Monday, April 25, 2016

அறுசுவை - லஸ்ஸி பலூடா, ஹைதராபாத் !!

பெங்களூரில் வெயில் இப்படி வாட்டி எடுக்கிறது, அப்படியென்றால் மற்ற இடங்களில் எல்லாம் எப்படி இருக்கும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. வெளியே சென்றுவிட்டு வந்தால் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு சாப்பாடு சரியாக சாப்பிட முடியவில்லை.... ஆகவே இந்த வெயில் காலத்திற்கு சாப்பாடு பதிவு போடுவதைவிட சுவையான பானங்களை சொல்லலாம் போல !! இந்த முறை ஹைதராபாத் சென்று இருந்தபோது எங்கு திரும்பினாலும் ஒரு பானத்தின் பெயர் மட்டும் எல்லா இடத்திலும் போட்டு, அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது, என்ன என்று ஒரு நாள் ஹைதராபாத் சார்மினார் பார்க்க சென்ற சமயத்தில் வெயில் மண்டையை பிளக்கும்போது அங்கு சென்றால் வாயில் வேர்வை அப்படி வழிந்தது.... லஸ்ஸி பலூடா !!
சூரியன் சுட்டு எரிக்கும்போது வேறு நாடுகளில் எல்லாம் நான் வெறும் கோக் அல்லது பதபடுத்தப்பட்ட ஜூஸ் வகைகளையே சாப்பிடுவேன், ஆனால் இங்கு மட்டும் வெயிலுக்கு என்று இளநீர், தர்பூசணி, நுங்கு, நன்னாரி சர்பத், சோடா சர்பத், பாதாம் பால், ஐஸ் மோர், கம்மங்கூல், வெட்டிவேர் போட்ட தண்ணீர், மண்பானை தண்ணீர், லஸ்ஸி, அப்போதே போடப்பட்ட ஜூஸ், ஐஸ் காபி, மதுரை ஜிகர்தண்டா, மதுரை மிக்ஸ் ப்ரூட் கூழ் என்று சொல்லிக்கொண்டே போகலாம்... (நீங்களும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்களேன்), அந்த வரிசையில் ஒரு தாகம் தணிக்கும் தேவாமிர்தம் இந்த லஸ்ஸி பலூடா எனலாம் !ஹைதராபாத் சார்மினார் கோபுரம் அமைந்த வீதியில் ஒரு பிரபலமான கடை என்பது இந்த ஷஹ்ரன் ஹோட்டல். இங்கு வெளியே நின்றபடி முகத்தில் ஒரு அசாத்திய சந்தோசத்துடன் அந்த நிழலில் நின்று சொர்க்கத்தை அனுபவிப்பவர்கள் எல்லோரது கையிலும் இந்த லஸ்ஸி பலூடா இருக்கிறது. லஸ்ஸி தெரியும், பலூடாவும் தெரியும் அது என்ன லஸ்ஸி பலூடா என்று வெயிலுக்கு யோசிக்க கூட முடியாமல் இங்கு சென்று ஒரு ஆர்டர் செய்தேன்.
தயிரை எல்லோரும் கரண்டியில் மொண்டு எடுத்து பார்த்து இருக்கிறேன், இங்கோ வெட்டி எடுக்கிறார்கள். நன்கு கூல் செய்யப்பட்ட அந்த தயிரை ஒரு ஜக்கினுள் போட்டு கொஞ்சம் ஐஸ் கொஞ்சம் சர்க்கரை போட்டு கடையும்போது அதில் இருந்து புகை வருகிறது, அப்படி ஒரு சில் அனுபவத்தை பார்க்கும்போதே நமக்கு வெயிலை பார்த்து ஒரு லுக் விடுகின்றோம். அந்த பதமான லஸ்ஸி எடுத்து ஒரு கிளாஸ்ஸில் போட்டு அதன் மேலே இந்த கடல் பாசியையும் போட்டு ஒரு கலக்கு கலக்குகின்றனர். அதன் மேலே ஒரு கரண்டி ஐஸ் கிரீம் எடுத்து மேலே போட அந்த லஸ்ஸி கிளாஸ் மேலே தளும்பி ஆடுவதை போல இங்கே மனம் ஆடுகிறது. இந்தாங்க என்று கொடுக்கும்போது பின்னாடி "பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க...." என்று கமல் லட்டுவை இரண்டு கைகளில் பிடித்தபடி கொடுக்கும் ஒரு லுக் நமக்கு ஆட்டோமாடிக் ஆக வந்து விடுகிறது !ஒரு சிப்.... ஒரே ஒரு சிப்... அந்த வெயிலில் சாப்பிடும்போது, அந்த தயிரின் சிறிய புளிப்பும், சர்க்கரையின் தித்திப்பும், ஐஸ் கிரிமின் குளுகுளுப்பும், கடல் பாசியின் சுவையும் என்று அசத்தலாக இருக்கிறது. ஒரு கிளாஸ் என்று சொல்லிவிட்டு நான் இன்னும் ஒன்று சாப்பிட்டேன். வயிறும், மனமும் நிறைந்த ஒரு அனுபவம் எனலாம். நம்ம ஊரிலும் ஒன்னு ஆரம்பிங்களேன் பாஸ் !


Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Hyderabad, Lassi, Falooda, Faluda, Lassy, tasty drink, summer drink

4 comments:

 1. ஜிகர்தண்டா வின் மற்றொரு அவதாரம் போல இருக்கு. பார்க்கவே எச்சில் ஊருகிறது சுவைத்து பார்க்க...!

  ReplyDelete
 2. Today I had Mango Falooda in my office Cafetaria in Bangalore.. it was just ok, not too good..they added so much long 'semiya' in it.. hard to drink in decent manner :-) but the one you mentioned from Hyderabad seems good, will try it when I get a chance.. Thanks, Ganesh

  ReplyDelete
 3. நான் ஒரு வருடத்திற்கு மேலாக ஹைதராபாத்தில் தான் இருக்கிறேன். வழியெங்கும் இருக்கும் லஸ்ஸி ஃபாலுடா விளம்பரப் பலகைகளை நான் கவனித்ததே இல்லை. உங்கள் தளத்தில் படித்தபின் அப்பலகைகள் தான் அடிக்கடி கண்ணில் படுகின்றன. சென்ற வாரம் 30 ரூபாய்க்கு லஸ்ஸியும் 30 ரூபாய்க்கு ஃபலூடாவும் குடித்தேன். ஃபலூடா அருமை.

  இதுபோல் உங்கள் தளத்தில் படித்துவிட்டு தேடிப்போய் நான் சாப்பிட்ட இன்னொரு பொருள், மதுரை பிரேமா விலாஸ் அல்வா. இன்னும் சில குறித்து வைத்திருக்கிறேன்.

  உங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  - ஞானசேகர்

  ReplyDelete