Monday, May 2, 2016

அறுசுவை - ராஜூ ஆம்லேட், பரோடா !!

முட்டையை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி தோசை கல்லில் "சொய்ங்" என்று ஊற்றி எடுத்தால் அது ஆம்லேட்.... ஆனால் அதை மட்டுமே விற்று ஒரு கடைகாரர் BMW கார் வாங்கி ஓட்டுகின்றார், அவருக்கு மிக பெரிய சாப்பாட்டு ரசிகர் கூட்டம் இருக்கிறது, பல கடைகள் இதே போல இருக்கின்றன, ஊரெல்லாம் ஆம்லேட் போட்டு விற்கிறார்கள் என்று தெரிந்தால் அந்த ஆம்லேட் எவ்வளவு சுவையாக இருக்க வேண்டும் ! இந்த முறை பரோடா சென்று இருந்தபோது மாலை நேரத்தில் ஏதாவது நன்றாக சாப்பிட வேண்டும் என்று நினைத்து உள்ளூர்காரர் ஒருவரிடம் கேட்டபோது, நாக்கை சப்பு கொட்டிக்கொண்டே ராஜு ஆம்லேட் என்றார் ! ஆம்லேட்டில் அப்படி என்ன இருக்கிறது என்ற என் கேள்விக்கு..... அங்கதான் எல்லாமே இருக்கு வாங்க என்றார், உண்மையிலே அசத்தறாங்க ஜி !




சிறு வயதில் இருந்து முட்டையை உடைத்து வெங்காயம் போட்டால் ஆம்லேட், அப்படியே போட்டால் புல் பாயில், திருப்பி போடாமல் இருந்தால் ஹால்ப் பாயில், கலக்கியும் கலக்காமலும் போட்டால் கலக்கி, முட்டையை வேக வைப்பது என்று மட்டுமே இருந்த நமக்கு இங்கு செய்யும் விதம் விதமான வகைகளை கண்டால் வாயில் நீர் ஊறுவது உறுதி. பரோடாவில் இருக்கும் ஓல்ட் பத்ரா ரோடு சென்றால், எங்கு கும்பல் அதிகமாக இருக்கிறதோ அதுதான் ராஜூ பாய் ஆம்லேட் கடையாக இருக்கும். நான் சென்றது சுமார் நான்கு மணிக்கு என்பதால் கும்பலே இல்லை என்பதால் நிறுத்தி நிதானமாக ரசித்து சாப்பிட முடிந்தது.



கீழே இருக்கும் மெனு கார்டு பாருங்கள், உங்களுக்கே புரியும் எத்தனை வகை என்று. முட்டையை உடைத்து ஊற்றி, அதில் கொஞ்சம் காரமான மசாலா குழம்பு ஊற்றி, வெண்ணையில் புரட்டி புரட்டி எடுக்கின்றனர்... என்ன வகைதான் மாறுகிறது, ஆனால் மேலே சொன்னது எல்லா வகை உணவிலும் உண்டு. உங்க வீட்டு கை, எங்க வீட்டு கை இல்லை... அப்படியே வெண்ணையை அள்ளி எடுத்து தோசை கல்லில் போட்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றும்போதே இங்கே மனம் ததும்ப ஆரம்பிக்கிறது. நான் ஆர்டர் செய்தது பாயில் டிக்கா மற்றும் மசாலா ஹால்ப் பிரை என்பது. நான் கவனித வரையில் அவர்கள் ஊற்றும் மசாலா குழம்பில்தான் இருக்கிறது அந்த சுவை என்பேன். ஒரு முட்டையை ஊற்றி அது வெந்துகொண்டு இருக்கும்போதே இரண்டு கரண்டி அந்த மசாலா குழம்பை ஊற்ற, ஒரு இன்பமான வாசனை சுழற்றி அடிக்கிறது. அது வேகும்போதே நாம் கேட்பதற்கு ஏற்ப வெங்காயம், மிளகு என்று போட்டு தருகின்றனர். அதை உண்பதற்கு இரண்டு வெண்ணையில் நனைத்து எடுத்த பன் வேறு !!







முதலில் சுட சுட நமக்கு வரும் அந்த தட்டில் இருப்பதை பார்த்தல் ஆம்லேட் போன்றுதான் தெரிகிறது, ஆனால் "வரும் ஆனா வராது" என்பது போலவே இங்கும் ஒரு சிறு குழப்பம்தான். கொஞ்சம் பன் எடுத்து அந்த சூடான ஆம்லேட் பியித்து எடுத்து வாயில் போட்டால் சும்மா ஜிவ்வ்ன்னு இருக்கு. ஒரு சாதாரண ஆம்லேட் இப்படி ருசியாக எல்லாம் செய்ய முடியுமா என்று இதுவரை தமிழ்நாட்டில் தெரிந்துகொள்ளவே இல்லையே !! சரசரவென்று அடுத்து வேகமாக காலியாகிறது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடன், நான் அங்கு இருந்த பல நாட்களும் இங்கு சென்று ஒவ்வொன்றையும் ருசி பார்த்தேன் எனலாம். மெல்ல மெல்ல ருசிக்கு நீங்கள் அடிமையாவதை பார்க்க முடியும். ராஜூ பாய் சார்..... நீங்கள் BMW மட்டும் இல்லை, ரோல்ஸ் ராய்ஸ் காரே வாங்கலாம், நாங்க இருக்கோம் :-)







அடுத்த முறை நீங்கள் பரோடா சென்றால், கண்டிப்பாக இதை சுவைக்க மறக்காதீர்கள்.... ஆம்லேட் இவ்வளவு சுவைகளில் கிடைக்குமா என்று வாயை பிளபீர்கள். இனிமேல் ஆம்லேட் என்று சொல்லாதீங்க.... ராஜூ பாய் போலோ !!



Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, tasty food, Raju Omblet center, different taste, must try, omblet, tasty food, Vadodara

2 comments:

  1. Going to Baroda in Mid May ! Will try this ! Thanks

    Any suggestions for Good Veg Hotel in Mumbai / Baroda

    ReplyDelete
  2. Travelling to Baroda just for an Omelette may seem highly unlikely but after reading this review, one might as well do it :-) Good review.. Thanks for sharing... Ganesh

    ReplyDelete