Monday, May 30, 2016

அறுசுவை - சிவாஜி மிலிட்டரி ஹோட்டல், பெங்களூர் !!

சிறு வயதில் ஒரு நல்ல பிரியாணி, கறி சாப்பிட வேண்டும் என்றால் நமக்கு எல்லாம் இரண்டே சாய்ஸ்தான்..... முனியாண்டி விலாஸ் மற்றும் மிலிட்டரி ஹோட்டல் ! எதற்க்காக ஹோட்டல் பெயரில் மிலிட்டரி என்பது இன்னமும் விளங்கவில்லை, ஆனாலும் அப்பா அங்கு கூட்டி சென்று பிரியாணியும், சிக்கன் பிரையும் வாங்கி தந்தது மட்டும் மறக்கவில்லை. இன்று வகை வகையாக பல கடைகள் வந்துவிட்டாலும் மிலிட்டரி ஹோட்டல் என்பதும், அதன் சுவையும் மறக்காது. பெங்களுருவில் நல்ல கறி பிரியாணி சாப்பிட வேண்டும் என்றால் நாம் செல்ல வேண்டியது சிவாஜி மிலிட்டரி ஹோட்டல் என்பது எல்லோரும் சொல்லும் ஒன்று. நண்பர் ஜெகதீஷ் பலமுறை செல்லமாகவும், மிரட்டியும் என்னை இங்கு வர வேண்டும் என்று சொன்னார், அது எனது வீட்டில் இருந்து வெகு தூரம் என்பதால் யோசித்தேன்.... கடைசியில் அவரது அன்பான மிரட்டல்தான் ஜெயித்தது !


பனஷங்கரி பஸ் ஸ்டாண்ட் வெகு பக்கத்தில் ஒரு சிறிய சாலையின் முன்னே, வண்டியை அந்த தெருவில் நிறுத்த முடியாத வண்ணம் இருந்தபோதே யோசித்து இருக்க வேண்டும்.... நல்ல பசி நேரத்தில் வந்து இருக்க கூடாது என்று. அந்த வண்டிகள் எல்லாமுமே இந்த ஹோட்டல் பிரியாணிக்கு வந்ததுதான். திருப்பதிக்கு சென்று திரும்பும்போது மொட்டைகளை எங்குமே பார்ப்பதுபோல், இந்த ஹோடேலில் இருந்து திரும்பி வரும் எல்லோரிடமும் ஒரு விதமான தொப்பையும், கைகளில் ஒரு பார்சலும் இருப்பது சர்வ நிச்சயம். நண்பர் ஜெகதீஷ் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும், எனது உணவு பதிவுகளை விரும்பி படிப்பவர், பல முறை போனில் பேசி பின்னர் நேரில் பார்த்து என்று இன்று ஒரு நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம். மிக உரிமையோடு, நெருக்கத்தோடு உரையாட ஒரு நல்ல நண்பர் இன்றளவிலும், அவரது விருப்பத்தின் பேரில் இங்கு சென்றது இன்றளவிலும் மறக்க முடியாத அனுபவம்!

ஹோட்டல் உள்ளே நுழைந்து அந்த நுழைவாயிலுக்கு செல்வதற்கே ஒரு 10 நிமிஷம் ஆனது, அவ்வளவு கும்பல். அதை தாண்டி அந்த நுழைவு வாயிலில் ஒரு சிறிய கும்பல், அங்கு இருந்த எல்லோரிடமும் 500, ஆயிரம் ரூபாய் தாள்கள்தான், எல்லோரும் இங்க ரெண்டு பிரியாணி பார்சல், நாலு பிரியாணி பார்சல் என்று சொல்லிக்கொண்டு இருந்தனர். நாம இங்க சாப்பிடனும், எப்படி போகணும் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே.... சாபிடணும்னா உள்ளே போங்க, இது பார்சல் கியூ என்றார்கள், டேய் கொஞ்சமா பார்சல் வாங்குகடா எங்களுக்கு கிடைக்காது போல என்று நினைத்துக்கொண்டோம். சரி, இனிமேல் பிரியாணி கிடைத்து விடும் என்று நம்பி உள்ளே சென்றால் இன்னொரு கியூ, இது எதுக்கு என்று பார்த்தால் உட்கார்ந்து சாப்பிடவாம் ! அதில் ஒரு கால் மணி நேரம் சென்றது, நாமதான் ஒருத்தர் இலையை பார்த்தே அவர் முடிக்க போறார் என்று பார்த்து, அவர் பின்னால் சென்று நின்று கொண்டு இடம் பிடிப்போமே அதை முயற்சிக்கலாம் என்றால் அங்கே சாப்பிட்டு முடிப்பவருக்கு பின்னர் ஒருவர், அவருக்கு பின்னால் ஒருவர் என்று இருந்தது. இவர் யாருடா ரெண்டாவது ஆள் என்று நினைத்தால், முதலில் வெயிட் செய்பவர் சாப்பிட்டு முடித்தபின்னர் இடம் பிடிக்கவாம்........ சிரிக்காதீங்க மக்களே, இது நிஜம். முடிவில் அரை மணி நேரம் சென்று உட்கார இடம் கிடைத்தது..... அப்பாடி இனிமேல் பிரியாணி கிடைத்து விடும் என்று பக்கத்து இலையில் பிரியாணி சாபிட்டவரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, நண்பர் ஜெகதீஷ் அப்பாடி இன்னும் அரைமணி நேரத்தில் பிரியாணியில கையை வைக்கலாம் என்றவரை திகிலுடன் பார்த்தேன் !
வெறும் டேபிள் பார்த்து உட்கார்ந்து கொண்டு இருந்த நமக்கு ஒருத்தர் மந்தார இலை தட்டை வைக்கவே பத்து நிமிஷம் ஆனது, அதுவும் இங்க தட்டு வைங்க என்று சொல்லி சொல்லி மாய்ந்த பின். பின்னர் இருந்த பசிக்கு வெறும் தட்டை நக்கி கொண்டு இருந்தபோது கொஞ்சம் தயிர் வெங்காயம் அப்புறம் ஒரு கப்பில் குழம்பு என்று வைத்தார்கள், அதன் பின்னர் ஒரு 10 நிமிடத்திற்கு பின் ஒருத்தர் பிரியாணியை ஒரு தட்டு நிறைய ஏந்திக்கொண்டு வந்தார்..... ஒரு பெரிய கூட்டத்தில் நமிதாவை நெருக்கமாக அணைத்துக்கொண்டு சென்றால் எப்படி வயிற்று எரிச்சலோடு பார்ப்பார்களோ அப்படி அந்த பிரியாணி கொண்டு செல்பவர்களை பார்த்தார்கள். முடிவில் எங்களுக்கு ஒரு அடிதடியோடு பிரியாணி வந்தது.... எங்களுக்கோ இங்கு ஒரு தேவதை வந்து அமிர்தம் தருவது போன்ற ஒரு பீலிங். எங்களது இலையில் வந்த அந்த மட்டன் பிரியாணி நறுமணத்தை முகர்ந்து கொண்டே "டேய், எங்களுக்கு பிரியாணி கிடைச்சிடுச்சு, முனியம்மா, ராக்கம்மா, வள்ளி தாயி, பொன்னம்மா..... எங்களுக்கு பிரியாணி கிடைச்சிடுச்சு !" என்று கத்த வேண்டும் போன்று இருந்தது, அவ்வளவு சந்தோசம்.... இருக்காதா பின்னே நல்ல பசியில் இருக்கும்போது, இத்தனை தடைகளை கடந்து பிரியாணி கிடைத்தால் !!ஒரு தொன்னையில் நிரம்பி வழியும் பிரியாணி, அதில் அங்கங்கே குளத்தில் இருந்து எட்டி பார்க்கும் மீன்கள் போலே மட்டன் துண்டுகள், சூடான அந்த சுவை என்று எங்களுக்கு பார்க்கும்போதே எச்சில் ஊறியது. அந்த மந்தார இலையில் கொட்டி, ஒரு வாய் வைக்கும்போதே தெரிகிறது ஏன் இந்த அளவு கூட்டம் என்று. பிரியாணியில் அவ்வளவாக எண்ணை என்பதே இல்லாமல், நன்றாக வெந்து இருந்த மட்டன் துண்டுகளும், அதன் சாறு இறங்கிய அந்த அரிசியும், மசாலா சுவையும் என்று ஒரு பிரியாணி சர்வலக்ஷனமும் பொருந்தி இருந்தது. அதனோடு கூடிய காரமான கோழி வருவலும் என்று ஏகாந்தமான வேளை அது. சொல்வது கடினம்.... சுவைத்து பாருங்கள்.அடுத்த முறை இந்த பிரியாணி சாப்பிட என்றே இங்கு செல்லலாம் நீங்கள், நம்பி வாங்க தாராளமா சாப்பிடுங்க மனம் நிறைவோடு செல்லுங்கள் ! பல பல தலைமுறைகளாக இது செயல்படுவதும், அங்கு இருந்த கூட்டமுமே சாட்சி.... இந்த பிரியாணி அவ்வளவு சுவையானது என்பதற்கு !Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Shivaji military hotel, Sivaji military hotel, banagalore, Bengaluru, best biriyani, amazing taste, tasty, not to miss

2 comments:

  1. மறுபடியும் சாப்பிட்ட மாதிரியே இருக்கு !!! என்னோடது கொஞ்சம் நல்ல படமா போட்ருக்கலாமே? மிரட்டல் தொடரும் !!

    ReplyDelete
  2. wow...its 2 km from our office

    ReplyDelete