Tuesday, June 14, 2016

அறுசுவை - விநாயகா தோசை கடை, குற்றாலம் !

குற்றாலம்... இந்த பெயரை சொல்லும்போதே  அந்த அருவியில் நனையும் சுகம் தெரிகிறது, சிலுசிலுக்கும் அந்த காற்று, அங்கு இருக்கும் ஹோட்டல் மற்றும் உணவுகள் என்று கண் முன்னே வந்து செல்கிறது. இங்கு சென்றாலே பல பேருக்கு உண்ணுவது - குளிப்பது - உறங்குவதுதான் முழு நேர வேலை என்று இருக்கும். நானும் இங்கு சென்று இருந்தபோது குளித்தவுடன் பசிக்கும், பின்னர் வண்டியை எடுத்துக்கொண்டு பார்டர் கடை சென்று நன்றாக வேர்வையில் குளித்துக்கொண்டே சாப்பிடுவோம், அய்யய்ய வேர்துடுச்சே என்று மீண்டும் குளிக்க சென்று ஒரு மீள முடியாத சுழலில் சிக்கி கொள்வேன்.... தினமும் சிக்கன், மட்டன் என்று தின்று விட்டு என்றாவது ஒரு நாள் மட்டும் கொஞ்சம் லைட் ஆக சாப்பிடலாம் என்று நினைக்கும்போது, அது வாய்க்கு ருசியாகவும் கொஞ்சம் புதுசாகவும் இருக்க வேண்டுமே என்று யாரிடமாவது கேட்டால் எல்லோரும் சொல்வது "விநாயகா தோசை கடைக்கு" போங்க என்பதுதான் !!





தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் ரோட்டில் மேலகரம் என்னும் ஒரு ஊரின் ரோட்டின் இடது பக்கத்தில் ஒரு சிறிய கடையாக இருக்கும். பலரும் இந்த கடையையும், இங்கு கிடைக்கும் வித விதமான தோசையை பற்றியும் சொல்லி இருந்ததால், நாங்கள் எல்லோரும் பளபளக்கும் விளக்குகளுடன், பெரிய கடை, பார்கிங் வசதி என்று நினைத்து இருந்தோம், ஆனால் அதிசயமாக ஒரு நான்கு டேபிள் போடும் இடத்தில் இருந்தது அந்த கடை. கூட வந்த எல்லோரும் இந்த கடைதானா, சுவை நன்றாக இருக்குமா என்றெல்லாம் கேள்விகேட்டுக்கொண்டே வந்தனர்.... அந்த சந்தேகத்தை எல்லாம் சுவை துடைத்து எறிந்தது எனலாம் !







பல நாட்களாக காரமாக சாப்பிட்டு கொஞ்சம் காரம் கம்மியாகவும், தோசை சுவை மாறாமலும் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டே விலை பட்டியலை திரும்பி பார்த்தபோது பல வகை தோசை கண்ணில் பட்டது. ஒரு முறை முழுதுமாக வாசித்து பார்த்து, இதை சொல்லலாமா இல்லை அதை சொல்லலாமா என்று குழப்பம்தான் மிஞ்சியது, அந்த அளவுக்கு விதம் விதமாக இருந்தது. வீட்டில் எல்லாம் தோசை, கொஞ்சம் அதிகாரம் செய்து கேட்டால் முட்டை தோசை என்று மட்டுமே கிடைக்கும், இங்கே பார்த்தால் அவ்வளவு இருக்கிறது..... இருக்கட்டும், வீட்டுக்கு போய் நானே தோசை சுடறேன் ! எனக்கு என்று மிளகு பொடி தோசை மற்றும் கீரை தோசை சொன்னேன்...





ஒரு பெரிய வாழை இலையை எனக்கு முன்னாடி வைத்த பின்பு கடையை சுற்றி பார்த்தேன், மொத்தமாக சுமார் 25 ஆட்கள் அமர்ந்து சாப்பிடும் இடம், நிறைய பேர் பார்சல் தான் வாங்கி செல்கின்றனர். அவ்வப்போது பஸ், மற்றும் கார்களில் வந்து இந்த கடையை கேள்விப்பட்டு வருகின்றனர். மாஸ்டர் போட்ட தோசையை எனது இலையில் வைக்கும்போதே வாசம் கமகமக்கிறது, மிளகை மாவாக இல்லாமல் அரைத்து அதை தோசையின் மீது தூவி மொருகலொடு தருகின்றனர், அதை ஒரு வாய் வைக்கும்போதே காரமும், தோசையின் சுவையும் இணைந்து நர்த்தனமாடுகின்றன நமது நாக்குகளில். தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் எல்லாம் தொட்டு சாப்பிட ஒவ்வொரு வாய்க்கும் மொருமொருப்புடன் குதித்து செல்கிறது அந்த தோசை. அடுத்து வந்த கீரை தோசை இன்னும் பேஷ் பேஷ்.... கீரையை சமைத்து சாப்பிட சொன்னால் கொஞ்சம் மூஞ்சி சுருங்கும், இங்கு தோசையுடன் கலந்து இருப்பதால் சுவை நன்றாக இருக்கிறது (எங்க இருந்து இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறாங்களோ !!).



முடிவில் ஒவ்வொரு வகையான தோசையையும் காணும்போது, மீண்டும் இங்கே வரவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. குற்றால சாரல் மழையுடன் கூடிய தருணங்களில் இந்த தோசைகளை சாப்பிட்டால் ஒரு குதூகலம் நமது வயிற்றுக்கும் கிட்டும். இங்கு ஸ்பெஷல் தோசை என்பது வல்லாரை தோசையாம், அதை சாப்பிட்டால் அன்று இரவு தூங்க முடியாதாம்.... தோசையிலும் இன்பம் வைத்தாயே இறைவா !!

Labels : Suresh, kadalpayanangal, kutralam, dosai kadai, vinayaga thosai kadai, various types of dosa, tenkasi, melagaram, veg food