Tuesday, January 31, 2017

ஊர் ஸ்பெஷல் - கல்லிடைகுறிச்சி அப்பளம் ! (பாகம் - 2 )

ரொம்ப நாள் ஆச்சு இந்த ஊர் ஸ்பெஷல் பதிவுகள் போட்டு, அதுவும் இந்த கல்லிடைக்குறிச்சி அப்பளம் முதல் பாகம் போட்டு மாதங்கள் ஆகி விட்டது, இன்னும் இரண்டாம் பாகம் வரவில்லையே... அப்பளமே நமுத்து போச்சு என்றெல்லாம் செல்லமான திட்டல்கள் ! என்ன செய்வது, ஒவ்வொரு முறை ஊர் ஸ்பெஷல் எழுதும்போதும் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி இருக்கிறது, இதை தமிழ்நாட்டின் பெருமை மிகு ஆவணமாக இருக்கவேண்டும் என்று மிகுந்த சிரத்தை எடுத்து செய்வதால், கொஞ்சம் அதிக காலம் ஒவ்வொரு பதிவிற்கும் ஆகிறது..... சில நேரங்களில் சந்தேகம் வரும்போது, மீண்டும் அங்கு சென்று அதை நிவர்த்தி செய்ய வேண்டியும் இருக்கிறதே ! சரி, சென்ற முறை கல்லிடைக்குறிச்சி அப்பளம் (பாகம் - 1) பார்த்தோம், அதில் அப்பள மாவு செய்வது வரை பார்த்தோம்.... இந்த முறை அப்பளம் செய்வது, காய வைப்பது, அடுக்குவது, பேக்கிங் என்று எல்லாமும் பார்ப்போமா ?!




அப்பள மாவை உருண்டை உருண்டையாக செய்து வைத்த பிறகு, அதை வைத்து தேய்ப்பதற்கு பூரி கட்டைகள் எங்கே என்று எனது கண்கள் தேடியது. ஜென்டில்மேன் படத்தில் பாட்டிகள் எல்லாம் உட்கார்ந்துக்கொண்டு அப்பளம் உருட்டுவது போல இருந்ததே, அது எப்படி எல்லா அப்பளமும் ஒரே மாதிரி அச்சில் வார்த்தது போல ஒரே சைஸில் செய்கிறார்கள் என்று பாட்டிகளை தேடினேன் ! எனது கேள்வியை கண்களால் புரிந்துக்கொண்டு அப்பளம் செய்வதற்கு மெஷின் வந்து விட்டது என்றனர். அப்பளம் செய்வதற்கு மெஷினா...என்று ஆச்சர்யம் வந்தது ! மேலே மாடியில் இருந்த அப்பள மெஷின் காண்பித்தபோது.... டெக்னாலஜி ரொம்பதான் வளர்ந்துடுச்சு என்று தோன்றியது !





வேக வைத்த மாவை அப்பள மெஷினின் மேலே ஒரு இடத்தில் உள்ளே போட, அது உருளைகளுக்கு நடுவே சிக்கி ஒரு போர்வை போல நீளமாக வர ஆரம்பித்தது, அங்கே இன்னொரு உருளை ஒன்று வட்ட வட்டமாக கட் செய்து கொண்டு இருந்தது. சிறிய, மத்திமம், பெரிய சைஸ் உருளைகள் இருப்பதாகவும், வேண்டிய போது இந்த உருளைகள் மாற்றப்படும் என்றனர். உருளைகளை பார்வையிட்ட எனக்கு மனதில் "அது ஏன் எல்லா அப்பளமும் உருண்டையாக இருக்கிறது ? சதுரமாக இருந்தால் என்ன ?? " என்று தோன்றியது. நமக்குத்தான் சந்தேகமே ஆகாதே, அப்பளம் போட்டு கொண்டு இருந்தவர்களிடம் கேட்டேன், எல்லோரும் நன்றாக முழித்தார்கள், பல விதமான பதில்கள் வந்தாலும் எனக்கு திருப்தியே வரவில்லை..... ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அப்போது ஒரு இடத்தில், அப்பளம் அடுக்கி கொண்டு இருந்த பெரியவர், சிரித்துக்கொண்டே "அப்பளம் என்பது மாவினால் செய்தது, பொரிக்கும்போது எல்லா இடமும் சமமாக வேக வேண்டும்.... ஒரு பொருளை சூடு படுத்தும்போது, அது பெரிதாகும். வட்டத்தை தவிர எந்த ஒரு வடிவமும் சமமாக பெரிதாகாது, உதாரணமாக அப்பளம் சதுரமாக இருந்தால் எண்ணையில் போடும்போது ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு பக்கம் பெரிதாகும், அப்போது முனைகள் சமமாக பெரிதாகாததால் உடையும், இதுவே வட்டமாக இருந்தால் எல்லா பக்கமும் சமமாக பொரியும், சுவையாகவும் இருக்கும். அப்பளம் எப்போதுமே வட்டமாகவோ, அல்லது நீள் வட்டமாகவோ இருத்தலே மொறுமொறுப்புக்கு நன்றாக இருக்கும். " என்றார், இதைத்தான் தெர்மல் எக்ஸ்பான்ஷன் என்பார்கள் என்றேன், அன்று அறிவியலும் நமது மூதாதையரின் அறிவும் கண்டு வியந்தேன் !



வட்ட வட்டமாக அப்பளங்கள் வெளியே வரும்போது ஒருவர் பெரிய தட்டில் அதை பிடித்து வைத்துக்கொண்டு இருக்கிறார். ஒரு தட்டு நிறைந்தவுடன், அவர்களின் தாழ்வாரத்தில் வெயில் வரும் இடத்தில் அதை காய வைக்கின்றனர். எங்களது வீட்டில் அப்பளம் என்பது கொஞ்சமாகத்தான் இருக்கும், இங்கோ ஆயிரக்கணக்கான அப்பளங்கள்... அதை பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. சாவி எழுதிய வாஷிங்டனில் திருமணம் என்னும் கதையில், இப்படி அப்பளங்கள் காய வைக்கப்பட்டு இருக்கும்போது காற்றடித்ததில் அப்பளங்கள் பறக்கும், அதை அமெரிக்கர்கள் பறக்கும் தட்டு என்று துப்பாக்கி கொண்டு சுடுவார்களாம்... அதை நினைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தபோது அடித்த காற்றுக்கு அப்போது அப்பளங்கள் எதுவும் பறக்காமல் சத்யாகிரஹம் செய்தது ! இப்படி காயவைக்கப்பட்ட அப்பளங்கள், காய்ந்த பின்பு எடுத்து அடுக்கி வைக்கின்றனர். ஒரு சாயாத பைசா கோபுரம் போல அவ்வளவு அழகாக இருக்கிறது.



அவர் அடுக்கி கொண்டு இருக்கும்போதுதான் ஒன்றை கவனித்தேன், விரலை வைத்து அப்பளத்தை அளந்து எடுத்து சரசரவென்று அடுக்க ஆரம்பித்ததை.... புதிதாக இருக்கிறதே என்று என்னவென்று கேட்டேன், அவர் அப்பளம் நம்பரை சரி பார்த்தேன் என்றார். அப்பளத்திற்கு நம்பரா ?! அவரே தெளிவுபடுத்தினார்... அப்பளத்தின் அளவினை இன்ச் கொண்டு சொல்வார்களாம், அதாவது 1 என்றால் ஒரு இன்ச் அளவு கொண்ட அப்பளம், 5 என்றால் ஐந்து இன்ச் அப்பளம் என்று அர்த்தம். பொதுவாக வீட்டிற்கு மூன்று அல்லது நான்காம் நம்பர் அப்பளம் உபயோகிப்பார்களாம், அதுவே கல்யாண வீடு என்றால் ஆறு இன்ச் அப்பளம்..... அப்போ எனக்கு ஒரு நூறு இன்ச் அப்பளம் கிடைக்குமா துரை !!



அப்பளம் வட்ட வடிவில் போட்டு, காய வைத்து, எடுத்து அடுக்கி வைத்துவிட்டார்கள்.... இனி என்ன ? அடுத்து அப்பளங்களை பேக் செய்ய வேண்டியதுதான் ! இப்போது எனது அடுத்த சந்தேகம் என்பது.... அப்பளத்தை எண்ணி அடுக்குவார்களா, அல்லது வெயிட் போட்டா ? ஒவ்வொரு இடத்திலும் அப்பளம் செய்யும்போது கொஞ்சம் திக், அல்லது மெலிதாக, சின்னது, பெரியது என்றெல்லாம் இருக்கும், ஆதலால் முதலில் அந்த அப்பளத்தை நூறு அல்லது ஐநூறு கிராம் எவ்வளவு வருகிறது என்று பார்த்துவிட்டு, அதை போலவே மற்றதை எண்ணி வைக்கின்றனர். உதாரணமாக ஐந்தாம் எண் அப்பளம் 100கி சுமார் 25 அப்பளம் வருகிறது என்று வைத்து கொள்வோம், அடுத்து எல்லா அப்பளங்களையும் 25 ஆக பிரிக்க ஆரம்பிக்கிறார்கள் ! இப்படி ஒவ்வொன்றையும் பிரித்து, சணல் கயிறு கொண்டு காட்டுகின்றனர் !




இப்படி கட்டிய அப்பளத்தை, ஒரு கூடையில் போட்டு பக்கத்தில் ஒருவர் லேபிள் போட்டு கட்டுகிறார், அவரிடம் தள்ளி விடுகின்றனர். அப்பளத்தை எண்ணுபவர்தான் வேகம் என்றால், இங்கு லேபிள் ஓட்டுபவர் இன்னும் வேகமோ வேகம் ! ஒரு ரோபோ போல கைகள் வேகம் வேகமாக ஒரு பேப்பரை எடுக்க, அப்பளத்தை வைக்க, பிறகு நேர்த்தியாக மடிக்க, மைதா மாவு பசை கொண்டு ஒட்ட என்று ஒரு அப்பளம் உருவாகிறது !! அப்பள கட்டினுள் ஒரு வாசனை வருமே, நுகர்ந்து இருக்கின்றீர்களா ? உளுந்தின் வாசமும், பேப்பரின் வாசமும் கலந்து வருமே... அந்த வாசனை அங்கு இப்போது அடித்து கொண்டு இருந்தது, வயிற்றில் பசியையும் தூண்டியது. எனக்கு ஒரு அப்பளம் தர முடியுமா என்று கேட்டு, இவர்கள் வீட்டின் பின்னே ஒரு இடத்தில் முறுக்கும் மற்ற பட்சணங்கள் எல்லாம் போட்டு கொண்டு இருக்க, அங்கே சென்று இந்த ஒரு அப்பளம் பொறித்து தாருங்கள் என்று கூறி.... ஒரு அப்பளத்தின் கதையினை அங்கு பூர்த்தி செய்தேன் ! மொறு மொறுவென சாதத்திற்கு தொட்டு கொள்ளும் அப்பளத்தினை, அன்று சாதம் தொட்டுக்கொண்டு அப்பளத்தினை தின்று கொண்டு இருந்தேன். 








அடுத்த முறை கல்லிடைக்குறிச்சி செல்லும்போது அப்பள வகைகளை அள்ளி வாருங்கள், இதுவரை சில வகை அப்பளங்களை மட்டுமே ருசித்த உங்களுக்கு கட்டாயமாக ஒரு மிக பெரிய அப்பள வகைகளை காணவும், வாங்கவும் முடியும். சாதத்திற்கு சுவையான அப்பளம், மொறு மொறுவென்று.... லைப் ஐஸ் பியூட்டிபுல் !!



Labels : Suresh, Kadalpayananga, Appalam, Kallidaikurichi, Tirunelveli, Papad, Part 2, tasty journey, Oor special, district special

Monday, January 30, 2017

அறுசுவை - திருச்சி ரயில்வே ஸ்டேஷன் பிரியாணி !!

கடந்த  வருடங்களாக சுற்றியதில் நிறைய கடைகள் சென்று சாப்பிட்டு, போட்டோ எடுத்து பதிய வேண்டும் என்று நினைத்தாலும் நேரமின்மையால் அப்படியே ஒரு போல்டரில் சேர்த்து வைத்து, வைத்து இன்று எடுத்து பார்த்தால் சுமார் ஐநூறு உணவகங்கள் வரை வந்து விட்டது ! கொல்கத்தா ரசகுல்லாவில் இருந்து, இங்கு நீங்கள் பார்க்க போகும் சிறிய கடை வரை ருசியான தகவல்கள் இருக்கின்றன, இனிமேல் தொடர் பதிவுகளாக போட்டு விட வேண்டியதுதான் !! சரி, திருப்பதிக்கே லட்டு கொடுத்து பார்த்து இருக்கிறீர்களா ? திருச்சியில் பிறந்து வளர்ந்த எனக்கே தெரியாத இந்த சுவையான பிரியாணியை நமது நண்பர் KRP செந்தில் அவர்களும், மெட்ராஸ் பவன் சிவகுமார் அவர்களும் நமக்கு அறிமுகம் செய்தார்கள்... அது ஆகிவிட்டது ஒரு வருடத்திற்கும் மேலாக, ஆனாலும் சுவையான தகவலை காலம் கடந்தேனும் கொடுத்தாக வேண்டியது எனது ஜனநாயக கடமை இல்லையா ?!




திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஒரு நீண்ட பயணத்தில் ஒரு ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து, வெயில் சூடு இருக்கும் காற்றில், ட்ரெயினில் விற்றுக்கொண்டு வரும் ஓரளவு வயிற்றை நிரப்பும் உணவை உண்டுக்கொண்டு களைப்புடனும், பசியுடனும் வந்து இறங்கும்போது நல்லா வயிறு நிறைய சாப்பிடணும், அதிகமாக செலவும் ஆகக்கூடாது, ருசியாகவும் இருக்கணும் என்றெல்லாம் சொல்லி யாரிடமாவது கேட்டால் பதில் சொல்வார்களோ இல்லை உங்களை ஏற இறங்க பார்ப்பார்களா... ஆனால், நீங்கள் சொல்லிய எல்லா வகையான கண்டிஷன் பூர்த்தியாவது இந்த திண்டுக்கல் பிரியாணி கடையில்தான். திருச்சி ரயில்வே ஸ்டேஷன் விட்டு வெளியே வரும்போது, சற்றே நடந்து மெயின் ரோட்டிற்கு வந்து உங்களது இடது புறம் திரும்பி சிறிது தூரம் மத்திய வெயிலில் நடந்து சென்றால், ஒரு இடத்தில் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு சப்பு கொட்டிக்கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தால்..... நீங்கள் உங்களது இலக்கை அடைந்து விட்டீர்கள் !







அந்த பெரிய கூட்டத்தில், பசியுடன் நீந்தி கடந்து, அவ்வப்போது நாசியை தாக்கும் அந்த அற்புதமான பிரியாணி வாசனைக்கு எச்சில் விழுங்கி, ஒரு பிரியாணி என்று கேட்க, ஒரு பெரிய பிரியாணி அண்டாவில் இருந்து கரண்டியை கொண்டு ஒரு தட்டு தட்டிவிட்டு, வாழை இலை வைத்து இருக்கும் தட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாணி அரிசியை வைத்து, நன்றாக வெந்த சிக்கன் பீஸ் கொஞ்சம் மசாலாவுடன் அந்த பிரியாணிக்கு மகுடம் போல வைக்கிறார்கள். எவ்வளவுதான் தட்டில் வைத்தாலும் நமக்கு மனதுக்கு, இன்னும் ஏதோ கொஞ்சம் குறையுதே என்று தோன்றத்தான் செய்யும்... அதை எதிர்நோக்கியது போலவே, சிக்கன் 65 வேண்டுமா என்று கேட்க்கும்போது வேண்டாம் என்று சொல்ல வாய் வருவதில்லை !!






ஒரு தட்டில் பிரியாணியும், சிக்கன் 65ம் ஏந்திக்கொண்டு வெளியே வந்து ஒரு சிரிப்பு சிரித்தார் சிவகுமார், நாங்களும் வெற்றி களிப்புடன் ஒரு வாய் பிரியாணியை எடுத்து வாயில் வைத்தோம் ! பிரியாணியில் பல வகை இருக்கிறது.... ஹைதெராபாத் பிரியாணியில் அரிசி வெள்ளையாக - நீளமாக இருக்கும், ஆம்பூர் பிரியாணியில் அரிசி சிறியதாக இருக்கும், பெங்களூரு சிவாஜி மிலிட்டரி ஹோட்டல் பிரியாணியில் பட்டாணி இருக்கும், திண்டுக்கல் பிரியாணியில் அரிசி உடைந்து இருக்கும் அதனோடு பெப்பர் கலந்து இருக்கும், லக்னோ பிரியாணியில் அரிசி சேமியா போலவே முந்திரியுடன் இருக்கும், கேரளா தளசேரி பிரியாணி வெள்ளையும் - மஞ்சளும் சேர்ந்து அரிசி பொல பொலவென இருக்கும், சிந்தி பிரியாணியில் முந்திரியே அதிகம் இருக்கும்.... இப்படி வகைகள் இருக்கிறது. இங்கே பிரியாணியில் அங்கங்கே கலர் கலர் அரிசி எட்டி பார்க்க, பொல பொலவென நன்கு இருந்தது. ஒவ்வொரு பருக்கையிலும் மசாலா  இருக்க, கொஞ்சம் கத்திரிக்காய் தால்சாவுடன் கறியை எடுத்து வைக்க வைக்க உள்ளே போய் கொண்டே இருந்தது..... சிவகுமார் அமைதியாக இருந்து அப்போதுதான் பார்த்தேன் :-)




அந்த கடையில் இருந்து சற்று தள்ளி இன்னொரு இடத்தில் அண்டா அண்டாவாக பிரியாணி ரெடி ஆகி கொண்டு இருந்தது. மக்களும் கூட்டம் கூட்டமாக உண்டு கொண்டும், பார்சல் வாங்கி கொண்டும் வந்து கொண்டு இருந்தனர். திருச்சி செல்லும்போது சுவையான பிரியாணி வேண்டும் என்றால் கண்டிப்பாக இங்கு செல்லலாம்.... அப்படியே எங்களுக்கும் மனமிருந்தால் ஒரு பார்சல் சொல்லலாம் !!

Labels : Suresh, Kadalpayanangal, Tiruchy, Tiruchirapalli, Railway station, biriyani, tasty

Monday, January 16, 2017

சிறுபிள்ளையாவோம் - சிரிக்கும் கண்ணாடி !!

பொருட்காட்சி.... சிறு வயதில் இந்த ஒரு வார்த்தையை சொன்னாலே நினைவுக்கு வருவது என்பது பபிள்ஸ், பெரிய அப்பளம், ராட்டினம், பஞ்சு மிட்டாய். இவற்றில் சிலவற்றில் குழந்தைகள் மகிழ்வார்கள், சிலவற்றில் பெரியவர்கள் மகிழ்வார்கள்.... ஆனால், ஒன்றே ஒன்றில் மட்டுமே குழந்தைகளும், பெரியவர்களும் மகிழ்வார்கள்... அது "சிரிக்கும் கண்ணாடி" என்ற இடத்தில்தான். 






இன்று திரையில் விக்ரம் என்னும் நடிகர் உடலை இளைத்து, குண்டாக, முறுக்காக என்றெல்லாம் அதகளம் செய்யும்போது நம்மால் முடியுமா என்று தோன்றும், அதை சிறிதளவும் சிரமம் இல்லாமல் செய்ய வைப்பது என்பது இந்த சிரிக்கும் கண்ணாடியில்தான் ! சிறு வயதில் பொருட்காட்சி சென்று இருந்தபோது ஒரு இடத்தில் இருந்து, "வாங்க சார், உங்களை குட்டையாகவும், நெட்டையாகவும், பருமனாகவும், ஒல்லியாகவும் பார்க்கணுமா ? ஒரு ரூபாயில் இங்க காண்பிக்கிறோம் வாங்க" என்று கூவி கொண்டு இருந்தார்.... ஒரு புறத்தில் உள்ளே என்று எழுதி இருக்க, சிலர் உள்ளே சென்று கொண்டு இருந்தனர், அதில் கொஞ்சம் கூட சிரிக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்த ஒரு பருமனானவரும் இருந்தார். தூரத்தில் பெரிய அப்பளத்தை உடைத்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன், சிறிது நேரத்தில் வெளியே என்று போட்டு இருந்த இடத்தில இருந்து அதே மனிதர் முகத்தில் புன்னகை ததும்ப வருவதை பார்த்ததும்...... இங்கே எனது ஆர்வம் அதிகம் ஆனது !!





அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி உள்ளே சென்றதும், உள்ளே எங்கெங்கும் கண்ணாடிகள் இருந்தது ஆச்சர்யத்தை தந்தது. ஒவ்வொரு கண்ணாடியின் முன்னேயும் நின்று கொண்டு புன்முறுவலும், சிரிப்பும் என்று ஒவ்வொருவரும் செய்துக்கொண்டு இருக்க, இங்கே எனக்கு அப்படி என்ன தெரிகிறது என்று ஆர்வம் அதிகமானது ! ஒரு கண்ணாடியின் முன்னே நின்று கொண்டு பார்த்தபோது நான் மிகவும் குட்டையாக இருந்தேன், அதிர்ச்சியாக என்னை நானே பார்த்துக்கொண்டேன், பல முறை கண்ணாடியையும் என்னையும் பார்த்து முடிவில் இது எதோ சித்து வேலை என்று கூறிக்கொண்டு அடுத்தடுத்த கண்ணாடியை பார்த்து அதில் என்னை பல வகைகளாகவும், தலைகீழாகவும் எல்லாம் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். ஒரு கண்ணாடியில் என்னை நான் மிக உயரமாக பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் !!









இன்றும் பொருட்காட்சிக்கு போகும் போது, கமல் மூன்றாம் பிறையில் குரங்கு போல ஓடி ஆடுவது போல பல வகைகளிலும் கண்ணாடியின் முன் நின்று ஆனந்தம் கொள்வது உண்டு. இன்று இது குவி கண்ணாடி, இது இப்படி என்றெல்லாம் மனதில் வந்து அந்த கண்ணாடியில் அந்த உருவம் அப்படி தெரிவதற்கான உத்தியை மூளை யோசித்துக்கொண்டு இருந்தாலும்.... மனது குழந்தையாக தவ்வி குதிக்கத்தான் செய்கிறது !!







Labels : Sirupillaiyaavom, Childhood memories, memory, exhibition, laughing glass, kadalpayanangal, Suresh

ஊர் ஸ்பெஷல் - ராமநாதபுரம் பால் சர்பத் !!

ராமநாதபுரம்..... இந்த ஊரின் பெயரை கேட்கும்போதே ஒரு விதமான ஆர்வம் தோன்றும் ! ஓ ராமநாதபுரமா என்று கேட்டுவிட்டு, அப்புறம் சொல்லுங்க ஊரு எப்படி இருக்கு என்று சடுதியில் நண்பர்கள் ஆனவர்களை பார்த்திருக்கிறேன். இந்த ஊரை போலவே, இங்கு சுவையான உணவு எது என்று கேட்டால் எல்லோரும் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு சொல்வது..... இன்னுமா எங்க ஊரு நன்னாரி பால் சர்பத் சாப்பிடலை என்பது. அப்படி என்னதான் இருக்கிறது என்று தேடி செல்கையில் நிறைய தெரிந்தும், சுவைத்தும் மகிழ முடிந்தது !



இராமநாதபுரம் (Ramanathapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது மாவட்டத்தின் தலைநகராகும். 1063இல் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தன் ஆளுமையில் கிழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.
1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் மறவர்கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் கிழவன் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சந்தா சாஹிப் ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் மராத்தியர்களின் கீழும் பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் முக்கியஸ்த்தர்கள் கலகத்தில் இடுபட்டனர். அந்த நேரத்தில், கர்நாடக அரியாசனத்தில் சந்தா சாஹிப் மற்றும் முஹம்மது அலி ஆகிய இருவர் இருந்தனர், மற்றும் இந்த மாவட்டம் கர்நாடகத்தின் பகுதியாக இருந்தது. பிரித்தானியர்கள் சந்தா சாஹிப்பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இது தென்பகுதிகளில் தொடர் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது. ராணி வேலு நாச்சியாரின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார். 1910இல் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் ராம்நாடு என வழங்கப்பட்டது; இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய ராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.



இந்த பகுதிகளில் சுற்றி வரும்போதே தெரிகிறது இது வானம் பார்த்த பூமி என்பது, வெயிலில் சுற்ற சுற்ற நா வறண்டு என்னதான் தண்ணீர் குடித்தாலும் இன்னும் வேண்டும் என்றே தோன்றுகிறது. ஊரில் எங்கும் ஏதாவது சர்பத் கடை இருக்கிறது, இன்னமும் இந்த மக்கள் கோக், பெப்சி போன்ற வகைகளை சுவைக்காமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்பட்டேன்.... ஒரு வேளை இவர்கள் எல்லாம் இன்னமும் இந்த இன்டர்நெட் போன்றவற்றை  தெரிந்துக்கொள்ளாமல் இருக்கின்றார்களோ என்று யோசித்து கொண்டு இருக்கும்போது, அதெல்லாம் இல்லை இவர்கள் நாக்கு எல்லாம் இன்னமும் நன்னாரி பால் சர்பத்துக்கு அடிமை என்று சொன்னபோது, அது என்ன அது அப்படிப்பட்ட சுவையான ஒன்று என்று தோன்றியது !! 



ஒரு பொருளின் பெயரிலேயே அதன் சிறப்பைப் புதைத்து வைத்திருப்பது சித்த மருத்துவத்தின் மகத்துவங்களில் ஒன்று. ‘நல்ல + நாரி’ என்று பிரித்தால் பொருள் தரும் நன்னாரி, நம்மை அவதிப்படுத்தி வரும் பல்வேறு நோய்களையும் போக்கவல்லது. எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும் நன்னாரி, இந்தியா முழுமையிலும் தானே வளர்கிற கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம். ஆடி, ஆவணி மாதங்களில் கொத்துக் கொத்தாக வெண்மை மலர்கள் பூத்திருக்கும். இந்தக் கொடியின் பச்சை வேர் சற்று இனிப்பும் நறுமணமும் கொண்டது. உலர்ந்த பின்னரும் இதன் நறுமணம் அகலாது.வெண்மை நன்னாரி, கருமை நன்னாரி என இரு விதமாகக் கிடைத்தாலும், இரண்டுமே ஒரேவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டவைதான். ‘நறுநெட்டி’,  ‘பாதாளமூலி’,  ‘பாற்கொடி’, ‘நீறுண்டி’ என்று பல பெயர்களில் மருத்துவர்களால் அழைக்கப்படும் நன்னாரியில் பல வகைகளும் உள்ளன. நாட்டு நன்னாரி, சீமை நன்னாரி, பெரு நன்னாரி, சிறு நன்னாரி எனவும் பல வகைகள் உள்ளன! நன்னாரியை நீரில் இழைத்து மேல் பூச்சாகப் பயன்படுத்துவதால் உடல்வலி போகும். உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும் உதவும். நன்னாரி வேர் மலச்சிக்கலை போக்கக்கூடிய மருத்துவ குணங்களும் பொருந்தியது. மேலும், இரைப்பையைச் சேதப் படுத்தும் அமிலத் தன்மையையும் குறைப்பதோடு ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் நன்னாரி உதவுகிறது.


பால் சூடாக கற்கண்டு எல்லாம் போட்டு குடிக்கும்போது ஒரு சுவை இருக்கும், அதுவே அந்த பாலை சுண்ட காய்ச்சி விட்டு சில்லிப்பு செய்து வைத்தால் அந்த குளுமையே ஒரு விதமான ருசியை கொடுக்கும் இல்லையா, இப்போது அதனில் தேனை கலந்து சுவைத்து பார்த்தால் தேவர்களின் அமுதை மிஞ்சிவிடுமோ ?! நன்னாரி மற்றும் இந்த குளுமையான பாலை கொஞ்சம் கடற்பாசியோடு நினைத்து பாருங்கள்.... அதன் சுவை விளங்கும் ! ராம்நாடு மக்கள் இதன் சுவையில் மயங்கி கிடப்பது ஒன்றும் தப்பில்லை என்பது இப்போது உங்களுக்கு விளங்கும். இங்கு யாரை கேட்டாலும், சுவையான நன்னாரி பால் சர்பத் சாப்பிட என்று உங்களுக்கு கை காண்பிப்பது என்பது இந்த காதரியா சர்பத் கடையைத்தான்.

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில், ஒரு மரத்தின் நிழலின் பின்னே ஒரு சிறிய கடையாக இருக்கிறது இந்த காதரியா பால் சர்பத் கடை. வெயிலுக்கு வேர்த்து விறுவிறுத்து செல்லும் நமக்கு ஒரு குளுமையை மேனிக்கு மரம் சிறு காற்றுடன் கொடுக்க, அந்த கடையின் பலகையில் என்ன என்ன சர்பத் எல்லாம் இருக்கிறது என்று பார்க்கும்போது மனமும் இத்தனை வகையான சுவையா என்று சற்று குளிர்ந்து விடுகிறது. நமக்கு முன்னர் எல்லோரும் கைகளில் பால் சர்பத் வாங்கி ருசித்து சாப்பிடும் போது, என்னதான் ஆரஞ்சு, மேங்கோ, சோடா சர்பத், பிஸ்தா என்று பல பல வகையான சர்பத் இருந்தாலும் எனக்கு பால் சர்பத் ஒன்னு என்று கண்களும், வாயும் ஒரு சேர சொல்கின்றன !!




கடையில் இருந்தவர் சர்பத் போடும் வேகத்தையும், சுழிவையும் பார்த்தாலே இவர் பல பல வருடமாக இதை செய்து கொண்டு இருக்கின்றார் என்பது விளங்கும். நன்னாரி சர்பத் கொஞ்சம் விட்டு அதன் மேலே ஐஸ் கொஞ்சம் உடைத்து போட்டு, நன்கு திக்க்கான பால் ஊற்றி, அதன் மீது கடல் பாசி கொஞ்சம் போட்டு ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கும்போதே, இங்கே நமது நமது நீங்க கலக்குங்க தல என்று சொல்லி விடுகிறது, அதை அந்த வெயில் நேரத்தில் வாயிற்கு கொண்டு செல்லும்போதே வாசனையும், குளிர்ச்சியும் இன்னும் ஒன்னு என்று சொல்லிவிட்டு சாப்பிட தொடங்குகிறோம்..... அந்த முதல் மடக்கு தொண்டையில் இறங்கும்போதே நமக்கு ஒரு ஏகாந்த சுவை தெரிய ஆரம்பிக்கிறது..... ஏய் கோக் பெப்சி காரனே, இதை மார்க்கெட் பண்ணி பாரு இந்த உலகமே உனக்கு அடிமையாகும் !!


அடுத்த முறை ராமதாபுரம் பக்கம் செல்லும்போது இந்த சுவையை சுவைக்க மறக்காதீங்க, இந்த ஊர்க்காரங்க நாக்கு எப்படி இவ்வளவு அடிமை ஆகி இருக்கும் என்பதை சுவைத்து உணருங்கள்.... சில சமயங்களில் அடிமையாவதும் ஒரு சுகம்தானே !!



Labels : Oor special, district special, oorum rusiyum, ramathapuram, ramnad, milk sarbath, paal sarbath, Kathariya sarbath