முதலியார் கடை "முட்டை இட்லி", மதுரை

"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்வதில் மனம் நெகிழ்கிறது. புதிய வேலையில் சேர்ந்ததாலும், என்னுடைய செல்ல குழந்தைகளுடன் நேரம் அதிகம் செலவளிப்பதாலும், சோம்பேறித்தனம் கொஞ்சம் சேர்ந்ததாலும் பதிவுகள் அதிகம் எழுதமுடிவதில்லை. ஆனாலும், இனி அதிகம் எழுத முயற்சிக்கிறேன் !
*********************************************************************************

இந்த இட்லியை வைத்து ஒரு புகழும், ருசியும் மிகுந்த நிறைய உணவுகளை செய்யலாம் ! சிறு வயதில், அம்மா காலையில் இட்லி சாப்பிட கொடுப்பார்கள், அப்பாவுக்கும் சேர்த்து வைத்து இருந்தாலும், சில நேரங்களில் நான் வெளியில் சாப்பிட்டு கொள்கிறேன் என்று சென்று விடுவார், அப்போது மீதமாகும் இட்லியை ஒரு பெருமூச்சோடு பார்ப்பார். அன்று நான் ஸ்கூல் முடிந்து வரும்போது, சூடாக இட்லியை நறுக்கி, பொடி சேர்த்து, வெங்காயம் எல்லாம் போட்டு.... உனக்காக சூடா பண்ணினேன் என்று தருவார். அது ஆறின இட்லி என்றெல்லாம் தெரியாது, ஆனாலும் ருசியோடு இருக்கும். கொஞ்சம் வளர, வளர எதுவும் சூடாக வேண்டும் என்று இந்த இட்லி வகைகளை தொடுவதில்லை. ஆனாலும், இந்த முறை மதுரை சென்று இருந்தபோது முட்டை இட்லி சாப்பிடலாமா என்றனர்.... கொஞ்சம் ஆச்சர்யமாக பார்த்தேன் !!
மதுரை தேவர் சிலை அருகே, கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப் இருக்கும், அதாவது அமெரிக்கன் காலேஜ் பக்கம் நடந்து போகும்போது ஒரு பஸ் ஸ்டாப் பின்புறம் பளபளக்கும் எழுத்தில் முதலியார் இட்லி கடை என்று இருக்கும், அதை சாதரணமாக கடந்து செல்பவர்களுக்கு தெரியாது இங்குதான் புகழ் பெற்ற முட்டை இட்லி கிடைக்கிறது என்று. மிக சிறிய கடை, அடுத்து ஒரு சின்ன ரூம், கொஞ்சம் நெருக்கமாகத்தான் உட்கார வேண்டி இருக்கிறது. உள்ளே நுழைந்து என்ன இருக்கிறது என்று பார்க்க முயற்சிக்கும்போது அங்கு ஒரு சிறிய பத்திரிக்கையின் கட்டிங் கண்ணில் படுகிறது...... "முட்டை இட்லி" !!மெனுவை படிக்கும்போதே தெரிந்து விடுகிறது, இங்கு சுத்தமான அசைவம் கிடைக்கிறது என்று. வேறு இடங்களில் அதிகம் கிடைக்காத இறால் கறி தோசை, சிக்கன் இடியாப்பம் பிரியாணி, முட்டை அடை தோசை, சுவரொட்டி, முட்டை சிக்கன், வெஜ் மசாலா தோசை, எண்ணை தோசை என்று விதம் விதமாக இருக்கிறது. தொட்டு கொள்வதற்கு என்று எண்ணை பொடி, எள்ளு சட்னி, மல்லி சட்னி ஸ்பெஷல் வேறு. நாங்கள் முட்டை இட்லியும், எண்ணை தோசையும் முடிவு செய்துவிட்டு இன்னைக்கு கொஞ்சம் கம்மியா சாப்பிடனும் என்று மனதுக்குள் நினைத்து அது மூளைக்கு சென்று கொண்டு இருக்கும்போதே மூக்கின் பக்கத்தில் ஒரு பெரிய தட்டில் விதம் விதமான மசாலாவும், காரமும் நிறைந்த கறி வகைகளை வைத்து ஒரு ஸ்பீட் பிரேக்கர் அமைக்கின்றனர். இப்போது கண்களும் சேர்ந்து அது, இது என்று ஆர்டர் செய்துவிட்டு நிமிரும்போது டயட்.... யார் சொன்னா, நானா என்று சந்தேகம் கிளப்புகிறது !


இப்போது இலையில் தண்ணீர் தெளித்து தாளமிட்டு கொண்டு இருக்கும்போது ஒரு சிறிய தட்டில் கொத்தமல்லி தூவி வருகிறது, கொஞ்சம் வாசனையும்தான். சிறிய இட்லிகளாக போட்டு, முட்டையும், வெங்காயமும், மசாலாவும், காரமும் போட்டு, கொஞ்சம் எண்ணை ஊற்றி புரட்டி புரட்டி எடுக்கும்போது, ஒரு சில இட்லி மட்டும் என்னை விட்டுடுங்க என்று பிரிந்து வந்து அந்த மசாலாவோடு மன்மத ஆட்டம் ஆட.... இங்கு அதை நாங்கள் கொஞ்சமே கொஞ்சம் எடுத்து இலையில் போட்டு பார்த்தோம். கொத்து பரோட்டா கேள்வி பட்டு இருக்கிறோம் இல்லையா, அது எல்லாம் ஊருக்கு அடங்காத பிள்ளை போல, தோசை கல்லில் போட்டு வெளுத்து வாங்கினால்தான் அது சுவையோடு வரும்... ஆனால், இந்த இட்லி இருக்கிறதே அது வீட்டிற்க்கு அடங்கிய பிள்ளை போன்றது, கொத்து பரோட்டாவிற்கு கொடுக்கும் அத்தனையும் கொடுத்து, பூவை போன்று புரட்டி எடுக்கின்றனர். இந்த முட்டை இட்லியோடு கொஞ்சம் சால்னாவை ஊற போட்டுக்கொண்டே, அங்கு வெங்காயம் சேர்த்த மட்டன் சுக்காவையும் தொட்டுக்கொள்ள "சந்தோஷம் பொங்குதே, சந்தோஷம் பொங்குதே.... சந்தோஷம் எங்கும் பொங்குதே" !!
அடுத்து நாங்கள் சொல்லி இருந்த எண்ணை தோசை வந்தது. ஒரு சாதாரண தோசைக்கும், இந்த எண்ணை தோசைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவே இல்லை. அதனையும் போட்டு துவம்சம் செய்தோம். அதோடு, அடுத்து இறால் கறி தோசை சொல்லி அதில் இருந்த மசால் எல்லாவற்றையும் சாப்பிட்டு தோசையை மிச்சம் வைத்தோம். இந்த மசால் ஊறின தோசையை எல்லாம் கொஞ்சம் ஆற போட்டுதான் செய்யணும்..... ஒவ்வொரு வாயும் அந்த மசால் சென்று ருசி கொடுக்கும். 
அடுத்த முறை மதுரை செல்லும்போது சென்று வாருங்கள், ஒரு முட்டை இட்லி சாப்பிட்டு அதில் எள்ளு சட்னியும், வெங்காய சட்னியும் தொட்டுக்கொண்டு அதனோடு மதுரையின் இளம் ஆட்டுக்கறியில் செய்யப்படும் மட்டன் சுக்காவை வாகாய் நடுவில் வைத்து சாப்பிடும் அந்த நாள் இனிய நாளே !!Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, madurai, muttai idli, mudaliyar idli shop, mudhaliyar kadai, ennai thosai, oil dosa, famous for, mathurai