Sunday, August 14, 2016

YummyDrives - முதலாம் ஆண்டு கொண்டாட்டம் !!

சென்ற வருடம் இந்த நாளான 14-ஆகஸ்ட், 5 மணிக்கு இருந்த அதே படபடப்பு, புரியாத அந்த உணர்வு இன்றும்..... ஆனால், இன்று அந்த உணர்வில் சந்தோஷமும் கலந்து இருக்கிறது !! ஆம், YummyDrives.com ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.... திரும்பி பார்த்தால், என்னை பொறுத்த அளவில் இது சாதனைகளை செய்து இருக்கிறது என்றுதான் சொல்வேன் ! 50 லட்சத்திற்கும் மேலான பார்வைகள் முகப்புத்தகத்தில், 5000+ பேஜ் லைக்ஸ், 150 வாட்ஸ் அப் குழுமம், தமிழ்நாடு முழுவதும் கவர் செய்த சுவையான உணவு தகவல்கள், 682 மொபைல் செயலி டவுன்லோட் என்று முதலாம் ஆண்டு ஒரு நல்ல, பெரிய தடத்தை பதித்து இருக்கிறது !!

திரு.கேபிள் சங்கர் அவர்களின் சினிமா விமரிசனத்தை படித்து, அவரின் உணவு  பற்றிய பதிவுகளில் திளைத்து, ஒரு சுபயோக சுபதினத்தில் என்னால் பிளாக் எழுத முடியும் என்று ஒரு அசட்டு நம்பிக்கையில் 14-ஜூன்-2012 அன்று ஆரம்பித்ததுதான் "கடல்பயணங்கள்" தளம். பல பல நல்ல நண்பர்களையும், நட்புக்களையும் தந்த இந்த தளத்தில் நிறைய சப்ஜெக்ட் பற்றி எழுதி வந்தாலும், என்னை உணவு விரும்பியாகவே முன் நிறுத்தியது காலத்தின் கோலமே :-), உணவகங்களை தேடும்போது கீழ்வரும் சிரமங்களை உங்களை போலவே நானும் சந்தித்தேன்...

1) நிறைய பேர் இந்த ஊரில் இந்த உணவு நன்றாக இருக்கிறது, உணவகம் நன்றாக இருக்கிறது என்று செய்திகளை கொட்டினாலும், அதை சரியாக தொகுக்க முடியாததால் நான் தேடும்போது கிடைப்பதில்லை. 

2) பல பல நேரங்களில், நீங்கள் போன் செய்து உணவகங்களை கேட்டு போன் செய்யும்போது அந்த தகவல்களை எளிதாக எடுக்க முடியவில்லை.

3) இந்த உணவகம் கேபிள் ஜி எழுதியதா, இணையத்தில் பார்த்ததா, நண்பர்கள் பகிர்ந்ததா என்று புரியாமல் குழம்பியது உண்டு 

ஒரு நல்ல உணவை ருசித்து சாப்பிட இத்தனை விரும்பிகள் இருக்கும்போது, ஏன் அந்த எல்லா உணவையும் தொகுத்து வழங்கும் ஒரு தளம் இல்லை என்ற கேள்விக்கு விடையே இந்த யம்மி டிரைவ்ஸ் !!



இந்த தளம் ஆரம்பிக்கும்போது, சில விஷயங்களில் தெளிவாக இருந்தோம். இது ஒரு ஓபன் தளம் ஆக இருக்க வேண்டும், யாரும் அவர்களின் தகவல்களை தரும்படியாக இருக்க வேண்டும், ஸ்டார் ஹோட்டலோ அல்லது கையேந்தி பவனோ உணவின் சுவையும் சுகாதாரமும் மட்டுமே முக்கியம், எளிதில் தேடி எடுக்கும்படியாக இருக்க வேண்டும், இந்த தகவல்கள் எல்லோரையும் சென்று அடையுமாறு இருக்க வேண்டும் என்பதே. ஜனவரி 2015ம் ஆண்டு வேலையை ஆரம்பித்து, பல பல தூக்கம் இல்லா இரவு கண்டு, கேபிள் ஜி மற்றும் கோவை நேரம் ஜீவா அவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்ததுதான் இந்த நாளின் வெற்றியான யம்மி டிரைவ்ஸ் !!




தளம் ஆரம்பித்த பிறகு, சொந்த வேலைகள் மற்றும் அலுவல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தபோது, தனது திறமையான மீம்ஸ் மற்றும் பதிவுகள் மூலம் உயிர் கொடுத்ததும், கொடுத்து கொண்டு இருப்பதும் திரு. சிதம்பரம் சௌந்தர பாண்டியன் அவர்கள். இவர் நண்பர் என்பதில் இருந்து ஒரு குடும்ப உறுப்பினர் என்ற அளவுக்கு நெருக்கமானார், இன்று வரை அந்த உற்சாகம் குறையாமல் இந்த தளத்தின் மார்க்கெட்டிங் பிரிவை திறம்பட செய்து வருகிறார்.




கடல்பயணங்கள் தளத்தின் மூலம் அறிமுகமான சேலம் திரு. சரவணன் அவர்களின் சகோதரி திருமதி. <பெயரை குறிப்பிட வேண்டாம் என்று அன்பு கட்டளை> ஒரு சுபதினத்தில் ஐடியா உதித்து ஆரம்பித்தது யம்மி டிரைவ்ஸ் வாட்ஸ்அப் குரூப். எனக்கு கூட தோன்றவில்லை இது, ஆனால் அவர் ஆரம்பித்து வைத்த இந்த குழுமம் பல பல உணவு பிரியர்களை ஒன்று இணைத்தது மட்டும் இல்லாமல், அவர்கள் ருசித்த தகவல்களையும் ஷேர் செய்யும் ஒன்றாக இருக்கிறது. இவரது கைம்மாறு இல்லாத அன்பும், சகோதரர் திரு.சரவணன் அவர்களின் பங்களிப்பும், இன்றளவும் மகிழ்ச்சி கொள்ள செய்கிறது.




இவர்கள் மட்டும் இல்லாமல், கண்களுக்கு தெரியாமல் பலர் செய்த உதவிகள் பல. அவர்களின் பெயர்களை பட்டியல் இட்டால் இந்த தளம் பத்தாது என்பதே உண்மை. தளத்தை வடிவமைத்தது, டெஸ்ட் செய்து கொடுத்தது, போஸ்டர் வடிவமைத்தது,அண்ணே இதை ஆட் செய்யுங்கள் என்ற உள்ளங்கள் என்று அநேகம் பேரின் உழைப்பும் இங்கு உள்ளது. இந்த தளம் ஆரம்பித்து கொடுத்த திரு.தமன் (திரைப்பட நடிகர்), திரு.வெங்கடேஷ் ஆறுமுகம் (பல்சுவை கலைஞர், வித்தகர்) மற்றும் செல்வி. ரொபினா சுபாஷ் (மசாலா எப்.எம்) இன்று நன்றியுடன் நினைவு கூறுகிறேன், இந்த தளம் விரைவில் தவிர்க்க முடியாத உணவு தளமாக மாறும் என்ற நாள் தூரத்தில் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது இந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டம் !!




நன்றி நண்பர்களே..... உங்களது பங்களிப்புடன் இந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டம் இனிதே அமைந்தது, ருசியான உணவுகளையும் அதை பற்றிய தகவல்களையும் இனி அதிகமாக எதிர் பார்க்கலாம். சில பல மாற்றங்குளுடன் இன்னும் வீறு கொண்டு வெற்றி நடையை ஆரம்பிக்கிறோம் !!

Labels : YummyDrives, launch, first year anniversary