Tuesday, May 3, 2016

அறுசுவை - மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி !

தரமும் சுவையும் நன்றாக இருந்தால் எந்த கடையும் காலத்தை கடந்து நிற்கும் என்பதற்கு ஒரு உதாரணம்தான் இந்த திருச்சி மயில் மார்க் மிட்டாய் கடை ! நான் திருச்சியில்தான் பிறந்து வளர்ந்தேன், அப்போதெல்லாம் இந்த கடை மிக சிறியது, ஆனாலும் எனது அப்பா இந்த கடைக்கு தேடி சென்று பலகாரம்  வாங்கி தருவார், அன்றெல்லாம் எனக்கு கொண்டாட்டம்தான் ! இதுவரையில் அறுசுவையில் உணவகத்தை பற்றிதான் எழுதியுள்ளேன், இந்த மிட்டாய் கடை சுவையில் நீங்கள் இதையே உணவாக உண்பீர்கள் எனலாம். திருச்சிகாரர்கள் யாரிடமும் கேட்டு பாருங்கள் அவர்கள் இந்த மிட்டாய் கடையை சிலாகித்து சொல்லாமல் இருக்க மாட்டார்கள் !இனிப்பு அல்லது காரம்... என்னதான் மூக்கு முட்ட சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு துண்டு மைசூர் பாக்கை எடுத்து வாயில் போட்டால்தான் நமக்கெல்லாம் மனதே குளிரும். ஒரு இனிப்பு கடைக்கு சென்று கவனமாக உங்களது மனதை படித்து இருகின்றீர்களா ? உள்ளே நுழைந்தவுடனே மனது எதை தேடுகிறதோ அது உங்களுக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடித்ததாக இருக்கும், அடுத்து குழந்தைகளுக்கு, மனைவிக்கு, பெற்றோருக்கு என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று வாங்கிவிட்டு வருவோம். கொஞ்சம் சாம்பிள் தாங்க என்று கேட்டு சாப்பிட்டு பார்ப்பதில் எல்லாம் நமக்கு ஒரு அலாதி சந்தோசம். இனிப்பு கடைகளில் இன்று லைட் எல்லாம் போட்டு, நாம் வாழ்க்கையில் பார்த்திராத கலரில் எல்லாம் இனிப்பு செய்து வைத்து இருக்கிறார்கள், இன்று அதை பார்க்கும்போது பகீர் என்கிறது.... நமது காலத்தில் எல்லாம் கவனித்து பார்த்து இருகின்றீர்களா, எந்த இனிப்பும் அதன் மூல பொருளை கொண்டே இருந்து வந்து இருக்கிறது என்பதை.... இன்று மூலம் எது என்றே தெரிவதில்லையே !

திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எதிரே போகும் ரோட்டில் சென்றால் சிறிது தூரத்திலேயே உங்களது வலது பக்கத்தில் வரும் இந்த கடை. கடையின் உள்ளே இருக்கும் கூட்டமே சொல்லி விடும் இதன் சுவையையும், புகழையும். வகை வகையாக, நிறம் நிறமாக இனிப்பும், கார வகைகளும் குவிந்து கிடக்கும். தீபாவளி மட்டும் வந்துவிட்டால் ரோடு வரை கடையை நீட்டி விடுவார்கள், ஒரு பக்கம் தீர தீர இன்னொரு பக்கம் இனிப்புகள் வந்துகொண்டே இருக்கும், அப்படி ஒரு கூட்டம் ! 
இந்த கடையின் ஸ்பெஷல் என்பது எனது பார்வையில் அவர்கள் சுட சுட கொடுக்கும் முந்திரி அல்வாவும், முந்திரி பக்கோடாவும், இனிப்பு பூந்தியும்தான். பொதுவாக எல்லா கடைகளிலும் முந்திரி அல்வா என்று சொன்னால் அல்வா நிறைய இருந்து, அங்கங்கு முந்திரி இருக்கும்.... ஆனால் இங்கு கதையே வேறு அல்வாதான் அங்கங்கு இருக்கும், முழுக்கவே முந்திரிதான் ! நெய்யில் வறுத்து எடுத்த முந்திரியில், நெய் ஊரும் அல்வாவை போட்டு கிண்டி எடுத்து கொடுத்து இருப்பார்கள், இதனால் நீங்கள் இந்த அல்வாவை வாயில் போட்ட நொடி மட்டுமே தெரியும், அடுத்த மைக்ரோ நொடியில் அது வயிற்றில் இருக்கும். இந்த முந்திரி பக்கோடா கதையே வேறு, அது நல்ல மொருமொருப்பொடு இருக்கும், ஒரு சாயங்கால நேரத்தில் ஒரு கோப்பை தேநீருடன் சாப்பிட்டால் அலாதிதான் போங்கள். இனிப்பு பூந்தி அப்படி ஒரு சிறப்பான அயிட்டம் இங்கு..... சொல்லிக்கொண்டே போகலாம், அனுபவித்து பாருங்களேன்.
அடுத்த முறை திருச்சி செல்லும்போது மறக்காமல் இங்கு சென்று வாருங்கள், ஒரு நல்ல இனிப்பு சுவைக்க இங்கே நம்பி செல்லலாம்..... திருச்சிக்காரன் சொல்லுறேன் கேட்டுகோங்க !!

Labels : Suresh, Kadalpayanangal, Mayil mark sweets, trichy, tiruchy, tiruchirapalli, best sweet shop, inipagam, cashew halwa, cashew pakoda.

2 comments:

 1. வணக்கம்
  பார்த்தவுடன் ஆசைதான் வந்தது சாப்பிட இடங்களையும் கடைகளையும்அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி அண்ணா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. இன்று மாலை ஜங்ஷன் பக்கம் செல்லும் வாய்ப்புண்டு. சென்றுவிடுகிறேன்.....

  ReplyDelete