Friday, April 29, 2016

சிறுபிள்ளையாவோம் - பஞ்சுமிட்டாய் !!

சிறிய வயதில் அரசு பொருட்காட்சி என்று ஒன்று கோடை வெயில் நேரத்தில் நடக்கும்போது எனது ஒரே குறிக்கோள் என்பது ஒரு பஞ்சு மிட்டாய் வாங்க வேண்டும் என்பதுதான். இப்போது கிடைப்பது போல பஞ்சு மிட்டாய் என்பது எல்லாம் வீதியில் வருவதில்லை, பஞ்சுமிட்டாய் வேண்டும் என்றால் நீங்கள் பொருக்காட்சிக்குதான் செல்ல வேண்டும் ! இன்றளவிலும் பஞ்சுமிட்டாய் என்பது அந்த பிங்க் நிறத்தில் மட்டுமே வந்து கொண்டு இருக்கிறது, எனது மகனுக்கு நான் இன்று பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுத்தாலும்.... அப்பாவுக்கு கொஞ்சம் கொடுடா என்று கேட்டு வாங்கி சிறுகுழந்தையாவேன் !!



பஞ்சு மிட்டாயை மிக உன்னிப்பாக கவனித்து இருக்கிறீர்களா ? ஒரு சிறிய மேக துண்டு போலவே இருக்கும், அதுவும் பிங்க் நிற மேக துண்டு. ஒரு குச்சியில் சொருகி அந்த மேக துண்டை கொடுக்கும்போது, நமக்கு என்னவோ நாம் அதுவரை அண்ணாந்து மட்டுமே பார்த்த ஒன்றை இவ்வளவு சுலபமாக குச்சியில் சொருகி விட்டார்களே என்று ஆச்சர்யம் வரும் !






சிறு வயதில் பஞ்சுமிட்டாய் செய்வதை பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். ஒரு பெரிய தொட்டி போன்ற பாத்திரம், அதில் வெறும் குச்சியை சுற்றும்போது பஞ்சு மிட்டாய் உருவாகிறது என்பது பேரதிசயம் இல்லையா. அவ்வப்போது அவர் கைகளை குவித்து நடுவிலே இருக்கும் ஓட்டைக்கு கைகளை கொண்டு போவது என்பது நாம் கவனிப்பதே இல்லையே, அது சர்க்கரை என்பதும் அதுதான் பஞ்சுமிட்டாய் ஆக வருகிறது என்பதும் நமக்கு தெரியவரும்போது நாம் வயதுக்கு வந்து விடுகிறோம் ! ஆனாலும், பஞ்சுமிட்டாய் சுற்றுவதே ஒரு கலை, அதுவும் ஆயக்கலைகளில் சேர்க்க வேண்டிய ஒன்று. வெறும் குச்சி, அதை சுற்றி சுற்றி அதில் அந்த பஞ்சு போன்ற ஒன்றை பிடித்து, அது பெரியதாக பெரியதாக பெரியதாக வரும்போது நமது கண்கள் இன்றளவிலும் மிக பெரியதாக விரிகிறது !







பஞ்சு மிட்டாய் சாப்பிடுவது என்பது ஒரு தவம் ! கைகளில் வாங்கியவுடன் வாயில் கடிக்க முர்ப்படும்பொது மூக்கு சென்று சிக்கி கொண்டு விடும். கொஞ்சமே கொஞ்சம் கடித்த அந்த மேக துண்டு வாயில் கரைவதை உணர்வது என்பது எவ்வளவு ஆனந்தம். அந்த சர்க்கரை வாயில் கரைந்து ஓட, நாம் வாயை திறந்து பெற்றோரிடம் காட்டி என்ன கலர் என்று கேட்க, அவர்கள் பிங்க் நிற நாக்கு இன்னும் பிங்க் நிறம் ஏறி இருப்பது கண்டு ஆச்சர்யபடுவது என்பது இன்னும் ஆனந்தம் சேர்க்கும்.கொஞ்சம் கொஞ்சமாய் அந்த வெயிலில் பஞ்சு மிட்டாய் உருக, நாம் வாயில் கடித்து தின்றது போக, இப்போது கைகளில் பியித்து எடுத்து தின்போம். பஞ்சுமிட்டாய் என்பதை வாயில் அப்படியே தின்பது சுவையா இல்லை பியித்து எடுத்து தின்பது சுவையா என்று சாலமன் பாப்பையா அவர்களை கொண்டு ஒரு பட்டிமன்றம் நடத்த சொல்ல வேண்டும், அப்படி ஒரு குழப்பம் வரும் !! என்ன இருந்தாலும் பஞ்சுமிட்டாய் சாப்பிடுவது என்பது ஒரு ஏகானந்த அனுபவம் !!



அடுத்த முறை பஞ்சுமிட்டாய் வரும்போது வாங்கி தின்பதை விட, அதை செய்யும் இடத்தில சென்று வாங்கி தின்று பாருங்கள்.... ஒரு உலக அதிசயத்தை காணும் மனநிலை கிடைக்கும்.



Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, childhood memories, panjumittai, cotton candy, amazing experience

Wednesday, April 27, 2016

ஆச்சி நாடக சபா - "வோர்ல்ட்ஸ் அவே" மியுசிகல் !!

"ஆச்சி நாடக சபா" என்ற இந்த தலைப்பில் உலகத்தில் இருக்கும் மிக பிரம்மாண்டமான மேடை நாடகங்கள் (அங்கு இந்தி மியுசிகல் என்பார்கள்) என்பதை தந்து வருகிறேன் என்பதை அறிவீர்கள், இதனுடைய நோக்கமே சினிமா, ஸ்பெஷல் எபக்ட்ஸ் என்று பிரம்மாண்டம் வந்து மேடை நாடகங்கள் அழிந்துக்கொண்டு இருக்கும்போது, இந்த உலகில் அது இன்னும் உயிரோடு, சிறப்பொடு இயங்கி கொண்டுதான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்பதை. ஒரு டிக்கெட் குறைந்தபட்ச விலையே 3000 ரூபாய் எனும்போது, கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வோம், ஆனால் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அது கொஞ்சம் கொரைச்சலோ என்று எண்ண தோன்றும். இந்த தலைப்பில் இப்படி நிறைய ஷேர் செய்துள்ளேன்..... இன்று   "வோர்ல்ட்ஸ் அவே" மியுசிகல் !!




சர்கியு டியு சொளில் (Circue  Du  Soleil) என்பது ஒரு கனடா நாட்டு நாடக கம்பெனி. ஒரு சிறிய கதையை, நமது பிரம்மாண்ட டைரக்டர் ஷங்கர் எடுத்து மேடை நாடகமாக போட்டால் எப்படி இருக்கும் ? அப்படிதான் இருக்கும் இந்த மேடை நாடகங்களும்.... ஒரு சிறிய கதை, மேடையில் பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம், மிக பெரிய மியூசிக் என்று நம்மை ஆச்சர்யபடுதுகின்றனர்.




மேலே இருக்கும் "வோர்ல்ட்ஸ் அவே" மியுசிகல் என்பது ஜேம்ஸ் கமேரூன் அவர்கள் இயக்கி இருக்கும் ஒரு மேடை நாடகம், இதை பார்க்கும்போது நீங்கள் வாயை பிளப்பது உறுதி. இது போல் ஒரு தமிழ் நாடகம் எப்போது வருமோ !!





Labels : Suresh, Kadalpayanangal, Aachi Nadaga sabha, worlds bes shows, worlds away musical, broadway musical, Circue du Soleil

Tuesday, April 26, 2016

ஊர் ஸ்பெஷல் - அருப்புக்கோட்டை சீவல் !!

சீவல் என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்று தெரியவில்லை, அந்த அளவுக்கு மற்ற பதார்த்தங்கள் விதம் விதமாக இருக்கிறது. சிறு வயதில் ரசம் சாதத்திற்கு ஒரு பொட்டலம் சீவல் முனை கடையில் இருந்து வாங்கி வந்து, ஒவ்வொரு வாயிற்கும் ஒவ்வொரு சீவல் என்று சாப்பிட்டதுண்டு ! நீளம் நீளமாக கரகர மொறுமொறுவென்று இருக்கும் அந்த காரத்தை இன்றளவிலும் மக்கள் மனதில் நீங்காவண்ணம் ஒரு கடையில் காலம் காலமாக விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும், அது அந்த ஊருக்கே ஸ்பெஷல் உணவாகிவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா ?! வாருங்களேன் இந்த கார சீவலை சுவைத்து பார்க்கலாம் !





அருப்புக்கோட்டை.....  மதுரையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஊரில் வெயில் சுமார் சுளீரென்று அடிக்கும். அருப்புக்கோட்டை (Aruppukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். விஜய நகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் 'அரவகோட்டை' என அழைக்கப்பட்டது. பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை அண்டிய சிற்றூர்கள் மல்லிகை அரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது அரும்புகொட்டை என்னும் சொல்லின் மறுவுச் சொல் எனவும் கூறப்படுகிறது. விவசாயம் மற்றும் நெசவு அதை சார்ந்த தொழில்கள், பெரும்பான்மை நகர மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராம மக்களால் செய்யப்படுகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரம் கிராம மக்கள்களுக்கு இது கல்வி மற்றும் சந்தைக்கான மைய இடமாக விளங்குகிறது. 






இந்த சிறிய ஊரின் கடைவீதி பக்கத்தில் செல்லும் கமுதி ரோட்டில், கரடி மாளிகை என்ற ஒரு பழைய லாட்ஜ் உண்டு, அதில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் வரும் நால்ரோட்டில் வலது புறம் திரும்பினால் வரும் முதல் கடையே முனியாண்டி மிட்டாய் கடை !! இந்த ஊருக்கு விருந்தாளியாக சென்று, உங்க ஊருல என்ன பலகாரம் நல்லா இருக்கும், வாங்கிட்டு போகணும் என்று சொல்லிக்கொண்டே தட்டில் அவர்கள் வைத்து இருப்பதை சுவைத்தால் உங்களுக்கு சட்டென்று தெரிந்து போகும்..... அது முனியாண்டி மிட்டாய் கடை கார சீவல் தான் வாங்கி செல்ல வேண்டியது என்று. இன்றைய வர்த்தக உலகில் லட்டு, மைசூர் பாகு, மிக்ஷர் என்று எல்லாமே நெய்யில் கொட்டி செய்யப்பட்டு இருக்கிறது, ஆனால் இன்றளவிலும் அந்த கால முறையில் திகட்டாமல் இந்த பலகாரங்கள் செய்யப்படுகிறது இங்கு.




சீவல்.... பாக்கு சீவல் எப்படி மிகவும் நைசாக இருக்கிறதோ, அது போலவே இங்கு கார சீவலும். இந்த கடையின் முன் எப்போதும் கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். அதுவும் இந்த சீவல் என்பதை எல்லோரும் வாங்குவதை நீங்கள் பார்க்கலாம், அதுவும் தீர தீர உள்ளே இருந்து சூடாக வந்து கொண்டே இருக்கும் ! அந்த மிக சிறிய மிட்டாய் கடையின் முன்னே நிற்கும்போது நீங்கள் குழந்தையாவது உறுதி..... லட்டு ரெண்டு குடுங்க, மைசூர் பாகு கொஞ்சம், அப்புறம் அந்த கலர் பூந்தி என்று அடுக்கிகொண்டே சென்று அப்புறம் நிறைய சீவல் குடுங்க என்று முடிப்பீர்கள்.







அந்த சீவலை கொஞ்சமாக எடுத்து உங்களது வாயில் பியித்து போட, அந்த மொருமொருப்பும் சுவையும் அலாதியாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துக்கொண்டே இருப்பதை நீங்கள் உணர்வது என்பது ஒரு சந்தோசமான ஒன்று, எந்த ஒரு காரத்தையும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கடிக்க வேண்டும் ஆனால் இங்கு கரைவது என்பது வித்யாசமான ஒன்று. வீட்டிற்க்கு என்று வாங்கி சென்று கொடுத்தால் இன்றளவிலும் பெரியவர்கள் சந்தோசத்துடன் அருப்புக்கோட்டை சீவலா என்று ஆர்வத்துடன் உண்பார்கள். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சீவல் மாலை வரை தொடர்கிறது. சுமார் 500 கிலோ சீவல் வரை ஒரு நாளுக்கு போடுகிறார்கள் என்றால் அதன் வீச்சை உணர்ந்து கொள்ளுங்கள்.






அடுத்த முறை அருப்புக்கோட்டை செல்லும்போது இந்த 65 வருட பாரம்பரிய கடையில் இருந்து இந்த ஊரின் ஸ்பெஷல் ஆன சீவலை சுவைக்க மறக்காதீர்கள் !

Labels : Suresh, Kadalpayanangal, Oor special, district special, aruppukkottai, near madurai, seeval, kaara seeval, kara seeval, sival, tasty food, special food

Monday, April 25, 2016

அறுசுவை - லஸ்ஸி பலூடா, ஹைதராபாத் !!

பெங்களூரில் வெயில் இப்படி வாட்டி எடுக்கிறது, அப்படியென்றால் மற்ற இடங்களில் எல்லாம் எப்படி இருக்கும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. வெளியே சென்றுவிட்டு வந்தால் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு சாப்பாடு சரியாக சாப்பிட முடியவில்லை.... ஆகவே இந்த வெயில் காலத்திற்கு சாப்பாடு பதிவு போடுவதைவிட சுவையான பானங்களை சொல்லலாம் போல !! இந்த முறை ஹைதராபாத் சென்று இருந்தபோது எங்கு திரும்பினாலும் ஒரு பானத்தின் பெயர் மட்டும் எல்லா இடத்திலும் போட்டு, அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது, என்ன என்று ஒரு நாள் ஹைதராபாத் சார்மினார் பார்க்க சென்ற சமயத்தில் வெயில் மண்டையை பிளக்கும்போது அங்கு சென்றால் வாயில் வேர்வை அப்படி வழிந்தது.... லஸ்ஸி பலூடா !!




சூரியன் சுட்டு எரிக்கும்போது வேறு நாடுகளில் எல்லாம் நான் வெறும் கோக் அல்லது பதபடுத்தப்பட்ட ஜூஸ் வகைகளையே சாப்பிடுவேன், ஆனால் இங்கு மட்டும் வெயிலுக்கு என்று இளநீர், தர்பூசணி, நுங்கு, நன்னாரி சர்பத், சோடா சர்பத், பாதாம் பால், ஐஸ் மோர், கம்மங்கூல், வெட்டிவேர் போட்ட தண்ணீர், மண்பானை தண்ணீர், லஸ்ஸி, அப்போதே போடப்பட்ட ஜூஸ், ஐஸ் காபி, மதுரை ஜிகர்தண்டா, மதுரை மிக்ஸ் ப்ரூட் கூழ் என்று சொல்லிக்கொண்டே போகலாம்... (நீங்களும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்களேன்), அந்த வரிசையில் ஒரு தாகம் தணிக்கும் தேவாமிர்தம் இந்த லஸ்ஸி பலூடா எனலாம் !



ஹைதராபாத் சார்மினார் கோபுரம் அமைந்த வீதியில் ஒரு பிரபலமான கடை என்பது இந்த ஷஹ்ரன் ஹோட்டல். இங்கு வெளியே நின்றபடி முகத்தில் ஒரு அசாத்திய சந்தோசத்துடன் அந்த நிழலில் நின்று சொர்க்கத்தை அனுபவிப்பவர்கள் எல்லோரது கையிலும் இந்த லஸ்ஸி பலூடா இருக்கிறது. லஸ்ஸி தெரியும், பலூடாவும் தெரியும் அது என்ன லஸ்ஸி பலூடா என்று வெயிலுக்கு யோசிக்க கூட முடியாமல் இங்கு சென்று ஒரு ஆர்டர் செய்தேன்.




தயிரை எல்லோரும் கரண்டியில் மொண்டு எடுத்து பார்த்து இருக்கிறேன், இங்கோ வெட்டி எடுக்கிறார்கள். நன்கு கூல் செய்யப்பட்ட அந்த தயிரை ஒரு ஜக்கினுள் போட்டு கொஞ்சம் ஐஸ் கொஞ்சம் சர்க்கரை போட்டு கடையும்போது அதில் இருந்து புகை வருகிறது, அப்படி ஒரு சில் அனுபவத்தை பார்க்கும்போதே நமக்கு வெயிலை பார்த்து ஒரு லுக் விடுகின்றோம். அந்த பதமான லஸ்ஸி எடுத்து ஒரு கிளாஸ்ஸில் போட்டு அதன் மேலே இந்த கடல் பாசியையும் போட்டு ஒரு கலக்கு கலக்குகின்றனர். அதன் மேலே ஒரு கரண்டி ஐஸ் கிரீம் எடுத்து மேலே போட அந்த லஸ்ஸி கிளாஸ் மேலே தளும்பி ஆடுவதை போல இங்கே மனம் ஆடுகிறது. இந்தாங்க என்று கொடுக்கும்போது பின்னாடி "பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க...." என்று கமல் லட்டுவை இரண்டு கைகளில் பிடித்தபடி கொடுக்கும் ஒரு லுக் நமக்கு ஆட்டோமாடிக் ஆக வந்து விடுகிறது !



ஒரு சிப்.... ஒரே ஒரு சிப்... அந்த வெயிலில் சாப்பிடும்போது, அந்த தயிரின் சிறிய புளிப்பும், சர்க்கரையின் தித்திப்பும், ஐஸ் கிரிமின் குளுகுளுப்பும், கடல் பாசியின் சுவையும் என்று அசத்தலாக இருக்கிறது. ஒரு கிளாஸ் என்று சொல்லிவிட்டு நான் இன்னும் ஒன்று சாப்பிட்டேன். வயிறும், மனமும் நிறைந்த ஒரு அனுபவம் எனலாம். நம்ம ஊரிலும் ஒன்னு ஆரம்பிங்களேன் பாஸ் !


Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Hyderabad, Lassi, Falooda, Faluda, Lassy, tasty drink, summer drink