Thursday, May 5, 2016

சிறுபிள்ளையாவோம் - அதிர்ஷ்ட சீட்டு !!

சிறு வயதில் எல்லாம் அம்மா அல்லது அப்பா கடைக்கு சென்றால் ஒட்டி கொள்வோம், அப்போது நமக்கு கொஞ்சம் மிட்டாய் கிடைக்கும். கொஞ்சம் வயது ஏறியபோது காசின் அருமை நமக்கு தெரிய வந்து, அழுது அடம்பிடித்து நாலணா வாங்கிகொண்டு சென்று மிட்டாய் வாங்கி வருவோம் இல்லையா ! ஆனால், நினைத்து பாருங்கள் அதிர்ஷ்டம் என்பதை எப்போது அல்லது எந்த வயதில் நாம் அறிந்துகொண்டோம் என்பதை ?! கடையில் அதுவரை தின்பண்டம் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது போக, ஒரு அட்டை, அதனை சுற்றி விளையாடும் பொருட்கள் என்று கண்ணுக்கு தெரிந்தது எப்போது ? நமது அதிர்ஷ்டம் என்ன என்று சோதித்து பார்க்க தோன்றியது எப்போது ? சுரண்டி சுரண்டி பணம் போய் ஏமாந்துட்டோமோ என்று நினைத்தது உண்டா ? பரிசு பொருள் கிடைத்து நான் அதிர்ஷ்டக்காரன் என்று நினைத்தது உண்டா ?




இன்று இந்த அதிர்ஷ்ட அட்டைகள் எல்லாம் சிறு கடைகளில் கிடைப்பதில்லை, பெரும் வணிகர்களே சிறு பொம்மைகளையும், இலவசங்களையும் கொடுத்து பழக்கி விட்டதால், அதிர்ஷ்ட அட்டை என்பது காணாமல் போய் விட்டது. இன்று குழந்தைகளுக்கு காசு கொடுத்தால் அது கடைக்கு சென்று என்ன வாங்குகிறது என்று பார்த்து இருக்கின்றீர்களா ? ஒரு சிறு சீட்டு நமக்கு வாழ்க்கையை கற்று கொடுத்தது, ஏமாற்றமும் ஆச்சர்யங்களும் நிறைந்தது இந்த பரமபத வாழ்க்கை என்பதை ஒரு சிறு அட்டையில் அல்லவா கற்றுக்கொண்டோம் !




ஒரு பெரிய அட்டையில் நமக்கு / சிறுவர்களுக்கு பிடிக்கும் எல்லா பொருளும் நன்கு பேக் செய்து தொங்க விடப்பட்டு இருக்கும். நான் அந்த அட்டையை பார்த்ததும் ஒரு குழந்தையாகி போனேன் என்றுதான் சொல்ல வேண்டும், அதுவும் எனது மனைவியுடன் அந்த கடைக்கு சென்று இருந்தேன் ! இந்த அதிர்ஷ்ட சீட்டு எடுக்க வேண்டும் என்றவுடன் என்னை தாண்டி பார்த்துவிட்டு எந்த குழந்தைக்கு என்றார், நான் எனக்குதான் வேண்டும் என்றவுடன் எனது மனைவியை பரிதாபமாக பார்த்தார் ! ஒரு குட்டி பிளாஸ்டிக் மிட்டாய்  டப்பாவை எடுத்து ஒரு சீட்டு எடுங்க என்றவுடன் நான், நல்லா குலுக்கி குடுங்க என்றவுடன் அவர் முடிவே செய்துவிட்டார் !






ஒரு ஸ்டாம்ப் சைஸ் சீட்டு அதில் மிகவும் சிறிதாக சில்வர் பூசப்பட்டு இருந்தது, அதை சுவரில் வைத்து சுரண்ட... அந்த கடைகாரரோ "பார்த்து பார்த்து சீட்டு பிஞ்சிடும்" என்றார். சுரண்டியதில் வந்த நம்பர் 440 ! ஆகா என்று பரிசு பொருளில் தேடியபோது கிடைத்தது..... ஸ்டைல் குயின் நதியா பூவே பூச்சூடவா படத்தில் பாட்டு பாடி ஆட்டம் ஆடியபோது வைத்து இருந்த மத்தாப்பு பெட்டி !! ஐயோ, நமக்கு அதிர்ஷ்ட்டம் கூறிய பிச்சிகிட்டு கொட்டுதே என்று நினைத்து நான் அடுத்தடுத்து எடுத்த எல்லா சீட்டிலும் ஜோக்கர் படம் :-( எனது மனைவியை வைத்து ரெண்டு சீட்டு எடுத்தேன்... அதே, அதே, அப்போது அங்கே சென்று கொண்டு இருந்த சிறுவர்களை கொண்டு ரெண்டு சீட்டு எடுத்தேன், அதே அதே.... அடுத்து அங்கு பீடி வாங்க வந்த ஒருவரை வைத்து எடுத்தேன், அதே அதே.... என்னடா இது என்று நான் நொந்துக்கொண்டு, அடுத்த சீட்டு பரிசு விழனும் என்று செல்ல கோபத்தோடு கடவுளிடம் வேண்டிக்கொண்டு ஒரு சீட்டு நான் எடுக்க...... ஐய்யா, எனக்கு இப்போது விழுந்தது ராக்கெட். ஒரு பேரானந்தத்தில் குதிக்க ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது என்னை சுற்றி இருந்த சிறு கூட்டம்..... சிறுவர்கள், சில பெரியவர்கள் என்று.



ஒரு சீட்டு இரண்டு ரூபாய் என்று நான் அது வரை பதினைந்து எடுத்து இருந்தேன், சுமார் முப்பது ரூபாய் எடுதுக்கொடுக்க.. அதை வாங்கி கொண்டு கடைகாரர் எனது மனைவியிடம் பார்த்து கூட்டிக்கிட்டு போங்க என்றபோது எனது மனைவி ஒரு முறை முறைத்தார். ஆனால், வீட்டிற்க்கு சென்று கொண்டு இருக்கும்போது அவர் புன்னகைத்துக்கொண்டே "அந்த புஸ்வானம் கிடைச்சு இருந்தா நல்லா இருந்து இருக்கும் இல்லை" என்றார்.... ஆகா, அந்த அதிர்ஷ்ட சீட்டு எல்லாரையும் கொழந்தையாக்கி விடுகிறது இல்லையா !

Labels : Suresh, Kadalpayanangal, Sirukulanthaiyaavom, childhood memories, lucky sheet, joker, get lucky, memory

5 comments:

  1. அந்த புஸ்வானம் கிடைத்திருந்தா.... I like that! :)

    குழந்தையாகவே இருந்திருக்கலாம் என நினைக்க வைத்த தருணம்.

    ReplyDelete
  2. சின்னவயதில் நான் இந்த சீட்டு எடுத்து இருக்கேன்! எங்க பக்கம் மத்தாப்பு புஸ்வானம் கிடைக்காது, ப்ளாஸ்டிக் விளையாட்டு சாமான்கள், சாக்லேட்ஸ் கிடைக்கும்! சந்தோஷமான அனுபவம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. இவைகள் அனைத்தும் ஏமாற்று வித்தை. லாபம் கடைக்காரருக்குத்தான்.

    ReplyDelete
  4. கந்தசாமி சார் சொல்வதில் உண்மை இருக்கும் (இல்லாட்டா பொழுது போகாம ஏன் கடைக்காரர் இதை விற்கிறார்). ஆனாலும், குழந்தைகளுக்குக் குதூகலம்தான். இப்போ எனக்கும் வாய்ப்புக் கிடைத்தால் சீட்டு எடுத்துப்பார்ப்பேன். 30 ரூபாய் போய், 5 ரூபாய் தீப்பெட்டி கிடைத்தாலும், அது தரும் சந்தோஷம் அதிகம்.

    ReplyDelete