Friday, April 29, 2016

சிறுபிள்ளையாவோம் - பஞ்சுமிட்டாய் !!

சிறிய வயதில் அரசு பொருட்காட்சி என்று ஒன்று கோடை வெயில் நேரத்தில் நடக்கும்போது எனது ஒரே குறிக்கோள் என்பது ஒரு பஞ்சு மிட்டாய் வாங்க வேண்டும் என்பதுதான். இப்போது கிடைப்பது போல பஞ்சு மிட்டாய் என்பது எல்லாம் வீதியில் வருவதில்லை, பஞ்சுமிட்டாய் வேண்டும் என்றால் நீங்கள் பொருக்காட்சிக்குதான் செல்ல வேண்டும் ! இன்றளவிலும் பஞ்சுமிட்டாய் என்பது அந்த பிங்க் நிறத்தில் மட்டுமே வந்து கொண்டு இருக்கிறது, எனது மகனுக்கு நான் இன்று பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுத்தாலும்.... அப்பாவுக்கு கொஞ்சம் கொடுடா என்று கேட்டு வாங்கி சிறுகுழந்தையாவேன் !!



பஞ்சு மிட்டாயை மிக உன்னிப்பாக கவனித்து இருக்கிறீர்களா ? ஒரு சிறிய மேக துண்டு போலவே இருக்கும், அதுவும் பிங்க் நிற மேக துண்டு. ஒரு குச்சியில் சொருகி அந்த மேக துண்டை கொடுக்கும்போது, நமக்கு என்னவோ நாம் அதுவரை அண்ணாந்து மட்டுமே பார்த்த ஒன்றை இவ்வளவு சுலபமாக குச்சியில் சொருகி விட்டார்களே என்று ஆச்சர்யம் வரும் !






சிறு வயதில் பஞ்சுமிட்டாய் செய்வதை பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். ஒரு பெரிய தொட்டி போன்ற பாத்திரம், அதில் வெறும் குச்சியை சுற்றும்போது பஞ்சு மிட்டாய் உருவாகிறது என்பது பேரதிசயம் இல்லையா. அவ்வப்போது அவர் கைகளை குவித்து நடுவிலே இருக்கும் ஓட்டைக்கு கைகளை கொண்டு போவது என்பது நாம் கவனிப்பதே இல்லையே, அது சர்க்கரை என்பதும் அதுதான் பஞ்சுமிட்டாய் ஆக வருகிறது என்பதும் நமக்கு தெரியவரும்போது நாம் வயதுக்கு வந்து விடுகிறோம் ! ஆனாலும், பஞ்சுமிட்டாய் சுற்றுவதே ஒரு கலை, அதுவும் ஆயக்கலைகளில் சேர்க்க வேண்டிய ஒன்று. வெறும் குச்சி, அதை சுற்றி சுற்றி அதில் அந்த பஞ்சு போன்ற ஒன்றை பிடித்து, அது பெரியதாக பெரியதாக பெரியதாக வரும்போது நமது கண்கள் இன்றளவிலும் மிக பெரியதாக விரிகிறது !







பஞ்சு மிட்டாய் சாப்பிடுவது என்பது ஒரு தவம் ! கைகளில் வாங்கியவுடன் வாயில் கடிக்க முர்ப்படும்பொது மூக்கு சென்று சிக்கி கொண்டு விடும். கொஞ்சமே கொஞ்சம் கடித்த அந்த மேக துண்டு வாயில் கரைவதை உணர்வது என்பது எவ்வளவு ஆனந்தம். அந்த சர்க்கரை வாயில் கரைந்து ஓட, நாம் வாயை திறந்து பெற்றோரிடம் காட்டி என்ன கலர் என்று கேட்க, அவர்கள் பிங்க் நிற நாக்கு இன்னும் பிங்க் நிறம் ஏறி இருப்பது கண்டு ஆச்சர்யபடுவது என்பது இன்னும் ஆனந்தம் சேர்க்கும்.கொஞ்சம் கொஞ்சமாய் அந்த வெயிலில் பஞ்சு மிட்டாய் உருக, நாம் வாயில் கடித்து தின்றது போக, இப்போது கைகளில் பியித்து எடுத்து தின்போம். பஞ்சுமிட்டாய் என்பதை வாயில் அப்படியே தின்பது சுவையா இல்லை பியித்து எடுத்து தின்பது சுவையா என்று சாலமன் பாப்பையா அவர்களை கொண்டு ஒரு பட்டிமன்றம் நடத்த சொல்ல வேண்டும், அப்படி ஒரு குழப்பம் வரும் !! என்ன இருந்தாலும் பஞ்சுமிட்டாய் சாப்பிடுவது என்பது ஒரு ஏகானந்த அனுபவம் !!



அடுத்த முறை பஞ்சுமிட்டாய் வரும்போது வாங்கி தின்பதை விட, அதை செய்யும் இடத்தில சென்று வாங்கி தின்று பாருங்கள்.... ஒரு உலக அதிசயத்தை காணும் மனநிலை கிடைக்கும்.



Labels : Suresh, Kadalpayanangal, Sirupillaiyaavom, childhood memories, panjumittai, cotton candy, amazing experience

2 comments: