Wednesday, May 4, 2016

வாங்க.. சூடா ஒரு டீ சாப்பிடலாம் !!

உணவு பற்றிய பதிவுகளை எழுதி வரும் எனக்கு நிறைய பேர் போன் செய்து பாராட்டுவதும், சிலாகித்து பேசுவதும் என்று நிறைய அனுபவங்கள் உண்டு, ஒவ்வொரு உணவுக்கும் ஒரு அனுபவம் என்றுதான் இதுவரை பகிர்ந்துள்ளேன்.... ஆம், ஒவ்வொரு உணவும் ஒரு அனுபவமே ! எனது நண்பர்களுடன் ஒரு ஜாலி ஜமாவின்போது ஒரு நண்பர் கிண்டலாக உனது எல்லா உணவு பதிவுலுமே வாயூரும்படியே எழுதுகிறாய், அதை வெவ்வேறு அனுபவம் என்கிறாய் அது தவறு என்றார். நான் இல்லை, ஒரு சூழல்தான் அந்த உணவின் சுவையை தீர்மானிக்கிறது என்று தீர்க்கமாக சொன்னேன். அப்போது அவர், எங்க இந்த ஒரு கிளாஸ் டீ பற்றி ஒரு நாலு பதிவு தொடர்ந்து எழுத முடியுமா என்றார்.....


டீ.... நமது வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்ட ஒன்று. எனது அம்மா காலையில் போட்டு கொடுக்கும் அந்த டீயின் சுவை இன்றும் மறக்க முடியாது. எனது நண்பர், அந்த சவால் விட்டவுடன், நான் ஏன் முடியாது நாலு பதிவு அல்ல நாற்பது பதிவு கூட எழுதுவேன் என்றேன். எனது கூட இருந்த அனைத்து நண்பர்களும் சிரித்தனர்... டேய், ஒரு கிளாஸ் டீ பத்தி எவ்வளவு எழுத முடியும். நான் அவர்களது கண்களை பார்த்து சொன்னேன்.... முடியும்டா, நீங்கள் ஒரு டீயை சாதாரணமாக பார்க்குறீங்க, ஆனால் டீ குடிப்பது என்பது ஒவ்வொரு அனுபவம் என்றேன்.



சவால் விட்ட நண்பர், அப்படி என்னதான் டீ பத்தி எழுதுவ... பாலை சுண்ட காய்ச்சி, சர்க்கரையை மிதமா போட்டு, டீயை பொன்னிறமாக ஊற்றி அதை அப்படியே ஒரு கிளாசில் ஊற்றி ஒரு சிப் அடிக்கும்போது சொர்கமே தெரிகிறது என்றா என்றார். நான் மூச்சை நன்றாக இழுத்து விட்டு, நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க என்றேன்...

  • "இப்போ எதுல டீ குடிக்கிற..."
  • "கண்ணாடி கிளாசில்"
  • "எதுல எல்லாம் டீ குடிக்கலாம் ?"
  • "அப்படின்னா"
  • "டீ குடிக்க பயன்படுத்தற வகை வகையான கோப்பைகள்...."
  • "டம்பளர், பேப்பர் கப், மண்ணில் செய்த கப், சாசர்,....." (கண்கள் விரிகிறது)
  • "டீ குடிக்கும் வேளைகள் எல்லாம் எது ?"
  • "காலை, 11 மணி, அப்பப்ப மதியம், 3 மணி, மாலை,..."
  • "அதிகாலை, நைட், 1 மணி காலை எல்லாம் சேர்த்துக்க..... இப்போ சொல்லு, ஒவ்வொரு கிளாசில் டீ குடிக்கும்போதும் ஒவ்வொரு அனுபவம் இல்லையா ? உதாரணமா அந்த சில்லிப்பான மண் கோப்பையை கையில் கெட்டியா புடிச்சிட்டு, ஒவ்வொரு சிப் டீ குடிச்சா எப்படி இருக்கும் அதுவும் சூரிய உதயத்தை பார்த்து" என்றேன்.



டீ குடிப்பது என்பதை எவ்வளவு வகை படுத்தலாம்....

  1. குடிக்கும் இடம் - ரோடு, சாதா ஹோட்டல், சைக்கிள் டீ, 5 ஸ்டார் டீ...
  2. டீ காஸ்ட் - 1 ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய், லட்சம் ரூபாய்...
  3. உடை - வெறும் உடம்பில், கைலி, பேன்ட்-ஷர்ட், கோட்-சூட்,...
  4. வேளைகள் - காலை, மதியம், மாலை, இரவு, நள்ளிரவு....
  5. டீ போடும் வகை - பாய்லர், எவர்சில்வர் சிறிய அண்டா, டிப் டீ, மெசின் டீ...
  6. இடம் - வீட்டில், ஆபீஸ், ஹோட்டல், மலை முகட்டில், ஏறோப்லனில்,...
  7. சீசன் - வெயில், மழை, காற்று, குளிர், பனி,....
  8. கோப்பைகள் - டம்பளர், அலுமினியம், மண், பீங்கான், பேப்பர்,....
  9. யாருடன் - நண்பர்கள், குடும்பம், பிடித்த மனிதர், பாஸ், கூலி தொழிலாளி,....
  10. சைடு டிஷ் - வடை, பிஸ்கட், வாழைபழம், சூசி, புல் மீல்ஸ்....

மேலே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்றுடன், எதையாவது சேர்த்து பார்த்தால் அது ஒரு காம்பினேஷன்.... புரியவில்லையா. உதாரணமாக.... 
சைக்கிள் டீ - 10 ரூபாய் - கைலி - மாலை - டிப் டீ - மலை அருவி - சில்லென்ற மழை - மண் கோப்பை - நண்பர்களுடன் - வடை 
எதையாவது மாற்றி போட்டால் அந்த அனுபவமே வேறு.... ஆகவே, டீ குடிப்பது என்பது ஒரு ஜென் நிலை இல்லையா ?!




கேட்ட நண்பர் எனது காலில் விழாத குறை... "நீ நானூறு அத்தியாயம் கூட எழுதுவ..." என்றார். இது நடந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது, அன்றில் இருந்து டீ சாப்பிட ஆரம்பித்தேன்..... ஆகா, என்ன அனுபவங்கள். நீங்களும் வாங்களேன், சூடா ஒரு டீ சாப்பிடலாம் !! இந்த பதிவுகளை எல்லாம் "உணவு வேட்டை" என்ற தலைப்பில் எழுத போகிறேன்.... வேட்டை என்பது நிதானமாக பார்த்து இரையை அடித்து ருசித்து சாபிடுவதாகும், இதுவும் ஒரு வேட்டைதானே !

Labels : Suresh, Kadalpayanangal, Tea marathon, about tea, unavu vettai

5 comments: