Monday, May 23, 2016

அறுசுவை - கடுக்கன் விலாஸ் கம்மன்கூழ், ஈரோடு !

அடிக்கும் இந்த வெயிலுக்கு இளநீர், ஜூஸ் என்று சாப்பிட்டாலும் நம்ம ஊரு கம்மன்கூழ் என்று வரும்போது எல்லாமே இரண்டாம்பட்சம்தான் ! சமீபத்தில் ஈரோடு சென்று இருந்தபோது நண்பர் ஒருவர் வெயிலுக்கு இதமா இப்போ கம்மன்கூழ் சாப்பிடலாம் வாங்க என்று கூட்டிக்கொண்டு சென்றார். அங்கு நிறைய கம்மன்கூழ் கடைகள் இருந்தாலும் ஒரு கடையின் முன்னே மட்டும் அவ்வளவு கூட்டம், அப்போதே புரிந்து போனது சுவை எப்படி இருக்கும் என்று ! வெயிலுக்கு இதமாக ஒரு மரத்தினடியில், தள்ளுவண்டியில் இருக்கும் அந்த கடைக்கு நிறைய பேர் ரசிகர்கள்.... ஒரு சொம்பு கம்மன்கூழ் வாங்கி குடிக்கும்போதே தெரிந்துவிடுகிறது, கம்மன்கூழ் என்று இருந்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் !


ஈரோடு சென்று வ.உ.சி. பார்க் எங்கே என்று கேட்டால் எல்லோரும் வழி காட்டுவார்கள், மரங்கள் அடர்ந்து இருக்கும் அந்த இடத்திற்கு ஒரு வெயில் காலத்தில் சென்றாலே நமது மனதெல்லாம் குளிர்கிறது. அங்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு கம்மன்கூழ் கடை என்று இருக்கிறது, அதில் ஒரு கடையினை தவிர்த்து மற்ற எல்லா கடைகளிலும் காற்று வாங்குகிறது. கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் பெயரே வித்தியாசமாக இருக்கிறது.... கடுக்கன் விலாஸ் !! 




கொஞ்சம் அந்த கூட்டத்தை எல்லாம் விலக்கிக்கொண்டு சென்று பார்த்தால் பெயர் காரணம் புரிகிறது.... அங்கு கம்மன்கூழ் விற்று கொண்டு இருப்பவர் காதில் கடுக்கன் போட்டு இருக்கிறார். அவரது முன்னே இரண்டு குளிர்ந்த மண் பாண்டங்கள், அதற்க்கு முன்னே மாங்காயை சிறிய துண்டுகளாக அரிந்து அதில் மிளகாய் எல்லாம் தூவி ஒருபுறமும், ஆந்திரா குடை மிளகாயை ஒட்டன்சத்திரம் தயிரில் வேதாரண்யம் உப்பு போட்டு ஊற வைத்து அதை எண்ணையில் பொறித்து எடுத்து வைத்திருந்தது ஒரு புறம், இன்னொரு பக்கம் அப்பளம், அடுத்து ஒரு பக்கம் ஊறுகாய் என்று நாக்கில் எச்சில் ஊற வைக்கின்றார். எனக்கு ஒரு கம்மன்கூழ் என்று கேட்க, வெங்காயம் போட்டுதானே என்றபோது தலை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல ஆடியது !



ஒரு சிறிய சொம்பை எடுத்து அதில் கம்மன்கூழ் கொஞ்சமாக ஊற்றுகிறார், அதில் தயிர் போன்று திக் ஆக இல்லாமலும், மோர் போன்று தண்ணீராக இல்லாமலும் இருக்கும் நல்ல புளிக்காத மோரை அந்த கம்மன்கூழ் மீது ஊற்ற அது ஒரு ஓவியத்தை காட்டுக்கிறது. அதன் பின்னர் சரசரவென்று வெங்காயம் எடுத்து அரிந்து, கூடவே தண்ணீர் தெளித்து வைத்து இருந்த கொத்தமல்லியையும் அரிந்து, சிறிது மிளகாய் போட்டு கைகளில் கொடுக்கும்போதே அந்த மண்பானை மோரின் சிலுசிலுப்பு கைகளில் தவழ்கிறது. கொஞ்சம் அண்ணாந்து பார்த்து அந்த சொம்பை எடுத்து கம்மன்கூழ் வாயில் ஊற்ற ஒரு சிறு நீர்வீழ்ச்சி வாயில் ஆரம்பித்து வயிறு வரை குளிர்ச்சியோடு பாய்வது தெரிகிறது. அதை குடித்துக்கொண்டே ஒவ்வொரு வாயிற்கும் மாங்காய், அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய் என்று சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் அந்த நிழலில் சூரியனை பார்த்து சிரித்துக்கொண்டே சவால் விடுவோம்...."ஏய், சூரிய ஏகாதிபத்தியமே...." !!



இங்கு கம்மன்கூழ் மட்டும் இல்லை, மசால் மோர், ராகி கூழ், தயிர்வடை என்று எல்லாமுமே அற்புதம். அடுத்த முறை ஈரோடு செல்லும்போது மறக்காமல் சென்று வாருங்கள்..... மனதெல்லாம் குளிரும் !!



 Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Kadukkan vilas, erode, Erodu, Kammangool, kammankool, tasty natural food, must try

7 comments:

  1. நேற்றுதான் போய் வந்தோம் ஈரோடு.....தெரியாமல் போனதே .....
    \

    ReplyDelete
  2. தங்களின் வலைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நண்பரே
    நலம்தானே

    ReplyDelete
  3. சுவையான பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. நானும் கடுக்கன் விலாஸ் போனேன்,அருமருந்து.

    ReplyDelete
  5. இதுவரை சென்றதில்லை. செல்லத் தூண்டுகிறது உங்கள் பகிர்வு....

    ReplyDelete