Tuesday, April 26, 2016

ஊர் ஸ்பெஷல் - அருப்புக்கோட்டை சீவல் !!

சீவல் என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியுமா என்று தெரியவில்லை, அந்த அளவுக்கு மற்ற பதார்த்தங்கள் விதம் விதமாக இருக்கிறது. சிறு வயதில் ரசம் சாதத்திற்கு ஒரு பொட்டலம் சீவல் முனை கடையில் இருந்து வாங்கி வந்து, ஒவ்வொரு வாயிற்கும் ஒவ்வொரு சீவல் என்று சாப்பிட்டதுண்டு ! நீளம் நீளமாக கரகர மொறுமொறுவென்று இருக்கும் அந்த காரத்தை இன்றளவிலும் மக்கள் மனதில் நீங்காவண்ணம் ஒரு கடையில் காலம் காலமாக விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும், அது அந்த ஊருக்கே ஸ்பெஷல் உணவாகிவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா ?! வாருங்களேன் இந்த கார சீவலை சுவைத்து பார்க்கலாம் !

அருப்புக்கோட்டை.....  மதுரையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஊரில் வெயில் சுமார் சுளீரென்று அடிக்கும். அருப்புக்கோட்டை (Aruppukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். விஜய நகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் 'அரவகோட்டை' என அழைக்கப்பட்டது. பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை அண்டிய சிற்றூர்கள் மல்லிகை அரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது அரும்புகொட்டை என்னும் சொல்லின் மறுவுச் சொல் எனவும் கூறப்படுகிறது. விவசாயம் மற்றும் நெசவு அதை சார்ந்த தொழில்கள், பெரும்பான்மை நகர மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராம மக்களால் செய்யப்படுகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரம் கிராம மக்கள்களுக்கு இது கல்வி மற்றும் சந்தைக்கான மைய இடமாக விளங்குகிறது. 


இந்த சிறிய ஊரின் கடைவீதி பக்கத்தில் செல்லும் கமுதி ரோட்டில், கரடி மாளிகை என்ற ஒரு பழைய லாட்ஜ் உண்டு, அதில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் வரும் நால்ரோட்டில் வலது புறம் திரும்பினால் வரும் முதல் கடையே முனியாண்டி மிட்டாய் கடை !! இந்த ஊருக்கு விருந்தாளியாக சென்று, உங்க ஊருல என்ன பலகாரம் நல்லா இருக்கும், வாங்கிட்டு போகணும் என்று சொல்லிக்கொண்டே தட்டில் அவர்கள் வைத்து இருப்பதை சுவைத்தால் உங்களுக்கு சட்டென்று தெரிந்து போகும்..... அது முனியாண்டி மிட்டாய் கடை கார சீவல் தான் வாங்கி செல்ல வேண்டியது என்று. இன்றைய வர்த்தக உலகில் லட்டு, மைசூர் பாகு, மிக்ஷர் என்று எல்லாமே நெய்யில் கொட்டி செய்யப்பட்டு இருக்கிறது, ஆனால் இன்றளவிலும் அந்த கால முறையில் திகட்டாமல் இந்த பலகாரங்கள் செய்யப்படுகிறது இங்கு.
சீவல்.... பாக்கு சீவல் எப்படி மிகவும் நைசாக இருக்கிறதோ, அது போலவே இங்கு கார சீவலும். இந்த கடையின் முன் எப்போதும் கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். அதுவும் இந்த சீவல் என்பதை எல்லோரும் வாங்குவதை நீங்கள் பார்க்கலாம், அதுவும் தீர தீர உள்ளே இருந்து சூடாக வந்து கொண்டே இருக்கும் ! அந்த மிக சிறிய மிட்டாய் கடையின் முன்னே நிற்கும்போது நீங்கள் குழந்தையாவது உறுதி..... லட்டு ரெண்டு குடுங்க, மைசூர் பாகு கொஞ்சம், அப்புறம் அந்த கலர் பூந்தி என்று அடுக்கிகொண்டே சென்று அப்புறம் நிறைய சீவல் குடுங்க என்று முடிப்பீர்கள்.அந்த சீவலை கொஞ்சமாக எடுத்து உங்களது வாயில் பியித்து போட, அந்த மொருமொருப்பும் சுவையும் அலாதியாக இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக கரைந்துக்கொண்டே இருப்பதை நீங்கள் உணர்வது என்பது ஒரு சந்தோசமான ஒன்று, எந்த ஒரு காரத்தையும் கொஞ்சம் கஷ்டப்பட்டு கடிக்க வேண்டும் ஆனால் இங்கு கரைவது என்பது வித்யாசமான ஒன்று. வீட்டிற்க்கு என்று வாங்கி சென்று கொடுத்தால் இன்றளவிலும் பெரியவர்கள் சந்தோசத்துடன் அருப்புக்கோட்டை சீவலா என்று ஆர்வத்துடன் உண்பார்கள். காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் இந்த சீவல் மாலை வரை தொடர்கிறது. சுமார் 500 கிலோ சீவல் வரை ஒரு நாளுக்கு போடுகிறார்கள் என்றால் அதன் வீச்சை உணர்ந்து கொள்ளுங்கள்.


அடுத்த முறை அருப்புக்கோட்டை செல்லும்போது இந்த 65 வருட பாரம்பரிய கடையில் இருந்து இந்த ஊரின் ஸ்பெஷல் ஆன சீவலை சுவைக்க மறக்காதீர்கள் !

Labels : Suresh, Kadalpayanangal, Oor special, district special, aruppukkottai, near madurai, seeval, kaara seeval, kara seeval, sival, tasty food, special food

6 comments:

 1. கட்டுரை அருமை. ஓட்டு பகோடா தானே இது..?

  ReplyDelete
 2. முதல் படத்துக்கும் சீவலுக்கும் சம்பந்தமே இல்லையே.. கடைக்காரர் பொரித்து எடுப்பது ரிப்பன் பகோடா மாதிரி (ஆனால், சின்னச் சின்னதா கட் செய்தது) இருக்கு. உங்கள் முதல் படம் சம்பந்தமே இல்லாமல் இருக்கு

  ReplyDelete
  Replies
  1. இல்லை நண்பரே, அருப்புக்கோட்டை சீவல் என்பது பல வகைகளில் இருக்கிறது, முதல் படத்தில் பார்ப்பது வீட்டில் செய்வது. ஆனால், இந்த கடையின் ஸ்பெஷல் என்பதே அவ்வளவு மெலிதாக செய்வதே, அதுவும் அவ்வளவு மொரு மொறுவென்று.
   படங்கள் மூலம் அந்த கடையின் சிறப்பையும் சொல்ல எண்ணினேன், அதனாலேயே முதல் படமாக வீட்டில் எல்லோரும் செய்யும் சீவலை போட்டேன்.
   பதிவை படித்ததற்கும், உங்களது கருத்துக்களை சொன்னதற்கும் நன்றி !

   Delete
 3. சுவையான சீவல்! ஆவலை கிளப்பிவிட்டீர்கள்!

  ReplyDelete
 4. மழை நேர அருமையான ஸ்நாக்ஸ்

  ReplyDelete